மதம் பிடிப்பது ஆபத்தே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 26, 2022

மதம் பிடிப்பது ஆபத்தே!

தமிழ்நாட்டில் லாவண்யா என்ற மாணவி தற்கொலை, தட்சண கருநாடகாவில் ஹிஜாப் பிரச்சினை, அதன் தொடர்ச்சியாக ஷிமோகாவில் பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கொலை.  சமீபத்தில் நடந்த இந்த மூன்று விவகாரங்களுமே பாஜகவை தென் இந்தியாவில் வளர்க்கும் முயற்சியாக பாஜக முன்னெடுத்தவை.

பா.ஜ.க. இவை போன்ற பிரச்சினைகளை முன்வைத்தே எதிர் வரும் கருநாடகா சட்டமன்றத்  தேர்தல் மற்றும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலைச் சந்திக்கத் திட்டம்! தமிழ்நாட்டில் தஞ்சையைச் சேர்ந்த லாவண்யா என்ற மாணவி தற்கொலை விவகாரத்தை மிகவும் திட்டமிட்டு மதப்பிரச்சினையாக மாற்றி, சிபிஅய் விசாரணைவரை கொண்டு சென்று பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் தமிழ்நாட்டில் பாஜகவின் மதவாத நச்சுப் பரவலை மக்கள் நிராகரித்துவிட்டனர். 

 இருப்பினும் முதலமைச்சரின் வீடு முற்றுகை, டில்லி தமிழ் நாடு அரசு மாளிகைப் போராட்டம், அய்தராபாத் பல்கலைக் கழகத்தில் கையெழுத்துப் போராட்டம் என்று அணையாமல் பார்த்துக் கொண்டு இருக்கிறது. 

அதே போல் தட்சண கருநாடகாவில் உள்ள நகரங்களுள் ஒன்றான உடுப்பியில் உள்ள அரசு கல்லூரியில் தொடங்கியது ஹிஜாப் தடை விவகாரம். இந்த தடைக்கு எதிராக முதலில் அந்தக் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் போராடினர். அதனைத் தொடர்ந்து ஹிஜாப் தடை மெல்ல மெல்ல பிற கல்லூரிகளுக்கும் பரவியது. மாணவிகள் போராட்டமும் பேருரு எடுத்தது.

இந்த நிலையில்தான் காவித் துண்டுடன் இந்துத்துவா மாணவர்கள் போராட்டத்தில் குதித்து, இதற்கு வேறு மாதிரி யான சாயம் பூச ஆரம்பித்தனர். இந்துக்கள் மற்றும் முஸ் லீம்கள் என்ற போராட்டக்களமாக இது மாறியது. எதிர்பார்த்தது போலவே இந்த விவகாரம் மதப் பிரச்சினையை கிளறி விட ஆரம்பித்தது. இந்த நிலையில் கருநாடக உயர்நீதிமன்றமும் இந்த விவகாரத்தில் விசாரணையை நடத்திக் கொண்டே இருக்கிறது, 

இந்த  விவகாரங்களால் கலவரமோ அல்லது மக்கள் அச்சமடையும் நிகழ்வுகளோ நடக்காமல் போனது.  இதனை அடுத்து ஷிமோகாவில்  பஜ்ரங் தளம் தொண்டர் ஹர்ஷா படுகொலை செய்யப்பட்டார். 

இந்த விவகாரத்தால் இந்து அமைப்புகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தத் திட்டம்! இதை மிகப் பெரிய  பிரச் சினையாக அவர்கள் கருதினர். கருநாடக அமைச்சர் எந்த ஒரு விசாரணையும் இல்லாமல் நேரடியாக இந்த விவகாரத்தில் முஸ்லீம் அமைப்புகள்தான் உள்ளன என்று கூறினார்.

மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியில் உள்ளது. ஷிமோகாவில் இந்துத்வா சக்திகளுக்கு பலம் அதிகம். அப்படி இருக்கும்போது பஜ்ரங் தளம் தொண்டர் கொலை செய்யப்பட்டது. அவர்களைக் கொதிக்க வைத்து விட்டது. பா.ஜ.க. அரசு தனது கடமையிலிருந்து தவறி விட்டதாக இந்து அமைப்புகள் குற்றம் சாட்டின. இஸ்லாமியர்களுக்கு எதிராக மூத்த தலைவர்கள் பலரும் குரல் கொடுக்க விவகாரம் வேறு மாதிரியாக திரும்பியது. 

ஷிமோகாவில் கலவரம் ஏற்பட்டு இஸ்லாமியர்களின் உடைமைகள் தாக்கப்பட்டன. பலர் கொல்லப்பட்டனர் என்று சமூகவலைதளத்தில் எழுதப்பட்டது. ஆனால் அந்தச் செய்தி களையும் வன்முறைக்காட்சிகள் அடங்கிய காணொலிகளையும் டிவிட்டர் நிறுவனம் நீக்கிவிட்டது, ஆகையால் அங்கு என்ன நடக்கிறது என்று உலகத்திற்குத் தெரியாமல் போனது.

 இந்த நிகழ்வுகள் சமூக வலைதளங்களிலிருந்து இன்னும் சில நாட்களில் காணாமல் போய் விடும். ஆனால் இந்த  நிகழ்வுகளை வைத்துத்தான் இந்து வாக்குகளை வலுவாக்கும் பணியைப் பா.ஜ.க. உள்ளிட்ட இந்துத்வா சக்திகள் செய்யத் துவங்கி உள்ளன. 

இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தடுக்கவும், தவிர்க்கவும் இந்துக்கள் ஒருங்கிணைய வேண்டும் என்ப தையே அவர்களின் மூல மந்திரமாக வைத்து  செயல்படப் போகிறார்கள்.

கல்லூரி மாணவர்களை தம் பக்கம் இழுக்கும் நோக்கில் மாணவர்களுக்குக் காவித் துண்டை கையில் கொடுத்தது எல்லாம்  இந்துத்வா அமைப்புகளின்   திட்டமிட்ட வேலையே! 

தேர்தல் குறித்தோ, அரசியல் குறித்தோ எந்தக் கருத்தையும் கொண்டிராத மாணவர்களையும் கூட இந்த ஹிஜாப் விவகாரத்தில் தம் பக்கம் இழுத்துள்ளனர். இந்து மாணவர்கள் என்றால் அவர்கள் பா.ஜ.க. பக்கம் அணி திரள வேண்டும் என்ற அழுத்தத்தை பா.ஜ.க. உருவாக்கியுள்ளது. 

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தனது  'ஷாகா'க் களை இந்துத்துவ ஆதரவு பள்ளிகளோடு இணைந்து கிராமப் புறங்களில்  நடத்தி வருகிறது. அதே போல் வேலைக்குச் செல்லும் இளைஞர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களை சென்றடைவதற்காக, இரவு 9.30 மணிக்கு தொடங்கும் இரவு 'ஷாகா'வையும் ஆர்.எஸ்.எஸ். தொடங்கியுள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.

தமிழ்நாடு அரசின் உளவுத் துறைக்கு இவை எல்லாம் தெரியாமல் போகாது - இதனை வளரவிடுவது நல்லதல்ல! எச்சரிக்கை! எச்சரிக்கை!!


No comments:

Post a Comment