மேகதாது: ஆணைய கூட்டத்தில் எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பு அமைச்சர் துரைமுருகன் பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 15, 2022

மேகதாது: ஆணைய கூட்டத்தில் எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பு அமைச்சர் துரைமுருகன் பேட்டி

வேலூர், ஜூன் 15 மேகதாது அணை குறித்து ஆணைய கூட்டத்தில் எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பை தெரிவிப்போம் என்று வேலூரில் நீர்வளத்துறை அமைச் சர் துரைமுருகன் கூறினார்.

வேலூரில் தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று (14.6.2022) அளித்த பேட்டி: 

நதி நீர் ஆணைய கூட்டத்தில் மேகதாதுவை பற்றி பேச ஆணையத்திற்கு அதிகாரமில்லை. இதுகுறித்து தமிழ்நாட்டின் சார்பில் சொன்ன போதெல்லாம் அதனை ஏற்றுக் கொண்டனர். ஆனால், கர்நாடக அரசு வலியுறுத் தலாலும் ஒன்றிய அரசு தூண்டுதலாலும் அதிகாரம் உண்டு என்கின்றனர்.

ஒன்றிய அரசு வழக்குரைஞரும் அதிகாரம் உள்ளது என்று கூறியுள்ளார். சட்ட திட்டத்தில் அதிகாரமில்லை என கூறப்பட்டுள்ளது. ஆனால் வழக்குரைஞர் ஆலோச னையின் படி ஆணைய கூட்டத்தில் தலையிடுவோம் என கூறுகின்றனர். இது ஒரு வழக்குரைஞர் ஆலோச னையை வைத்து பேசுவது என்பது சரியல்ல.  நாங்கள் ஆணைய கூட்டத்தில் கலந்து கொண்டு எழுத்துப் பூர்வமாக எதிர்ப்பை தெரிவிப்போம்.  மேலும் உச்சநீதி மன்றத்திலும், மேகதாது அணை குறித்து ஆணையத்தில் விவாதிக்க அதிகாரமில்லை என தமிழ்நாடு அரசு மனுதாக்கல் செய்துள்ளது.  

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் மெட்ரோ ரயில் அருங்காட்சியகம் 

சென்னை, ஜூன் 15  சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளை நடைபெற்று வரும் பூவிருந்தவல்லி முதல் சாலிகிராமம் வரையிலான உயர்மட்ட பாதை அமைக்கும் பணிகளை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் நேற்று (14.6.2022) ஆய்வு செய்தார். 

இந்த ஆய்வின் போது, மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் அர்ச்சுனன்(திட்டங்கள்), தலைமை பொது மேலாளர்கள் அசோக்குமார், ரேகா பிரகாஷ் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர். ஆய்விற்கு பின்னர் மேலாண்மை இயக்குநர் சித்திக் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:  

பூவிருந்தவல்லி முதல் போரூர் வரை 7.94 கி.மீ தூரம் 4ஆவது வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சென்று வருவதற்கான பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இப்பாதையில் தற்போது 111 ராட்சத தூண்கள் அமைக்கப் பட்டுள்ளது. மேலும், இப்பாதையில் 342 ராட்சத தூண்கள் அமைக்கப்பட உள்ளது. பூவிருந்தவல்லி முதல் போரூர் வரையிலான இப்பணிகள் அனைத்து ரூ1,147 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது.

செனாய் நகர் பூங்காவை மேம்படுத்தி வருகிறோம். செப்டம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும். மெரினாவில் உள்ள காந்தி சிலையை தற்காலிக அடிப்படையில் மட்டுமே அப்புறப்படுத்தியுள்ளோம். மெட்ரோ ரயில் தூண்களில் பூச்செடிகள் வைத்து அழகு படுத்தப்படும். டில்லியில் உள்ளது போன்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒளிப்படத்துடன் கூடிய அருங்காட்சியகம் அமைக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. திருவெற்றியூர் மெட்ரோ ரயில் நிலையத்தை ஆய்வு செய்து அங்கே நகரும் படிக்கட்டுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்  என கூறினார்.

நிதிசார் உள்ளடக்கலில் உள்ள சவால் என்ன? 

அய்அய்டி மெட்ராஸ் ஆய்வறிக்கை வெளியீடு

சென்னை, ஜூன் 15  அய்அய்டி மெட்ராஸ் ரிசர்ச் பார்க் மற்றும் அய்அய்டிஎம் இன்குபேஷன் செல் ஆகியவை ஒருங்கிணைந்து ‘நிதிசார் உள்ளடக்கலில் சவால்கள்’ என்பது மீதான ஆய்வறிக்கையை நேற்று (14.6.2022) வெளியிட்டன. அய்அய்டி மெட்ராஸ் ரிசர்ச் பார்க் மற்றும் அய்அய்டிஎம் இன்குபேஷன் செல் ஆகியவை ஒருங்கிணைந்து,  நிதிசார் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். இந்நிலையில், டிவிஎஸ் கேபிடல் ஃபண்ட்ஸ்  நிர்வாக இயக்குநர் கோபால் சீனிவாசன், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் முன்னாள் தலைமை நிதி அதிகாரி மகாலிங்கம், அய்அய்டி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி மற்றும் அய்அய்டி மெட்ராஸ் ரிசர்ச் பார்க், அய்அய்டிஎம் இன்குபேஷன் செல் தலைவர் பேராசிரியர் அசோக் ஜூன்ஜூன்வாலா ஆகியோர் நேற்று இந்த அறிக்கையை வெளியிட்டனர்.

குறைந்த வருவாய் உள்ள பிரிவைச் சேர்ந்த மக்களும் மற்றும் மூத்த குடிமக்களும் முறைசார்ந்த நிதிசார் அமைப்புகளிலிருந்து முழு அளவிலான நிதிசார் சேவை களை அணுகிப் பெறுவதில் பல நேரங்களில் சவால்களை எதிர்கொள்கின்றனர். இத்தகைய தடைகள் மற்றும் சிரமங்கள் சிலவற்றை இந்த ஆய்வறிக்கை கோடிட்டு காட்டுகிறது. இவைகளை எதிர்கொண்டு சமாளிப்பதற்கான பரிந்துரைகளையும் இந்த அறிக்கை வழங்குகிறது.

இது குறித்து அய்அய்டி மெட்ராஸ் ரிசர்ச் பார்க், அய்அய்டிஎம் இன்குபேஷன் செல் தலைவர் பேராசிரியர் அசோக் ஜூன்ஜூன்வாலா கூறியதாவது: 18 வயதை பூர்த்தி செய்த 90 கோடி நபர்களை உள்ளடக்கிய மக்கள் தொகையுள்ள ஒரு நாட்டில் சிறிய விழுக்காட்டு அளவி லான நபர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனையை  செய்திருக் கின்றனர். நிதிசார் சேவைகள் துறையில் சாதனைகளை நாம் செய்திருக்கின்றபோதிலும்கூட இந்திய சமூகத்தில் ஒரு பெரிய பிரிவினர் இன்னும் நிதிசார் உள்ளடக்கல் சமத்துவமின்மைகளினால் சிரமப்பட்டு வருகின்றனர். உள்ளடக்கலுக்கான நிதி தொழில்நுட்ப பிரிவில் தலை வராக இந்தியாவை ஆக்குவதை குறிக்கோளாகக் கொண்ட செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக குறைந்த வருவாய் பிரிவினரால் எதிர்கொள்ளப்படுகிற சவால்கள் மீது ஒரு விரிவான பகுப்பாய்வை எங்கள் குழுவினர் செய்திருக்கின்றனர்.அத்துடன் அவர்களை நிதிசார் சேவைகளைப் பெறுமாறு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டி இருக்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment