முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டையொட்டி 'திராவிட மாடல்' பயிற்சிப் பட்டறைபற்றிய தி.மு.க. தீர்மானம் சிறப்பானதே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 31, 2022

முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டையொட்டி 'திராவிட மாடல்' பயிற்சிப் பட்டறைபற்றிய தி.மு.க. தீர்மானம் சிறப்பானதே!

தி.மு.க. வெறும் அரசியல் கட்சி மட்டுமல்ல; மகத்தான சமூக மாற்றத்தை உருவாக்கும் பகுத்தறிவு இயக்கமே!

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் நூற்றாண்டையொட்டி இளைஞர்களுக்குப் பயிற்சிப் பட்டறை நடத்துவது என தி.மு.க. எடுத்துள்ள தீர்மானம் வரவேற்கத்தக்கது - பாராட்டத்தக்கதாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத் துள்ளார். 

அவரது அறிக்கை வருமாறு:

கடந்த 28.5.2022 அன்று சென்னையில் கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட் டச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கூட்டத் தில் நிறைவேற்றப்பட்டுள்ள ஒரு முக்கிய தீர்மானத்தை திராவிடர் கழகமான தாய்க் கழகம் மிகவும் வரவேற்கிறது.

கலைஞர் நூற்றாண்டில் 'திராவிட மாடல்' பயிற்சிப் பட்டறை!

‘‘அடுத்த ஆண்டு (2023) நூற்றாண்டு விழா காணவிருக்கும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களையும், அவர் உயிரெனக் கட்டிக் காத்த இயக்கத்தின் கொள்கைகளையும் - அவர் வழியில் ‘திராவிட மாடல்' ஆட்சி நடத்தி, நாளும் சாதனைத் திட்டங்களால் தமிழ்நாட்டை நிமிரச் செய்துள்ள கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் செயல்பாடுகளை யும், இன்றைய தலைமுறையினருக்குச் சேர்த் திடும் வகையில் மாநிலம் முழுவதும் ‘‘திராவிட மாடல் பயிற்சி பாசறைக் கூட்டங்களை'' தொடர்ச் சியாக நடத்துவது எனக் கூட்டம் தீர்மானிக்கிறது'' என்பதே அத்தீர்மானமாகும்.

தி.மு.க. என்ற அரசியல் கட்சி - திராவிட இயக்கக் கொள்கைகளை அரசியல்மூலம் சட்ட திட்டங்களாக்கி, அந்த இலட்சியங்களை அடிப் படையாகக் கொண்டு,  ஒரு மகத்தான சமூக மாற்றத்தினைக் காண உருவாக்கப்பட்ட பகுத்தறிவு இயக்கம் ஆகும்.

தி.மு.க.வில் இளைஞர்களுக்குப் பாசறை வகுப்பு - கொள்கைப் பயிற்சி வகுப்பு எடுக்கும் போது, இயக்க வரலாற்றை  தெளிவுற அறிந்திட அவை வழிகோலும். முதலில் தி.மு.க. என்பது மற்ற பல அரசியல் கட்சிகளைப்போல் வெறும் பதவிக்காக உருவாக்கப்பட்டதல்ல.

பத்தோடு பதினொன்று அல்ல; தனித்தன்மை வாய்ந்தது!

சுயமரியாதை, மனிதநேயம், இன உணர்வு அவசியம்

பகுத்தறிவு அடிப்படையில், திராவிட பண்பாட்டை, சுயமரியாதை, இன உணர்வு, மனித நேயம், தன்மானம் தாண்டிய இனமான உணர்வு, மகளிர் உரிமை, மக்கள் நலம் காக்கும் ‘அனைவருக்கும் அனைத்தும்' என்ற சமூக நீதி, ஒடுக்கப்பட்ட சமூக மக்களை உயர்த்தி - உயர்த் துவது மட்டுமல்லாமல் அவற்றைப் பாதுகாக்க எந்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் பாடு படுதல், இன்றைய காலகட்டத்தில் மாநில சுயாட்சி என்ற மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாத்து மீட்டெடுக்க வேண்டியவற்றை மீட் டெடுக்கவேண்டும் என்பது போன்ற இலக்கு களோடு அன்றாடம் மக்களோடு தொடர்புடன் உள்ள ஒரு மக்கள் இயக்கமாகும்!

இந்த அடிப்படை உணர்வுதான் அதன் அரசியல் வரலாற்றில் எவரும் எளிதில் எட்ட முடியாத உயரத்திற்கு அதனைக் கொண்டு செலுத்தி - நிறுத்தி, உலகத்தோரையும் இன்றைய ‘திராவிட மாடல்' என்ற இரண்டு சொற்கள் ஈர்த்துவக்கச் செய்து - இணையற்ற பீடுநடை போடும் இன்றைய முதலமைச்சரின் அடுக்கடுக் கான சாதனைகள் மிகுந்து சரித்திரம் படைக்கவும் அடித்தளமாக அமைந்துள்ளது.

பிரச்சார ஏவுகணைகளைத் தயாரிக்கும் உலைக் களம்

சாதனைகள் நாளும் ஏராளம்! அதனைக் கண்டு சகிக்காத இன எதிரிகள், அரசியல் ஏமாற்றுக்காரர்களின் ஏளனம், எரிச்சல் பேச்சு, ‘விஷமதானத்தை' ஊடகங்கள் துணையோடு நடத்திடும் அவலமும் அனுதினமும் தவறாமல் நடைபெற்று வருகின்றன; அவர்தம் முகமூடி யைக் கிழிக்கும் வண்ணம் பரப்புரைகள் - மக்களிடையே விழிப்புணர்வுக் கூட்டங்கள் அடைமழை போலப் பொழிய வேண்டும்.

அதற்கெனப் ‘பிரச்சார ஏவுகணை'களைத் தயாரிக்கும் உலைக் கூடங்களாக, பயிற்சி கழகப் பட்டறைகள் இடையறாமல் எல்லா மாவட்டங் களிலும் இயங்கிக் கொண்டே இருக்கவேண்டும்.

ஆதாரபூர்வ சான்றுகளுடன், அறிவை விரிவு செய்து, விதண்டாவாதிகளின் வறட்டுப் போலி வாதங்களையும், புளுகுகளையும், பொல் லாங்கு பிரச்சாரத்தினையும் தோலுரித்து, மக்கள் மன்றத்தில் காட்டுவது - சாதனை எவ்வளவு முக்கியமோ, அதுபோல மக்களிடம் எடுத்து விளக்கும் பிரச்சாரங்களும் முக்கியம்! மிக முக்கியம்!!

'திராவிட மாடல் ஆட்சி' என்பது என்ன?

சாதித்தால் மட்டும் போதாது; அந்தச் சாதனையின் பலனும், பலன்களை அனைத்து மக்களும் எப்படி அடைகிறார்கள்  என்பதும் கவனத்திற்குரியதாகும். ‘திராவிட மாடல்' ஆட்சி என்பது எப்படி ஒரு நூறாண்டு தாண்டிய, கட்டமைப்பின் எழில் தோற்றம் என்பதை, இன் றைய இளைய தலைமுறைக்கு எடுத்துரைக்க வேண்டும்.

தி.மு.க. இளைஞரணியினர், அதன் ஆற்றல்மிகு செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போன்ற பகுத்தறிவாளர்களின் ஏற்பாட்டுக்குச் செயல் திட்டங்கள்மூலம் கொள்கையை வர லாற்று ரீதியாக இளைஞர்களுக்குத் தெளிவு படுத்தி, எந்த நிலையிலும் கொள்கையே இந்த இயக்கத்தின் மூல பலம் என்பதைப் புரிய வைத் தால் ‘திராவிட மாடல்' என்பது கொள்கையால் கட்டப்பட்ட எஃகு கோட்டையே; இது பதவியால் எழுந்துள்ள மணற்குன்று அல்ல என்பதைப் புரிய வைக்க - இயக்கம் எப்படி வந்தது, வளர்ந்தது, - எதிர்நீச்சலில் வளர்ந்து, சமாளித்தது என்பதை இளையருக்கும், பல்வேறு கட்சிகளிலிருந்து வெளியேறி தி.மு.க.விற்கு வரும் நண்பர்களுக்கும் கொள்கைப் பயிற்சி வகுப்பு எடுப்பது முக்கியம்.

பயிற்சி, பிரச்சாரம் 

இரண்டும் முக்கியம்

மக்களிடையே பிரச்சாரம் - இளைஞர் களுக்குப் பயிற்சி இரண்டும் முக்கியம்! மிக முக்கியம்!!

தந்தை பெரியார் - அண்ணா - கலைஞர் பதித்த கொள்கைத் தடங்களை தெளிவாக விளக்குவது அவசியம் - இந்தக் காலகட்டத்தில்!


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

31.5.2022


No comments:

Post a Comment