உரைக்கட்டும் தமிழர்க்கு பாவலர் கா.தனியெழிலன்
மொத்த பக்கங்கள் 112
விலை ரூ.150/-
வெளியீடு: ஓவியா பதிப்பகம்
17-13-11, சிறீராம் காம்ப்ளக்ஸ், காந்தி நகர் மெயின் சாலை, பத்தலக்குண்டு. திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு.
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், பந்தநல்லூரை சேர்ந்த பாவலர் கா.தனியெழிலன் அவர்கள் “உரைக்கட்டும் தமிழர்க்கு” என்ற கவிதை நூலினை எழுதி வெளியிட்டிருக்கிறார். அந்த புத்தகத்தின் முன்னுரையிலேயே “மொழியுணர்ச்சி இல் லாதவனுக்கு நாட்டுணர்ச்சியோ, நாட்டு நினைவோ எப்படி வரும்? வருந்தலைமுறையினருக்குச் சிறிதளவேனும் நாட்டுணர்ச்சி இருக்க வேண்டுமெனில் மொழியுணர்ச்சி சிறிதாவது இருத்தல் வேண்டும்.” என்ற தந்தை பெரியாரின் கருத்தை முன்வைத்து தன்னுடைய கவிதைகளை வடித்திருக்கிறார். தமிழ்குடிகளின், தமிழ் மொழியின் தொன்மையினை முதல் கவிதையாய் கொண்டு தொடங்குகிறது இப்புத்தகம். தமிழ்மக்களின் பெருமைகளுக்கு விளக்கமளிக்கிறது அடுத்த கவிதை. ஒவ்வொரு தமிழரும் தமிழ்மொழியை தன்னுடைய காதலியை போல் உணரவேண்டும். தமிழும்-நானும் அப்படித்தான் என்கிறார் இப்புத்தகத்தின் ஆசிரியர்.
நூலைப் படி - சங்கத்தமிழ்
நூலைப்படி - முறைப்படி
நூலைப்படி
காலையில் படி - கடும்பகல் படி
மாலை இரவு பொருள்படும்படி
என்கிறார் புரட்சி கவிஞர் பாரதிதாசன். அப்படி தான் படித்த தமிழ்மொழியை தமிழ்மொழியால் காதல் செய்வீர் என்று தமிழ்மீது பற்றை ஏற்படுத்துகிறது இந்நூல். அயல்நாட்டவர்களும் வியந்து தம்மொழிகளில் மொழிப்பெயர்க்கும் வகையில் சிறப்புவாய்ந்த நூல்களை தன்னகத்தே கொண்டது நம் தமிழ்மொழி என தமிழ்மீது ஈர்ப்பை உருவாகுகிறது. அத்தமிழ்மொழியில் புதிய புதிய சொற்களை உருவாக்கவேண்டுமென சொல், செய்வோம் என்கிறது இந்த புத்தகம்.
இந்த புத்தகம் தற்போதைய தலைமுறையினர் வேற்றுமொழிமீது பற்றுக் கொண்டோராய் இருகிறார்களே, அனைத்துமாய் இருந்த தமிழே நீ எங்குசென்றாய் எனவும், சிறப்புவாய்ந்த தமிழ்மொழி பேசும் இந்நாட்டில் வேற்றுமொழியை புகுத்திட விளைந்து நிற்கும் வீணர்களை என்ன செய்வது எனவும், மாணவர்கள் மனதில் வேற்றுமொழி பதிக்கப்படுகிறது, அரசு அலுவல்களில் தமிழ்மொழியை காணவில்லை, இவ்வாறாக தமிழ்மொழி வளர்ச்சிக்கு தடைபோடும் வடநாட்டார் செயல்களை முறியடித்து வழக்காடு மன்றம் முதல் நாடெங்கும் வேண்டும் தமிழ் என்கிறது.
உழைக்கும் மக்களின் உரிமைகளை, உழைப்பை சுரண்டும் ஆதிக்கத்தினரை எழுந்தடிப்போம், தமிழா நீ நெஞ்சு புடைத்து எழு என தமிழர் உரிமைகாக்க வீறுகொண்டு எழுந்துவா, தமிழ்மொழி வளர்க்க, தமிழ்மொழி காக்க பெண்கள் ஆண்கள் என்ற பேதமில்லை அனைவரும் வாருங்கள் அருமைத்தமிழை வளர்ப்போம் என்று அழைப்புவிடுகிறது இந்நூல்.
தமிழர்கள் வீடுகளில் நூலகம் இருக்கவேண்டும், அந்நூலகத்தில் மிகுதியாக தமிழ் நூல்கள் இருக்கவேண்டும். தமிழன் வீட்டு நிகழ்வுகளில் தமிழ்தான் முன்னிலையேற்க வேண்டும், கருவறை தொடங்கி காலம்முழுவதும் தமிழ்கொடி உயர்ந்து பறக்க வேண்டும் என ஒவ்வொரு கவிதையும் உரைக்கின்றது.
தமிழ் தெரியாத வடவருக்கு தமிழ்நாட்டில் வேலைகொடுப்பதை கண்டித்தும், முதன்முதலில் இந்திமொழித் திணிப்பை எதிர்த்து போராடியது இந்த தமிழ்நாடுதான் என்பதை எடுத்துக் கூறியும் தமிழர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் ஆவதற்கும், ஆலயங்களில் அன்னை தமிழில் அர்ச்சனை செய்வதற்கும் சட்டங்கள் இன்று வந்தாச்சு, ஆனாலும் சிலர் அதனை எதிர்க்கிறார்கள். ஆகவே
“திருக்கோவில் கருவறையில்
திருடரெல்லம் புகுந்ததனால்
தீந்தமிழைத் திடீரென்று
தெருவினிலே எறிந்துவிட்டார்!
திருமொழியை பேணாத
திருக்கோவில் இனியெதற்கு?
தீட்டென்றே திடமுடன் நீ
தீண்டாதே அதையொதுக்கு”
என்று தமிழ் ஒலிக்காத கோவில்களுக்கு தன்மானமுள்ள தமிழர்கள் போகவேண்டாமென உரைக்கிறது.
திரைத்துறையில், திரையிசையில் தமிழுக்கு முதன்மை கொடுக்கவேண்டும், ஜாதியால், சடங்கால், மதத்தால் தாழ்ந்தோர், உயர்ந்தோர் என்ற பிரிவினை ஒழித்து, தமிழால் ஒன்றுபட்டு நாட்டினை வளர்ப்போம். ஆதிக்ககாரர்களின் அக்கிரமங்களையும், தமிழ்மொழியை அழிக்க நினைக்கும் வடவர் ஆதிக்கத்தையும் எதிர்த்து
“குழுவாய் நிறைவோம் கூடி
உன்றன் கொற்றம் அழிப்போம் பாடி”
என்று தமிழர் உரிமையை நிலைநாட்ட வேண்டுமென பாடுகிறது இந்நூல்.
112 பக்கங்களில் 70 தலைப்புகளை உள்ளடக்கிய இந்நூல் தமிழரின் தொன்மை, பெருமை, தமிழ் மொழி என்பது தமிழரின் உரிமை, என்பதயெல்லம் விளக்கி கவிதைகளாக கொண்டுள்ளது. இதை படிக்கும் ஒவ்வொருவருக்கும் தமிழ்மொழி மீது பற்றும், ஆர்வமும் பெருகும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. காலத்திற்கேற்ற கருத்துகள் அடங்கிய இந்நூலை படித்து பயன்பெறுக. இந்நூலை ஆக்கிய பாவலர் தனியெழிலன், காணொலி வழியாக நடைபெற்ற பெரியாரியல் பயிற்சியில் பயிற்சி பெற்ற மாணவர் என்பது மேலும் சிறப்பு. அவர் மேலும் இச்சமுதாய முனேற்றத்திற்கு பயன்படும் வகையில் பல்வேறு நூல்களை எழுதி வெளியிடவேண்டுமென வாழ்த்து களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நூலகர் முனைவர் வே.இராஜவேல்
தஞ்சை மண்டல
இளைஞரணி செயலாளர்,
திராவிடர் கழகம்.

No comments:
Post a Comment