ஆதீனங்கள் பொய்யுரைக்கலாமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 21, 2022

ஆதீனங்கள் பொய்யுரைக்கலாமா?

கி.தளபதிராஜ்

தனியார் வலைக்காட்சி ஒன்றில் தருமை ஆதீன குருமகாசந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர் அளித்த பேட்டி யொன்று இணையதளத்தில் ஒளிபரப்பப் பட்டுள்ளது. பட்டணப்பிரவேச நிகழ்ச்சி குறித்து அதில் அவர் 15 நிமிடத்திற்கு மேல் பேசியுள்ளார்.

பட்டணப்பிரவேசம் என்பது அய்நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் வைபவம் என்று சொல்லி அதற்கு ஆதாரமாக திருக்குறளையும், பெரிய புரா ணத்தையும், மறைஞானசம்பந்தர் பாடல் வரிகளையும் மேற்கோள் காட்டியிருக் கிறார், அதில் வேடிக்கை என்னவெனில் மெத்தப் படித்த ஆதீனம் எடுத்தாண்டி ருக்கும் மூன்று சான்றுகளுமே பட்டணப் பிரவேசம் என்று சொல்லப்படும் மனிதனை மனிதன் தூக்கும் பல்லக்கு நிகழ்விற்கு எதிர் கருத்துக் கொண்டவையாகும்.

பெரியபுராணத்தில் திருஞான சம்பந்தர் “அப்பர் எங்குற்றார்?” எனக் கேட்க, திரு நாவுக்கரசரோ (அப்பர்), திருஞான சம்பந் தரின் பல்லக்கை தோளில் சுமந்தபடி உம் அடியேன் உம் அடிகள் தாங்கிவரும் பெரு வாழ்வு வந்தெய்தப் பெற்று இங்குற்றேன்!” என்று கூறியிருப்பதாக எடுத்துக்காட்டி அப்போதே பல்லக்கு வைபவம் நடந் திருக்கிறது என்ற சிலாகிக்கிறார்.

அப்பரைக்கண்ட சம்பந்தர் என்ன செய்தார் என்பதுதான் இங்கே அறிந்து கொள்ள வேண்டிய செய்தி. சைவ மடங் களுக்கெல்லாம் மூலவரான திருஞான சம்பந்தர் அப்பரைக் கண்டு பதறிப்போய் பல்லக்கை விட்டு இறங்கி அப்பரோடு நடந்து சென்றார் என்பது தானே செய்தி!

அதேபோன்று மறைஞான சம்பந்தர், “பட்ட கட்டையில் பகல் குருடு ஏகுது பார்!” என பாடியிருப்பதைச் சுட்டிக்காட்டி அப் போதே பல்லக்கு பவனி இருந்ததாக தனது பட்டணப்பிரவேசத்திற்கு வலுசேர்க்க முயற்சிக்கிறார். இந்த பாடலின் பொருள் என்ன? எதற்காக எப்பொழுது பாடப் பட்டது என்பதை அறிந்தால் அதுவும் அவரது கருத்துக்கு எதிராகவே அமையும்.

மறைஞானசம்பந்தரின் சீடர்களில் ஒருவர் உமாபதி சிவாச்சாரியார்.  உமாபதி சிவம் தினந்தோறும் கோயிலுக்கு பல்லக் கில் சென்றுவருவதை வழக்கமாக வைத் திருந்தார். அப்படி ஒரு நாள் பூஜை முடித்து திரும்புகையில் பிச்சைக்காரன் வடிவில் வந்த ஞானி ஒருவர் உமாபதி சிவத்தின் பல்லக்கைப் பார்த்து, “பட்ட கட்டையில் பகல் குருடு ஏகுது பார்!” என்று பாடினார். அதாவது பகலிலேயே கண் தெரியாத குருடனைப்போல் பல்லக்கில் அமர்ந்து போகிறார் என்றார். இதைக் கேட்டதும் உமாபதி சிவத்திற்கு ஞானம் உதித்து பல்லக்கில் இருந்து இறங்கி நடந்து சென்றார் என்கிறது அந்த பாடல்.

மூன்றாவதாக அவர் தனக்குத் துணைக்கழைத்திருப்பது திருவள்ளுவரை. அதற்கு அவர் எடுத்துகொண்ட திருக்குறள்

“அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை” என்பதாகும்.

பல்லக்கில் அமர்ந்திருப்பவரையும், சுமந்து செல்பவரையும் பற்றி இந்தப்பாடல் விவரிப்பதாக ஆதீனம் பெருமைபட கூறியிருக்கிறார்.

பெருமதிப்பிற்குரிய குருமகா சந்நி தானம் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் இந்த குறளுக்கு அளித்திருக்கும் பொருளை அறிந்தோமானால், தருமை ஆதீனத்தை நினைக்கும்போது சிரிப்புதான் வருகிறது.

சிவிகை ஊர்ந்து செல்வோன் - மற்றும் தூக்கிச் செல்வோனிடையில் உள்ள வேறு பாட்டை அறத்தின் பயன் என்று சொல்லப் படுவதை மறுத்து எழுதப்பட்டது இந்த திருக்குறள் என்கிறார்.

இதுவென வேண்டா : வியங்கோள்

‘உள்ளது மறுத்தல்’ என்ற குறிக் கோ டையது இப்பாடல் என்கிறார்.

பொறுத்தல் துன்பம் தருவது. அறத்தில் வளர்ந்தவர்கள் மற்றவர் துன்புறுதலை, அதுவும் தமக்காகத் துன்புறுதலை ஒரு பொழுதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அப்படியே ஏற்றுக் கொண்டால் அறம் பிழையாகிவிடுகிறது. என்று குறிப்பிட்டு உள்ளார்

பட்டணப்பிரவேசம் தொன்றுதொட்டு வரும் பழக்கம் என எத்துணை சான்றுரைத் தாலும் அது காலந்தோறும் கேள்விக்குள் ளாக்கப்பட்டிருக்கிறது என்பதே உண்மை.

அதே பேட்டியில் ஒரு போதும் பட் டணப்பிரவேசம் கைவிடப்பட்டதில்லை என்று சொன்ன தருமை ஆதீனம், 2019இல் பொறுப்புக்கு வந்த பின்னர் வைத்தீஸ் வரன்கோயில், சீர்காழி, திருவையாறு என தொடர்ந்து விடாமல் பட்டணப்பிரவேசம் மேற்கொண்டதாக குறிப்பிடுகிறார். இந்த வரிசையில் 2020இல் திருப்பனந்தாளில் என்ன நடந்தது? திருப்பனந்தாள் மடத்தில் பட்டணப்பிரவேசம் செல்ல இருந்த ஆதீனம் அவர்கள் திராவிடர் கழகம் விடுத்த வேண்டுகோளையும், நடத்திய மாபெரும் போராட்டத்தையும் அடுத்து பல்லக்கு ஏறுவதை கைவிட்டு காரில் செல்லவிலையா? அப்போது பட்டணப் பிரவேசம் செல்வதை நிறுத்திக் கொண் டதை மறைத்து பேட்டியளிப்பது ஆதீன கர்த்தருக்கு அழகா?

26ஆவது குருமகா சந்நிதானம் தான் மேற் கொண்ட அறுவை சிகிச்சையினால் இடையில் பட்டணப்பிரவேசத்தை கைவிட வேண்டி இருந்தது என்கிறார். கார ணம் எதுவாக இருந்தாலும் நிறுத்தப்பட்டது என்பது தானே உண்மை. பல ஆண்டுகள் நிறுத்தப்பட்டு மடத்தில் முடங்கிக் கிடந்த பல்லக்கை தூசுதட்டி எடுத்து வலம் வர நினைப்பது வள்ளுவர் வாக்கில்  அறமா? தருமை ஆதீன குருமகா சந்நிதானம் மீண்டுமொருமறை நிதானமாக சிந்திக்க வேண்டும்!

No comments:

Post a Comment