திருச்சி, மே 9 தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என தமிழ்நாட்டு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதற்கு கல்வியாளர்கள், ஆசிரியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசின் ஓராண்டு நிறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், இதில் முதல்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும் என தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்க வேண்டும் என கல்வியாளர்கள் முன்வைத்த கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்துக்கு கல்வியாளர்கள், ஆசிரியர்கள் வரவேற்பு தெரிவிப்பதோடு, தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கல்வியாளரும், காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன ஓய்வு பெற்ற முதல்வருமான சி.சிவக்குமார் கூறியதாவது:
கிராமப்புறங்களில் மட்டுமல்லாது, நகர்ப்புறங்களில் உள்ள ஏழை குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர்களும் அதிகாலையிலேயே வேலைக்குச் சென்று விடுவதால் குழந்தைகள் காலை உணவை சரியாக உட்கொள்ளாமலேயே பள்ளிக்கு வந்து விடுகின்றனர். இதனால், பள்ளியில் பாடத்தில் அவர்கள் கவனம் செலுத்த முடியாமலும், சோர்வுடனும் காணப்படு கின்றனர்.
இதைப் போக்க திருச்சியில் 2007இல் ஆசிரியர்கள், பொதுமக்கள் பங்களிப்போடு சமுதாய காலை உணவுத் திட்டம் என்ற பெயரில் தொடங்கப்பட்டு ஏறத்தாழ 25 பள்ளிகளில் மாணவர்களுக்கு தற்போதும் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கம் செய்து அனைத்துப் பள்ளிகளிலும் வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் பலனாக தமிழ்நாடு அரசு தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

No comments:
Post a Comment