எடுத்துக்காட்டான தீர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 19, 2022

எடுத்துக்காட்டான தீர்ப்பு

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பு கரை புரண்ட மகிழ்ச்சி அலைகளை நாடெங்கும் எழுப்பி இருக்கிறது.

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.டி. தாமஸ் இந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பில் தவறு நடந்து விட்டது என்று சொல்லியிருக்கிறார். விசாரணை அதிகாரி வி.தியாகராசன் ஓய்வுக்குப் பிறகு என்ன சொன்னார்?

"வழக்கு விசாரணையின்போது பேரறிவாளன் தெரிவித்த முக்கியமான வாக்குமூலத்தைப் பதிவு செய்யத் தவறி விட்டோம்" என்று கூறிடவில்லையா?

இப்படி நீதிபதியும், விசாரணை அதிகாரியும் திட்டவட்டமாக சொன்ன நிலையில், அந்த நிலையிலேயே பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டு இருக்க வேண்டாமா?

இதுகுறித்து பல நேரங்களில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் எழுதியதுண்டே - பேசியதும் உண்டே!

இப்பொழுது உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கியுள்ள அரிய தீர்ப்பின் சில நிலைப்பாடுகள் எதிர்காலத்திற்கான வெளிச் சத்தைத் தந்துள்ளன.

மாநில அமைச்சரவை ஒரு முடிவை எடுத்து, தீர்மானித்து ஆளுநருக்கு அனுப்புவது ஒரு சம்பிரதாயமான நடைமுறையே! ஆளுநருக்கு ஒப்புதலுக்காக அமைச்சரவை அனுப்பி வைத்தால், மக்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையைவிட குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட்ட ஆளுநருக்குத்தான் அதிக அதிகாரம் என்று மனப்பால் குடிக்க வேண்டாம் என்பதைத்தான் பேரறிவாளனின் விடுதலை தீர்ப்பில் உச்சநீதிமன்றம் ஆணி அடித்தது போல திட்டவட்டமாகவே தெரிவித்து விட்டது.

மாநில அரசு அனுப்பிய கோப்புக்கு ஒப்புதல் வழங்கிட, ஆளுநருக்கு எந்தவிதக் காலவரையறையும் கிடையாது என்று வாய்ச்சவடால் அளிக்கும் அரை குறைகளுக்கும் ஆப்பு அடிக்கப்பட்டுள்ளது.

அப்படி ஆளுநர்கள் தங்களுக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது என்று கருதினால், செயல்பட்டால் அது அதிகார மீறல் என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது. அதிகார மிதப்பில் இருக்கும் ஆளுநர்கள் மத்தியிலும் உள்ளுக்குள் ஓர் அச்சத்தை ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை.

எந்த அளவுக்கு ஆளுநர்கள் திமிரினார்கள் என்றால், மாவட்ட அளவில் சுற்றுப் பயணம் செய்து அதிகாரிகளை அழைத்து ஆய்வு செய்யும் அளவுக்குச் செல்லவில்லையா?

மாநில உரிமைகளுக்கு உரத்த முறையில் குரல் கொடுத்த அண்ணாவின் பெயரில் கட்சி நடத்திய முந்தைய அ.இ.அ.தி.மு.க. ஆட்சியினர், அதனைக் கண்டு கொள்ளாமல் விடவில்லையா? 

இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார்.

"ஆளுநர்கள் அவர்களை இயக்கும் அதிகார வர்க்கம் அரசமைப்புச் சட்டத்தின்படி நேர்மையாக செயல்பட வேண்டும் என்ற பாடத்தை அதை மறந்தவர்களுக்கு நினைவு படுத்திடும் அருமையான அரசமைப்புச் சட்டத்திற்கான விளக்கத்தைத் தந்துள்ள தீர்ப்பு" என்று கூறியதுடன் "இதில் உறுதியாக இருந்த தமிழ்நாடு அரசும், குறிப்பாக மாண்புமிகு முதல் அமைச்சரும், அவரது அமைச்சரவையும் பாராட்டுக் குரியது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநர் அலுவலகத்தில் குறட்டை விட்டுத் தூங்கும் - தமிழ்நாடு அரசு அனுப்பியுள்ள கோப்புகள் கண் விழித்து ஆளுநர் மாளிகையிலிருந்து சென்னைக் கோட்டைக்குப் பறந்து வரும் என்றும் எதிர்பார்க்கலாம்.

வெள்ளைக்காரன் காலத்தில் ஆளுநர் பதவி தேவைப்பட்டு இருக்கலாம். மக்களாட்சி வந்த நிலையில், ஆளுநர் பதவியின் தேவை என்ன என்பது முக்கியமான கேள்வியாகும். இதனைத்தான் அறிஞர் அண்ணா அவர்கள் 'ஆட்டுக்குத் தாடி எதற்கு? நாட்டுக்குக் கவர்னர் எதற்கு?' என்று அவருக்கே உரித்தான மொழியில் கூறினார்.

இந்த இடத்தில் பேரறிவாளனை வெகுவாகப் பாராட்ட வேண்டும்; அவர் நடத்திய சட்டப் போராட்டம் சிறப்பானது. சிறையில் அவரது நன்னடத்தைப்பற்றி ஒருமுகமாகக் கூறி இருப்பதும் பாராட்டுக்குரியது.

இன்னும் சிறையில் வதியும் அறுவர் விடுதலைக்கும் அவரின் பங்கும் முக்கியமானதாக இருக்கும் என்று எதிர் பார்க்கலாம்.

திமுக தேர்தல் அறிக்கையிலும்  குறிப்பிடப் பட்டுள்ளது. முதல் அமைச்சரும் நேற்று குறிப் பிட்டுள்ளார். எஞ்சியிருப்போர் விடுதலையையும் எதிர்பார்க்கலாம்.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப்பின் ஆளுநர் அதன் வழியில் செயல்பட வேண்டும் - செயல்படுவார் என்று எதிர்பார்ப்பது ஒரு நேர்மையான சட்டரீதியான சிந்தனையாகும்.

No comments:

Post a Comment