உக்ரைனிலிருந்து தமிழ்நாட்டு மாணவர்களை மீட்க ரூ.3.26 கோடி செலவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 9, 2022

உக்ரைனிலிருந்து தமிழ்நாட்டு மாணவர்களை மீட்க ரூ.3.26 கோடி செலவு

சென்னை, மே 9 உக்ரைனில் இருந்து தமிழ்நாட்டு மாணவர்களை மீட்க ரூ.3.26 கோடி செலவு ஆனதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் காரணமாக அங்கு சிக்கித் தவித்த இந்திய மாணவர்களை மீட்டுக் கொண்டு வருவதற்காக ஒன்றிய அரசு "ஆபரேஷன் கங்கா" என்ற திட்டத்தை செயல்படுத்தியது. இந்தத் திட்டத்தின் மூலம் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

குறிப்பாக தமிழ்நாட்டு மாணவர்களை மீட்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், அய்.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய ஒரு குழுவை முதலமைச்சர் அமைத்தார். இந்தக் குழுவில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி,  எம்.எம்.அப்துல்லா மற்றும் ஜெசிந்தா உள்ளிட்ட 5 அய்.ஏ.எஸ். அதிகாரிகளும் இடம் பெற்றிருந்தனர்.

இந்தக் குழுவினர் டில்லியில் தங்கி தமிழ்நாட்டு மாணவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்படி 1,457 தமிழ்நாடு மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு தமிழ்நாடு வந்து சேர்ந்தனர். இந்நிலையில் இந்தப் பணிகளுக்கு ரூ.3.26 கோடி செலவு ஆனதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து பொது ( மறுவாழ்வு) துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில், " உக்ரைனில் இருந்து வந்த 1,890 மாணவர்களில் 1,524 பேர் அரசு செலவில் அழைத்து வரப்பட்டுள்ளனர். 

இதற்காக ரூ.3.5 கோடி ஒதுக்கப்பட்டு ரூ.3.26 கோடி செலவிடப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment