'விடுதலை’ ஏடு பெற்ற விழுப்புண்கள் - பாரீர்! இப்படி ஒரு நெருப்பாற்றில் நீந்தி மீண்ட நாளேடு வேறு உண்டா? சிந்திப்பீர், இளைய தலைமுறையினரே! கி.வீரமணி, ஆசிரியர், ‘விடுதலை’-4 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 27, 2022

'விடுதலை’ ஏடு பெற்ற விழுப்புண்கள் - பாரீர்! இப்படி ஒரு நெருப்பாற்றில் நீந்தி மீண்ட நாளேடு வேறு உண்டா? சிந்திப்பீர், இளைய தலைமுறையினரே! கி.வீரமணி, ஆசிரியர், ‘விடுதலை’-4

நமது ‘விடுதலை’ நாளேடு, நமது ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட மக்கள் - அவ்வுரிமைகளைப் பெறவும், மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலையாகி, பகுத்தறிவின் பயன்பட்டால் உலகில் போற்றத்தக்க சமுதாயமாக ஆக வேண்டும் என்பதற்காகவும், எத்த னையோ லட்சம் ரூபாய்கள், பொருள் இழப்பானாலும் கூட, சமுதாயத்திற்கும், மக்களுக்கும் அறிவிலும், மனத் திலும் லாபம் என்பதால், 88 ஆண்டுகள் எதிர்நீச்சல் போட்டு நடைபெற்றுவரும் ஓர் அதிசய நாளேடு!

ஒரு இலட்சிய, கொள்கை நாளேடு - சமூகப் புரட்சிக்கான கருத்தியல் போருக்கான பயணத்தில், இது காகிதம் அல்ல - ஆயுதம் - அறிவாயுதம் என்று உணர்த்தும் வகையில் அது சந்தித்துள்ள எதிர்ப்புகளை, அரசின் அடக்குமுறை காரணமாக விழுப்புண்களையும் ஏற்று வீறுநடை போட்டு வந்துள்ள வரலாற்றுச் சுவடுகளைப் படித்துப் பாருங்கள். அதன் அறிவுப் புரட்சி, அமைதிப் புரட்சி எப்படிப்பட்ட ‘‘விலை’’ கொடுத்து வளர்ந்து வந்திருக்கிறது என்பது புரியும்.

விளையாட்டுக்காக அல்ல இந்த வீர நாளேடு -

வினையாற்றி சமூகத்தை மாற்றுவதற்காகவே!

அனைவரும் சமம், சமத்துவ, சம வாய்ப்பே அதன் இலக்கு; சமூகநீதி  - அதனை அடைய வழி மானமும், அறிவும் பெற்ற மனிதர்களாக மக்களை உருவாக்குதல் என்பதே அதன் குறிக்கோள்.

சமூக, பொருளாதார, அரசியல் பண்பாட்டு விழிப்புணர்வு, மீள் பார்வை, மீட்டெடுக்கவே அதன் பயனுறு பயணம் என்பதைத் தொடங்குகையில் எவ்வளவு சங்கடங்களை, அடக்குமுறை அம்புகளை அதுவும் அந்நாளைய பிரிட்டிஷ் அரசிடமிருந்தும், அது எப்படி சந்தித்து மீண்டுள்ளது என்பதைப் புரிய பழைய நிகழ்வுகளை இங்கே தொகுத்து அளிக்கும் தொடர் இது!

படித்து அறிக, அறிந்து ஆதரவு தருக!

1935 ஆம் ஆண்டுக்குச் செல்வோமா?

அதன் தொடக்கத்திலேயே எப்படிப்பட்ட எதிர்நீச்சல், சோதனை, வழக்கு, தண்டனை, சிறைவாசம் அதன் ஆசிரியர், வெளியிடுவோருக்கு! 

இதயத்தைத் தாக்கும் செய்திகள் - தகவல்கள் அல்லவா இவை?அட்வகேட் ஜெனரல் பிறகு சர்க்கார் அப்பீலைப் பற்றிப் பேசுகையில் எதிரிகளுக்கு அதிகத் தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டுமென்பது அப்பீலின் நோக்கமல்லவென்றும், செஷன்ஸ் ஜட்ஜ் தீர்ப்பில் கண்ட ஒரு கொள்கையை ஆட்சேபிக்கவே இவ்வப்பீல் கொண்டு வரப்பட்டதென்றும் கூறினார். மேற்படி கட்டுரை சர்க்கார் மீது ஜனங்களுக்குத் துவேஷமூட்டத்தக்கதாயிருக்கிறதென்றும், தமிழ்ப் பெண் களை விபச்சாரிகளாக்கவே இந்தியைக் கட்டாய பாடமாக சர்க்கார் நுழைக்கிறார்களென அர்த்தமாகும்படி கட்டுரை எழுதப்பட்டிருக்கிறதென்றும் இம்மாதிரி சந்தர்ப்பங்களில் அது ராஜத்துவேஷக் குற்றமே யொழிய வேறு குற்றமாகா தென்றும் ஆகவே சம்பந்தப்பட்ட மந்திரிகள் இது விஷய மாக எதிரிகள் மீது நஷ்டதாவா தொடருவதே சரியான வழி யென்று செஷன்ஸ் ஜட்ஜ் கூறியருப்பது சரியாகாதென்றும் அட்வகேட் ஜெனரல் கூறினார். 

நீதிபதிகள் தீர்ப்பு

பெஞ்சின் சார்பாக ஜஸ்டிஸ் ஸ்டோடர்ட் தீர்ப்புக் கூறு கையில் ஜாதித்துவேஷ குற்றத்திற்காக எதிரிகள் செஷன்ஸ் ஜட்ஜால் தண்டிக்கப்பட்டிருக்கிறார்களென்றும், கீழ்க்கோர்ட்டு தீர்ப்பை ஏன் மாற்ற வேண்டு மென்பதற்குத் தகுந்த காரண மெதுவும் எதிரிகள் தரப்பு வக்கீல் கூறவில்லை யென்றும், கட்டுரையின் நோக்கம் தெளிவாகத் தெரிகிறதென்றும் இம்மாதிரி கட்டுரை பிராம்மணரல்லாதாருக்கு பிராம்மணரி டம் விரோத மேற்படுத்தக் கூடியதென்றும் அபிப்பிராயப் பட்டு எதிரிகள் அப்பீலைத் தள்ளிவிட்டார்.

பிறகு நீதிபதி சர்க்கார் அப்பீல் ஜெயிக்க வேண்டிய தென்று தாங்கள் நினைப்பதாகவும், பிரஸ்தாப கட்டுரையை விட சர்க்காரிடம் துவேஷ மூட்டக்கூடிய ஒரு கட்டுரையிருப்பது அரிதென்றும் சர்க்கார் அப்பீலை தாங்கள் அங்கீகரிப்பதாகவும் கூறினார். எதிரிகள் அதிக தண்டனை விதிக்க வேண்டு மென அட்வகேட் ஜெனரல் கோராததால் நீதிபதி எதிரிகள் ஒவ்வொருவருக்கும் 124 எ. பிரிவின் கீழ் தாம் 6 மாதம் சாதாரணச் சிறைவாசம் விதித்து இந்த தண்டனையை முன் தண்டனையோடு சேர்ந்தாற்போல் எதிரிகள் அனுபவிக்க வேண்டியதென்றும் உத்தரவிட்டார். (அதாவது மொத்தம் 6 மாதம் தான் சிறைவாசம்.)

(‘குடி அரசு', 7.5.1939)

சிறைக்கோட்டம் புகுந்தனர்

ஈ.வெ.கி. - பண்டிதர் கோவை ஏகினர் 

(நமது நிருபர்)

ஈரோடு, மே, 10 ‘’விடுதலை’ப் பத்திரிகையில் ராஜத் துவேஷமும் வகுப்புத் துவேஷமும் ஊட்டத்தக்க கட்டுரை யைப் பிரசுரித்ததாக ஷை பத்திரிகையின் மாஜி ஆசிரியரான பண்டித முத்துசாமிப்பிள்ளை அவர்கள் மீதும் பிரசுரகர்த் தரான தோழர் ஈ.வெ. கிருஷ்ணசாமி அவர்கள் மீதும் தொட ரப்பட்ட வழக்கின் அப்பீல் முடிந்து கோவை செஷன்ஸ் நீதிபதி ராஜ துவேஷ வகுப்புத் துவேஷ மூட்டிய குற்றத்திற் காக ஒவ்வொரு எதிரிக்கும் 6 மாதம் சிறைவாசமளித்தார்.

இன்று காலை 10 மணி சுமாருக்கு ஸ்தல போலீஸ் அதிகாரிகள் தோழர் ஈ. வே. கிருஷ்ணசாமி அவர்களையும், பண்டித முத்துசாமி பிள்ளை அவர்களையும் அவரவர்கள் ஜாகையில் வந்து சந்தித்து டவுன் சப் மாஜிஸ்திரேட் அவர் களிடம் அழைத்துச் சென்றார்கள்.

தலைவர்களைக் காணவந்த நூற்றுக்கணக்கான இயக்க அபிமானிகள் பெரிய ஆரவாரத்துடன் பல மலர்மாலைகள் சூட்டி வழியனுப்பினார்கள் தலைவர்கள் தங்களை வழியனுப்ப வந்த இயக்க அபிமானிகளிடம் புன்முறுவலுடன் இயக்கத்தைக் கவனித்துக்கொள்ளும் படியும் சொல்லிப் புறப்பட்டார்கள். தோழர் ஈ. வெ. கிருஷ்ணசாமி அவர்கள் தமது வீட்டிலிருந்து. தமது சொந்த வண்டியில் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றார். பண்டித முத்துசாமிப் பிள்ளை யவர்களை ‘விடுதலை’ ஆபீசிலிருந்து கால்நடையாகவே போலீஸ்டேஷனுக்கு நடத்திக் கூட்டிப் போனார்கள். அங்கிருந்து இருவரையும் சப் மேஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு நடத்தியே கூட்டிப்போய் திரும்பி அழைத்து வந்தனர். இதைக் கண்டு மக்கள் மனக்கொதிப்படைந் திருக்கின்றனர். இன்று மாலை 3/2 மணி ரயிலில் கோவைக்கு அனுப்புவதாயும் அதுவரை ஸ்டேஷனுக்கு எதிரில் உள்ள மண்டியில்தங்கி இருக்கும்படியும் சப் இன்ஸ்பெக்டர் சொன்னார். தலைவர்கள் ஸ்டேஷனுக்கு எதிரில் உள்ள தோழர்கள் ஈ.வெ. ராமசாமி நாயக்கரவர்கள் மண்டியில் தங்கியிருந்தார்கள். அதற்குள் இந்தச் செய்தி டவுன் முழுவதும் பரவியதால் டவுனின் பல பாகத்திலுமுள்ள அநேக வியா பாரிகளும் பல இயக்கத் தோழர்களும், தொண்டர்களும் வந்து கூடித் தலைவர்களிடம் பேசிப்போனார்கள். தோழர் கள் எம். சிக்கப நாயக்கர், வக்கீல் ஈ.எம். அண்ணாமலை பிள்ளை போன்ற முக்கியஸ்தர்கள் பலர் தலைவர்களை வந்து கண்டு மலர் மாலை சூட்டிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

ஈரோடு, மே, 12 - இவ்வூர் போலீசாரால் கைது செய்யப் பட்டிருந்த தோழர்கள் ஈ. வெ. கிருஷ்ணசாமி, பண்டித எஸ். முத்துசாமி பிள்ளை ஆகியவர்களை ஈரோடு போலீசார் 10-5-39ந் தேதி மாலை 3.30 மணிக்கு ஈரோட்டிலிருந்து கோவைக்கு - 3-வது வகுப்பில் கோண்டு போனார்கள்.

ஈரோடு போலீஸ் ஸ்டேஷனிலிருந்து ரயில்வே ஸ்டேஷனுக்குப் போவதற்குத் தங்கள் சொந்த வண்டியில் தான் போகவேண்டுமென்றும் இன்றேல் நடந்து தான் போக வேண்டுமென்றும் போலீசார் கூறினார்கள். அதன்பின் தலைவர்கள் தங்கள் சொத்தச் செலவில் ஈரோடு ரெயில்வே ஸ்டேஷனுக்கு வண்டியில் சென்றார்கள்.

தலைவர்கள் தாங்கள் கொண்டு போன சாமான்களைத் தங்கள் சொந்தச் செலவில் கூலிக்காரன் வைத்து எடுத்து வைக்கவேண்டுமென்றும் இன்றேல் தாங்கள்தான் சாமான் களைத் தூக்கிக் கொள்ள வேண்டுமென்றும் போலீசார் கூறினார்கள். தலைவர்கள் தங்கள் செலவிலேயே சாமான் களை எடுத்துக் கொண்டார்கள்.

தலைவர்களை வழியனுப்புவதற்காக உள்ளூர் பிர முகர்கள் வந்திருந்து தலைவர்களுக்கு மாலை அணிவித் தார்கள். பின் சரியாக 3.30 மணிக்கு தலைவர்கள் ஏறி இருந்த வண்டி பல வாழ்த்தொலிகளுடன் புறப்பட்டது.

திருப்பூர் தோழர்கள் சந்திப்பு

தலைவர்கள் கைதியாகி வருவதை அறிந்த திருப்பூர் பொது ஜனங்கள் தோழர்கள் மொய்தீன், எம்.வி. கருப்பண்ண செட்டியார் ஆகியவர்கள் தலைமையில் ஏராளமாகக்கூடி ரயில்வே ஸ்டேஷனில் தலைவர்களைச் சந்தித்து தங்கள் சந்தோஷத்தைத் தெரிவித்துக்கொண்டார்கள். பின் வண்டி நீண்ட கைதட்டலுக்கிடையிலும் வாழ்த்தொலிகளுக்கிடை யிலும் புறப்பட்டது.

போத்தனூரில் சந்திப்பு

தலைவர்கள் சென்ற வண்டி சரியாக 7-மணிக்கு போத்தனூருக்கு வந்தது. அங்கு தோழர்கள் எஸ். ஆர். சுப்பிரமணியம், குருராமலிங்கம், ஜேம்ஸ் ஆகியவர்களின் தலைமையில் ஏராளமான ஜனங்கள் கூடி தலைவர்களைக் கண்டு தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள். பின் பல வாழ்த்தொலிகளுடன் வண்டி புறப்பட்டது.

கோவைத் தோழர்கள் சந்திப்பு

தலைவர்கள் சென்ற வண்டி சுமார் 8 மணிக்குக் கோவைக்கு வந்தது. அங்கு தோழர்கள் டாக்டர் பி. நடேசன், டாக்டர் பதி, எம்.எ.ரஹிமான், பீட்டர் நாயுடு முதலியவர்கள் தலைமையில் 1000 பேர்களுக்கு மேல் கூடி பல வாழ்த் தொலிகள் கூறி தலைவர்களுக்கு மலர்மாலை சூட்டினார்கள்.

(தொடரும்)


No comments:

Post a Comment