நெய்வேலி (என்.எல்.சி.) நிறுவனத்தில் பொறியாளர்கள் நியமனத்தில் தமிழர்களைப் புறக்கணிப்பதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 30, 2022

நெய்வேலி (என்.எல்.சி.) நிறுவனத்தில் பொறியாளர்கள் நியமனத்தில் தமிழர்களைப் புறக்கணிப்பதா?

மே 9:  நெய்வேலியில் இளைஞரணியினர் ஆர்ப்பாட்டம்

ஜூன் 4: சென்னையில் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு கருத்தரங்கம் - மாநாடு!

ஜூலை 16: அரியலூரில் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு

திராவிடர் கழக மாநில இளைஞரணி கலந்துரையாடலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

சென்னை, ஏப்.30- நெய்வேலி (என்.எல்.சி.) நிறுவனத்தில் பொறியாளர்கள் நியமனத்தில் தமிழர்களைப் புறக் கணிப்பதா? மே 9 ஆம் தேதி இளைஞரணி சார்பில் நெய்வேலியில் ஆர்ப்பாட்டம்; ஜூலை 16 இல் அரியலூரில் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு நடத்துவது என்று சென்னையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநில இளைஞரணி கலந்துரை யாடலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இன்று (30.04.2022) காலை சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி மாநில கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்  வருமாறு:

தீர்மானம் 1:

தலைமைச் செயற்குழு தீர்மானங்களை செயல்படுத்துதல் 

19.03.2022 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர் கள் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலை மைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர் மானங்களை ஏற்று செயல்படுத்துவது என தீர்மானிக்கப் படுகிறது. 

தீர்மானம் 2:

தமிழர் தலைவர் ஆசிரியருக்கு  வாழ்த்து - நன்றி!

கிராமப்புற மாணவர்களை பாதிக்கும், சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வு எதிர்ப்பு, தேசியக் கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு ஆகிய முழங்கங்களை முன்னிறுத்தி ஏப்ரல் 3 ஆம் தேதி நாகர்கோவிலில் தொடங்கி ஏப்ரல் 25 சென்னை வரை 38 மாவட்டங்கள், 2 மாநிலங்களில் 40 கூட்டங்களில் பங்கேற்று 89 வயதிலும் தனது உடல் நலனையும், கோடை வெப்பத் தையும் பொருட்படுத்தாமல் இளைஞர்களின் எதிர்காலத் தைக் கருத்தில் கொண்டு 21 நாட்கள் பரப்புரை பயணம் மேற்கொண்டு தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பல லட்சம் மக்களைச் சந்தித்து எழுச்சியை ஏற்படுத்திய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு கழக இளைஞரணி சார்பில் வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.  சென்னையில் நடைபெற்ற, பரப்புரைப் பெரும் பயண நிறைவு விழாவில் 89 வயதிலும் உழைக் கும் நமது ஆசிரியர் இளைஞர்களுக்கு உழைப்பிலும், இலட்சியப் பிடிப்பிலும் வழிகாட்டியாக உள்ளார் என தமிழ்நாடு முதலமைச்சர், சமூகநீதியின் சரித்திர நாயகர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் கூற்றை ஏற்று தமிழர் தலைவர் கட்டளைகளை நிறைவேற்றிட இலட்சியப் பிடிப்போடு மேலும் அயராது உழைத்திட கழக இளைஞரணித் தோழர்கள் அனைவரும் உறுதி யேற்கிறோம். 

தீர்மானம் 3: 

நீட் மசோதாவை  குடியரசுத் தலைவருக்கு அனுப்புக

கிராமப்புற மாணவர்களைப் பெரிதும் பாதிக்கும், சமூகநீதிக்கு விரோதமான நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டு மாணவர்களுக்கு விலக்கு அளிக்கக் கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை காலம் தாழ்த்தாமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்புமாறு தமிழ்நாடு ஆளுநரை திராவிடர் கழக இளைஞரணி வற்புறுத்துகிறது.

தீர்மானம் 4: 

வடமாநிலத்தவரின் ஆதிக்கம் 

தமிழ்நாட்டில் இயங்கும் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் சட்ட விரோதமாக வட மாநிலத்தவர்கள் பணி நியமனம் செய்யப்படுவதை கண் கூடாகப் பார்க்க முடிகிறது.  இந்த நிலை தொடர்வதைத் தடுத்து நிறுத்திட தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் கழக இளைஞரணி, களத்தில் நின்று போராடி தமிழ்நாடு இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பது என தீர்மானிக்கப்படுகிறது. 

தீர்மானம்: 4 (அ)

மே 9 ஆம் தேதி நெய்வேலியில் ஆர்ப்பாட்டம்

அண்மையில் நடைபெற்ற - நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பொறியாளர் பணி நியமனங்களில் முற்றிலும் தமிழர்களைப் புறக்கணித்துவிட்டு, பிற மாநிலத்தவர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படும் வகையில் திட்டமிட்ட சதி அரங்கேற்றப்பட்டுள்ளது.  கேட் தேர்வுகள் குறித்த முறையான அறிவிப்பின்றி இந்தப் பணி நியமனங்களுக்கான அறிவிப்பு வழங்கப்பட்டிருப்பது விதி மீறல் என்பதை தமிழர் தலைவர் அவர்கள் தனது அறிக்கை மூலம் முன்பே சுட்டிக்காட்டியிருந்தார்கள்.  எனவே, என்.எல்.சி. நிர்வாகம் இந்தப் பணி நியமன அறிவிக்கையைத் திரும்பப் பெற்று, முறைப்படி மீண்டும் பொறியாளர் பணித் தேர்வுகளை நடத்திட வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி சார்பில் மே 9 ஆம் தேதி (திங்கள் கிழமை) அன்று நெய்வேலியில் ஆர்ப்பாட்டம் நடத்திடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது. 

 தீர்மானம் 5: 

'விடுதலை' ஆசிரியர் 60 -  'விடுதலை' சந்தா சேர்ப்பு 

உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான விடுதலையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்று 2022 ஆகஸ்ட் மாதம் 60 ஆம் ஆண்டை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொடுகிறார். உலக அளவில் எந்த ஒரு இதழுக்கும் 60 ஆண்டுகள் ஒருவர் தொடர்ந்து ஆசிரியராக இல்லாத நிலையில் உலக சாதனை படைத்துள்ள நமது தலைவர், விடுதலை ஆசிரியரின் அயராத பணியை ஊக்கப்படுத்திடவும், இனவுரிமை மீட்புக் களத்தில் 'போரிடும் வாளாகச்' செயல்படும் “விடுதலைக்கு” 60 ஆயிரம் சந்தா சேர்ப்பு இயக்கத்தில் கழக இளைஞரணிப் பொறுப்பாளர்கள், தோழர்கள், மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களோடு இணைந்து பணியாற்றி இலக்கை அடைய பாடுபடுவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 6: 

பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

மண்டலத்திற்கு ஓர் இடத்தில் சனி, ஞாயிறு ஆகிய இருநாள்கள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை நடத்துவது எனவும், பெருவாரியான இளைஞர்கள், மாணவர்களை ஒருங்கிணைத்து  பயிற்சிப் பட்டறையில் பங்கேற்கச் செய்து கொள்கைத் தெளிவுள்ள இளம்பேச்சாளர்கள் மற்றும் களப்பணியாளர்களைப் பெருமளவில் உருவாக்குவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 7: 

பெரியார் சமூகக் காப்பு அணி

பெரியார் சமூகக் காப்பு அணி பயிற்சி முகாம்களை பரவலாக முக்கியப் பகுதிகளில் நடத்துவது, எந்த நேரத்திலும் எதற்கும் தயாராகவுள்ள உடல் வலிவும், உள்ள உறுதியும் கொண்ட இளைஞர்களை மாவட்டத்திற்கு 15 நபர்கள் என்று தேர்வு செய்து, பெரியார் சமூகக் காப்பு அணி பயிற்சி முகாமில் பயிற்சி பெறச்செய்வது, பேரிடர் காலங்களில் மக்களுக்கு முன்னின்று உதவும் பணியாற்றுவது என தீர்மானிக்கப்படுகிறது.

இளைஞரணி தோழர்களுக்கு தற்காப்புக் கலைகளான சிலம்பம், கராத்தே பயிற்சிகளையும் இணைந்து நடத்துவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது. 

தீர்மானம் 8:  

தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் 
இளைஞரணி அமைப்பை பரவலாக்குதல் 

திராவிடர் கழக இளைஞரணி, மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்கள் தங்கள் பொறுப்புக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தி கிராமக்கிளை, ஒன்றிய அமைப்பு, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் வட்டக் கழக வாரியாக இளைஞரணி அமைப்புகளை உருவாக்குவது.  இவ்வமைப்புகளுக்கு  புதிய உறுப்பினர்களைச் சேர்த்து தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் கழக இளைஞரணி அமைப்பை பரவலாக வலுப்படுத்துவது என தீர்மானிக்கப்படுகிறது. 

தீர்மானம் 9:  

தெருமுனைக் கூட்டங்கள், கருத்தரங்குகள்

தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு மற்றும் பலமுனைகளில் அவ்வப்போது எழும் பிரச்சினைகளை தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் விடுதலை அறிக்கைகளை விளக்கியும் மற்றும் பகுத்தறிவுப் பிரச்சாரத் தெருமுனைக் கூட்டங்களை நடத்திடுவதை தொடர் பணியாக மேற்கொள்வது எனவும், முக்கியப் பிரச்சினைகளை முன்னிறுத்தி முக்கிய நகரங்களில் கருத்தரங்குகளை நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வையும், தெளிவையும் ஏற்படுத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 10:  

ஜூலை 16 இல் அரியலூரில் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு

24.11.2019 அன்று சென்னையில் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி மாநில கலந்துரையாடலில், 2020 மே 16 ஆம் தேதி அரியலூரில் கழக இளைஞரணி மாநாடு நடத்திட முடிவு செய்யப்பட்டு புயல் வேகத்தில் அனைத்துப் பணிகளும் தொடங்கப்பட்ட நிலையில் கரோனா பெருந்தொற்றின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. 

2022 ஜூலை மாதம் 16 ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று  அரியலூரில் திராவிடர் கழக இளைஞரணி  மாநில மாநாட்டை மாபெரும் திராவிட இளைஞர் எழுச்சிப் பேரணியுடன் நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 11:  

ஆகஸ்ட் மாதத்தில்  பெரியார் 1000 வினா - விடை

தந்தை பெரியாரின் கொள்கைகளை மாணவர்களிடையே செல்லும் வகையில் பெரியார் 1000 வினா - விடைப் போட்டியை ஆகஸ்ட் 19, 20, 21 ஆகிய நாள்களில் நடத்தி, அப்போட்டியில் பெருமளவில் மாணவர்களை பங்கேற்கச் செய்வது எனத் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 12:  

பெரியார் நகர்வுப் புத்தகச் சந்தை

தந்தை பெரியாரின் தத்துவங்களை தரணியெங்கும் பரப்பிடும் வகையில் மே மாதம் 7 ஆம் தேதி தொடங்கி, மே 30 ஆம் தேதிவரை பெரியார் நகர்வுப் புத்தகச் சந்தைகளை தமிழ்நாடு முழுவதும் நடத்துவது எனத் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 13:  

புதிய இளைஞர்களை சேர்ப்பது...

குற்றாலத்தில் ஜூன் மாதம் நடைபெறவுள்ள பெரியாரியல் பயிற்சி முகாமில் புதிய இளைஞர்களை பங்கேற்கச் செய்வது எனத் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 14:  

ஜூன் 4 இல் ஹிந்தி திணிப்பு 

எதிர்ப்பு கருத்தரங்க மாநாடு 

எதிர்வரும் ஜூன் 4 ஆம் தேதியன்று சென்னையில் ஹிந்தி திணிப்பு எதிர்ப்புக் கருத்தரங்கமும் - பொது மாநாடும் நடத்திட தீர்மானிக்கப்படுகிறது.

- இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


 

No comments:

Post a Comment