பெரியார் சொல் இன்றல்ல என்றுமே செல்லும் இங்கல்ல எங்குமே வெல்லும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 25, 2022

பெரியார் சொல் இன்றல்ல என்றுமே செல்லும் இங்கல்ல எங்குமே வெல்லும்



வி.பி.சிங்., 
சமூகநீதிக் காவலர், மேனாள் பிரதமர்

ஜாதி அமைப்பு முறை மக்களைப் பெரிதும் அடக்கி ஒடுக்குவது என்பதைப் பெரியார் சரியாகவே மதிப்பிட்டிருந்தார். கல்வி, நவீனத் தொழில் நுட்பம் மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை கீழ் ஜாதியினருக்கு ஜாதி முறை மறுக்கிறது. இந்த வகையில் நாட்டின் திறமைகள் அனைத்தும் வீணாக்கப்படுகின்றன. இந்தத் தளையிலிருந்து நாம் விடுபட வேண்டும். அதனால்தான் ஜாதி அமைப்பு முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று பெரியார் விரும்பினார்.

பாலியல் (ஆண்- பெண்) சமத்துவம், பெண் முன்னேற்றம், குடும்பச் கட்டுப்பாடு போன்றவற்றை ஆதரித்து வாதாடுவதில் பெரியார் பல புதுமையான கருத்துகளைக் கொண்டிருந்தார். பெண்கள் முன்னேற்றம் என்பது அவர்களின் விழிப்புணர்வைப் பொறுத்தே உள்ளது: அதற்குத் தேவையான பலவற்றுள் கல்வியே முக்கியமானது. குழந்தைகள் குறைவாக இருப்பின், அவர்களுக்கு நல்ல கல்வியைத் தர முடியும். இந்த உண்மை ஒவ்வொரு கணவன் மனைவிக்கும் சொல்லப்பட வேண்டும். இதனைச் செய்த பெரியார், இந்த வழியிலும் நாட்டிற்குத் தொண்டாற்றினார்.

சுயமரியாதைத் திருமணத்தை மிகச் சரியாக பெரியார் அறிமுகப்படுத்தி, திருமண நிகழ்வை மதத்துடன் தொடர்பு அற்றதாகச் செய்தார். சரியான காரியத்தைச் சரியாக அவர் செய்தார். ஜாதி என்பது திருமணத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஜாதிக்குள் மட்டுமே திருமணம் நடக்கும் வரை,  சமூகமும் ஜாதி அமைப்பின் அடிப்படையிலேயே அமைந்து இருக்கும். திருமணம் என்ற ஏற்பாடு பற்றிப் பெரியார் தெளிவான கண்ணோட்டம் கொண்டிருந்தார். சம்பந்தப்பட்ட மனித உயிர்களிடையே திருமணம் நெருங்கிய உறவுக்கு வழி வகுக்கிறது. இங்கு ஜாதிக்கு எந்த வேலையும் இல்லை. வேறுபட்ட ஜாதிகளைச் சேர்ந்த ஓர் ஆணும், ஒரு பெண்ணும் மணந்து கொண்டால், அவர்களது ஜாதி அடிப் படையான பழக்க வழக்க வேறுபாடுகள் காணாமல் மறைந்து போகும். ஜாதிகளற்ற ஒரு சமுதாயம் உருவாக்குவதை அது எளிதாக்கும். திருமணத்தை மகச் சார்பற்றதாக ஆக்கும் மிக மிகச் சரியான நடவடிக்கையை பெரியார் மேற்கொண்டார். இத்தகைய திருமணங்கள் மூலம் ஜாதி அமைப்பை விட்டு வெளியே வந்தவர்கள் ஜாதி அமைப்பை எதிர்த்து பயனுள்ள வகையில் போராட இயலும்.

இட ஒதுக்கீட்டின் மூலம் சமூக நீதியை நிலைநாட்ட பெரியார் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆரோக்கியமான ஒரு சமுதாயத்துக்கு இதனை பரிந்துரைக்க இயலாது. ஆனால், மேல்ஜாதியினருக்குச் சலுகைகள் அளிப்பது. கீழ்ஜாதியினருக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவது என்ற தவறான முறையில் நமது சமூகம் அமைக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு தேவையற்ற ஒரு சமூகத்தை உருவாக்கவே நாம் விரும்புகிறோம். அவர்களது ஜாதியின் பெயரால், மக்கள் பாதிக்கப்படும் வரை, அவர்களது சமூக அந்தஸ்தின் அடிப்படையில் இடஒதுக்கீட்டினை அவர்கள் கட்டாயமாக பெற வேண்டும்.

மதம் ஒரு சாதாரணமான சடங்காக ஆகி விடும்போது. அது பொருளற்றதாகப் போய்விடுவது மட்டுமன்றி, தீமையை விளைவிப்பதாகவும் ஆகிவிடுகிறது. அதனால்தான் சடங்குகளை மட்டுமே சார்ந்த மதத்தின் தீமைகளைப் பெரியார் சாடினார்.

தனது பகுத்தறிவு மட்டுமன்றி, மூட தம்பிக்கைகள், தவறான கண்ணோட்டங்கள் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களை மேற்கொண்ட பெரியார் மாந்தப் பெருமை, சுயமரியாதை போன்ற பண்புகளை வலியுறுத்தினார். தன்னைப் பற்றி அறிந்திருப்பதும், சுயமரியாதை உணர்ச்சியும் மனித இனத்தை மற்ற உயிரினங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவனவாகும். ஆனால் ஜாதியின் காரணமாக, நமது மக்களில் பெரும்பாலானோர் காலம் காலமாக மதிக்கப் படாமல் வாழ்ந்துள்ளனர்.

அனைத்துப்புரட்சிகளுமே ஒடுக்கப்பட்டவர்களுக்கு விடுதலை பெற்றுத் தந்துள்ளவைதாம், பெரியார் அவர்களது விடுதலைக்கு மட்டுமன்றி, சுயமரியாதைக்காகவும் போராடினார். 

இது பற்றிய அவரது கருத்து அனைத்துலகத்திற்கும் பொருந்துவதாகும். அவை இன்றைக்கு மட்டும் பொருந்துபவை அல்ல; நாளைக்கும் அதன் பின் வருங்காலம் அனைத்துக்கும் பொருந்துபவை. இந்தியா மட்டுமல்லாமல் அனைத்து உலகத்திற்கும் அவை பொருந்துபவை ஆகும்.  


No comments:

Post a Comment