ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 21, 2022

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வடகலை - தென்கலை பிரச்சினைகள் இன்னும் தீரவில்லையே?

- சுகுமார், காவேரிப்பாக்கம்

பதில்: அது பல ஆண்டுக்கணக்கில் யானைக்கு எந்த நாமம் போடுவதில் தொடங்கி, இன்றுவரை தீராத வழக்காக, வெள்ளி விழா, பொன் விழா, பவள விழா, நூற்றாண்டு விழா என கொண்டாடிக் கொண்டிருக்கிறது - ஒவ்வொரு முறையும் சீக்கும் ஹிக்கும் ஏற்படும் - திருவிழா “சாமி” தூக்கும் போது போடும் சண்டையைத் தீர்ப்பதே காவல்துறையின் ஒரு வேலையாகும். இதுதான் அர்த்தமுள்ள ஹிந்து மதம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

- - - - -

கேள்வி: கட்சியை காப்பாற்ற கிராமம் கிராமமாக செல்லப்போவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளதே - பயனளிக்குமா?

- தமிழ் மைந்தன், சைதாப்பேட்டை

பதில்: கொள்கைகளை அடகு வைத்து, ஊழல் வழக்குகளிலிருந்து தப்பிக்க இவையெல்லாம் பயன்படுமா?

“எண்ணெய்ச் செலவே தவிர, பிள்ளை பிழைக்காது”. முதலில் பா.ஜ.க.விடம் அடகு போனதை மீட்க வழி தேடட்டும்!

- - - - -

கேள்வி: தாஜ் மஹால் ரகசிய அறை, குதுப்மினார், கியான்வாபி என்று வரிசையாக வரலாற்று ரீதியான கட்டடங்கள், வழிபாட்டுத் தலங்களை மீண்டும் குறி வைக்கத் தொடங்கியிருக்கிறதே பா.ஜ.க. - தோல்வி பயம் வந்துவிட்டதா? 

- செல்வராஜ்.ஜே, புதுக்கோட்டை

பதில்: மதவெறியை நம்பியே, வாக்கு வங்கியைத் தேடும் அரசியலுக்கு அவ்வப்போது இப்படி திடீர் திடீர் - ‘அவதாரங்கள்' தேவைதானே!

- - - - -

கேள்வி: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா குறித்து தன்னுடைய வரம்பை மீறி ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்துள்ளாரே, காவிகளின் குரலை அவர் பிரதிபலிக்கிறாரா? 

- க.ஷாஜஹான், நாகர்கோவில்

பதில்: இதில் மட்டுமா? இதுவரை அவர் தனது எல்லை தாண்டி - வரம்பு மீறி - அரசமைப்புச் சட்ட விரோதப் பேச்சுகளாகப் பேசியவையை  பட்டியல் போட்டால் நீண்டு கொண்டே போகுமே!

இப்படி இதற்குமுன் ஆட்டம் போட்டவர்கள் மக்கள் நினைவில் கூட இல்லையே!

- - - - -

கேள்வி:  IAS  போல TNAS உருவாக்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறதே, அதனால் என்ன வகையான மாற்றம் உண்டாகும்? 

- வி.மோகனகிருஷ்ணன், கொரட்டூர்

பதில்: நிச்சயமாக நல்ல மாற்றத்தை மாநில ஆளுமையால் உருவாகும். அதற்கும் நமது “திராவிட மாடல்” ஆட்சி மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டுவதாக அமையக்கூடும்.

- - - - -

கேள்வி: அரசுப் பதவிகளில் இருந்தால் கண்டிப்பாக மதப் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லவேண்டுமா? குறிப்பிட்ட சில மதப்பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறுவது சரியா?

- ஆரோக்கிய சேவியர், செங்கோட்டை

பதில்: அப்படி ஏதும் கிடையாது; வாக்கு வங்கி அரசியலின் நிர்ப்பந்தம் இது.

உண்மையான மதச்சார்பின்மை என்றால் எந்த மதம் சார்ந்தும் வாழ்த்துக் கூறுவதை தவிர்ப்பதுதான்.

வெள்ளைக்காரன் ஆட்சி “கிறிஸ்துமஸ்” வாழ்த்தில் தொடங்கி, இப்படி ஒரு நிகழ்வு.

- - - - -

கேள்வி: மதுரவாயல்- துறைமுகம் பறக்கும் சாலை நிறுத்தப்பட்டு புதிதாக மீண்டும் தொடங்கப்படுவதால்  4,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதே - யார் பொறுப்பு?

- த.மணிமேகலை, வீராபுரம்

பதில்: அதுமட்டும்தானா? (முன்பு மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது தனது செயலாளரையே அனுப்பி முதலமைச்சர் ஜெ.யிடம் இதனை முடிக்க வற்புறுத்தினார். கலைஞர் மீதும், திமுக மீதும் இருந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக மறுத்து தூண்கள் அப்படியே நிற்கின்றன. துறைமுக வருமானம் பெரும் அளவில் இழக்கப்பட்டது).

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தில் ரூ.2200 கோடி செலவு செய்து, வெறும் 12 கிலோ மீட்டர்தான் பாக்கி இருக்கிறது. முடித்திருந்தால் எவ்வளவு பொருளாதார வளம், வேலைவாய்ப்பு அதிகரிப்பு எல்லாம் ஏற்பட்டிருக்கும் - ஜெ., சு.சாமி போன்றவர்களின் பார்ப்பன சூழ்ச்சியால் தமிழ்நாடு வறண்டது!

-----

கேள்வி: எல்.அய்.சி. பங்குகளைப் பொதுவில் விற்கத் தொடங்கியதும்,  அதன் மதிப்பு வேகமாகக் குறைந்தது அதிர்ச்சி அளிக்கிறதே?

- கி.பாலா, நரசிங்கபுரம்

பதில்: இது ஒரு பொறுப்பற்ற அரசியலில் “அலங்கோலம்“ மக்களின் சொத்து விரயம் - சமூகநீதிக்கு ஆப்பு வைக்க ஓர் உத்தி - கண்டனத்திற்குரியது.


No comments:

Post a Comment