நூல் வெளியீட்டு விழா அல்ல நூல்களின் ஆதிக்கத்தை வேரறுக்கும் விழா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 26, 2022

நூல் வெளியீட்டு விழா அல்ல நூல்களின் ஆதிக்கத்தை வேரறுக்கும் விழா!

கவிஞர் கலி. பூங்குன்றன்

சென்னை அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கில் நேற்று (25.2.2022) மாலை நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி வெறும் விழா அல்ல! வீழ்ந்து கிடந்த ஓர் இனத்தை வீழாது தன் தோளால் நிமிர்த்திய - தொண்டு செய்து பழுத்த ஒரு கனியின் கர்ச்சனைப் பெரு விழா!

அந்தத் கொள்கைக் கிழம் மறைந்து 49 ஆண்டுகள் ஓடி மறைந்து விட்டன.

ஆனால் அதுதான் இந்த இனத்தை - நாட்டை இன்றளவும்  - ஏன் நாளையும் இயங்கச் செய்யும் அணு மின்சாரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது.

மானமிகு தோழர் . திருமாவேலன் அவர்களால் 15  ஆண்டுகளுக்கு மேல் உழைத்து உருவாக்கிய ஒரு நூல் தான் "இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்" என்ற அரிய பெட்டகமாகும்.  விழாவில் பங்கேற்று நூலினைப் பெற்றுக் கொண்ட தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் மிகச் சரியாகக் குறிப்பிட்டதுபோல நூலாசிரியர் ஒரு திராவிடக் களஞ்சியமே!

இது வெறும் நூல் அல்ல; வரலாற்றுக் காலமாக

வாழ்ந்த இனத்தை வஞ்சனையால் வீழ்த்தி தங்களை வளப்படுத்திக் கொண்ட ஒரு கூட்டத்தின் நூலை மிச்ச சொச்சம் இல்லாமல் நறுக்கும் போர்வாள்!

இதனை உருவாக்க தோழர் திருமாவேலன் எத்தகைய உழைப்புக் குருதியைச் சிந்தி இருப்பார்; பெரியார் திடல் நூலகம் - ஆய்வகத்தின் ஒரு பகுதியில் அமர்ந்து பக்கத்தில் வருபவர் யார் என்பது கூடத் தெரியாமல் அவர்தம் கண்கள் எல்லாம் நூலில் மொய்த்துக் கிடந்தன - கருத்துக்கள் எல்லாம் அவற்றில் பொதிந்து கிடந்தன. "கண்ணும் கருத்தும்" என்பது இதுதானோ!

பல நாள்கள், அவர் பணிக்கு இடையூறு வந்து விடக் கூடாது என்பதற்காக, நூலகத்தில் நாங்கள் செல்லும் போதெல்லாம் பார்த்தும் பார்க்காததுமாக நழுவி விடுவதுண்டு.

தோழர் திருமா நேற்று பெய்த மழையில் முளைத்த வெற்றுச் செடியல்ல.

சென்னை சட்டக் கல்லூரியில் படித்த காலந் தொட்டே (1988-1993) பெரியார் திடலில் தன் கருத்தைப் பதித்த மாணவத் தோழர். அதனைத் தான் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தோழர் திருமாவேலன் பெரியார் திடலின் விளைச்சல் என்று இரத்தினச் சுருக்கமாகச் சொன்னார். அந்தக் கால கட்டத்தில் உருவான திராவிட மாணவர் கழகத்தினைச் சேர்ந்தவர்கள் சிலர் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக ஆகி இருக்கின்றனர்.

தோழர் திருமாவேலன் படித்த துறையை மறந்து, படிக்கும் துறையில் பரிணமித்தார். பத்திரிகைத் துறை யில் மல்லிகைத் தோட்டமாக மணப்பது கண்டு தாய் உள்ளத்தோடு தமிழர் தலைவர் பூரித்தது இயல்பே!

தோழர் திருமாவின் தந்தையார் புலவர் படிக்கராமு அவர்கள் சொன்ன கருத்து கவனிக்கத்தக்கது.

"இந்தத் தலைப்பில் இப்படியொரு நூல் வந்தி ருக்கவே கூடாது!" என்று தனது ஆதங்கத்தை வெளிப் படுத்தினார்.

வரலாற்றில் எளிதில் கிடைக்காத - அரிதில் கிடைத்த ஒரு தலைவனின் கைகளைப் பற்றிக் கொண்டு மேலே ஏறாமல் கால்களை இழுக்கும் தமிழர்களை என்ன சொல்ல என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். திராவிட இயக்கத்தின் பாதையில் மண்டிடும் காடுகளை, மலைப் பாம்புகளைக் கண்டு பல கட்டங்களிலும் பதறிய நெஞ்சங்களுக்கு இத்தகு ஆறாத் துயரம் நெஞ்சை அடைப்பது இயல்பே!

தந்தை பெரியாரைப் பற்றிப் பேசிப் பேசியே, புகழ்ந்து புகழ்ந்தே - அதனையே முதலீடாக மூலதன மாகக் கொண்ட துகள் எதிரிகளின் கால்களுக்கு முத்தமிடுவது தான்பரிதாபம்!

இன்று எனக்குள்ள குறையெல்லாம் தமிழர் சமுதாயத்தில் "விபீஷணப் பரம்பரை" வளர்ந்து வருவதுதான்" என்றார் தந்தை பெரியார் ('விடுதலை' மலர் 17.9.1969)

கால்களைச் சுற்றிய பாம்புகளையும் கால் தூசாகக் கருதி, விஷங்களையும் முறித்துக் கொண்டு முதுபெரும் வயதிலும் மூத்திரச் சட்டியைத் தூக்கிக் கொண்டு, ஊர் ஊராக அலைந்து, மக்கள் மத்தியில் கருத்து மழை கொட்டி நம் மக்களை விளைய வைத்த காரணத்தால்தான் அவர் மறைந்து 49 ஆண்டுகள் ஆன நிலையிலும் இத்தகு நூல்களை எழுதும் எழுத்து ஆணிகள் புறப்பட்டுள்ளன.

இன்றைக்கு மக்கள் மத்தியிலும் - குறிப்பாக இளைஞர்கள் மத்தியிலும் அதிகம் புழங்கும், விற்பனை யாகும் நூல்கள் தந்தை பெரியாரைப் பற்றியவைதான். நன்னம்பிக்கை என்னும் ஒளி நம் உணர்வின் அங்கங் களில் எல்லாம் வீசுகிறது - வீசுகிறது.

நூலைப்பற்றி விமர்சன உரை நிகழ்த்திய திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர்  கருப்புச் சட்டைத் தமிழர் பேராசிரியர் மானமிகு சுப. வீரபாண்டியன் அவர்கள் அவருக்கே உரித்தான முறையில் "பெரியார் சிலையைக் கண்டே எதிரிகளும், துரோகிகளும் அஞ்சுகிறார்களே - நடுங்குகிறார்களே?" என்று நச்சென்று சொன்னார்.

1600 பக்கங்களில் இரு தொகுதிகளாக எழுத வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பிய பேரா சிரியர் சுப.வீ. அவர்கள் - எதிர் காலத்திற்கு இது மிக மிகத் தேவையானது என்றாரே - அது

நூறு விழுக்காடு மதிப்புப் பெறும் வார்த்தைகள்.

முகநூல் பித்தர்களின் (எல்லோரையும் குறிப்பிட முடியாது) மூளையைச் சலவை செய்யும் சரித்திர சவுக்காரமாகும்.

தமிழை மறைத்ததாம் திராவிடம் - எவ்வளவு அறியாமையும், கூலி பெறும் கீழ்த்தன்மையும் இருந்தால் இப்படி எல்லாம் நாக்குச் சுளுக்கு எடுத்துக் குளறுவார்கள் - உளறுவார்கள்.

அக்ராசனர் தலைவர் ஆனது எப்போது? உபந்நியாசம் சொற்பொழிவானது எப்போது?

வந்தனோபசாரம் நன்றியானது எந்தக் கால கட்டத் தில், எந்த இயக்கத்தால்? நன்றியோடு நினைத்துப் பார்க்க என்ன தடை?

நமஸ்காரம் வணக்கம் ஆனது எப்போது? வணக்கம் சொல்லும் பொழுதெல்லாம் சுள்ளென்று உறைக்க வேண்டுமே!

சென்னை மாநிலம் "தமிழ்நாடு" ஆனது யாரால், எந்த இயக்கத்தால்? தமிழை நீஷப் பாஷை என்பவர்கள் பற்றி, பூஜை வேளையில் பெரியவா(ல்) நீஷப் பாஷையில் பேச மாட்டார் என்பதுபற்றி வாய்த் திறக்காத வட்டிக்குப் போனவர்கள் தந்தை பெரியார் தமிழை வளர்த்தாரா என்று கேட்க யோக்கியதை உண்டா?

தமிழ் விஞ்ஞான மொழியாக்கப்பட வேண்டும் - மதத்திலிருந்து விடுபட வேண்டும் என்று தந்தை பெரியார் கூறியது, வலியுறுத்தியது குற்றமா?

புராணக் குப்பைகளில் புரண்டு கிடப்போர் சிந்திக்கட்டும்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் முதல் அமைச்சரிடமிருந்து நூலினைப் பெற்றுக் கொண்டு இன்றைய நிலையோடு  பொருத்திப் பேசினார் (முழு உரை 8ஆம் பக்கம் காண்க).

1967ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த அறிஞர் அண்ணாவிடம் செய்தியாளர்கள் ஒரு கேள்வியை எழுப்பினர். தேர்தலில் ஈடுபடத் தீர்மானித்த பத்து ஆண்டுகளில் ஆட்சிப் பீடம் ஏறி விட்டீர்களே என்று கேட்டபோது, முதல் அமைச்சர் அண்ணா சொன்னார்.

"நீங்கள் கூறுவது சரியல்ல;  நாங்கள் நீதிக்கட்சியின் பேரன்கள் - 1916இல் தோற்றுவிக்கப்பட்ட நீதிக் கட்சியின் வழிவழி வந்தவர்கள்" என்று பளிச்சென்று சொன்னதுண்டு.

அதையேதான் சமூகநீதியின் சரித்திர நாயகராம் நமது முதல் அமைச்சர் அவர்கள் நாங்கள் திராவிடர்கள் - எங்கள் கொள்கை "திராவிட மாடல்" என்றார்.

தமிழகக் கோயில்களில் தமிழன் அர்ச்சகன், தமிழ் வழிபாட்டு மொழி என்ற உரிமை நிலைநாட்டப்பட்டது திராவிட இயக்கத்தால் அல்லவா என்று பிடரியில் அடித்தது போல் கருத்தைப் பதித்தார் தமிழர் தலைவர். 'ஸ்ரீ' 'திரு' ஆனது எந்த ஆட்சிக் காலத்தில்?

இன்றைக்கு மருத்துவக் கல்வி முதுநிலைப் படிப்பில் இந்தியா முழுவதும் பிற்படுத்தப்பட்ட சமூ கத்தைச் சேர்ந்த 2544 பேர்களுக்கு இடம் கிடைத்தது - திராவிட ஆட்சியான - சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தளபதி மு..ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில்தானே - முயற்சியால் தானே!

நம் இனத்தின் வாளாக, கேடயமாக, வேலாக - திரிசூலமாக இருப்பவர் நமது முதல்  அமைச்சர் என்றார் திராவிடர் கழகத் தலைவர்.

விழாவுக்குத் தலைமையேற்ற திமுக தலைவரும், முதல் அமைச்சருமான தளபதி மு.. ஸ்டாலின் அவர்கள் நூலாசிரியரைப் பற்றிக் குறிப்பிடும்போது "ஒரு பல்கலைக் கழகம் செய்ய வேண்டிய பணியை நமது திருமாவேலன் செய்திருக்கிறார்" என்று பாராட்டினார்.

"தந்தை பெரியார் தம் பொது வாழ்வில் சந்திக்காத எதிர்ப்புகளா? அவமானங்களா? அவற்றை எல்லாம் துச்சமாக மதித்துத் தூக்கியடித்து நம்மைத் தூக்கி நிறுத்தினார்" என்றார் முதல் அமைச்சர்.

"செருப்பைவீசினர்; கல்லை வீசினர்; சாணியை வீசினர்; ஏன், மனித மலத்தைக்கூட வீசினார்கள். அதற்கெல்லாம் அஞ்சக் கூடியவரா பகுத்தறிவுப் பகலவன்! அவர் பயணம் தொடர்ந்து கொண்டே இருந்தது.

கடலூரில் தந்தை பெரியார் மீது செருப்பு வீசிய இடத்தில் இப்பொழுது பெரியார் சிலை கம்பீரமாக நிற்கிறது. முத்தமிழ் அறிஞர் கலைஞர்தான் திறந்து வைத்தார். செருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும் என்று பாடினார் கவிஞர் கருணானந்தம். (பாம்பு வீசிய இடத்தில் தந்தை பெரியாருக்கு ரூ.10 ஆயிரம் அளிக்கப்பட்டது அதே நிகழ்ச்சியில்)

"திராவிட மரபினத்தைச் சேர்ந்தவன்' என்று நான் சொல்வதைப் பார்த்தவர்களுக்கு எல்லாம் கோபம் வருகிறது. ஏனென்றால், வெற்றி பெற்றவன் சொல்கிறானே என்பதால்தான். ஒரு காலத்தில் தோற்று ஓடியவர்களைத் திராவிடர்கள் என்றோமே, இன்று வெற்றி பெற்று நிற்கிறார்களே என்பதுதான் அவர்களது கோபத்துக்கு முக்கியமான காரணம்.

கல்வி மறுக்கப்பட்ட இனத்துக்கு கல்வி கொடுத் ததும், பொருளாதார உரிமை பறிக்கப்பட்ட இனம் அனைத்துத் துறைகளிலும் மேன்மை அடைவதும், சமூகரீதியாக ஒடுக்கப்பட்ட மனிதர்கள் உயர்ந்து நிற்பதும்தான், தமிழ்ச் சமுதாயத்துக்கு கடந்த 100 ஆண்டுகளில் திராவிட இயக்கம் வழங்கியிருக்கக்கூடிய மாபெரும் கொடையாகும். திராவிட இயக்கத்தின் சமூகநீதிக் கொள்கையை, மாநில சுயாட்சி உரிமையை இன்று அகில இந்தியாவும் எதிரொலிக்க தொடங்கியிருக்கும் காலத்தில், தமிழ்நாட்டில் சிலர் திராவிட இயக்கத்தை வீழ்த்துவோம் என்று பிதற்றுவதைப் புறந்தள்ளத்தான் வேண்டும்.

இது பெரியார் மண்!’ என்பதை நம்முடைய இனத்தை அழிக்கக்கூடிய அரசியல் எதிரிகளுக்கு திரும்பத் திரும்ப நினைவூட்டும் வகையில் நாம் செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

திராவிட இயக்கத்தை வீழ்த்த முடியாது என்பதாலும், பெரியாரின் பெரும்பணியை மறைக்க முடியாது என்பதாலும், நம் மீது அவதூறு சேற்றை வாரி இறைப்பதே எதிரிகளுக்கும், அவர்களின் கைக்கூலிகளுக்கும் முழுநேர வேலையாக இருக்கிறது. அவதூறுச் சேற்றை ஆதாரங்கள் என்னும் தண்ணீர்ப் பாய்ச்சி மொத்தமாக துடைத்தெறிந்திருக்கின்ற நூல்தான் நம்முடைய திருமாவேலன் அயராது உழைத்து உருவாக்கியுள்ள இந்த நூல் என்பதை மீண்டும் மீண்டும் நான் வலியுறுத்துகிறேன்.

தமிழின் ஆட்சியாக, தமிழ் இனத்தின் ஆட்சியாக தி.மு.. ஆட்சி இருப்பதை பார்த்து பலருக்கும் வயிற்றெரிச்சலாக இருக்கிறது. எதையாவது சொல்லி நம்மை திசை திருப்புவார்கள். அர்த்தம் இல்லாத அவதூறுகளை அள்ளி வீசுவார்கள். அவை அனைத் தையும் தடுக்கின்ற கேடயத்தைத்தான் திருமாவேலன் தயாரித்திருக்கிறார். அதற்கான போர்வாளைத்தான் அவர் உருவாக்கியிருக்கிறார். அவர் தயாரித்துக் கொடுத்துள்ள இந்த அறிவாயுதத்தை அறிமுகம் செய்வதில் நான் அளவுகடந்த மகிழ்ச்சி அடைகிறேன், பெருமைப்படுகிறேன்.

"பெரியார், தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர் என்று நூலாசிரியர் திருமாவேலன் எழுப்பியுள்ள அந்தக் கேள்வியை நானும் கேட்கிறேன், நான் அல்ல, நீங்களும் கேட்கவேண்டும். திராவிட இயக்கம்தான் தமிழர்களின் மகத்தான இயக்கம். இது தமிழர் இயக்கம் இல்லை என்றால் வேறு எது தமிழர் இயக்கம் என்று நான் கேட்க விரும்புகிறேன்." என்றார் முதல் அமைச்சர்

ஆம். பெரியார் இல்லை என்றால் தமிழர் இல்லை - நமது இயக்கம் இல்லை என்பதுதான் உண்மை.

ஒரு முறை இனமானப் பேராசிரியர் . அன்பழகன் அவர்கள் சென்னை பாவாணர் நூலகக் கட்டடத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கூறினார். "தந்தை பெரியார் இல்லையென்றால் அண்ணா இல்லை, கலைஞர் இல்லை, நானும் இல்லை" என்றார்.

இன்னொன்றையும் சொன்னார் - பெரியார் திடலில் நடைபெற்ற நீதிக்கட்சியைப் போற்றும் விழாவில் சொன்னார், 'தமிழன் என்றால் தமிழ் உணர்வு மட்டும் இருக்கும். திராவிடன் என்றால் ரோஷமும் கூட இருக்கும்" என்றார்.

ஆம். திராவிடன் என்பதற்கு எதிர்நிலை ஆரியம் - இப்பொழுதோ சிலர் தமிழ்த் தேசியம் என்று கூறி, தமிழர்களுக்கு எதிரி திராவிடர் என்கின்றனர்.

சூட்சமம் புரிகிறதா?

எதிரிகள் யார்? நண்பர்கள் யார்? என்பதை உணர்வீர்!

No comments:

Post a Comment