முகக்கவசம் அணியாவிடில் அபராதம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 27, 2022

முகக்கவசம் அணியாவிடில் அபராதம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, ஜூன் 27  முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் நேற்று (26.6.2022) மட்டும் தமிழ்நாட்டில் 1,472 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

"தற்பொழுது கோவிட் தொற்று பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வருகின்றது. மேலும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் குறிப்பாக நகர்ப்புறங்களில் அதிகரித்து வருகின்றது. இத்தொற்றானது பொதுமக்கள் பொது இடங்களில் தனிநபர் இடைவெளியைப் பின்பற்றாமல் இருத்தல், பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருத்தல் போன்ற கோவிட் தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காமல் கவனக்குறைவாக இருப்பதால் கரோனா தொற்று அதிகரித்து வருகின்றது.

இதைத் தவிர்க்க பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்களைத் தவிர்த்தல், தனிநபர் இடைவெளி கடைப்பிடித்தல், முகக்கவசம் சரியாக வாய் மற்றும் மூக்கை மூடியவாறு அணிதல் போன்ற நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடித்தல் மற்றும் உரிய நேரத்தில் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் நோய் தொற்றுப் பரவலை கட்டாயமாக கட்டுப்படுத்த முடியும். பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களிடமும், கோவிட் வழிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்காதவர்கள் மீதும் தற்போது நடைமுறையிலுள்ள தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939 இன்படி அபராதம் விதிக்கப்படும்" 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment