அனைத்து உயிரினங்களிலும் மனித உயிரே கருவியைப் பயன்படுத்துகிறது. கல்லும் கட்டையும், எலும்பும் இரும்பும், வேலும் வில்லும், சக்கரமும் வண்டியும், கத்தியும் சுத்தியும், கட்டு மரமும் கப்பலும். எனத் தொடங்கி இன்று ஏவுகணைகளையும் கணினியையும் பயன்படுத் தும் அளவிற்கு மாந்தர் வளர்ந்துள்ளனர்.
மொழியும் ஒரு கருவியே! ஆனால் மற்றவற்றி லிருந்து அஃது அடிப்படையில் வேறுபடுகிறது. அது மனத்தைச் சார்ந்தது. அது மூளையால் பெரும்பாலும் இயல்பாக வடிவம் பெறுவது.- உடலின் புற உறுப்புக்கள் மொழியைக் கையாள்வதில்லை. மொழியின்மீது அறிவின் ஆட்சி இருக்கும் அளவிற்குப் பிற கருவிகளில் இல்லை. அத்துடன், மொழிக்கும் உணர்வுக்கும் உள்ள தொடர்பு நெருக்கமா னது, மன எழுச்சிக்கு ஊற்றாக இருக்கவல்லது; பிற கருவிகளுக்கு அத்தகு ஆற்றல் இல்லை . இன உணர்வு மற்றும் சமுதாய ஒற்றுமைக்கு அடிப்படையாகவும் வலிமை சேர்ப்பதாகவும் இருப்பது மொழியே! மொழிப் பற்று இல்லையேல் ஒரு தேசிய இனத்திற்கு உரிமை உணர்வே இருக்காது. அத்தகைய இனம் காலப்போக்கில், அறிவியல், சமுதாயம், அரசியல், பொருளியல் ஆகிய துறைகளில் படிப்படியாக வீழ்ந்துபடுவதைத் தவிர்க்க முடியாது. மொழியைக் காத்து வளர்க்கும் விழிப்புணர்வு, உரிமை வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் வித்தாகும்.
இந்துத்துவத்தை முதன்மைப்படுத்தும் பாரதீய ஜனதாக் கட்சியின் கூட்டணி ஆட்சியில் சமஸ்கிருதம் போற்றப்படுகிறது. அதனுடன் ஒட்டிய இந்தி ஏற்றம் பெறுகிறது. தமிழுக்கு உரிய இடம் மறுக்கப்படுகிறது. அத்துடன் தமிழ்ப் புழக்கத்தில் வடமொழி கலக்கிறது. அதாவது, தமிழ்ப் பண்பாட்டைச் சமற்கிருதப் பண்பாட்டிற்கு அடிமையாக்கும் வேலை மறைமுகமாகத் திட்டமிட்டபடி நடக்கிறது.
சங்க இலக்கியத்தில் ஓம் என்பது எங்கும் காணோம். இடைக் காலத்தில் புகுந் தது. திராவிடர் இயக்க மறுமலர்ச்சியில் ஒழிந்தது. ஆனால், கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக, 1980-களின் இடைப் பகுதியில் இருந்து, அந்த இந்துமத அடையாளத்தைத் தமிழில் எங்கும் பரப்பினர். பின்பு அதைத் தமிழில் ஒருபுறத்திலும், வடமொழியில் மறுபுறத்திலும் இவ்வாறு எழுதினர்:
ஓம்... - இப்பொழுது தமிழை நீக்கி விட்டனர். இதுதான் பார்ப்பனத் தந்திரம்; இருக்க இடம் கொடுத்தால் நாம் படுக்கும் பாயைப் பறிப்பான். எதைவிட்டாலும் தன்னுடைய பண்பாட்டு மேலாதிக்கத்தை விட மாட்டான். திரு என்பது போய் ஸ்ரீ என்பது வந்துவிட்டது. ஸ்ரீதிருவள்ளுவர், ஸ்ரீதிருநீலகண்டர் என எழுதியிருப்பதைப் பார்த்து அழுவதா சிரிப்பதா?
மய்ய அரசு நிறுவனங்களுக்குச் சமற்கிருதம் சார்ந்த இந்தியில் அல்லது அதனுடன் ஆங்கிலத் தைக் கலந்து பெயர்களைச் சூட்டுகிறார்கள்: ராஷ்ட்ரீய கெமிகல்ஸ் அண்ட் பெர்டிலைசர்ஸ் லிமிடெட், பாரத் சன்சார் நிகாம், விதேஷ் சன்சார் நிகாம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரே ஷன் எனும் வகையில் பலப்பல அறிவிப்புகள் தமிழ்ச் செய்தித்தாள்களில் வருகின்றன. வட மொழியாளருக்கு மேல் நிலையும் மற்றவருக்குத் தாழ் நிலையும் உள்ள இந்தியாவை உருவாக்கு கிறார்கள்.
கடந்த ஆண்டை (1999-2000) சமற்கிருத ஆண்டாக மய்ய அரசு அறிவித்து, அதற்கான நிகழ்ச்சிகளைக் கோலாகலமாக நடத்தியது. தொன்மைக் காலத்திலேயே விழுமிய இலக்கியச் செல்வத்தை உள்ளடக்கிய தமிழைச் செம்மொழி யாக அறிவிக்க மறுக்கிறது. தமிழில் அர்ச்சனை செய்வது, ஆகம விதிப்படி அமைந்த கோயில் களில் சட்டப்படி செல்லாது என உச்சநீதி மன்றம் தீர்ப்பளிக்கிறது. அதை மாற்றியமைக்க வேண்டும் எனும் அக்கறை திராவிடர் கழகத்தார்க்கு இருப் பதைப் போன்று மற்றவர்களுக்கு இல்லையே என மானமிகு கி. வீரமணி அவர்கள் கவலைப்படும் அளவில்தான் இருக்கிறோம். கோயிலிலும் இல்லச் சடங்குகளிலும் வேற்று மொழிக்கு முன்னிடங் கொடுக்கும் தமிழன், பிற துறைகளில் தமிழுக்கு உரிய இடம் பெறுவதற்குத் துணிவது எப்படி, அதற்குப் பெரிய அளவில் திரண்டு முயல்வது எங்ஙனம் என அவர் கேட்பதை அனைவரும் எண்ணிப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.
சமற்கிருத நூல்கள்
வேதியப் பண்பாட்டின் மேலாதிக்கத்தை நாம் வெறுப்பதற்குக் காரணம் அதன் உள்ளடக்கமாக இருக்கின்ற மனித நேயமற்ற இனப் பகை உணர்வும் வருண - ஜாதிக் கருத்துக்களுமே யாகும். வேதம், வேதாந்தம் (உபநிடதம்), இதிகாசங்கள் (இராமாயணம், பாரதம்), புராணம், தர்ம சாத்திரம் ஆகிய மதம் சார்ந்த நூல்கள் மட்டுமின்றி, கவுடில்யரின் அர்த்த சாத்திரம் எனும் அரசியல் - பொருளியல் நூலிலும், வராக மிகிரர் போன்றோரின் சோதிடம் கலந்த வான இயல், நூலிலும், காளிதாசரின் இலக்கிய ஏடுகளிலும் வருண - ஜாதிப் பிறவி ஏற்றத் தாழ்வுகள் ‘வலியுறுத்தப்படுகின்றன. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்குள் ஆரியர் நுழைந்த பொழுது, வடமேற்குப் பகுதியில் வாழ்ந்த தொன்மைக் குடிகளைக் கறுப்பர், சப்பை மூக்கர், புரியாவேற்று மொழியினர், நூதனக் கடவுளரை வழிபட்டவர் எனத் தங்களுடைய வேதங்களில் குறிப்பிட்டுள்ளனர். அம்மக்களைப் பனியர், தாசர், தசியுக்கள் என அழைத்தனர். அவர்களை விரட்டுவதற்கும், அழித்து ஒழிப்பதற்கும், உயிர்ப் பலியிட்டு, யாகங்கள் செய்து, இந்திரன் அக்கினி முதலிய தேவர்களை வேண்டினர். இதன் வழி யாக இனப் பகை முத்திரை ஆரியரின் தொன்மைப் படைப்பான இருக்கு வேதத்திலேயே உறுதியாகப் பதிந்திருக்கிறது. இந்நூலை. இறைமொழி என்றும், புனிதமானதென்றும், அதில் உள்ளதை மாற்றாமல் ஏற்கவேண்டும் என்றும் கொண்டாடி னால், அதைக் கொண்டு சமூக நல்லிணக்கத் தையும், உலக இனங்களிடையே ஒற்றுமையை யும் சமாதானத்தையும் ஏற்படுத்துவது எப்படி? புருஷமேத யாகத்தில் மனிதர்களையும், அஸ்வ மேத யாகத்தில் விலங்குகளையும் பலியிடுவதைப் போற்றும் ஏடுகளை ஆதார வழிகாட்டிகளாகக் கொண்டு நமது நாகரிகத்தை உயர்த்துவது எவ்வாறு?
இந்திய நாட்டின் மூலக் குடிகளுக்குத் தொடர் பற்ற சமற்கிருதம், பார்ப்பன மேலாதிக்கத்திற் கெனவே உருவாக்கப்பட்டதாகும். சமற்கிருதம் என்பதற்கு நன்கு செய்யப்பட்டது எனப் பொருள். அதன் மந்திரங்களை வேதியரைத் தவிர பிறர் படிக்கக் கூடாதெனக் கடுமையான தண்டனைகள் மூலம் தடுத்தனர். பொது மக் களின் நலன் நாடிய பெரியவர்கள் அம்மொழியைப் புறக்கணித் தனர். யாகத்தையும் வேதத்தை யும் நால்வருணத்தையும் எதிர்த்துப் புதிய அறிவார்ந்த மனித நேயப் பாதையைக் காட்டிய புத்தர் செல்வாக்குப் பெறத் தொடங்கிய பொழுது பார்ப்பனரில் சிலர் அவருக்குச் சீடராயினர். இருப் பினும் சமற்கிருதத்தைப் போற் றாமல் அவர்களால் இருக்க முடிய வில்லை. தொடர்ந்து என்ன நடந்தது என்பதை விவேகானந்தர் கூறுகிறார்:
‘’புத்தர் தமது நெறியைப் பரப்பிய காலத்தில், இந்தியாவில் சமற்கிருதம் வழக்கொழிந்த மொழியாக இருந்தது. கற்றவரின் புத்தக மொழியாக மட்டுமே இருந்தது. புத்தரின் பார்ப்பனச் சீடரில் சிலர் அவரு டைய கருத்துக்களை சமற்கிரு தத்தில் மொழி பெயர்க்க விரும் பினர். ஆனால் புத்தர் தெளிவாக இவ்வாறு அவர்களுக்குக் கூறி விட்டார்: ‘ஏழையருடைய, பொது மக்களுடைய நலனை நான் நாடுகிறேன். அவர்களு டைய மொழியைப் பயன்படுத் தவே விரும்புகிறேன்’ இவ்வாறு அவர் கூறி விட்டதால் அவரு டைய போதனைகளில் பெரும்பா லானவை அவர் காலத்து மக்கள் பேசிய மொழியிலேயே இருக்கின் றன’’ (The Complete Works of Swami Vivekananda, Vol -l; 15th Edition, Page-22)
கனிஷ்கருக்குப் பின்பு:
தமது எண்ணங்கள் பொது மக்கள் புழங்கும் மொழியில் இருக்கவேண்டும் எனப் புத்தர் விரும்பியும், கனிஷ்கருடைய (கி.பி. 78-101) காலத்தில் இருந்து பவுத்தக் கொள்கைக்கான விளக்கங்கள் சமற்கிருத மொழியிலேயே எழுதப்பட்டன. அவர் காலத்தில் நான்காவது பவுத்த மாநாடு நடந்தது. அதனுடைய துணைத் தலைவராக இருந்த அசுவகோசர், சாகேத என அக்காலத்தில் அழைக்கப்பட்ட அயோத்தியைச் சேர்ந்தவர். தாயின் பெயரை முன் வைத்துத் தம்மை “ஆர்ய சுவர்ணாகஷிய புத்திரன்” என அழைத்துக் கொண்டார். இவர் வால்மீகியை ஆதிகவி எனப் பாராட்டியவர். புத்த சரிதம், சவுந்தரானந்தம், சாரிபுத்ர பிரகரணம் ஆகிய பவுத்த நூல்களைச் சமற்கிருதத்தில் எழுதினார். அதைத் தொடர்ந்து, பக்தியின் சாயலை உள்ளடக்கிய, புதிய கொள்கை யைக் கொண்ட, மகாயானம் எனும் பிரிவு பவுத்தத்தில் தோன்றியது.
சாதவாகன மன்னன் யஜ்ஞசிறீகவுதமீபுத்ரன் (கி.பி. 166-196) காலத்தில் வாழ்ந்த நாகார்ஜுனர் தென்னிந்தியப் பார்ப்பனர். மாத்யமிகம் எனப்படும் சூன்யவாதத்திற்கு ஆதாரமான மாத்யமிக சாத்திரத்தை இவர் வடமொழியில் வடித்தார். இவருக்குப் பின்பு, குப்தர் காலத்தில் பிராமண இந்து மதத்திற்கும் பவுத்தத்திற்கும் அதிக நெருக்கம் ஏற்பட்டது. கவுசிக கோத்திரத்தைச் சேர்ந்த பார்ப்பனரான வசுபந்து, அமிர்தகோசம் எனும் நூலைச் சமற் கிருதத்தில் எழுதி இரண்டாவது புத்தர் எனும் பாராட்டை அவர் காலத்தவரிடம் பெற்றார்! பொது மக்களிடமிருந்து இவ்வாறு விலகிப் பண்டிதர் மொழியான சமற்கிருத்தத்திற்குள் அடங்கிய பவுத்தம், மாயாவாதக் கொள்கையை ஏற்று, தாந் திரிக நடைமுறையை மேற்கொண்டு சீரழிந்தது.

No comments:
Post a Comment