'விடுதலை'க்கு 60 ஆயிரம் சந்தாக்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 27, 2022

'விடுதலை'க்கு 60 ஆயிரம் சந்தாக்கள்!

திராவிடர் கழகத்தின் பொதுக்குழு மதுரையில் கடந்த சனியன்று (25.6.2022) சிறப்பாக நடைபெற்றது. இரங்கல் தீர்மானம் உள்பட எட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இரண்டாவது தீர்மானம் வருமாறு:

விடுதலை’ ஆசிரியராக 60 ஆண்டுகள் பணியாற்றி வரும் தலைவருக்கு 60 ஆயிரம் சந்தாக்கள் அளித்தல்!

"திராவிடர்களின் போர் வாளாம் 88 ஆண்டு காணும் ‘விடுதலை’ ஏட்டுக்கு 60 ஆண்டு காலம் ஆசிரியர் என்னும் ஒப்பற்ற வரலாறு படைத்து வரும் - 4 பக்கங்களாக ஒரே வண்ணத்தில் வெளிவந்த ‘விடுதலை’ ஏட்டை 8 பக்கங்களாகப் பல வண்ணங்களில் கருத்துக் கும், கண்களுக்கும் விருந்தாகவும், சென்னையிலிருந்து மட்டும் வெளிவந்த ‘விடுதலை’ ஏட்டை இரண்டாம் பதிப்பாக திருச்சிராப் பள்ளியிலிருந்தும் வெளிவரச் செய்த வகையிலும், ஈடு இணையற்ற சாதனைக்கு உரியவருமான நமது போற்றுதலுக்குரிய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்குத் தனது முழு மனமும், மணமும் கமழ்ந்த பாராட்டு களைத் தெரிவித்துக் கொள்வதுடன், தலைதாழ்ந்த நன்றியையும் இப்பொதுக்குழு தெரிவித்துக் கொள்கிறது.

கரோனா என்னும் கடும் தொற்று நோய் நாட்டைப் பெரும் அலைக்கழிப்புக்கும், பேரச்சத்திற்கும் உள்ளாக்கிய நெருக்கடி யான நிலையிலும்கூட, ‘விடுதலை’ ஏட்டின் அச்சுப் பதிப்பை ஒரு நாள் கூட நிறுத்தாமல் இணையத்தின் (PDF) வாயிலாகவும் இன்னும் இலட்சக் கணக்கானோர் படிக்கும்படி விரிவுபடுத்தி நடத்திக் காட்டியவர் நமது ஆசிரியர் ஆவார்.

‘விடுதலை’ ஆசிரியராக ‘விடுதலை’ ஆசிரியருக்கான நாற்காலியில், தோளை அழுத்திப் பிடித்து பாசத்துடன் நமது ஆசிரியர் அவர்களை அமர வைத்தவர் தந்தை பெரியார்! இது வேறு எவருக்கும் கிடைக்கப் பெறாத பெரும் பேறாகும். அதோடு மட்டுமல்ல - ‘விடுதலை’யை வீரமணியின் ஏக போகத்தில் ஒப்படைக்கிறேன் என்று தந்தை பெரியார், 6.6.1964 நாளிட்ட ‘விடுதலை’யில் எழுதியதும் சாதாரண மானதல்ல.

தந்தை பெரியார் கணிப்புப் பொய்க்கவில்லை; அவர் எதிர்பார்ப்பையும் விஞ்சிய அளவுக்கு, ‘விடுதலை’யைத் தன் சுவாசமாகக் கொண்டு நாளும் உழைக்கும் ஆசிரியரின் 60 ஆண்டு ‘விடுதலை’ப் பணிக்குப் பாராட்டு - நன்றி என்கிற வகையில் 60 ஆயிரம் ‘விடுதலை’ சந்தாக்களை, அவரைப் பெருமகிழ்ச்சியில் திளைக்கச் செய்யும் அளவுக்கு திரட்டிக் கொடுப்பது என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

ஆசிரியரின் 50ஆம் ஆண்டு ‘விடுதலை’ப் பணிக்கு 50 ஆயிரம் சந்தாக்களைத் திரட்டிக் கொடுத்த நாம், இதனையும் சாதித்துக் காட்டுவோம் என்ற உறுதியோடு, ஜூலை மாதம் முழுவதும் - வேறு எந்தப் பணியையும் ஒதுக்கி வைத்து,  இலக்காக இப்பெரும் பணியை முடிப்பது என்று இப் பொதுக்குழு உறுதி செய்கிறது.

“நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது; வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்” என்ற நமது தலைவரின் அருமொழியை அவரை மய்யப்படுத்தும் இந்த முயற்சியிலும் உறுதியாக நிறைவேற்றுவோம் என்றும் இப்பொதுக்குழு மிகுந்த மன உறுதியோடு தீர்மானிக்கிறது."

இந்தத் தீர்மானம் சிறிதும் மிகைப்படுத்தப்பட்ட வாசகங்களைக் கொண்டதல்ல. தலைவர்களுக்கெல்லாம் தலைவரான - இந்த மண்ணின் தந்தையான - சமூகப் புரட்சியின் இமயமான - தந்தை பெரியாருக்கென்று தனித் தன்மை உண்டு.

ஒரு தத்துவத்தை உருவாக்கியவரும் அவரே! அதற்கான ஓர் இயக்கத்தை உருவாக்கியவரும் அவரே! அதன் தலைமையான பிரச்சார கர்த்தரும் அவரே! கொள்கைகளைப் பரப்புவதற்கு ஏடுகளையும் நூல்களையும் தொடர்ச்சியாக வெளியிட்டவரும் அவரே! தம் இலட்சியத்தை நிறைவேற்றுவதற்கான களங்கள் - போராட்டங்களை அறிவித்தவரும் அவரே! அதற்காகப் பல முறை சிறை வாசங்களை அனுபவித்தவரும் அவரே!

தன்னோடு அவை முற்றுப் பெற்றுவிடாமல்,  தமக்குப் பின்னால் தம்மால் உருவாக்கப்பட்ட இயக்கம் தொடர்ந்து நடைபெறுவதற்கும் - தலைமையேற்று அதற்கான தக்காரை அடையாளம் காட்டிச் சென்றவரும், நிதி நிலை எந்த இயக்கத்திற்கும் உயிர் நாடி என்பதால் அதற்கான அறக் கட்டளையை உருவாக்கி, நாணயமானவர்களை அதன் உறுப்பினர் களாக்கிக் கண் மூடிய தலைவரும் தந்தை பெரியாரே!

உலக அரங்கில் இத்தனைப் பரிணாமங்களைக் கொண்ட - ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தனித் தன்மையான தலைவர் தந்தை பெரியாரே!

பொதுவுடைமை இயக்கத்தை எடுத்துக் கொண்டாலும் மார்க்சும் - ஏங்கல்சும் ஒரு தத்துவத்தை உருவாக்கிக் கொடுத்துச் சென்றார்கள் - அத்தோடு அவர்கள் கடமை முடிந்து போனது - அவர்களின் தத்துவத்தை செயல்படுத்தியவர் லெனின் - பின் ஸ்டாலின்.

ஆனால் இவை அத்தனையையும் ஒரு தனி மனிதராக இருந்து செயல்படுத்திக் காட்டியவர் தந்தை பெரியாரே!

1935 முதல் திராவிட இயக்கத்தின் பிரச்சாரப் பீரங்கியாக - சுழல் துப்பாக்கியாக - விடுதலை சுழன்று சுழன்று பிற்போக்கு ஆதிக்கச் சக்திகளின் ஆணி வேர் வரை சென்று அழிக்கும் பணியைத் தொடர்ந்து செய்து கொண்டுள்ளது.

விடுதலையின் ஆசிரியர்கள் டி.ஏ.வி. நாதன், சாமி சிதம்பரனார், பண்டித எஸ். முத்துசாமி பிள்ளை, அ. பொன்னம்பலனார், குத்தூசி குருசாமி, அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் மற்றும் ஆசிரியர் கி. வீரமணி ஆகியோர் ஆவார்.

88 ஆண்டு காணும் இந்த 'விடுதலை'க்கு 60 ஆண்டு காலம் ஆசிரியராக இருந்து வருபவர் 89 வயது காணும் மானமிகு கி. வீரமணி ஆவார்கள்.

சமூக, அரசியல், பொருளாதார களங்களில் 'விடுதலை'யின் வீரமிக்கப் பணிகளும், வெற்றிகளும் அசாதாரணமானவை.

"விடுதலை"யின் தொண்டால் பயன் - பலன் பெறாத தமிழர்கள் யாருமிலர். குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்கள், அவர்களுக்கும் கீழாக அடிமைப்படுத்தப்பட்ட பெண்கள் - பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமை வாழ்வில் மூச்சுக்காற்றாக இருந்து வந்திருக்கிறது கடந்த காலத்திலும் சரி,  நிகழ் காலத்திலும்சரி, எதிர் காலத்திலும் சரி விடுதலையின் வளர்ச்சி என்பது நம் இன மக்களின் வளர்ச்சி - உரிமை மறுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் ஏற்படும் மறுமலர்ச்சி.

இந்த நிலையில்தான் 60 ஆண்டு 'விடுதலை' ஆசிரியரின் தொண்டை மய்யப்படுத்தி 60 ஆயிரம் 'விடுதலை' சந்தாக்களைத் திரட்டிக் கொடுப்பது என்று மதுரைப் பொதுக் குழு தீர்மானித்துள்ளது.

அந்தத் தீர்மானத்தை திராவிடர் கழகத் துணைத் தலைவரும், 'விடுதலை'யின் நிர்வாக ஆசிரியருமான கலி. பூங்குன்றன் முன்மொழிந்த போது மண்டபம் நிறைந்து வந்திருந்த கருஞ்சட்டைத் தோழர்கள் எழுந்து நின்ற உற்சாகமாகக் கரஒலி எழுப்பி தீர்மானத்தை வழிமொழிந்த காட்சி நம் நெஞ்சங்களில் எப்பொழுதும் எதிரொலித்துக் கொண்டிருக்கும்.

அந்த எதிரொலி - ஜூலை மாதம் முதல் காலை எழுந்து, இரவு உறங்கச் செல்லும் பொழுதெல்லாம் நம்மைத் தட்டி எழுப்பிக் கொண்டே இருக்கும் - இருக்கவும் வேண்டும்.

இரவு உறங்கச் செல்லும்போது, இன்று எத்தனை சந்தாக்களைச் சேர்த்தோம் -  நாளை யார் யாரை எல்லாம் சந்திக்க வேண்டும் என்ற பட்டியல் போட்டு, அதனை மிகச் சரியாக நிறைவேற்றுவோம்!

நம் எதிரிகள் அப்பொழுதுதான் வீழ்ச்சி அடைவார்கள். நம் இன மக்களும் அப்பொழுதுதான் எழுச்சிப் பெறுவார்கள்!

வெற்றி நமதே!

"வீரமணி வென்றிடுக!

வெற்றி மணி ஒலித்திடுக!"

என்பது முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களின் மணிவாசகம்!


No comments:

Post a Comment