பிணைப்பும் - பிரிவும் பிணைப்பும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 12, 2022

பிணைப்பும் - பிரிவும் பிணைப்பும்!

பெரியாரையும் மறைமலையடிகளை யும் சைவசமயம் பிரித்தது. தமிழ் பிணைத்தது. இருவரும் தத்தம் கொள்கையை விட்டுத்தர வில்லை .

சுயமரியாதை இயக்கத்தின் நாத்திகப் பிரச்சாரத்தை, ‘தொல்லை என்றே மறை.திருநாவுக்கரசு எழுதுவார். (மறைமலையடிகள் வரலாறு பக் .647) இதனை எதிர்கொள்ள ஒரு குழு திரண்டது. இது திரு.வி.க.வையும் தன்னோடு இணைத்து மறைமலையடிகளையும் சேர்த்தது. அனைத்து இந்திய தமிழர் மத மாநாடு 19.10.1940இல் சென்னை பச்சையப்பன் மண்டபத்தில் நடந்தது. மறைமலையடிகள், திரு.வி.க., சோமசுந்தரபாரதி, கா.சு.பிள்ளை , உமாமகேசுவரனார் பங்கேற்ற மாநாடு இது. இவர்கள் அனைவருமே பெரியாரின் கெழுதகை நண்பர்கள் என்பதே பெரியாரின் சிறப்பும், அவர்களின் சிறப்பும். சுயமரியாதை இயக்கத்தவர் உள்ளே புகுந்து எதிர்ப்பைக் காட்டினர். இம்மாநாட்டின் விளைவாகத்தான் ‘தமிழர் மதம்‘ என்ற நூலை அடிகள் எழுதினார்.

இவை எல்லாம் சிறு இடைஞ்சல்களே! 1948மீண்டும் இந்தி எதிர்ப்புப் போர். மீண்டும் பெரியாரும் மறைமலையடிகளும் கைகோத்தனர். 17.7.1948 சென்னையில் நடந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டில் மறைமலையடிகள் பேச்சு என்பது பெரியாரின் பேச்சைப் போல இருக்கும்.

1. ஆரியர்கள் என்று இந்நாட்டில் காலடி எடுத்து வைத்தார்களோ அன்று முதல் தமிழையும் தமிழரின் கலைகளையும் கலாச்சாரத்தையும் ஒழிப்பதிலேயே அவர்கள் கண்ணும் கருத்துமாய் இருந்து வந்திருக்கிறார்கள். இந்த ஆரிய சூழ்ச்சி சென்ற 500 ஆண்டு களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தென்னாட்டை ஆரிய நாடாக ஆக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு இவர்கள் பல நூற்றாண்டுகளாக விடாமுயற்சி செய்து வருகிறார்கள். இதற் காகவே ஆரியர்கள் சிலர் தம்மையும் தமிழர்கள் என்று கூறிக் கொண்டும் நம்முடன் சேர்ந்து கொண்டும் நயவஞ்சகமாக நமக்கு நன்மை செய்வது போல் ஏதாயினும் கூறி, நம்மை ஏமாற்றி நம்மை வடநாட்டு ஆரியருக்கு அடிமைப்படுத்த பெருமுயற்சி செய்து வருகிறார்கள். இம்முயற்சிக்கு நாம் ஏமாந்து போய் விடக்கூடாது..

2. நாளடைவில் இங்கும் ஆரியர்கள் குடியேறி நம்மவர் சிலரைத் தம் கையாள்களாக்கிக் கொண்டு நமது கலாச்சாரத்தை ஒழிக்க முற்பட்டனர். அவர்கள் தம்மை எல்லோருக்கும் உயர்ந்த வராகவும் தமக்கடுத்த உயர்வுள்ளவர்களாக அரசர்களையும் அதற்கும் அடுத்த உயர்வுள்ளவர்களாக வணிகர்களையும் மற்றவர் களைத் தம் எல்லோருக்கும் அடிமைகளாகவும் (சூத்திரர்களாகவும்) கடவுள் படைத்தாரென்று கூறி அரசர்களுக்கு மற்றையோரைக் காட்டிலும் தனி உயர்வைக் கற்பித்து விடவே அவர்கள் ஆரியத்திற்குச் சுலபத்தில் அடிமையானார்கள்.

3. அரசனது செல்வாக்கை நாடிய வைசியர்களும் (வாணிபர் களும்) அதற்கு உடந்தையாகி விடவே மற்றக் குடிகளும் வேறு வழியின்றி ஆரிய வர்ணாஸ்ரம தர்மத்திற்குக் கட்டுப்பட்டவராயினர். இப்படி ஆரியர்கள் மற்றவரைத் தாழ்த்தித் தம்மை தேவர்களாக்கிக் கொண்ட சூழ்ச்சியை, ஏமாற்றுதலை அறிந்து கொள்வதற்கான போதிய நல்ல அறிவு நமக்கில்லை யாதலால் வர்ணாஸ்ரமம் இன்னும் இந்நாட்டில் இருந்து வருகிறது.

4. சூத்திரன் வேதம் படிக்கக் கூடாது. படித்தால் அவனுடைய நாக்கு துண்டிக்கப்பட வேண்டும் என்றும், வேதம் ஓதுதலையும் அவன் கேட்கக் கூடாது, கேட்டால் அவன் காதுகளில் ஈயம் காய்ச்சி ஊற்றப்பட வேண்டும் என்றும் மனு நீதியில் எழுதி வைத்துக்கொண்டு அதன்படியே கடுந் தண்டனை விதித்து நம்மைப் படிக்க வொட்டாமல் செய்து விட்டனர்...

5. ஆங்கில ஆட்சி இந்நாட்டில் ஏற்படவும் அவர்கள் நாளடை வில் எல்லா ஜாதியினருக்கும் கல்வி கற்கும் உரிமை அளித்தனர். அதையும் கல்வி நிலையங்களில் ஆசிரியராக அமையப் பெற்ற பார்ப்பனர்கள் பல காரணமாகப் பயன்படவொட்டாமல் செய்து வந்த போதிலும் ஒரு சிலராவது படித்துத் தேற வசதி ஏற்பட்டது.

6. கல்வி நிலையங்களில் போதிக்கப்படும் கல்வியும் பெரும் பாலும் ஆரிய தர்மத்தையே வலியுறுத்தும் கல்வியாக இருந்து வருவ தால் அக்கல்வியும் பேனா அடிமைகளைச் சிருஷ்டிக்கத்தான் உதவி வந்ததே ஒழிய, வருகிறதே ஒழிய, மக்களை மேல் நிலைக்குக் கொண்டு வரப் பயன்படாமல் இருந்து வருகிறது.

7. இனியும் ஆரிய அடிமையாயிருக்கக் கூடாது என்ற அறிவு உதயமாகிவிட்டது-ஆரியத்தை அழிப்போம், தமிழைக் காப்பாற்று வோம் என்ற முழக்கம் எங்கும் கேட்கப்படுகிறது... தமிழர்கள் தன்னு ணர்வு எய்தத் தொடங்கி விட்டனர் என்பதைக் கண்ணுறும் ஆரியர் களின் வயிறு பற்றி எரிகின்றது.

8. இந்தி, ஆரிய தர்மத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆரிய தர்மம் வர்ணாஸ்ரம தர்மத்தை, ஜாதி வேறுபாடுகளை, ஜாதி உயர்வு தாழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது. தமிழர் கலாச்சாரமோ இதற்கு முற்றிலும் மாறுபாடானது.

இதுதான் மறைமலையடிகளின் குரல். இறப்புக்கு (1950) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு (1948) பேசிய இறுதிக் குரல்.

இப்படிப் பேசிய அடிகள் இறுதியாக எப்படி முடிக்கிறார் பாருங்கள் ...

“.... இதை ஆரம்பத்திலிருந்தே உணர்ந்து கொண்டுள்ள பெரியார் இராமசாமி அவர்களும் ஆரியத்தை இந்நாட்டிலிருந்து எவ்வகையிலேனும் ஒழித்தே தீருவதென்று கங்கணம் கட்டிக்கொண்டு முயற்சி செய்து வருகிறார்கள். இத்தொண்டு மிக விரைவில் வெற்றி காண இருக்கிறது என்பது இங்கு கூடியுள்ள மக்கள் உணர்ச்சியால் நன்கு தெரியப்படுகின்றது. நான் சைவ சமயத்தில் பிறந்து விட்டேன். ஆகையால் இவருடன் (பெரியாருடன்) ஆரம்ப காலத்திலிருந்தே ஒத்து வேலை செய்யும் வாய்ப்புக் கிடைக்காமற் போய்விட்டது. சைவ சமயத்தவரைத் திருத்துவதையே எனது நோக்கமாகக் கொண்டு, சமற்கிருதம் கற்று சைவ சமய உண்மைகளை ஆராயப் புகுந்தேன். பார்ப்பனர்களின் தந்திரங்களை, சூழ்ச்சிகளை அறிந்து சில வெளியீடுகளின் மூலம் அவைகளை அம்பலமாக்கினேன். பார்ப்பனர் தம்மை உயர்ஜாதி என்று சொல்லிக் கொள்ளத் தகுதியற்றவர்கள் என்பதை ஆதாரத்துடன் விளக்கிக் காட்டினேன். இதன் பயனாய்ப் பார்ப்பனர்கள் என்னை வேத விரோதி என்றும், பார்ப்பன துவேஷி என்றும் பழித்துக் கூறி எம்மவரிடத்திலேயே எனக்குப் பகைமையை மூட்டி விட்டனர். இதனால் எடுத்த காரியம் எதிர்பார்த்த பலனைத் தராமல் போய்விட்டது. என்றாலும் இந்த 55 ஆண்டுகளில் சுமார் 40 நூல்கள் வரை தமிழில் வெளியிட்டேன். ஆங்கிலத்திலும் சில நூல்கள் வெளியிட்டுள்ளேன். இவைகள் இளைஞர் உள்ளத்தில் ஓரளவுக்கேனும் எழுச்சியை உண்டாக்க பயன்பட்டிருக்கும் என நினைக்கிறேன்.

செல்வந்தர்களும், மடாதிபதிகளும், ஆரியதாசர்களாய் ஆகி விட்டபோதிலும் இந்நாட்டு இளைஞர்கள், தமிழ் அணங்குகள் யாவரும் பெரியார் சொற்படி அறப்போர் துவக்கி இந்தியை ஒழிப் பதில் விரைவில் வெற்றி காண வேண்டும்” என்பதாக முடிக்கிறார்.

- (இந்திப்போர் முரசு பக்கம் 20-25) 

(ப.திருமாவேலன் எழுதியுள்ள “இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்”? - என்ற நூலிலிருந்து, பக்கம் 130-133)


No comments:

Post a Comment