சமூகநீதியே....திராவிட மாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 12, 2022

சமூகநீதியே....திராவிட மாடல்

தினமணி பத்திரிகையில் 28.04.2022 அன்று, மேனாள் அமைச்சர் முனைவர். வைகைச் செல்வன் அவர்கள்,... திராவிட மாடல் பொருளாதாரம்; ஒரு பார்வை! என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதைப்பற்றிய எனது கருத்துக்களை பதிவு செய்கிறேன்.

திராவிடமே சமூக நீதி, மாநில உரிமை, மொழி, இன உணர்வு,...போன்றவற்றை தட்டி எழுப்பியது என்றும், அடித்தட்டுப் பிரிவினர் கூட, அமைச்சராக முடியும் என்கிற நிலை வரவேற்கத் தக்கது என்று கூறிவிட்டு.... திராவிட மாடல் பொருளாதாரம் என்று எப்படி சொல்லமுடியும் என்று கேட்கின்றார். இதற்கு பதில் கூறவே இக்கட்டுரை!

ஜி.எஸ்.டி, வரிவிகிதம் குறித்து இக்கட்டுரை அதிகளவு பேசுகின்றது. ஜி.எஸ்.டி.  பொருளாதார மாடல் என்று இவர் தமது கட்டுரைக்குப் பெயர் வைத்திருக்கலாம். ஜி.எஸ். டி.வரி விதிப்பால் எந்த முன்னேற்றமும் இல்லை. இதை திராவிட மாடல் பொருளாதாரம் எப்படி மாற்றி அமைக்கும் என்று கேட்டு கட்டுரையை முடித்திருக்கிறார்.

திராவிட மாடல்  பொருளாதாரம் என்பது சமூகநீதி மற்றும் மாநில உரிமை என்கிற சித்தாந்தங்களை மய்யமாக வைத்து உருவாகி இருக்கிறது.

ஆரியப் பார்ப்பனியம் வகுத்த சனாதன வருணக் கோட்பாட்டின் படி இந்தியா முழுவதிலும் உள்ள சுமார் 75 சதவிதம் பிற்படுத்தப்பட்ட ஜாதி மக்களும், 22 சதவீதம் உள்ள தாழ்த்தப்பட்ட ஜாதி மக்களும், சுமார்  1500 ஆண்டுகளாகப் பஞ்சைப் பராரிகளாக, படிப்பறிவு கொடுக்கப்படாதவர்களாக கொடுமையான வாழ்வு வாழ்ந்து வந்தனர். 

சூத்திரரின் உடல் உழைப்பால் பல்கிப் பெருகிய செல்வங்களை எல்லாம் உண்டு கொழுத்து வந்தது ஆரியப் பார்ப்பனியம். தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு என்று ஊருக்கு வெளியே சுடுகாடுகளுக்கு அருகில் தாழ்த்தப்பட்ட மக்களைக் குடியமர்த்தியிருந்தது.

இந்த இழிநிலையை மாற்றிய பொருளாதாரமே திராவிட மாடல் பொருளாதாரமாகும். அதற்குக் கை கொடுத்த சித்தாந்தங்கள்தான் சமூக நீதி, மாநில உரிமை, மொழி இன உணர்வு, பெண்ணுரிமை, பன்மைத்துவம், ஜனநாயகம் ஆகிய பொக்கிஷங்களைக் கொண்ட திராவிட சித்தாந்தம் ஆகும். அதுவே, திராவிட மாடல்   பொருளாதாரம் உருவாகக் காரணமாக இருந்தது.

முதலாளித்துவ உற்பத்தியின் வளர்ச்சியில்.....ஆங்கிலேயர், இந்தியாவைக் காலனியாக்கியிருந்தனர். மேலும், உலகத்தை நாகரீகமாக மாற்றப் போவதாக அறிவித்தே தமது ஆட்சியை நடத்தி வந்தனர். எனவே, படிப்பறிவற்ற மக்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரம் தர மனமுவந்து முன் வந்தனர். அதனை சென்னை மாகாணத்தின் நீதிக்கட்சி வலுவாகப் பற்றிக் கொண்டது. சமூக நீதியை மய்யப்படுத்தியே பொருளாதாரத்தில் சூத்திரரையும், தாழ்த்தப்பட்டவரையும் கல்வி, வேலைவாய்ப்பு, அதிகார ஏணியில் கிடுகிடுவென ஏறச் செய்தது.

ஆரியப் பார்ப்பனியம் கட்டிவைத்திருந்த குலத்தொழில், குலக் கல்வியை அடித்து நொறுக்கியது திராவிட சித்தாந்தம்.

அண்ணல் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் கல்வியின்றி, காசின்றி, சமூக அந்தஸ்தின்றி இழிநிலையில் வாழ்ந்த  மக்களின் வாழ்வில், .... இந்திய அரசமைப்பு சட்டத்தின் மூலம்..... அதிகார உரிமைகளைப் பெற்றுத் தந்தனர். 

திராவிடம் என்கிற சித்தாந்தத்தை இந்தியாவின் வழிகாட்டும் ஒளிவிளக்காக மாற்றி ஆரியப் பார்ப்பனியத்தின் இருண்ட வாழ்வை அப்புறப்படுத்தினார்.

எனவே, சமூகநீதியை மய்யப் படுத்தியே புதிய பொருளாதாரம் உருவாக்கப்பட்டது. அதுதான் திராவிட மாடல் பொருளாதாரம் ஆகும். பொருளாதாரத்தில் குஜராத் மாடல், கேரள மாடல் என்று பல மாடல்கள் இருந்தாலும்,... அவற்றில் இல்லாத தனிச் சிறப்பு திராவிட மாடல் பொருளாதாரத்துக்கு உண்டு.

சமூகத்தில் ஜாதிய ஆதிக்க  இழி நிலையை அகற்றியதும், பொருளாதாரத்தில் ஒடுக்கப்பட்டோரை மேலேற்றியும், மாநில உரிமையைப் பயன்படுத்தி கல்வி, வேலைவாய்ப்பை அதிகப்படுத்தியும், அதிகாரத்தில் இடம் பெற வாய்ப்பு வழங்கியும் ஆரியப் பார்ப்பனியத்தின் சனாதனத்துக்கு சவுக்கடி கொடுத்தது. அதனால்தான்.... ஆரியப் பார்ப்பனிய பத்திரிகையான தினமணியில் வைகைச் செல்வன் கட்டுரை எழுத முடிகிறது, முனைவராகவும், அமைச்சராகவும் முடிந்தது.

சமஸ்கிருதம் படித்தால்தான் மருத்துவ ராக முடியும் என்பதை பனகல் அரசர் அடித்து வீழ்த்தினார். அதனால்தான் அதிகளவிலான மருத்துவர்கள் உருவாக முடிந்தது. 

மாநில உரிமைகளைப் போராடிப் பெற்றதால்தான், தமிழ்நாட்டு வரிப் பணத்தில் 19 மருத்துவப் பல்கலைக் கழகங்களை உருவாக்க முடிந்தது.

உயர்கல்வியில் 51.4 விழுக்காடு பெற்று இந்தியாவிலேயே கல்வியில் முதலிடம் பெற்று இருக்கிறோம்.

பெண் கல்விக்கும், வாழ்வுக்கும் முக்கியத்துவம் கொடுத்து 50% இடஒதுக்கீடு செயல்படுத்தி சென்னை மேயராக ஒடுக்கப்பட்ட இனத்தின் ப்ரியா அவர்களை மேயராகப் பெற்று, அவரது தலைமையில் செயல்பாடுகள் நடக்கின்றன. ஆணாதிக்க அடிப்படை கொண்ட ஆரியப் பார்ப்பனியம் பெண்களுக்கு 33விழுக்காடு நாடாளுமன்றத்தில் தராமலிருப்பது தெரிவதில்லையே.

முதலாளித்துவம் திறந்த பொருளாதாரத்தைக் கொண்டு வந்தாலும்,...அதில் இந்தியா சனாதனிகளுக்கே .....பார்ப்பன பனியாக்களுக்கே வளம் சேர்த்தது. கரோனா காலத்திலும் உலகப் பணக்காரர் வரிசையில் அய்ந்தாம் இடத்தில் அதானி வந்ததற்குக் காரணம் சனாதனப் பொருளாதாரமே ஆகும்.

தனிநாடாக தமிழ் நாடு இருந்திருந்தால்,... உலகத்தின் 18ஆவது பொருளாதார வல்லரசு நாடாக  திகழ்ந்திருக்கும் என ஆய்வறிஞர் அமர்த்தியாசென் குறிப்பிட்டது - சமூக நீதி உள்ளிட்டவற்றைக் கொண்ட திராவிட மாடல் பொருளாதாரக் கொள்கையால் தான் என்றால் அது மிகையாகாது.

குஜராத் மாடல் என்று பல்லாண்டு களாகப் பேசிவந்தபோது.....அதுகுறித்து கேள்வி எழுப்பாமல்.... திராவிட மாடல் என்றதும் கேள்வி எழுப்புவதன் பின்னால் இருப்பதும் சனாதனமே.

ஆங்கிலேயர் வரி கேட்டபோது BJP எழுந்த வீரபாண்டிய கட்ட பொம்மன் போல் ...... ஙியிறி - மோடியின் ஒரே நாடு - ஒரே வரியையும்  தமிழ்நாட்டின் திராவிட மாடல்   தூக்கிவீசும்.

தோல்வி அடைந்த  குஜராத் மாடலைக் கொடுத்த BJP மோடியை எதிர்த்து, ஜி.எஸ்.டியின் தீமை குறித்து கட்டுரை எழுதாமல்,... சனாதனத்தால் குப்புறத் தள்ளி விடும் தமிழ்நாட்டை..... கீழே விழாமல் தாங்கிப் பிடிக்கும் திராவிடத்திடம் கேள்வி கேட்பதும் சனாதனப் பாசமே ஆகும்.

மோடியின் ஒரே நாடு- ஒரே வரி..... மாநில உரிமை, கூட்டாட்சி, பன்மைத்துவ வளர்ச்சி, எனும் திராவிட மாடல் பொருளாதாரம்  சீர் செய்து விடும். முதலாளித்துவத்தின் திறந்த பொருளாதாரத்தை திராவிட மாடல் உள்வாங்கி சீரமைத்துக் கொள்ளும். தகவல் தொழில்நுட்பப் புரட்சி வந்தபோது... கலைஞர் அவர்கள் இந்தியாவிலேயே முதன் முதலாக அதற்கான ஆணையம் அமைத்து, டைட்டல் பார்க் உருவாக்கவில்லையா?

மும்மொழிக் கொள்கையைத் திணித்தபோது, ... இருமொழிக் கொள்கை மூலம் தமிழர்களை பேரறிஞர் அண்ணா உலகத்தில் உலா  வரச் செய்யவில்லையா? இதுதான் திராவிட மாடல் பொருளாதாரம். மதவாதமானது அரசியலுக்கு எதிராக, குரல் கொடுப்பதும் திராவிட மாடலே! 

மாநிலங்களால் தான் ஒன்றியம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனின் முகத்திலடித்து , எங்கள் தமிழ்நாட்டுப் பணத்தை  ஒப்படையுங்கள் எனக் கூறிய பழனிவேல் தியாகராஜனின் பொருளியல் கொள்கைதான் திராவிட மாடல். ஜி.எஸ்.டி,யை ஒன்றுமில்லாமல் ஆக்குவதைப் பொறுமையாகக் காத்திருந்து  ஓரமா உட்கார்ந்து வேடிக்கை பாருங்கள்... இந்தியாவின் வடமாநிலங்களில் உணவின்றி, கல்வியின்றி, வேலைவாய்ப்பின்றி, தமிழ்நாட்டுக்கு இரயில் ஏற வைக்கும் மோடியின் குஜராத் மாடலைக் கேள்வி கேளுங்கள் வைகைச் செல்வரே.

நன்றி

இப்படிக்கு,

தே.தேன்மொழி, காங்கயம்

No comments:

Post a Comment