மருத்துவ நுழைவுத் தேர்வும் - பெற்றோரின் கடமைகளும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 12, 2022

மருத்துவ நுழைவுத் தேர்வும் - பெற்றோரின் கடமைகளும்!

எதற்கெடுத்தாலும் விலைமதிப்பற்ற உயிரை மாய்த்துக் கொள்வதால் என்ன நிகழ்ந்து விடப் போகிறது? இது ஒருவகை உளவியல் சார்ந்த மனநெருக்கடி மருத்துவ நுழைவுத் தேர்வில் வெற்றிபெற முடியவில்லையென்று ஊரும் உலகும் தூற்றிவிடுமென்று அவர்களுக்குள்ளாகவே செய்து கொள்ளும் மாயக் கற்பனை. அதற்கு அவர்கள் தந்து கொள்ளும் விலையே உயிர் மாய்ப்பு. கற்ற கல்வி நமக்குப் போதிப்பது இதைத்தானா?

இந்த ஆண்டிற்கான மருத்துவ நுழைவுத் தேர்வு (NEET) விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு நிறைவு பெற்றுள்ளன. ஆண்டுதோறும் இத்தேர்வு குறித்த அறிவிப்பைக் கண்ணுறும் போதெல்லாம் இறந்து போன அனிதாக்கள் நினைவுக்கு வந்து பயமுறுத்துகிறார்கள். இந்தாண்டு எத்தனை உயிர்களைப் பலி கொள்ளுமோ இந்த நீட் பூதமென மனம் பதறுகிறது. அரசியல் சதுரங்கத்தில் அரசியல்வாதிகள் மட்டுமே காய் நகர்த்திக் கொண்டிருந்த வேளையில் இப்போது ஆளுநரும் புதிதாகச் சேர்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் இவரின் பணி காய்களை நகர்த்தவிடாமல் பார்த்துக் கொள்வது என்பது, தனக்கு வாய்ப்பு வரும்போதும் அதைக் கண்டுகொள்ளாமல் மவுனம் காப்பது என்பதாக அமைந்திருப்பது தான் தமிழ்நாட்டின் கெட்டவாய்ப்பு. சென்ற ஆண்டுகளில் தேர்வெழுதி தோல்வியடைந்தவர் குடும்பங்களில் நிலவும் தீரா மனவேதனையை பிள்ளைகள் இந்தாண்டும் நீடித்து விடுவார்களோவென்ற பதற்றம் பெற்றோர் முகங்களில் அப்பட்டமாய் தென்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. பிள்ளைகள் பல வாய்ப்புகளிருந்தும் மருத்துவம் ஒன்றையே விடாப்பிடியாய் பிடித்துக் கொண்டு அபலைகள் போலத் தவிப்பதை எத்தனை நாட்களுக்குப் பெற்றோர் பொறுத்துக் கொள்ள முடியும்? சென்றாண்டு அரசுப் பள்ளியில் படித்த தேனி சில்லுவார்பட்டியைச் சேர்ந்த மாணவன் தனது இரண்டாம் முயற்சியில் வெற்றி பெற்றானென்பது அனைவருக்கும் மகிழ்ச்சிதானென்ற போதிலும் அவன் அவ்வெற்றியை எங்ஙனம் கைக்கொண்டான் என்பது கவனிக்கத்தக்கது. மிகவும் ஏழ்மைக் குடும்பச் சூழலில் தன் ஆசிரியர்களின் பொருளுதவியில் எடுத்துக் கொண்ட தனிப்பயிற்சியே தன் வெற்றிக்குக் காரணம் என்று வெள்ளிடை மலையாக அவன் வெளியிட்டிருந்த கருத்து நீட் தேர்வின் உள்வாதைகளை உலகிற்கு வெளிப்படுத்தி நிற்கிறது.

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது. நடைமுறையில் உள்ள அரசின் பாடத்திட்டத்தை மட்டும் வைத்துக் கொண்டு நுழைவுத் தேர்வுக் கொடூரனை எதிர் கொள்ள முடியாது  என்பது தான். அரசுப்பள்ளி மாணவன் மருத்துவத் தேர்வில் அபார வெற்றி என்பது போல மிகத் தட்டையாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு, அதன் பின்புலத்தில் நிலவும் உண்மைப் பிரச்சினையை வெளிக் கொணராமல் போவது அறமல்ல. இச்செய்தி அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நம்பிக்கையளிக்கக் கூடியதெனினும் இதை ஒரு சோற்றுப் பதமாகக் கொள்ளவியலாது. ஏனெனில் இந்தத் தேர்வு முடிவு தொடர்புடைய மாணவனை மட்டும் பாதிப்பதில்லை. நீட் வெற்றிக்காக அவன் சார்ந்த குடும்பமும் பெற்றோரும் படும் துயரம் சொல்லில் அடங்காதவை. சொல்லப் போனால் பிள்ளைகளைவிடப் பெற்றோர்கள் தான் பிள்ளைகளை மருத்துவர் ஆக்கியே தீர வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறார்கள்

அண்மையில் நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். முகத்தில் வழக்கமாகத் தவழும் பொலிவில்லை. மிகவும் சோகமாகக் காட்சி தந்தார். கன்னத்தில் தாடி, கண்களில் சரியாய்த் தூங்காத அயர்வு, உடல் சோர்வு எல்லாமும் அவரின் அகத்தைச் சொல்லாமல் சொல்லின. ஏதோ பிரச்சினையில் இருக்கிறார் என்பது மட்டும் தெரிந்தது. என்னவென்று விசாரித்தேன். சொல்ல மருகினார். திரும்ப அழுத்திக் கேட்டதில் வீட்டில் கொஞ்சம் பிரச்சினை என்று மழுப்பினார். நெருக்கமான நண்பர் என்பதால் உரிமையில் சும்மா சொல்லுங்கள் என்றேன்? நேரம் சரியில்லை. ஜாதகக்கோளாறு, கெட்ட நேரம் தற்சமயம் உச்சத்தில் இருக்கின்றது. மனைவி மக்கள் யாரும் சொல்வதைக் கேட்க மறுக்கிறார்கள். அவரவர் எண்ணத்திற்கு நடந்து கொள்ள வேண்டுமென விரும்புகிறார்கள். நான் ஒரு குடும்பத் தலைவன் என்ற நினைப்பே அவர்களிடமில்லையெனப் பலவாறாக அடுக்கிக் கொண்டே சென்றார்.

பிரச்சினையின் மூலம் என்னவெனில், மகனை மருத்துவர் ஆக்கிப் பார்க்க வேண்டுமென்பது மட்டுமே நண்பரின் இலட்சியமாய் இருந்திருக்கிறது. அதற்குத் தக்க திட்டமிட்டு நிறைய செலவு செய்து தரமான பள்ளியில் சேர்த்திருக்கிறார். மகனும் நினைத்தவாறே நன்றாகப் படித்து மிக உயர்வான எண்ணிக்கையில் மதிப்பெண்கள் பெற்றிருக்கிறான். அது வரையில் அவருக்கு மகிழ்ச்சி தான். ஆனால் மருத்துவம் படிப்பதில் மகனுக்குத் துளியும் விருப்பமில்லை. அவனது எண்ணம் கலைக் கல்லூரியில் இளங்கலை முடித்து விட்டு குடிமைப்பணித் (அய்.ஏ.எஸ்) தேர்வெழுத முயற்சிக்க வேண்டுமென்பது தான். இதை அவன் வெளிப்படையாகவும் சொல்லிவிட்டான். அவன் தாயார் முதலில் தயங்கியிருக்கிறார். பின் மகனின் நியாயமான எண்ணத்தைப் புரிந்து கொண்டு ஆதரவு தெரிவித்திருக்கிறார். நண்பருக்கோ ஒருவேளை ஆட்சியர் தேர்வு நிறைவேறாமல் போனால் மகன் எதிலும் நிலை கொள்ளாமல் போய்விடுவானோவென்ற பயம். நுழைவுத் தேர்வு எழுதி மருத்துவர் ஆனபின் ஆட்சியர் தேர்வெழுதினால் தேர்வு முடிவு எப்படி அமைந்தாலும் கவலைப்படத் தேவையில்லை

மருத்துவத் தொழிலை வைத்து மகன் பிழைத்துக் கொள்வான் என்பது தந்தையின் கணக்கு. இதன் உள்ளீடு மருத்துவர் ஆக வேண்டுமென்னும் தனது கனவை நிறைவேற்றி விட்டு அடுத்து அவன் இலட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ளட்டும் என்பது தான் மகனோ தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்றுவிட்டான் தனது நிலைப்பாட்டை விளக்கிவிட்டான். அவன் எனது இலட்சியத்தில் குழப்பமில்லை. மருத்துவ நுழைவுத் தேர்வென்ற பெயரில் தனது உழைப்பை வீண் செய்ய விரும்பவில்லை என்றும், அதனால் ஏற்படும் காலவிரயத்தைத் தான் விரும்பவில்லையென்றும் தெளிவாகச் சொல்லிவிட்டான் மனதிற்குப் பிடிக்காத ஒன்றிற்காக எதற்காக தான் உயிரைக் கொடுத்துப் படிக்க வேண்டும் என்றும் கேட்டிருக்கிறான் மட்டுமல்லாது. என் இலக்கு ஆட்சியர் தேர்வு தான். அதற்கு ஒரு இளங்கலைப் பட்டம் போதுமானது. நான் போட்டித் தேர்விற்காக எல்லா முயற்சிகளையும் எடுக்கத் தொடங்கிவிட்டேன் என்று தெளிவாக இருந்திருக்கிறான். இத்தனை சின்ன வயதில் மகன் இவ்வளவு தெளிவாக முடிவெடுத்ததற்காக மகிழ்ந்து கொண்டாட வேண்டிய தருணங்களை நண்பர் தனக்குத் தானே தண்டனை வழங்கிக் கொண்டதைப் போல மாற்றிக் கொண்டிருக்கிறார்.

மனிதன் வாழும் காலங்களில் பலவாறாகத் தடுமாறி அலைகிறான், அவன் எண்ணங்கள் ஓரிடத்தில் நிலைகொள்ளாமல் தவிக்கின்றன. மனம் ஒரு குரங்கு என்பதற்கு நம்மில் பலரும் இலக்கணமாக இருந்து வருகிறோம். தனது நிலையறிந்து வாழ்வை முன் நகர்த்த நினையாமல் அடுத்தவர் நிலை பார்த்துச் சூடு போட்டுக் கொள்வதை என்னவென்பது? தேவையற்ற மனச்சிடுக்குகளை உள்ளத்தில் ஏற்றிக் கொண்டுத் துன்பப்படும் அவர்கள் தம்மைத் தவிர மற்றவரெல்லாம் மகிழ்ச்சியாக இருப்பதைப் போலக் கற்பனை செய்து கொள்கிறார்கள். பொதுவாக பெற்றோர்கள் தாங்கள் சிறு வயதில் நினைத்து நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் இயந்திரமாகப் பிள்ளைகளைக் கருதுகிறார்கள். அவர்களுக்கு மனமொன்று இருக்கிறதென்பதையும் ஆசைகள், இலட்சியங்கள் அவர்களுக்கும் இருக்குமென்பதையும் வசதியாக மறந்து போகிறார்கள். குழந்தைகள் தங்கள் வழியாக இந்த உலகிற்கு வந்தார்கள். அவ்வளவு தான். அவர்களைச் சொந்தம் கொண்டாட நமக்கெந்த உரிமையுமில்லை என்பான் கலில் ஜிப்ரான். குழந்தைகள் நம்முடைய அடிமைச் சேவகர்களல்லர் என்பதைக் குழந்தை மனவியல் அறிஞர்கள் பலரும் பல சமயங்களில் வலியுறுத்தியும் இதனைப் பெற்றோர்கள் புரிந்து கொள்ளத் தவறுவதேன்?

இருப்பதை விடுத்துப் பறப்பதற்கு ஆசைப்படும் பெற்றோர்களின் எண்ணம் அவர்களைப் பாடாய்ப் படுத்துகிறது. தமது எண்ணங்களின் படியே அனைத்தும் நடக்க வேண்டுமென்ற அதீத எதிர்பார்ப்புகளைப் பெற்றோர்களில் சிலர் வளர்த்துக் கொள்கிறார்கள். அதில் சிறு இழப்பு நேர்ந்தாலும் அவர்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. இதில் மனிதர்க்கு மனிதர் கூடுதல் குறைச்சலில்லை. தகுதிக்கேற்ப இந்த நிலை எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. பக்கத்தில் இருக்கும் பரவசத்தை ‘அனுபவிக்கத் தெரியாத இவர்கள் எங்கோ இருக்கும் துயரத்தை இழுத்துப் போர்த்திக் கொண்டு நேரம் 

சரியில்லை என்று புலம்புவதில் என்ன அர்த்தமிருக்கிறது? எல்லாவற்றிற்கும் காலத்தைக் குற்றவாளியாக்கித் தப்பித்துக் கொள்வதா? சிலர் எல்லாம் எனது போதாக் காலமென்று புலம்புவதைப் பார்க்க பரிதாபமாக உள்ளது. இவர்களின் மனக்குழப்பத்திற்குக் காலம் என்ன செய்யும்? சென்ற ஆண்டு மருத்துவ நுழைவுத் தேர்வு நடைபெறுவதற்கு முதல் நாள் மதுரையில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட நிகழ்வைத் தொலைக்காட்சியில் பார்த்த போது மனம் பதைத்தது. அந்தப் பெண் தன்னை மன்னித்துவிடுமாறு அம்மாவிற்கும் அப்பாவிற்கும் தம்பிக்கும் அலைபேசியில் குரல்வழியாகப் பதிவு செய்து வைத்திருந்ததைக் கேட்கையில் பெற்று ஆளாக்கிய பெற்றோரை நினைத்து மனம் பதறிற்று - மருத்துவப் படிப்பு மாநில பட்டியலில் இருந்த வரை பன்னிரண்டாம் வகுப்பில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். அவர்களுள் பலர் மிகச்சிறந்த மருத்துவர்களாக உருவாகியிருக்கிறார்கள் என்பது நிதர்சனம். உலகளவில் சென்னையில் குறிப்பிடத்தக்க மிகச் சிறந்த மருத்துவர்களும் மருத்துவமனைகளும் இருப்பதாக மருத்துவ புள்ளிவிபரம் குறிப்பிடுகிறது. பலரும் அயல் நாடுகளிலிருந்து மருத்துவம் செய்து கொள்ள சென்னையை நாடி வருகிறார்கள். புகழ்பெற்ற மருத்துவர்களான இவர்கள் எங்கு படித்து மருத்துவரானார்கள்..? எந்த நுழைவுத் தேர்வு இவர்களைத் தகுதி செய்தது? நாடெங்கிலும் பாடத்திட்டங்கள் ஒன்று போல இல்லாத சூழலில் நுழைவுத் தேர்வை மட்டும் ஒரே தரத்தில் எங்ஙனம் நடத்தவியலுமென்பது தான் பல மூத்த கல்வியாளர்களின் வினாவும் கவலையும். அரசுப் பள்ளி மாணவனின் தனிப் பயிற்சி தான் அவனை வெற்றியடையச் செய்திருக்கிறது. இந்த வெற்றி பள்ளி பாடத்திட்டமும் வகுப்பறை போதனையும் மட்டுமே மருத்துவ நுழைவுத் தேர்வை எதிர்கொள்ள போதாதென்பதையே உரத்துச் சொல்கின்றது.

மருத்துவ நுழைவுத் தேர்விற்குப் பயந்து தற்கொலை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக அறிவிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் உயிரை மாய்த்துக் கொண்ட அரியலூர் மாவட்டம் குழுமூரைச் சேர்ந்த அனிதா தொடங்கி இன்று வரையும் இது தொடர்கிறது. பெரவள்ளூர் பிரதீபா, பெரம்பலூர் கீர்த்தனா, திருநெல்வேலி தனலட்சுமி, விழுப்புரம் மோனிஷா. கோவை சுபசிறீ, திருப்பூர் ரிதுசிறீ, பட்டுக்கோட்டை வைசியா, புதுச்சேரி சிவசங்கரி, மதுரை ஜோதிசிறீ துர்கா, தர்மபுரி ஆதித்யா. திருச்செங்கோடு மோதிலால் எனத் தொடரும் இந்தப் பட்டியலை இனியாவது தடுக்க வேண்டாமா? “ என்னால முடியலைம்மா.. என்னை மன்னிச்சிக்கிடுங்க” என்று மரண வாக்கு மூலம் கொடுத்திருக்கும் மதுரை மாணவியின் வார்த்தைகள் மனசாட்சியுள்ள எவரையும் உலுக்கியெடுக்கும் வல்லமை மிக்கவை. 

மருத்துவ நுழைவுத் தேர்வு 

தேவையில்லை என்ற வாதம் ஒருபுறமிருப்பினும் மருத்துவப் படிப்பு இல்லையென்றால் இந்த உலகில் வாழவே தகுதியில்லை யென்ற மன நிலையை அந்தக் குழந்தைகளுக்கு ஏற்படுத்தியது யார்? சாதிக்க இன்னும் ஆயிரம் வழிகள் உலகில் உள்ளனவென்பதை அறிவுறுத்தத் தவறியது யார்? அரசா? பெற்றோரா? ஆசிரியரா? சமூகமா? தொடரும் இவ்வினாக்களுக்கு விடைதான் யாது? 

இப்படி நீங்களும் நானும் கூடப் பொறுப்பேற்றுக் கொள்ளத் தான் வேண்டும். இதே மதுரையில் தான் ஒரு சலூன்கடைக்காரரின் ஏழை மகள் தனது படிப்பிற்காகச் சேமித்து வைத்திருந்த பணத்தைத் நெருக்கடிக் காலத்தில் ஏழைகளுக்காகப் பங்கிட்டுக் கொடுத்து வரலாற்றில் இடம் பெற்ற நிகழ்வும் நடந்துள்ளது. அந்தப்  பிஞ்சிற்கு மனிதநேயம் பொங்கும் இம்மனநிலை ஏற்படுவதற்கு யார் காரணம்? அவளின் பக்குவம் எங்கிருந்து வந்தது? பெற்றோரன்றி யார் அக்குழந்தையை இப்படித் தகுதிப்படுத்த முடியும்?

எதற்கெடுத்தாலும் விலைமதிப்பற்ற உயிரை மாய்த்துக் கொள்வதால் என்ன நிகழ்ந்து விடப் போகிறது? இது ஒருவகை உளவியல் சார்ந்த மனநெருக்கடி மருத்துவ நுழைவுத் தேர்வில் வெற்றிப் பெற முடியவில்லையென்று ஊரும் உலகும் தூற்றிவிடுமென்று அவர்களுக்குள்ளாகவே செய்து கொள்ளும் மாயக் கற்பனை. அதற்கு அவர்கள் தந்து கொள்ளும் விலையே உயிர் மாய்ப்பு. கற்ற கல்வி நமக்கு போதிப்பது இதைத் தானா? ஒரு காலத்தில் வயது வந்தோர்களிடமும் திருமணமான கிராமத்துப் பெண்களிடமும் உயிரை மாய்த்துக் கொள்கிற இந்தப் பழக்கம் அறியாமையால் மிகுந்து காணப்பட்டது. அதற்குக் காதல் தோல்வி, வாழ்க்கையில் ஏமாற்றம் போன்ற பல காரணங்கள் இருந்தன. அவர்கள் வேறு வழியில்லாத தருணத்தில் தான் அந்தக் கடின முடிவை எடுத்தார்கள். கிராமங்களில் முடிவெடுத்த பின்பும் கூடப் பலரும் சாவதற்கு அஞ்சினார்கள். எங்கள் கிராமத்தில் நான் சிறுவனாக இருந்த போது குடும்பப் பிரச்சினையில் மனம் வெறுத்த பெண் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்கிறார். ஒதுக்குப் புறமாக இருந்த பெரிய கிணற்றுப் பக்கம் சென்ற பெண் கிணற்றில் விழுந்து சாகப் போகிறேனென்று கோபத்தில் சத்தம் போட்டு விட்டு கிணற்றை நோக்கி ஓடிவிட்டார். பின்னாலேயே உறவினர்கள் துரத்திக் கொண்டு ஓடினார்கள். அவர் கிணற்றை அடைந்து விட்டாரென்று எண்ணிய நிலையில் கிணற்றின் கரையில் பெண் நிலைகுத்தி நின்று விட்டார். அவரைக் கைப்பிடித்து அழைத்து வந்து ஓய்வாக விசாரிக்கையில் கிணற்றைப் பார்த்ததும் பயமாக இருந்தது. அப்படியே நின்று விட்டேன் என்று சொல்லியிருக்கிறார். இப்படிச் சாவதற்கு அஞ்சிய தலைமுறையின் பிள்ளைகள் இன்று வாழ்வதற்கு அஞ்சிய நிலையில் சாதாரணமாக உயிரை மாய்த்துக் கொள்வதை என்னவென்பது?

அண்மையில் இந்தியாவில் 2019 ஆம் ஆண்டு நிகழ்ந்த தற்கொலை மரணங்களின் புள்ளி விவரங்களைத் தேசிய குற்ற ஆவணக் கழகம் (NCRB --NATIONAL CRIME RECORD BUREAU)  வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலைப் பார்க்கும் போது பெரும் அதிர்ச்சி ஏற்படுகிறது. அறிக்கையில் 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் மட்டும் ஒரு இலட்சத்து 39,123 தற்கொலை மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்று குறிக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்குச் சராசரியாக 381 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனராம். இதில் பெரும் வேதனை என்னவென்றால் இக்கணக்கின் விகிதம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துச் செல்வதுதான். 2018 ஆம் ஆண்டு ! இலட்சத்து 34,516 ஆக இருந்த தற்கொலை மரணங்கள் 2019 இல் 3.4 விழுக்காடு அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற உயிர்வதைச் செயல்களில் அதிகமாக யார் ஈடுபடுகிறார்கள் என்ற கணக்கீட்டையும் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். அதில் 23.4 விழுக்காடு கூலித் தொழிலாளிகளும் திருமணமாகிய பெண்கள் 15.4 விழுக்காடு என்றும், சுயதொழில் செய்பவர்கள். 11.6 விழுக்காடு, வேலையில்லாத பட்டதாரிகள் 10.1 விழுக்காடு, விவசாயத் தொழிலாளர்கள் 7.4 விழுக்காடு, மாணவர்கள் 7.4 விழுக்காடு ஏனையோர் 19 விழுக்காடு என்று அந்தக் கணக்கு நீள்கிறது. திருமணம் ஆனவர்களின் பட்டியலில் ஆண்கள் 68.1 பெண்கள் 62.8 விழுக்காடுகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளன. நாட்டிலேயே மகாராட்டிரா மாநிலம் முதலிடத்தையும் தமிழ்நாடு இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளன. மூன்றாமிடத்தை மேற்குவங்கமும் நான்காம் இடத்தை மத்திய பிரதேசமும், அய்ந்தாமிடத்தை கர்நாடகமும் பதிவு செய்துள்ளன. ஒட்டுமொத்தத்தில் 49.5 விழுக்காடு இந்த அய்ந்து மாநிலங்கள் சார்ந்த மரணங்களென்று குறிப்பிடப்பட்டுள்ளது. உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் என்பது திருமூலர் வாக்கு. சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். பதின்பருவக் கல்வி வரை பல சிரமங்களுக்கிடையே வளர்த்து ஆளாக்கும் பிள்ளைகளைத் தொடர்ந்து எப்படி வழிநடத்த வேண் டும் என்பதில் தெளிவான திட்டம் பெற்றோருக்கு வேண்டும். பிள்ளைகளின் படிப்பு, அவர்களின் எதிர்காலம் மீதான அக்கறை ஒரு பெற்றோருக்கு எவ்வளவு முக்கியமோ அதைவிட மேலாக அவர்களின் உயிரும் முக்கியம். படிப்பிலுள்ள வேறு உயர் வாய்ப்புகளைச் சமயம் வாய்க்கும் போதெல்லாம் மறைமுகமாகக் குழந்தைகளுக்குச் சுட்டி வளர்க்க வேண்டும். பிள்ளைகளுடன் மனம் விட்டுப்பேச நேரம் ஒதுக்க வேண்டும். அவர்களின் விருப்பங்களை அறிந்து அதில் சாதகமான அம்சங்களை அவர்களுடன் வெளிப்படையாக, மென்மையாக உரையாடி அதற்கேற்பச் செயல்பட முனைய வேண்டும்.

சில தினங்களுக்கு முன் ஓர் ஆசிரியத் தம்பதி தம் பிள்ளையின் விருப்பத்திற்காகத் தாங்கள் சிறுவயதிலிருந்து கட்டி வைத்திருந்த மருத்துவக் கனவைத் தூக்கி எறிந்துவிட்டதாக ஒரு செய்தி நாளிதழ்களிலும் சமூக ஊடகங்களிலும் வேகமாகப் பரவியது. பிள்ளையின் விருப்பமறிந்து உயர்கல்வியைத் தேர்வு செய்த அவர்களின் பொறுப்புணர்வைப் பலரும் பாராட்டியிருந்தனர். இஃது ஒரு நல்ல முன்னுதாரணம். அதிலும் அவர்கள் ஆசிரியர்கள் என்பதால் அச்செய்தி கூடுதல் கவனம் பெற்றது. படித்தவர்கள், ஆசிரியர்கள் அரசுப்பணியில் இருப்பவர்கள், மக்கள் பிரதிநிதிகள் இவ்விசயத்தில் முன்னுதாரணமாக நடந்து கொண்டால் நல்ல மாற்றம் ஏற்பட வழியுண்டு. கிராமப்புறங்களில் விவரம் தெரியாதவர்கள் மேற்குறித்தவர்களின் பிள்ளைகள் எங்கு படிக்கின்றனர்? எந்தப் படிப்பைத் தேர்வு செய்கின்றனர் என்று மறைமுகமாகக் கவனித்துத் தங்கள் பிள்ளைகளுக்கு வழிகாட்டத் துணிகின்றனர். விபரமறிந்தவர்கள் தெளிவான பாதையில் நடைபோடும் போது கவனிப்பவர்களும் அந்த மாயையிலிருந்து எளிதில் விடுபட வகையுண்டு. மருத்துவத் தொழில் புனிதமானது, உயர்வானது, மகத்துவமானது. சமூகத்தில் உயர்ந்த மதிப்பை, செல்வாக்கை வழங்கக் கூடியது. மாற்றுக்கருத்தில்லை. ஆனால் கிராமத்தில் ஒரு சொலவடையுண்டு. தங்க ஊசி என்பதற்காக வயிற்றிலா குத்திக் கொள்ள முடியும்..? 

- மீனா சுந்தர்

நன்றி: காக்கைச் சிறகினிலே, 

ஜூன் 2022

No comments:

Post a Comment