சீர்மிகு சிவகங்கையில் ஓர் அறிவு புத்தகத் திருவிழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 12, 2022

சீர்மிகு சிவகங்கையில் ஓர் அறிவு புத்தகத் திருவிழா

அகிலமே அந்நியரிடம் அடிமைப்பட்டிருந்த காலகட்டத்தில் "அடிபணியவும் மாட்டேன், மண்டியிடவும் மாட்டேன்" என ஆர்ப்பரித்து, போர் முரசு கொட்டி, செங்குருதி கொடை தந்து, எம் மண்ணை செம்மண் பூமியாக்கிய வீர மறவர்கள் பிறந்த வீர மங்கை வேலு நாச்சியார், மாமன்னர் மருது பாண்டியர் ஆண்ட "சிவகங்கை சீமையில்".

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற உலக பொதுத் தத்துவம் கண்ட "கணியன் பூங்குன்றனார்", புறநானூற்றுப் புலவர் "ஒக்கூர் மாசாத்தியார்", கம்பனின் கருத்துக்களில் நாம் உடன்பாவிட்டாலும் "கவிச்சக்ரவர்த்தி" என்றழைக் கப்பட்ட கம்பர் ஆகிய சங்க கால புலவர்கள் முதல், தற்கால கவிஞர்கள் "கவியரசு கண்ணதாசன்", சீரிய பகுத்தறிவாளரும், பெரியாரிய சிந்தனையாளரும், புதுக் கவிதையின் தலைமகனுமான "கவிஞர் மீரா" போன்ற பெரும் கவிஞர்கள் பிறந்த மண்ணாம் "சிவகங்கைச் சீமையில் ஓர் அறிவுத் திருவிழா".

அறிவாசான் தந்தை பெரியார் 

புத்தக அரங்கம்

15.4.2022 எம் மண்ணான சிவகங்கையின் "புத்தகத் திருவிழா 2022" தொடக்க விழா நடைபெற்றது. பதினைந்து நாட்களுக்கு முன்பே சிவகங்கையில் "புத்தக திருவிழா 2022" நடைபெறப் போகிறது என்ற செய்தி என் செவிகளில் தேனாக வந்து விழுந்தது. முதல் முறையாக நம் ஊரில் புத்தகத் திருவிழா, அதுவும் தமிழ்நாடு அரசு விழாவாக நடைபெறப் போகிறது என்பதை அறிந்து மிக்க மகிழ்வுற்றேன். அவ்விழாவில் நம் அறிவாசான் "தந்தை பெரியார்" புத்தக அரங்கத்தை அமைத்திட வேண்டும் என மிக அவா கொண்டேன். இச்செய்தியை சிவகங்கை மாவட்ட தலைவரும், வழக் குரைஞருமான ச.இன்பலாதன் அவர்களிடம் எடுத்தியம் பினேன். அவர்களும் மிக மகிழ்வுற்று நம் தலைவர் ஆசிரியர் அவர்கள் கூறுவார்கள், அதன் பின் செயல் படுவோம் எனக் கூறினார்.

நாட்கள் நகர்ந்தன. புத்தகத் திருவிழாவிற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் மிகத் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. புகழ்பெற்ற சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியின் மிகப் பெரிய விளையாட்டு மைதானத்தில் புத்தகத் திருவிழாவிற்குரிய பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் த¬மையில் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

14.4.2022 அன்று மாலை 4 மணி அளவில் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் ச.இன்பலாதன் அவர்களிட மிருந்து அழைப்பு அலைபேசி மூலம் - உடனடியாக மன்னர் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள  அரங்க எண் 80-க்கு வருமாறு எனக்கு அழைப்பு விடுத் தார்கள். வில்லிலிருந்து கிளம்பிய அம்பைப்போல அடுத்த பத்தாவது நிமிடத்தில் அரங்க எண் 80அய் அடைந்தேன். "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்" என்ற பெயர் பலகையைப் பார்த்தவுடன் என்னை அறியாமல் ஆனந்தக் கண்ணீர் விட்டேன். எத்தனை ஆண்டுகள் கனவு. தந்தை பெரியாரின் புத்தகங்களை சிவகங்கையில் புத்தகத் திருவிழாவில் அமைக்க வேண்டும் என்பது, அதுவும் தமிழ்நாடு அரசின் சார்பாக அமைக்கப்பட்டுள்ளது. அது இன்று நிறைவேறி விட்டது. அதற்காக நம் குடும்பத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

அங்கு பெட்டியில் வைத்திருந்த அய்யா, அண்ணா, அம்பேத்கர், ஆசிரியர், முத்தமிழ் அறிஞர் கலைஞர், இனமானப் பேராசிரியர் அன்பழகன் ஆகியோருடைய புத்தகங்களை எடுத்து, குழந்தையை தூக்குவதுபோல எடுத்து வாசித்துப் பா£த்தேன். திருச்சி பெரியார் மாளிகையிலிருந்து வந்த நமது நூலக விற்பனையாளர் இரகுராமன், அலமாரியில் உள்ள அடுக்குகளில் எல்லா புத்தகங்களையும் அடுக்கினார். பார்ப்பதற்கு மிகவும் கண்கொள்ளா காட்சியாக இருந்தது. அன்று இரவு பத்து மணியாகிவிட்டபடியால், பிரிய மனமில்லாமல், அரங்கத்தை விட்டு இல்லம் திரும்பினேன்.

எதிர்பார்த்த 15.4.2022 - உதயசூரியன் தன் பொற்கரங் களை தகத்தகாயமாக விரியவிட்டான். பொழுது புலர்ந்தது, புள்ளினங்கள் சிறகடித்து வானத்தில் பறக்க ஆரம்பித்தன. நான், எனது வாழ்விணையர் வே.கார்த்தி காராணி, எங்களின் மகன், மகள் பு.கா.யாழிசை மொழி, பு.கா.யாழினி சத்தியபாமா அனைவரும் கருப் புடை அணிந்து காலை 8 மணிக்கே அரங்கம் வந்த டைந்தோம். எனது மகனும், மகளும் வருவோர்க் கெல்லாம், தந்தை பெரியாரின் புத்தகங்களை எடுத்துக் காட்டிக் கொண்டி ருந்தார்கள்.

ஒன்றும் புதிதல்ல - புதிரல்ல!

காலை 10.30 மணிக்கு உள்ளாட்சித் துறை அமைச் சரும், சிவகங்கை மண்ணின் மைந்தருமான கே.ஆர்.பெரிய கருப்பன், மக்கள் நல்வாழ்வுத்  துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், குன்றக்குடி மகா சன்னிதானம் அடிகளார், மதிப்பிற்குரிய சிவகங்கை மாவட்ட ஆட்சி யர், மதிப்பிற்குரிய சிவங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் பல்வேறு துறை சார்ந்த உயர் அலுவலர்கள் அனைவரும் ஒவ்வொரு அரங்கமாக பார்வையிட்டுக் கொண்டு வந்தார்கள். நம் அரங்கத்தைப் பார்த்தவுடன் மிக்க மகிழ்வுற்று, அரங்கத்தை குன்றக்குடி மகா சன்னிதானம் அடிகளார் அவாகள் தலைமையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும், சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.ஆர். பெரிய கருப்பன் திறந்து வைத்தார்கள். அப்பொழுது காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி, மேனாள் அமைச்சர் மு.தென்னவன் மற்றும் இயக்க பொறுப்பாளர்கள்  அனைவரும் உடன் இருந்தனர். குன்றக்குடி அடிகளார் அவர்கள் குழந்தையைப் போல சிரித்துக் கொண்டே தந்தை பெரியாரின் புத்தகங்களைப் பார்வையிட்டதோடு அல்லாமல், புத்தகங்களையும் வாங்கிச் சென்றார்கள். அன்றைய தினம் வரலாற்றின் முக்கியமான நாள். கருப்பும், காவியும் ஒன்றிணைந்து தந்தை பெரியார் புத்தக அரங்கத்தை திறந்து வைத்தது. இது வடக்கத்தி காவி அல்ல. இது தமிழ்க்காவி. தமிழின எழுச்சிக்காகவும், தமிழின வளர்ச்சிக்காகவும் உள்ள தமிழ் காவி. தந்தை பெரியார் மேல் தீராத பற்றுக் கொண்ட காவி, திராவிடத்தின் மீட்சிக்கான காவி. ஆகவே கருப்பும், காவியும் சேர்ந்தது ஒன்றும் புதிதல்ல, புதிரல்ல.

முதலில் வாசிக்க வைப்போம்

"பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் அரங்கம் எண் 80" எப்பொழுதும் களை கட்டி நிற்கும், சிவகங்கை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் ச.இன்பலாதன், சிவகங்கை மண்டலச் செயலாளர் மகேந் திரராசா, மாவட்ட செயலாளர் இராசாராம், மாவட்ட அமைப்பாளர் அனந்தவேல், பெரியார் பெருந்தொண்டர் வேம்பத்தூர் செயராமன், நூலக விற்பனையாளர் இரகுராமன், நான் உள்பட எல்லோரும் தினந்தோறும் காலை 10 மணிக்கு அரங்கத்திற்கு வந்து விடுவோம். இரவு 9.30 மணிக்குத்தான் இல்லம் திரும்புவோம். "பெரியாரை முதலில் வாசிக்க வைப்போம், பின்னர் சுவாசிக்க வைப்போம், தானாகவே எல்லோரும் நேசிக்க வந்து விடுவார்கள்". இதுவே எங்கள் தலையாய கடமை யாகக் கொண்டு எல்லோரையும் அரங்கத்தை பார்வையிட அழைப்போம். அனைவரும் மகிழ்ச்சியுடன் வந்து பார்வையிட்டு புத்தகங்களை வாங்கிச் செல்வார்கள்.

தந்தை பெரியாரின் புத்தகங்களை மகிழ்ச்சியுடன்...

சிவகங்கை நகர் மன்றத் தலைவரும், திமுக நகரச் செயலாளருமான துரை ஆனந்த் மிக மகிழ்ச்சியுடன் தந்தை பெரியார் புத்தகங்களை வாங்கிச் சென்றார்கள். அதேபோல தி.மு.க. மாவட்டத் துணைத் தலைவரும், திருப்புவனம் பேரூராட்சித் தலைவருமான வேங்கை மாறன் மணிமுத்து, தி.மு.க. மகளிரணிச் செயலாளர் பவானி கணேசன், மகளிரணி துணைச் செயலாளர் மார்க்ரேட் கமலா, மற்ற தி.மு.க. தோழர்களும் வந்திருந்து புத்தகங்கள் வாங்கிச் சென்றார்கள்.  

தோழர்கள் ஏராளமாக வாங்கிச் சென்றனர்

ஒவ்வொரு நாளும் அரசியல் மற்றும் இயக்கங்களைச் சார்ந்த தலைவர்கள் நம் அரங்கம் வந்து புத்தகங்களை வாங்கிச் செல்வார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும், சிவகங்கை மேனாள் சட்டமன்ற உறுப்பின ருமான தோழர் குணசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் கண்ணகி ஆகியோர் நேரில் வந்து அரங்கத்தை பார்வையிட்டு ஏராளமான புத்தகங்களை வாங்கினார்கள். இதில் மிகச் சிறப்பானது, பொதுவுடைமைச் சிந்தனையாளரும், பெரி யாரிய சிந்தனையாளரும், ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின்  தலைவரும், மிகச் சிறந்த பேச்சாளரும், எனது கல்லூரி கால தோழருமான தோழர் ஈரோடு ஸ்டாலின் குணசேகரன் நமது அரங்கத்திற்கு வருகை புரிந்து, என்னைக் கண்டு மிகவும் மகிழ்வுற்று, ''உங் களைப் பார்த்து எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன'' என பரவசப்பட்டு, நலம் விசாரித்தார், அவரும் நம் அரங்கத்தில் உள்ள அனைத்துப் புத்தகங்களையும் வாங்கினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் 

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் மற்றும் காங்கிரசு பேரியக்கத்தைச் சார்ந்த நண்பர்களும், பொறுப்பாளர்களும் புத்தகங்கள் வாங்கிச் சென்றார்கள். 

பள்ளி கல்லூரி மாணவர்கள்

தினந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் நம் அரங்கத்தை பார்வையிட்டு நிறைய புத்தகங்கள் வாங்கிச் செல்வார்கள். ஒவ்வொரு நாளும் மலரைச் சுற்றும் தேனீக்களைப் போல, நம் அரங்கத்தில் பெரியார் புத்தகங்களைச் சுற்றி மாணவக் கண்மணிகள் மற்றும் பொது மக்கள் நிற்பதைப் பார்த்து மிகவும் பெருமையாக இருந்தது.

தாய் வீட்டை பார்த்தது போல்...

சிவகங்கை கே.ஆர்.மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த மாணவர்கள் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பொக்கிசம், தமிழாசிரியர் நீ.இளங்கோ, ஓவிய ஆசிரியர் இரவிச்சந்திரன் அவர்களின் தலைமையில் வந்திருந்து நிறைய புத்தகங்கள் வாங்கினர். மற்றுமொரு சிறப்பு என்னவென்றால், நம் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் 2013-2017 ஆண்டுகளில் பி.டெக் பயின்ற மாணவி இரா.மதுமோனிகா, தனது தோழிய ருடன் வந்திருந்தார். நம் அரங்கத்தை பார்த்தவுடன், "என் தாய் வீட்டை பார்த்தது போல் உள்ளது" எனக் கூறி மிக மகிழ்வுடன் புத்தகங்களை வாங்கினார். தன் தோழியர் அனைவரையும் வாங்க வைத்தார். ''ஆசிரியர் அவர்கள் நலமுடன் உள்ளார்களா, அவர்களை நான் பார்க்க வேண்டும்'' என்று தந்தையின் நலத்தை மகள் நலம் விசாரிப்பது போல விசாரித்தார். இது நமக்கு மிக பெருமையாக இருந்தது.

நீதியரசர் வருகை

சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் மாண்பமை சொக்கலிங்கம் அவர்களை மாவட்டத் தலைவர் வழக் குரைஞர் ச.இன்பலாதன் வரவேற்று நம் அரங்கத்தைப் பார்வையிட வகை செய்தார். நீதியரசர் அவர்கள் புத்தகங்கள் வாங்கிச் சென்றார்.

இந்நிகழ்வில் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால் தினந்தோறும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் நம் அரங்கத்திற்கு வருகை புரிந்து புத்தகங்களை பார்வையிட்டு மிக்க மகிழ்வுடன் வாங்கிச் செல்வார்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மிகச் சிறந்த எழுத்தாளர், மிகச் சிறந்த பேச்சாளர், பெரியார் கருத்துக்கள் மேல் தீராத பற்றுக் கொண்டவர். வாசிப்பை ஒரு கடமையாகக் கொண்டு செயல்படுபவர். மற்ற அனைவருமே வாசிக்க வேண்டும் என விரும் புகிறவர். சிவகங்கை மாவட்டத்திற்கு கிடைத்த இ.ஆ.ப. தலைவரும், இ.கா.ப. தலைவரும் மிகப் பெருமைக் குரியவர்கள். நம் தாய் மொழி தமிழ் மேல் தீராத பற்றுள்ளவர்கள். இது சிவகங்கை மாவட்ட மக்களுக்குக் கிடைத்த பெருமை.

தந்தை பெரியார் இல்லாவிட்டால்...

இறுதி நாளான 25.4.2022 அன்று மிக அதிகமான கூட்டம். இறுதி நாளில் நம் அரங்கத்தில் அதிக அளவில் புத்தகங்கள் விற்பனையாயின. சிவகங்கை நகர காவல் ஆய்வாளர் வருகை புரிந்து "தந்தை பெரியார் இல்லா விட்டால் இந்த சீருடையை நான் அணிய முடியுமா?" என நன்றி பெருக்கோடு நினைவு கூர்ந்தது மிக மகிழ் வாக இருந்தது, அதிகளவில் புத்தகங்களையும் வாங்கிச் சென்றார்கள்.

பெரியார் மண்

அதேபோல சிவகங்கை அரண்மனை வாசல் அருகில் "வெங்கடேஷ்வரா ஸ்வீட்ஸ்" என இனிப்பகக் கடை வைத்திருக்கும் இராதா சிறந்த பண்பாளர், கடவுள் நம்பிக்கை உள்ளவர். இங்குள்ள அனைத்து கோயில்களுக்கும் அறப்பணிக்கு நிறைய உதவி செய்பவர். அவர் நம் அரங்கத்திற்கு வருகை புரிந்து அதிகமான புத்தகங்களை வாங்கி நூலகங்களுக்கு தன் அன்பளிப் பாக வழங்குமாறு கேட்டுக்கொண்டார்கள். இப்படிப்பட்ட பண்பாளர்கள் இருக்கும் வரை தந்தை பெரியாரின் கொள்கைகளை, திராவிட இனத்தை யாராலும் அழிக்க முடியாது. இது "பெரியார் மண்" என்பதை நமது புத்தக விற்பனை மூலம் அறிந்து கொள்ளலாம்.

காரைக்குடி மாவட்ட திராவிடர் கழகத் தோழர்கள் மண்டலத் தலைவர் சாமி திராவிட மணி, காரைக்குடி மாவட்டத் தலைவர் அரங்கசாமி, காரைக்குடி மாவட்டச் செயலாளர் வைகறை ஆகிய அனைவரும் நம் அரங்கத்திற்கு வருகை புரிந்து புத்தகங்கள் வாங்கிச் சென்றார்கள்.

இந்நிகழ்விற்கு முக்கிய பொறுப்பாக இருந்து, நல் ஆலோசனைகள் வழங்கிய சிவகங்கை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் ச.இன்பலாதன், மண்டலச் செயலாளர் மகேந்திரராசா, மாவட்டச் செயலாளர் பெரு.இராசாராம், மாவட்ட அமைப்பாளர் அனந்தவேல், மாவட்ட துணைத் தலைவர் ஜெ.தனபாலன், பெரியார் பெருந்தெண்டர் வேம்பத்தூர் செயராமன், நூலக விற்பனையாளர் இரகுராமன் மற்றும் அனைவருக்கும் சிவகங்கை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறுதியாக அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி. நம் பெரியார் அரங்கத்தில் விற்பனையான புத்தகங்களின் மதிப்பு சுமர் ரூ.1,50,000 என மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

- இரா.புகழேந்தி, 

நகர தலைவர், திராவிடர் கழகம்,

சிவகங்கை

No comments:

Post a Comment