தேர்வு எழுதிடத் தடையா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 30, 2022

தேர்வு எழுதிடத் தடையா?

 கருநாடகத்தில் நேற்று முதல் நாள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது. ஹிஜாப் விவகாரத்தாலும், அசம்பாவித நிகழ்வுகளை தடுக்கும் வகையிலும் தேர்வுகள் நடந்த கல்வி நிறுவனங்களை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. மேலும் பலத்த காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. தேர்வு எழுத வந்த முஸ்லிம் மாணவிகள் வீடுகளில் இருந்து ஹிஜாப் அணிந்து வந்தனர். ஆனால் தேர்வு மய்யங்களுக்குள் ஹிஜாப்பை அணிந்து செல்லவில்லை. மேலும் ஒரு சில பகுதிகளில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு தேர்வு அறைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

28.3.2022 அன்று நடந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுத 8 லட்சத்து 48 ஆயிரத்து 405 மாணவ-மாணவிகள் தேர்வுக்கு ஆஜராகினர். ஆனால் 20 ஆயிரத்து 994 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. ஹிஜாப் தடை காரணமாக முஸ்லிம் மாணவிகள் பலர் தேர்வுக்கு ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. முஸ்லிம் மாணவிகள் எத்தனை பேர் தேர்வு எழுதவில்லை என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை. இருந்தும் சுமார் 21 ஆயிரம் பேர் தேர்வை புறக்கணித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் உள்ள கே.எஸ்.டி.வி. உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியை நூர் பாத்திமா எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுக்கு பார்வையாளராக நியமிக்கப் பட்டிருந்தார். அவர் தேர்வுஅறையில் ஹிஜாப் அணிந்திருந்ததை அறிந்த கல்வித் துறை அதிகாரி ஹிஜாபை அகற்றிவிட்டு பணியில் ஈடுபடுமாறு வலியுறுத்தினார்.

அதனை ஏற்க மறுத்த நூர் பாத்திமா, ‘‘கருநாடக கல்வித் துறை மாணவிகளுக்கு மட்டுமே ஹிஜாப் அணிய கூடாது என உத்தரவிட்டுள்ளது. எனது ஹிஜாபை அகற்ற முடியாது’’ என வாதிட்டார். இதனால் நூர் பாத்திமா தேர்வு அறையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.  அடுத்த ஒரு மணி நேரத்தில், அவர் ஹிஜாப் அணிந்ததற்காக பணி இடை நீக்கம் செய்வதாக கல்வித்துறை ஆணை பிறப்பித்தது. இந்த நிகழ்வுக்கு முஸ்லிம் அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தச் செய்தியைக் கேட்டு உலக மக்கள் வாயால் சிரிக்க மாட்டார்கள். தேர்வு எழுதுவது வரை மதம் தன் மூக்கை நுழைக்கிறது என்றால் இந்த வெட்கக் கேட்டை என்னவென்று சொல்லுவது!

முஸ்லிம் பெண்கள், ஏதோ இப்பொழுதுதான் ஹிஜாப் அணிந்து வருகிறார்களா?

இதற்கு முன் அணிந்து வரவில்லையா? கடந்தாண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஹிஜாப் அணிந்து முஸ்லீம் பெண்கள் தேர்வு எழுதிடவில்லையா?

பிஜேபியை எடுத்துக் கொண்டாலும் இதற்கு முன்பும் கருநாடக மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்ததுண்டே! அப்பொழுதெல்லாம் இந்த ஹிஜாப் பிரச்சினை எழவில்லையே.

இந்தியத் துணைக் கண்டத்தில் பல மாநிலங்களில் பிஜேபி ஆள்கிறது. அங்கெல்லாம் இந்த உடைப் பிரச்சினை உண்டா?

கருநாடக மாநில உயர்நீதிமன்றமும், இதற்குத் துணை போவதுதான் அதிர்ச்சி அளிக்கிறது.

இந்தியா மதச் சார்பற்ற நாடுதான். ஒன்றிய அரசிலும் சரி, மாநிலங்களிலும் சரி தலைமை அமைச்சர்கள் முதற்கொண்டு அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள மதச் சார்பின்மையை எந்த அளவுக்குக் கடைப்பிடிக்கிறார்கள்?

உத்தரப்பிரதேச முதல் அமைச்சர் யோகி ஆதித்ய நாத் எப்பொழுதும் காவி உடை அணிந்து கொண்டு இருக்கிறாரே - காவி என்ன மதச் சார்பின்மைக்கானஅக்மார்க்முத்திரை அடையாளமா?

நம் நாட்டில் கல்வி வளர்ச்சி நடை போடவேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது. அதிலும் முஸ்லிம் சமூகத்தில் கல்வி வளர்ச்சி தேக்க நிலையில்தான் உள்ளது.

அதிலும் முஸ்லிம் பெண்களின் கல்வி நிலையைக் கேட்கவே வேண்டாம். எதில் தான் விளையாடுவது என்பதில் அளவேயில்லையா?

மதக் காரணத்தைக் காட்டி, அவர்கள் அணியும் ஆடையையும் முன்னிறுத்தி, கல்விக் கூடங்களுக்கு வரக் கூடாது, தேர்வுகூட எழுதக்கூடாது என்பது சகித்துக் கொள்ளவே முடியாத பிரச்சினை. இதற்கொரு முடிவு எட்டப்பட்டாக வேண்டும்.

உடை மாற்றம் என்பது உலகெங்கும் நடந்து கொண்டு வரக்கூடிய ஒன்றுதான். அது முஸ்லீம்களில்கூட நடந்து கொண்டுதான் உள்ளது. மாற்றம் என்பதுதான் மாறாதது. ஏதோ பிஜேபிகாரர்களுக்குப் புரட்சிகர சிந்தனை முட்டி மோதி வெடித்துக் கொண்டு கிளம்பியது போல இந்தப் பிரச்சினையில் நடிக்கிறார்கள்.

உண்மையைச் சொல்லப்போனால் அவர்கள் எதையாவது காரணம் காட்டி முஸ்லீம்களைச் சீண்ட வேண்டும்.

நடந்து முடிந்த .பி. சட்டப் பேரவைத் தேர்தலில் .பி. முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் என்ன கூறினார்? 80க்கும் 20க்கும் இடையே நடைபெறும் தேர்தல் என்று சொல்லவில்லையா?

இதன் பொருள் என்ன? 80 விழுக்காடு இந்துக்களுக்கும், 20 விழுக்காடு முஸ்லிம்களுக்கும் இடையே நடைபெறும் தேர்தல் என்றால், இதன் பொருள் என்ன?

மதச்சார்பற்ற நாடு என்று அரசமைப்புச் சட்டத்தால் அறிவிக்கப்பட்ட ஒரு நாட்டில் ஒரு முதல் அமைச்சர் இந்தப் புத்தியோடு இருக்கிறார் என்றால், இது அனுமதிக்கத்தக்கதுதானா?

தேர்வு நடைபெற இருப்பது தெரியும் என்ற நிலையில், தன்முன் இருக்கக்கூடிய ஹிஜாப் தொடர்பான வழக்கினை விசாரிக்க உச்சநீதிமன்றம் முன்னுரிமை கொடுத்திருகக் வேண்டாமா?

இது கல்விப் பிரச்சினை அல்லவா! ஒரு மாணவியின் எதிர்காலப் பிரச்சினையும் தாண்டி நாட்டின் எதிர்காலப் பிரச்சினை. அவர்களும் இந்நாட்டு குடிமக்கள்தானே!

உடலில் ஒரு பாகம் ஊனமுற்று இருந்தாலும் அது பாதிப்புதானே! பிஜேபியின் கொள்கையை மனதில் கொண்டுதான் இந்தப் பிரச்சினையை பார்க்க வேண்டும், அப்பொழுதுதான் இந்தப் பொந்தில் பதுங்கி இருக்கும் நச்சுப் பாம்பு எத்தனை கடும் விஷம் கொண்டது என்பது விளங்கும்.

இது ஏதோ ஒரு மதத் தொடர்பான பிரச்சினையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. கட்சிகளைக் கடந்து குடிமக்களின் பிரச்சினை என்ற கண்ணோட்டத்தில் அணுகப்படவேண்டும்.

குளிர் சாதனப் பெட்டியில் இருப்பது மாட்டுக் கறியா என்று மூக்கை நீட்டி வாசனை பிடித்துக் கொலை செய்யும் ஆபத்தானவர்கள் மத்தியில் நாம் வாழ்கிறோம் என்பதை நினைத்தால் வெட்கித் தலைக்குனியத்தான் வேண்டும்.

No comments:

Post a Comment