ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 12, 2022

ஆசிரியர் விடையளிக்கிறார்


கேள்வி 1:   ஒன்றிய அரசின் பிரதமர், உள்துறை அமைச்சர் இருவருமே குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். முக்கியமான துறைகளைக் கொண்டுள்ள இதுபோன்ற பதவிகளில் (அந்தக்கட்சிக்கூட்டணியிலேயே) பதவி பகிர்வில் பிற மாநிலத்தவருக்கும் சம வாய்ப்பு 

வழங்கியிருக்கலாம் அல்லவா?

க.ஆற்றல்அரசி, அயப்பாக்கம், சென்னை- 77

பதில்: பிரதமருக்கு (மோடிக்கு) உள்ள தனிப்பட்ட உரிமை யாருக்கு எந்தத்துறை என்பதும், அவரது தனிச்  செயலாளர், செயலாளர்கள், அமைச்சரவைத் தேர்வு என்பதும் - இதில் அவர் குஜராத்காரர்களையும், குஜராத்தில் தன்னுடன் - தன்காலத்துப் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றவர்களையுமே நம்புகிறார் என்பது மற்ற மாநிலத்து பாஜக - ஆர்.எஸ்.எஸ்.காரர் அமைச்சர்களுக்கு புரிந்தாலும் கேள்வி கேட்க சட்டப்படி உரிமையில்லை. 

அது பிரதமராகப் பார்த்து யோசிக்க வேண்டிய ஒன்று! அவரைப் புரிந்து கொள்ளட்டும் நாடு. 

கேள்வி 2: இந்தி பேசாத மாநிலத்தவர்களின் உரிமைகளைப் பறிக்கின்ற வகையில் இந்தியைத் திணிப்பதேன்? அதிலும், ஒன்றிய அரசில் பதவி வகிப்போரின் (பிரதமர், உள்துறை அமைச்சர்- குஜராத்) தாய்மொழி வேறாக இருந்தாலும் இந்தி, சமஸ்கிருதத்தைத் திணிப்பது ஏன்? இந்தி, சமஸ்கிருதமயம்மூலம் அவர்களின் தாய்மொழிக்கும் பேராபத்து ஏற்படும் என்று உணராமல் இருப்பதும் ஏன்?

வி.முகில்மொழி, செஞ்சி.

பதில்: ஆதிக்கவாதியின் மனப்போக்கு அடுத்தவர்களின் உரிமையைப் பற்றி சிந்திக்க அனுமதிக்காதே! அதை ஏனோ மறந்தீர்கள்?

கேள்வி  3: மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் தமது உறவினர்கள் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், இறக்க நேரிடும்போது, மருத்துவமனையை சேதப்படுத்தி, மருத்துவர்களைத் தாக்கி போராட்டங்களில் ஈடுபடும் போக்கு தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறதே- இதற்குத் தீர்வுதான் என்ன?

- இராமலிங்கம், சென்னை

பதில்: இது ஒரு தவறான - விரும்பத்தகாத உணர்ச்சி வயப்பட்ட அநாகரீக வரம்பு மீறிய செயல்கள். அமெரிக்கா போன்ற நாடுகளைப் போலவே கையெழுத்து வாங்கிதான் நம் நாட்டு மருத்துவமனைகளிலும் அறுவைச் சிகிச்சை நடைபெறுகிறது. உயிர்ச்சேதமும் அதில் உள்ளேயே தவறு நடந்ததாக சந்தேகம். சட்டப்படி பரிகாரம் தேடுவதுதான் நியாயமான வழி. தடுக்க புதிய கூடுதல் உத்திகளைக் கண்டறிவது நல்லது; அவசர அவசியமும்!

கேள்வி 4: பா.ஜ.க.வைச் சேர்ந்த எச்.ராஜா, தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவுக்கு சவால் விடுத்ததுடன், தி.மு.க.வினர் நடமாட முடியாத நிலை ஏற்படும் என மிரட்டல் விடுத்துள்ளதுபற்றி...?

- பாண்டுரங்கன், பழனி

பதில்: என்ன சொல்வது? தமிழ்நாடு அரசின் “கடிதோச்சி மெல்ல எறிக” கொள்கை! அவாள் விஷயத்தில் செல்லாது! ஆடிக்கறக்க வேண்டிய மாட்டை ஆடிக்கறக்க வேண்டும் என்பதை தமிழ்நாடு அரசு புரிந்து தாட்சண்யமற்று தலைக்கொழுப்பைத் தடுத்து நிறுத்த சட்டத்தைப் பாய்ச்ச வேண்டும்.

கேள்வி 5: இளைஞர்களை சீரழிக்கும் கஞ்சா கலாச்சாரம் தமிழ்நாட்டில் பெருகிவருவது குறித்து...?

- ஆ.விஜயகுமார், சூணாம்பேடு

பதில்: தமிழ்நாடு அரசின் கடுமையான நடவடிக்கைகள் மேலும் தீவிரமாகி, சட்டத்திருத்தம், கடுமையான தண்டனை மேலும் தீவிரமாக நுழைகிறது - சர்வதேச மாஃபியா கும்பலை அடக்க ஒன்றிய அரசும் - இதில் தீவிரம் காட்ட முனைய வேண்டும்.

கேள்வி 6: மதுரை ஆதீனம் திராவிட மாடல் ஆட்சியைப்பற்றி குறைகூறிப் பேசுவது நியாயந்தானா?

- அ.சுவேதா, பாண்டி

பதில்: நுனிக்கொம்பர் அதன் பலனை விரைவில் அடைவர் - “பேயை விட பேய் பிடித்தவன் அதிகம் ஆடுவான்” என்ற தவத்திரு. குன்றக்குடி அடிகளார் கூற்று நினைவுக்கு வருகிறது!

கேள்வி 7 :  அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களான பொன்னையன், செல்லூர் ராஜூ, நத்தம் விசுவநாதன் போன்றோர் பா.ஜ.க.வை எதிர்த்துப் பேசுவது அவர்களின் கூட்டணி முறிவுக்கு வழிவகுக்குமா?

- பா.முகிலன், சென்னை

பதில்: அடமான திமுகவினை (அதிமுக) மீட்டெடுக்க அது ஒன்றுதான் சரியான வழி. ஆனால் அவர்கள் வெற்றி பெற வேண்டும் - துவாரகா பாலகர்கள் குனிந்தவர்கள் நிமிரமாட்டார்கள் போலிருக்கிறதே!

கேள்வி 8:  பா.ஜ.க. அண்ணாமலைகளின் ஆட்டம் தமிழ்நாட்டில் தொடர்வது தமிழர்களுக்கு நல்லதா?

- புரூனோ, காரைக்குடி

பதில்: இதற்கு முன் திமுகவை, திராவிடர் இயக்கத்தை எதிர்த்து ஆட்டம் ஆடியவர்களின் முகவரிகள் தேடப்பட வேண்டியதாகி விட்ட வரலாறு அவருக்கு தெரியாது. அளவுக்கு மீறிய ராஜாவை மிஞ்சிய விசுவாசம் அவரை இப்படி - ஊடக வெளிச்சத்தால் ஆட்டம் போட செய்கிறது. திராவிட மாடல் ஆட்சி என்ற கற்பாறையில் அந்த கண்ணாடித் துண்டு மோதுவது அதற்கே நல்லதல்ல; பயன் தராது!

கேள்வி 9:  எரிபொருள்களுக்கான கச்சா எண்ணெய் விலை பன்னாட்டளவில்  குறைந்தாலும், எரிபொருள்கள் விலை அந்த அளவுக்கு குறைக்கப்படாமல் நாட்டின் விலைவாசி கட்டுப்படுத்தப்படாமல் உயர்ந்து கொண்டிருக்கிறதே? ஒன்றிய அரசு வேடிக்கை பார்க்கிறதே? அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் வந்து

விடுமா?

 - வி.அகிலன், அமராவதி நகர், உடுமலைப்பேட்டை

பதில்: உங்கள் கேள்வி - பொருளாதார அறிவுள்ள எவரையும் சிந்திக்க வைக்கும் என்பது உறுதி. ஆனால் கார்ப்பரேட் தயவுகளுடன் ஆட்சி நடத்தும் பா.ஜ.க. இதை உணர்ந்ததாகத் தெரியவில்லையே! என் செய்வது?

கேள்வி 10: கோயில் அர்ச்சகர்கள் வழக்கில் பரம்பரை முறை ஒழிக்கப்பட்டுள்ள நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் முறைகேடுகள் குறித்த புகார்களின்மீது ஆய்வு மேற்கொள்ள சென்ற தமிழ்நாடு அரசின் ஆய்வுக்குழுவுக்கு உரிமை கிடையாது என்று கூறி தீட்சிதர்கள் எதிர்ப்பு 

தெரிவித்துள்ளார்களே?

- ப.அசுரன், விருத்தாசலம்

பதில்: “மயிலே மயிலே இறகு போடு”என்பது தீட்சிதர்கள் விஷயத்திலும் பயன் தராது. புதிய நடவடிக்கையில் தமிழ்நாடு தி.முக. அரசு கலைஞர் பாதையில் இறங்கி சட்டத்தைப் பாய்ச்சி ஆக வேண்டிய சரியான தருணம் நெருங்கி விட்டது.


No comments:

Post a Comment