உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் மனு தாக்கல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 25, 2022

உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் மனு தாக்கல்!

தேசிய கல்விக் கொள்கை இடைநிற்றலை அதி கரிக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு அளித்துள்ளது. 

 தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரி அர்ஜுனன் இளையராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு தலைமைச் செயலாளர், உயர் கல்வி மற்றும் பள்ளிக்கல்வித் துறை செயலாளர்கள் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:- கல்வி என்பது மாநிலக் கொள்கை;  தேசிய கல்விக் கொள்கை என்பது எந்தச் சட்டப்பூர்வ அங்கீகாரமும் இல்லாத வரைவு கொள்கையாக உள்ளது.

 69 சதவீத இட ஒதுக்கீடு, பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு, அரசு வேலையில் தமிழில் படித்தவர் களுக்கு இட ஒதுக்கீடு என அனைத்துத் தரப்பின ரையும் ஒருங்கிணைத்து சமத்துவமான கல்வி என்ற அடித்தளத்தைக் கொண்டுள்ள மதச்சார்பற்ற தமிழ் நாட்டில், இரு மொழிக் கொள்கையும், தாய்மொழியில் அடிப்படைக் கல்வியும் முக்கியத்துவம் வாய்ந்தவை. மேலும், தேசிய அளவில் மாணவர் சேர்க்கை விகி தத்தை 27.1 சதவீதத்திலிருந்து 2035-இல் 50 சதவீதமாக உயர்த்தும் எண்ணத்தில் தேசிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டதாகக் கூறும் நிலையில், இலவசக் கல்வி, மதிய உணவு, இலவச புத்தகம், சீருடை, சைக்கிள், காலணி, மடிக்கணினி மற்றும் உதவித் தொகை மூலம் 51.4 சதவீத சேர்க்கை விகிதத்தை எட்டி, தமிழ்நாடு 15 ஆண்டுகள் முன்னோக்கிப் பயணிப்பதாகவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

அதேபோல, தற்போதைய கல்வி முறைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள தேசிய கல்விக் கொள்கை இடை நிற்றலை அதிகரிக்கச் செய்யும். மேலும், தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய சூழல், எதிர்கால விருப்பங்களைக் கருத்தில் கொண்டு, மாநில கல்விக் கொள்கையை வகுக்க ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதே போல வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால் அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனப்  பதில் மனுவில் கோரப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு, இரு வாரங்களுக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் இந்த நிலைப்பாடுதான் - ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களின் ஆழமான வெளிப் பாடாகும். 

கல்வி என்பது ஒத்திசைவுப் பட்டியலில் (Con- current List) உள்ளது. ஒன்றிய அரசு தன்னிச்சையாக, மாநிலங்களின் கருத்துகளையும் கேட்காமல் தானடித்த மூப்பாக, கல்வியாளர்களைப் பெரிதும் கொள்ளாத ஒரு குழுவின் மூலம் தயாரிக் கப்பட்ட கல்வித் திட்டம் சட்டப்படியும் செல்லத் தக்கதல்ல!

இந்தியா ஒரே நாடு அல்ல - இது ஒரு துணைக் கண்டம்; பல்வேறு மொழிகள், இனங்கள், பண்பாடுகள் கொண்டது. பல்வேறு தட்பவெப்ப நிலையையும், தொழில்களையும் கொண்டது. இதில் ஓர் துணைக் கண்டம் முழுமைக்கும் - ஒரே மாதிரியான கல்வி என்பது பைத்தியக்காரத்தனமானதாகும்.

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்பது பிஜேபியை இயக்கும் ஆர்.எஸ்.எஸின் கொள்கையாகும். 

அந்தக் கொள்கையின் அடிப்படையில் தயாரிக் கப்பட்டுள்ளதுதான் ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையாகும். இதை எதிர்ப்பதில் "திராவிட மாடல்" அரசு முதலிடத்தில் நிற்கும்! நீதிமன்றத்தில் அந்த அடிப்படையில்தான் பதில் மனுவையும் தாக்கல் செய்துள்ளது. வரவேற்கத்தக்கதேயாகும்! 

No comments:

Post a Comment