'விடுதலை’ ஏடு பெற்ற விழுப்புண்கள் - பாரீர்! இப்படி ஒரு நெருப்பாற்றில் நீந்தி மீண்ட நாளேடு வேறு உண்டா? சிந்திப்பீர், இளைய தலைமுறையினரே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 28, 2022

'விடுதலை’ ஏடு பெற்ற விழுப்புண்கள் - பாரீர்! இப்படி ஒரு நெருப்பாற்றில் நீந்தி மீண்ட நாளேடு வேறு உண்டா? சிந்திப்பீர், இளைய தலைமுறையினரே!

கி.வீரமணி, ஆசிரியர், ‘விடுதலை’

நமது ‘விடுதலை’ நாளேடு, நமது ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட மக்கள் - அவ்வுரிமைகளைப் பெறவும், மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலையாகி, பகுத்தறிவின் பயன்பட்டால் உலகில் போற்றத்தக்க சமுதாயமாக ஆக வேண்டும் என்பதற்காகவும், எத்த னையோ லட்சம் ரூபாய்கள், பொருள் இழப்பானாலும் கூட, சமுதாயத்திற்கும், மக்களுக்கும் அறிவிலும், மனத் திலும் லாபம் என்பதால், 88 ஆண்டுகள் எதிர்நீச்சல் போட்டு நடைபெற்றுவரும் ஓர் அதிசய நாளேடு!

ஒரு இலட்சிய, கொள்கை நாளேடு - சமூகப் புரட்சிக்கான கருத்தியல் போருக்கான பயணத்தில், இது காகிதம் அல்ல - ஆயுதம் - அறிவாயுதம் என்று உணர்த்தும் வகையில் அது சந்தித்துள்ள எதிர்ப்புகளை, அரசின் அடக்குமுறை காரணமாக விழுப்புண்களையும் ஏற்று வீறுநடை போட்டு வந்துள்ள வரலாற்றுச் சுவடுகளைப் படித்துப் பாருங்கள். அதன் அறிவுப் புரட்சி, அமைதிப் புரட்சி எப்படிப்பட்ட ‘‘விலை’’ கொடுத்து வளர்ந்து வந்திருக்கிறது என்பது புரியும்.

விளையாட்டுக்காக அல்ல இந்த வீர நாளேடு -

வினையாற்றி சமூகத்தை மாற்றுவதற்காகவே!

அனைவரும் சமம், சமத்துவ, சம வாய்ப்பே அதன் இலக்கு; சமூகநீதி  - அதனை அடைய வழி மானமும், அறிவும் பெற்ற மனிதர்களாக மக்களை உருவாக்குதல் என்பதே அதன் குறிக்கோள்.

சமூக, பொருளாதார, அரசியல் பண்பாட்டு விழிப்புணர்வு, மீள் பார்வை, மீட்டெடுக்கவே அதன் பயனுறு பயணம் என்பதைத் தொடங்குகையில் எவ்வளவு சங்கடங்களை, அடக்குமுறை அம்புகளை அதுவும் அந்நாளைய பிரிட்டிஷ் அரசிடமிருந்தும், அது எப்படி சந்தித்து மீண்டுள்ளது என்பதைப் புரிய பழைய நிகழ்வுகளை இங்கே தொகுத்து அளிக்கும் தொடர் இது!

படித்து அறிக, அறிந்து ஆதரவு தருக!

1935 ஆம் ஆண்டுக்குச் செல்வோமா?

அதன் தொடக்கத்திலேயே எப்படிப்பட்ட எதிர்நீச்சல், சோதனை, வழக்கு, தண்டனை, சிறைவாசம் அதன் ஆசிரியர், வெளியிடுவோருக்கு! 

இதயத்தைத் தாக்கும் செய்திகள் - தகவல்கள் அல்லவா இவை?

லாக்கப்பில் வைக்கப்பட்டனர்

பின் தலைவர்களை ரயிலிலிருந்து தோழர் டாக்டர் பி. நடேசன் அவர்கள் போலீசாருடன் தனது காரில் உப்பிலிபாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார். அங்கு கொண்டு போய் லாக்கப்பில் வைக்கப்பட்டனர்.

இரவு டாக்டர் நடேசன் அவர்களாலேயே தலைவர் களுக்கு உணவளிக்கப்பட்டது.

காப்பிக்கு கால்நடையாக அழைத்து செல்லப்பட்டனர்

மறுநாள் (11-5-39) காலை உணவிற்கு போலீஸ் ஸ்டேஷனிலிருந்து காப்பி ஓட்டலுக்கு கால்நடையாக போலீஸ் காவலுடன் அழைத்துச் சென்று தலைவர்களின் சொந்த செலவிலேயே காப்பி கொடுக்கப்பட்டது.

பின்லாக்கப்பிலிருந்து சரியாக 10-30 மணிக்கு (போலீஸ் ஸ்டேஷனிலிருந்து) கால்நடையாக செஷன்ஸ் கோர்ட்டுக்கு அழைத்து வந்தார்கள். அங்கு செஷன்ஸ் ஜட்ஜியும், தலைமை குமாஸ்தாவும் வரவில்லையென்றும், வந்ததும் இவர்களை ஆஜர் படுத்தப்படுமென்றும் கூறினார்கள்.

தலைவர்களுக்கு நடுப்பகல் 12 மணி வரை சாப்பாடு கொடுக்கப்படவில்லை . பின் டாக்டர் பி.நடேசன் அவர்கள் தங்கள் சொந்த செலவில் உணவு வரவழைத்துக் கொடுத்தார். தலைவர்கள் அந்த உணவை சாப்பிட்டு விட்டு 3 மணிவரை அங்கேயே காத்திருந்தார்கள்.

 விலங்கும், கால்நடையும்

பின் ஒரு செஷன்ஸ் கோர்ட் குமாஸ்தாவிடம் தலைவர்களை ஈரோட்டிலிருந்து கொண்டு சென்ற போலீஸ்காரர் ஒருவர் சென்று நேரம் அதிகமாகிறதென்றும், காப்பி சாப்பிடப் போக வேண்டுமென்றும் அவர்கள் கூறுவதால் அவர்களை விரைவில் அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டுமென்று கேட்டார். அதற்கு அந்த குமாஸ்தா போலீஸ் லாரிக்கு எழுதிருப்பதாகவும், அது வந்தவுடன் அழைத்துச் செல்லலாமென்றும் கூறினார். அவர் கூறி அரைமணி நேரத்திற்கு மேலாகியும் லாரி வரவில்லை. அதற்கு பதிலாக இரண்டு ரிசர்வ் போலீஸ்காரர்கள் துப்பாக்கிகளுடனும், இரண்டு விலங்குடனும் வந்து லாரி இல்லையென்றும் வருவதற்கு 4 1/2 மணி ஆகுமென்றும் கூறினார்கள்.

ஆனால் ஈரோடு போலீஸ்காரர்கள் இவர்கள் ஏ கிளாஸ் கைதிகள், இவர்களை லாரியில் தான் அழைத்துப் போகவேண்டுமென்றும், இவர்கள் அரசியல் கைதிகள், பொறுப்பு வாய்ந்தவர்கள் இவர்களுக்கு விலங்கிட வேண்டாம் என்றும், இதைப்பற்றி ஆபீசர்களுடன் கலந்து விட்டு வரும் படியும் கூறினார்கள். அதற்கு பெரியார் ஈ.வி.கிருஷ்ணசாமி அவர்கள் தாம் விலங்கு போட்டுக் கொள்ளவோ, நடக்கவோ தயாரென்றும் ஆனால் எனது சாமான்களை யாராவது எடுத்துக்கொண்டால் நான் நடக்கிறேன் என்று கூறினார்.

தோழர் முத்துசாமி பிள்ளை அவர்கள் தமக்கு விலங்கிடுவதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதாகவும், தமக்கு காச நோய் இருப்பதால் தம்மால் நடக்க இயலாதென்றும், இருந்தாலும் தமது சாமான்களை யாராவது எடுத்துக்கொண்டால், தாம் நடப்பதாகவும் கூறினார்.

அதற்குப் பின்  ஒரு ரிசர்வ் போலீஸ் காரர் அவரது ஆபீசரிடம் இது விஷயமாகக் கலப்பதற்குச் சென்றார். சென்றவர் அங்கிருந்து வந்து  விலங்கிடவில்லையென்றும் போலீஸ் லாரி இப்பொழுது இல்லையென்றும், 4.30 மணிக்குத்தான் வருமென்றும் கூறினார்கள். பின் தலைவர்கள் தங்கள் செலவிலேயே வண்டியில் மிக மகிழ்ச்சியுடன் போலீஸ் காவலில் சிறைக்குச் சென்றார்கள்.

('குடி அரசு', 14.5.1939) 

ஈ.வெ.ரா. “மதராஸ் மெயில்’’ 

நிருபர் பேட்டி

சென்னை , மே, 25 - தம்முடைய நண்பர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்த தென்னிந்திய நலவுரிமைச்சங்கத் தலைவர் 60 வயது முதிர்ந்த பெரியார் நேற்றிரவு ‘மதராஸ் மெயில்’ நிருபரைக் கண்டவுடன் புன்முறுவல் பூத்தார். 6 மாத சிறைவாசம் பெரியாருடைய சுகத்தில் பெரிய மாற்றத்தை செய்துவிட்டது. மிகவும் களைத்தும் மெலிந்தும் காணப்பட்டார். பெரியாரைக் காண்பதற்காக மக்கள் மாலைகளுடனும் பூச்செண்டுகளுடனும் வந்து குவிந்த வண்ணமாக இருந்தார்கள்.

பெரியார் சாதாரண பாயில் தரையில் உட்கார்ந்து கொண்டு நண்பர்களைக் குறித்தும் கட்சியினர்களைக் குறித்தும் அன்போடு விசாரித்துக் கொண்டிருந்தார்.

அவருடைய உடல் நிலையைக் குறித்து கேட்டதற்கு அன்று மாலை டாக்டர் ஆர். குருசாமி முதலியார் அவர்களிடம் உடல் நிலை பரிசோதித்துப் பார்த்ததாகவும் டாக்டர் அவர்கள் சிகிச்சை சொல்லி ஓய்வு எடுக்க வேண்டுமென்று தெரிவித்ததாகவும் பெரியார் சொன்னார். மற்றும் சில வாரங்கள் அவர் ஒரு குளிர்ச்சியான இடத்தில் தங்கி ஓய்வு எடுத்தால் அவருடைய ஆரோக்கியத்துக்கு நலமாயிருக்கும் என்று சொன்னார்.

சென்னையில் ‘மெயில்’ பத்திரிகை நிருபர் பெரியாரை பேட்டி கண்டு கேட்ட விஷயங்களுக்கு பெரியார் அளித்த பதில்,

“ஆம் காங்கிரஸ் - மந்திரிகள் தாங்கள் பதவியைவிட்டு விலகி விட்டால் ‘பிற்போக்காளர்களான’ ஜஸ்டிஸ் கட்சியினர் மேற்படி மந்திரி ஸ்தானங்களை கைப்பற்றி விடுவார்கள் என்று நமது எதிரிகள் சொல்வதாக நானும் கேள்விப்பட்டேன். ஆனால் ஜஸ்டிஸ் கட்சி அவ்வளவு மோசமாக ஒரு நாளும் நடக்காது என்பதை அவர்கள் உணர்வார்களாக,

இப்பொழுது காங்கிரஸ் மந்திரிகள் தங்கள் பதவிகளை எக்காரணத்தைக் கொண்டு காலி செய்ய நேரிட்டாலும் ஜஸ்டிஸ் கட்சி உடனே அம்மந்திரி சபையை ஏற்றுக்கொள்ள மாட்டாது. அப்படி சந்தர்ப்பம் ஏற்பட்டால் தேர்தலுக்கு நிற்கும். காங்கிரஸ் நிர்வாக யோக்கியதையை உணர்ந்த மக்களிடையே பெருவாரியான வாக்கைப்பெற்ற பிறகே ஜஸ்டிஸ் கட்சி பதவியை ஒப்புக் கொள்ளும்“ என பெரியார் ஈ. வெ. ராமசாமி அவர்கள் தெரிவித்தார்.

இந்தி எதிர்ப்பு இயக்கம்

அடுத்தபடியாக இந்தி எதிர்ப்பு இயக்கத்தைக் குறித்து அவரைக் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:

‘’கட்டாய இந்தி நீக்கப்படும் வரையிலும் தாய்மொழியிடத்தில் மக்களுக்கிருக்கும் ஆர்வம் குறையாத வரையிலும் அக்கிளர்ச்சி இருந்தே தீரும்.”

மேற்கொண்டும் 100 பள்ளிகூடங்களில் இந்தியைச் சர்க்கார் புகுத்த யோசித்து வருகிறார்களே என்று தெரிவித்த உடன் அப்படியானால் இந்தி எதிர்ப்பு கிளர்ச்சியும் 100 மடங்கு அதிகரிக்கும் எனப் பெரியார் பதிலளித்தார்.

அவர் பேசுகையில் தமிழ் மொழி, தமிழ்க்கலை ஆகியவைகளிடத்தில் அவரவர்க்குள்ள ஆர்வம் இருக்கிறது என்பது அவருடைய முகத்தைப் பார்த்தவர்களுக்கு விளங்காமல் போகாது. மேற்கொண்டும் அவர் சொன்னதாவது:

“அதைக் குறித்து யாதொரு தப்பான எண்ணமுமிருக்கக் கூடாது. இந்தி எதிர்ப்பு இயக்கம் தேசிய எதிர்ப்பு கிளர்ச்சியல்ல. வகுப்பு துவேஷத்தின் மீதோ சமூகத்துவேஷத்தின் மீதோ ஏற்பட்டதல்ல. தாய் மொழி, கலை, ஆகியவைகளிடத்தில் ஒருவனுக்குள்ள அடக்க முடியாத ஆசையை வெளிப்படுத்தும் ஒரு செய்கையாகும். அவ்வியக்கத்தின் செய்கையை பற்றி திரித்துக் கூறி அதற்கு நாட்டில் உள்ள அபரிமிதமான செல்வாக்கை - ஆதரவை மறைக்க எண்ணுவது பெரிய அநீதியாகும்.!’’ 

விற்பனை வரித் திட்டம்

சர்க்காரின் புதுவரி திட்டங்களைக் குறித்து அதிலும் விற்பனை வரியைக் குறித்து பெரியார் ராமசாமி அவர்கள் கூறியதாவது:

‘’விற்பனை வரி விதிப்பது மிக வெறுக்கத்தக்க செய்கையாகும். முன்னிருந்த சர்க்கார் அவசியமும் நியாயமுமான வரிகள் போட்ட போதெல்லாம் எதிர்த்து வந்த அதே பேர்வழிகள் பதவி வகித்த சிறிது காலத்திற்குள் வறுமையால் கஷ்டப்படும் இம்மாகாண மக்களின் மீது வரிமேல் வரி விதிப்பது விந்தையாகவேயிருக்கிறது.’’

No comments:

Post a Comment