டில்லி துணை நிலை ஆளுநருக்கும் டில்லி முதல்வருக்குமிடையிலான பனிப் போர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 25, 2022

டில்லி துணை நிலை ஆளுநருக்கும் டில்லி முதல்வருக்குமிடையிலான பனிப் போர்

'இந்து' ஆங்கில நாளிதழ் தலையங்கம்

டில்லி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சருக்கு இடையே நடைபெற்றுக் கொண்டுள்ள இழுபறிப் போர் டில்லியின் மேம்பாட்டு செயல் திட்டங்களின் முன்னேற்றத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய தடையாகும்.

ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட டில்லி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநருக்கும் தேர்ந்தெடுக் கப்பட்ட அரசுக்கும் இடையே நடைபெற்றுக் கொண்டிருக்கும் இழுபறிப் போராட்டம் ஒரு நீண்ட கால கூச்சல் நிறைந்த வரலாற்றைக் கொண்டது ஆகும். அண்மையில் நியமிக்கப்பட்ட துணை நிலை ஆளுநர் வினய்குமார் கேத்சானா அவரது அளவுக்கு மீறிய தேவையற்ற ஆர்வத்தினால் டில்லி அரசின் அன்றாட செயல்பாடுகளில் குறுக்கிட்டு பெரும் குழப்பத்தை ஏற்படுத்துவதன் மூலம், புறாக் கூட்டத்திற்கிடையே பூனையை அவிழ்த்து விட்டுள்ளார்.

அவருக்கு முன் பதவியில் இருந்த நஜீப் ஜங் மற்றும் அனில் பைஜலில் போன்றவர்களைப் போலவே தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியுடன் பா.ஜ.க.வின் தலைமைக்கு மிகவும் நெருக்கமான அரசியல் வாதியான கேத்சானாவும் தலைகீழானதொரு மோதலை மேற்கொண்டுதான் வருகிறார். டில்லி நீர் வாரிய அதிகாரிகளின் கூட்டம் ஒன்றை மே 30ஆம் தேதியன்று டில்லியில் நடத்தி முதல்வர் மற்றும் அமைச்சரவையின் அதிகாரத்தையும் தாண்டி அவர்களுக்கு துணைநிலை ஆளுநர் ஆணை பிறப் பித்தது அரசமைப்பு சட்டப்படியான புனிதத்தைக் கெடுத்து விட்டது என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. டில்லியின் அரசு நிர்வாக அரசாட் சியின் மாதிரியைப் பற்றிய அரசமைப்புச் சட்ட நிலைப்பாடு பற்றிய வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. 

நிலம், சட்டம் ஒழுங்கு மற்றும் காவல்துறை என்ற மூன்று துறைகளின் மீதான கட்டுப்பாட்டை அரசமைப்பு  சட்டம் ஒன்றிய அரசுக்கு அளித் துள்ளது. என்றாலும், கடந்த சில ஆண்டுகளில் துணை நிலை ஆளுநரின் அதிகாரங்களை நரேந்திர மோடியின் அரசு விரிவுபடுத்தியுள்ளது. கடந்த ஆண்டில் டில்லி தேசிய அரசு தலைநகர் சட்டத்திற்கு செய்யப்பட்ட ஒரு சட்ட திருத்தத்தின் மூலம் ஒன்றிய அரசு இதனைச் செய்துள்ளது. இதற்கு எதிராக ஆம் ஆத்மி அரசு நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடுத்துள்ளது. இத்திருத்தத்தின் மூலம் டில்லி சட்டமன்றம் மற்றும் துணை நிலை ஆளுநரின் அதிகாரம் மற்றும் கடமைகளை மறு நிர்ணயம் செய்ததன் மூலம் துணை நிலை ஆளுநருக்கு ஆதரவாக ஒன்றிய அரசு செயல்பட்டுள்ளது. இந்த சட்ட திருத்தத்தில் 'அரசு' என்ற குறிப்பு எங்கே யெல்லாம் இருக்கிறதோ அங்கேயெல்லாம் அது துணை நிலை ஆளுநரையே குறிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரங்கள் மிகப் பெரும் அளவில் குறைக்கப்பட்டுள்ளன.  நாட்டின் அரசியலில் முக்கிய மான தூண் போன்ற நிலையில் ஆதிக்கம் செலுத்தி வரும் பா.ஜ.க.வின் மீது குத்திக் கொண்டிருக்கும் முள்ளாக ஆம் ஆத்மி கட்சி உருவாகி வளர்ந்து வந்துள்ளது. 

பல பிராந்தியங்களில் பா.ஜ.க. கட்சிக்கு எந்தவித சவால்களும் ஏற்பட்டதே இல்லை. டில்லி அரசுக்கும் துணை நிலை ஆளுருக்கும் இடையே இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டத்தை இந்த கண்ணோட்டத்தில்தான் புரிந்து கொள்ள வேண்டும். தேசிய தலைநகரில் நடைபெறும் தங்களின் ஆட்சியைப் போன்ற மாதிரியை தங்களது தேசிய அரசியல் மேம்பாட்டுக்காக ஆம் ஆத்மி கட்சி பிரச்சாரம் செய்வதைத் தடுத்து நிறுத்த, கட்டுப்படுத்த, ஒன்றிய அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. ஆம் ஆத்மி கட்சியின் சிறகுகளை ஒடிப்பதற்கு எந்த அளவுக்கு வேண்டுமானாலும் செல்வதற்கு பா.ஜ.க. தயாராகவும் விருப்பமும் கொண்டுள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் உரத்த குரலில் தெரிவிக்கப்படும் எதிர்ப்புகள் எல்லாம் கொள்கையின் அடிப்படையில் எழும் கேள்விகளைப் போல் இல்லாமல் - தங்களது அரசியல் கணக்கீடுகளின் அடிப்படையிலான கேள்வி களாகவே அதிக அளவில் உள்ளன. 

காஷ்மீர் மாநிலத்துக்கு இருந்து வந்த மாநில தகுதியையும், அரசமைப்பு சட்ட 370ஆவது பிரிவின்படி அளிக்கப்பட்ட விசேட தகுதியையும் 2019ஆம் ஆண்டில்  நீக்கி ஒன்றிய அரசு மேற் கொண்ட யதேச்சதிகாரமான செயலை ஆம் ஆத்மி கட்சி பாராட்டியுள்ளது. 

டில்லி துணை நிலை ஆளுநர்மீது முதல்வர் அரவிந்த் கேஜர்வால் கூறும் குற்றச்சாட்டுகளும் குறைகளும் ஆதாரம் அற்றவை அல்ல. பா.ஜ.க.வுடன் தொடர்ந்து சண்டை போட்டுக் கொண்டுதான் இருக்க வேண்டும் என்று அவரது அரசியல் அவரை நிர்ப் பந்திப்பதால், அத்தகைய சண்டைகளுக்கு அவரே பல நேரங்களில் காரணமாக இருக்கிறார். 

நாங்கள் இருவரும் இணக்கமாக இருந்து செயல்படுவோம் என்று முதலமைச்சரும் துணை நிலை ஆளுநரும் அடிக்கடி கூறிக் கொண்டிருந் தாலும், அவர்களது உறவு மிக மிக மோசமானதொரு நிலைக்குத் தாழ்ந்து போய்த் தான் உள்ளது. அவர் களிடையேயான ஒரு நீண்ட கால போராட்டம் தேசிய தலைநகரின் மேம்பாடு மற்றும் முன்னேற்றம் பற்றிய செயல்பாடுகளுக்கு தேவையின்றி போடப் படும் ஒரு பெரிய முட்டுக்கட்டை ஆகும். துணை நிலை ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் இடையே யான அதிகாரப் பங்கீடுகள் பற்றிய அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நீதிமன்றம் ஒரு தெளிவை ஏற்படுத்தும் வரை ஒருவருக்கு ஒருவர் மதித்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை கூறுவதே பொருத்தமானதாக இருக்கும்.

நன்றி: 'தி இந்து' 10.6.2022

தமிழில்: த.க. பாலகிருட்டிணன்

No comments:

Post a Comment