மனதின் மூடுபனி - விலக்கல் எப்படி? (2) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 19, 2022

மனதின் மூடுபனி - விலக்கல் எப்படி? (2)

மனதின் மூடுபனி - விலக்கல் எப்படி? (2)

நீர் அருந்துதல் மிக அவசியம் என்பதை வலியுறுத்தும் டாக்டர்கள், ஒரு நாளைக்கு 8 கிளாஸ் - 8 அவுன்ஸ் தண்ணீர் கொண்டவை - மொத்தம் (8*8) = 64 அவுன்ஸ் நீர் அருந்துதல் நல்லது என்று அறிவுறுத்துகிறார்கள்.

இப்படிச் செய்யும்போது சிலருக்கு 8 கிளாஸ் தண்ணீர் குடிப்பது சற்று கடினமாக உள்ளது என்று நினைப்பார்களானால், அவர்கள் நீர்ச்சத்துள்ள வெள்ளரிப் பிஞ்சுகள், தர்ப்பூசணி (water melons) போன்ற பழங்களை இதற்குப் பதிலாக சேர்த்து ஈடுசெய்து கொள்ளலாம் என்பதே அந்த அறிவுரை!

2. நமது மூளையில் மூடு பனி போன்ற அழுத்தங்கள் சேர்ந்து சுமையாக நம்மை ஆக்காமல் இருப்பதற்கு நாம் உட்கொள்ளும் உணவும் மிக முக்கியமாகும் என்கிறார்கள்!

தினமும் நாம் உண்ணும் உணவு பற்றியும் சற்று நிதானமாக ஆய்வு செய்து, அதற்கேற்ப மாறுதலைச் செய்து கொள்வதும் அவசியம்.

நாள் முழுவதும் கொழுப்புச் சத்து மிகுந்த உணவை உட்கொள்வது, அதிக சர்க்கரையைத் தரும் உணவு வகைகளை எடுத்துக் கொள்வது நமது ‘மூளையில் மூடுபனி' (மன அழுத்தம்) உருவாவதற்குக் காரணம் ஆகும் என்கிறார் அமெரிக்க டாக்டர் காதர்.

அதற்குப் பதிலாக நாளும் மென்மையான சத்து குறைந்த - குறிப்பாக நார்ச்சத்து நிறைந்த உணவுகளைத் தேடுங்கள்.

காலாவதி தேதிகளைப் பதித்து பேக்கிங் செய்த அடைப்பு உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. 

நல்ல காய்கறிகள், பழங்கள், தாது வகைகள், பீன்ஸ், ஆரோக்கிய இறைச்சி - மாமிசம் போன்றவைகளைத் தேர்ந்தெடுத்து உண்ணப் பழகுங்கள். இவற்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

"மனதின் மூடுபனி" ஏற்படாமல் தடுப்பதற்கு, போதிய வைட்டமின்கள் phyto-nutrients  என்ற ஒரு சத்துகளை சேர்த்துத் தரக்கூடிய உணவு வகைகள் தேவை - இரும்பு தாதுச் சத்தினை - பெரும் சத்துகளைத் தரும் macro-nutrients  போன்ற உணவு வகையினை நாம் எடுத்தால், அவை நமக்குப் பெரிதும் உதவக்கூடும்.

பல வேளைகளில் சாப்பாட்டைத் தவிர்ப்பது (எடையைக் குறைப்பது என்ற நோக்கிலோ அல்லது வேறு சில காரணங்களினாலோ) செய்தால் நம் மூளை சரிவர சிந்திக்கும் தன்மையும், கவன முறையும் பாதிக்கப்படக்கூடும். இதனால் நமக்கு உடல் இயக்க சக்தி வெகுவாகக் குறைந்து விடுவதால் (Low Energy) மூடுபனி கைக்கூடும்!

"காலைச் சிற்றுண்டியைத் தவிர்க்கக்கூடாது; 5 மணி நேரத்திற்கு ஒரு முறை உணவு எடுத்துக் கொள்ளுதல், பகலில் பெரிதும் போதிய சக்தியைத் தரும்" என்கிறார் டாக்டர் லோரன்சு!

"இதனைக் கடைப்பிடித்த எனது வாடிக்கை யாளர்கள் போதிய சக்தியும், தெளிவான சிந்தனை - செயலாக்கத்துடன் நாளும் இருக் கிறார்கள்" என்கிறார்.

3. உடற்பயிற்சியும் முக்கியமாகும்!

உடலுக்கு மட்டும் அதனால் பலம் பெறு கிறோம் என்றுதான் நம்மில் பலரும் கருதுகிறோம். அதே அளவுக்கு உடற்பயிற்சி மனதிற்கும் ஊக்கத்தையும், உற்சாகத்தையும், பலத்தையும் அளிக்கிறது என்பதை ஏனோ மறந்து விடுகிறோம்.

(இப்படி எல்லா வயதுக்கும், அவரவர் உடலுக்கும் ஏற்ற உடற்பயிற்சிகளை மருத்துவர் ஆலோசனைக் கேட்டு, பழக்கப்படுத்திக் கொள்ளல் முக்கியம். இளமையானவர்கள் கடுமையான பயிற்சிகளைக் கூட செய்யலாம். ஆனால் அதை முதுமையானவர்கள் செய்தால் எதிர் விளைவு தானே ஏற்படும். பொதுவாக 20 மணித் துளிகள் முதல் 30 மணித் துளிகள் வாரம் குறையாது 5 நாட்கள் செய்தாலே முது குடிமக்களுக்குப் போதுமானதாகும்).

மூச்சுப் பயிற்சிகள், உள்மூச்சை இழுத்து வெளியே விடல் (Aerobic exercise ) போன் றவை நமது சுவாசப்பைகளை நன்கு விரிவடையச் செய்வதுடன், மூளைக்கும் ரத்த ஓட்டம் செல்வ தற்கும், புதிய சக்தியைப் பெறுவதற்கும் உறு துணையாக இருக்கிறது; அதனால் நினைவு ஆற்றலும், கற்கும் திறனும் பெருகவும் அது வாய்ப்பை ஏற்படுத்தி மூளையில் மூடுபனியை அண்டவிடாமல் விரட்டுகிறது.

(தொடரும்)

திருத்தம்

நேற்றைய (18.5.2022) "வாழ்வியல்  சிந் தனைகள்" கட்டுரை (1)இல் கடைசி பத்தியில், "மனதில் சில நேரங்களில் தெளிவற்ற தன்மை (Mental Clarity) இன்மை ஏற்படலாம்" என்பதற்குப் பதிலாக "மனதில் சில நேரங்களில் தெளிவு இன்மை - நீர்ச்சத்து குறைபாட்டால் ஏற்படக்கூடும்" என்று திருத்திப் படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறோம்.

- ஆ-ர்


No comments:

Post a Comment