அன்னையார் அவர்கள் திராவிடர் கழகத் தலைவராகப் பொறுப்பேற்றது 1974 ஜனவரி 6ஆம் தேதி. “அய்யா விட்ட பணியை - அவர் போட்டுத்தந்த பாதையில் - எவ்வித சபலங்களுக்கும் ஆளாகாமல் செய்து முடிப்போம்!'' என்று ஒவ்வொரு கழகப் பொறுப்பாளரும் உறுதியெடுத்துக் கொண்டு, அய்யாவின் மறைவு என்ற பேரிழப்பினை, துயரத்தைத் துடைத்துக் கொண்டு பணி தொடங்கினோம்!
சில வாரங்கள் அன்னையார் சென் னையில் இருந்தபோது - திராவிடர் கழகத் தின் முன்னணிப் பேச்சாளர் ஒருவர், முதலமைச்சர் கலைஞர் அவர்களையும், மன்னை ப.நாராயணசாமி அவர்களையும் பார்த்து, “திராவிடர் கழகத்தில் வீரமணிக்கே ‘விடுதலை' ஆசிரியர் பொறுப்பு - பொதுச் செயலாளர் பொறுப்பு என எல்லாப் பதவிகளையும் தந்துவிட்டனர்; எனக்கு இதில் ஏதாவது ஒன்றை கழகத் தலைவர் அம்மாவிடம் நீங்கள் வந்து சொன்னால் அவர் தட்டாமல் கேட்பார்'' என்று முறையிட்டுக் கொண்டிருக்கக்கூடும் என்பதாலோ என்னவோ, திடீரென்று ஒரு நாள் முதலமைச்சர் கலைஞர், மன்னை, முரசொலி மாறன் எம்.பி., ஆகிய மூவரும் பெரியார் திடலுக்கு வந்து அம்மாவையும், என்னையும் சந்தித்தனர். அவர்களோடு குறிப்பிட்ட அந்தத் திராவிடர் கழகப் பேச்சாளர் - எழுத்தாளரும் உடன் வந்தார்.
அம்மாவுக்கும், எனக்கும் எதற்காக இவருடன் வந்துள்ளார்கள் என்று முதலில் புரியவில்லை. சில நிமிட நல விசாரிப்புக்குப்பின் திராவிடர் கழகப் பிரமுகர் விருப்ப வேண்டுகோளை மன்னை ப.நாராயணசாமி அவர்கள் துவக்கிப் பேசினார்; கலைஞரும், மாறனும் ஏதும் பேசாமல் அமர்ந்திருந்தனர். தலைவர் அம்மா அவர்கள் மிக அமைதியாக அவரவர்கள் கூறுவதைக் குறுக்கிட்டு ஏதும் கூறாமல் கேட்டுக் கொண்டிருந்தார்.
அவர் சொல்லி முடித்தவுடன் அருகில் அமர்ந்திருந்த நான் சட்டென்று எழுந்து “எனக்கொன்றும் இந்தப் பதவிகளை - பொறுப்புகளை வைத்திருக்க வேண்டும் என்ற நினைப்பில்லை. அன்னையாரும், நீங்களும் முடிவெடுத்துச் சொன்னால், இதில் ஒன்றையோ அல்லது இரண்டையுமோ கூட நான் மற்றவர்களுக்கு விட்டுவிட்டு ஒரு தொண்டனாகவே என் பணியை, எடுத்துக் கொண்ட உறுதி மொழிக்கேற்பத் தொடருவேன்” என்று ‘சட்'டென்று சொல்லி விட்டு உட்கார்ந்தேன்.
ஒரு சில மணித்துளிகள்தான் இடைவெளி - அம்மா கோபம் தெறித்த முகத்துடன் என்னைப் பார்த்துச் சொன்னார்.
“உனக்கு ஏன் இந்த அதிகப் பிரசங்கித் தனம்?
உன்னிடத்தில் ஒப்படைக்கப்பட்ட அந்த இரண்டு பொறுப்புகளையும் உனக்குக் கொடுத்தவர் யார்? அய்யா! (தந்தை பெரியார்).
அவர் பார்த்து செய்த அந்த ஏற்பாட்டை மாற்றிட எனக்கே உரிமையில்லை என்று எண்ணுபவள் நான். நீ இப்படிச் சொல்ல உனக்கு ஏது அதிகாரம்?
அய்யா செய்த ஏற்பாட்டை வேண்டாம் என்று அதுவும் இப்போது சொல்ல உனக்கு எந்த அதிகாரமும் இல்லை, சும்மா இரு!” என்று வேகமாக என்னைக் கடிந்து கொண்டார். நான் அந்த ‘இடியை' எதிர்பார்க்கவில்லை - அதிர்ந்தே போனேன்.
“நான் கூறியதில் தவறு என்றால் என்னை மன்னியுங்கள் அம்மா” என்று அவர்கள் அனைவர் முன்னிலையிலும் கூறி சோகத்துடனும், அதிர்ச்சியுடனும் அமர்ந்து விட்டேன்.
அப்போது என்னுடைய 'முதிர்ச்சி' அவ்வளவுதான்.
அந்த இரண்டு பொறுப்புகளில் என்னை அமர்த்தியவர் அய்யா என்று அம்மா சொன்னது வந்தவர்களுக்கும் உரிய பதிலாக அமைந்துவிட்டதால் வந்த மூவரும் வேறு ஏதும் பேசாமல், அம்மா தந்த காப்பியை அருந்தி விட்டு, சென்றுவிட்டார்கள்.
அவர்கள் போன பிறகும் அம்மாவிடமிருந்து எனக்கு சரியான “டோஸ்” கிடைத்தது.
ஏதும் பேசாமல் அதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். ஒரு அமைப்பில், இயக்கத்தில், பதவிகளோ, பொறுப்புகளோ நம்மைத் தேடி வருவதுதான் நிலைக்கும் - நாம் தேடி அலைந்து பெற்றால் அது முறையுமாகாது; நிலைக்கவும் நிலைக்காது!
சபலங்கள் ஏற்பட்டால் தான் மனிதர்கள் “சலிப்பு” ஆவார்கள்!
அம்மாவிடம் பிறகு பேசி, “மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரக் குழுத் தலைவர்” என்ற ஒரு பொறுப்பினை அளித்து அவரைப் பயன்படுத்தலாம் என்று சில நாள்களுக்குப் பிறகு நான் வாதாடியதை அரை மனதுடன் அன்னையார் ஏற்றார்.
பிறகு அதனையும்கூட அந்த நண்பர் சரிவர செய்த வாய்ப்போ, வரலாறோ அமையவில்லை!
அம்மா எப்படிப்பட்ட தாட்சண்யம் பாராதத் தலைவர் என்பது புரிகிறதல்லவா?

No comments:
Post a Comment