ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 26, 2022

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி:  பள்ளிகள் திறந்தபின் பழைய குருகுலத்தை ஒத்தஇல்லம் தேடி கல்வித் திட்டம்தேவையா? நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா?

- திராவிட விஷ்ணு, வீராக்கன்

பதில்: உங்கள் கேள்வியை பள்ளிக் கல்வித்துறையினருக்கே சமர்ப்பிக்கிறோம், நியாயமான சந்தேகம். பதில் அளிக்க வேண்டியது அவர்களே.

கேள்வி:  ஆளுநரை பதவி நீக்கம் செய்ய மாநில சட்டமன்றத்திற்கு அதிகாரம் வேண்டும் என்று கேரள அரசு முன்மொழிந்துள்ளதே - அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை இதை ஏற்குமா?

- .தமிழ்க்குமரன், ஈரோடு

பதில்: அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலமே இது சாத்தியம் என்றும், உணர்வுகள் மாநிலங்களில் எப்படி ஓடுகின்றன என்ற யதார்த்தத்தின் பதிவேடு இது! புரிந்து கொள்ளும் கடமை, ஒன்றிய அரசுக்கு வேண்டும்.

கேள்வி:  தாய்மொழிவழிக் கல்விக்கும் குழந்தைகளின் மனவளர்ச்சிக்கும் தொடர்புள்ளது என்று பேசும் மோடி, சமஸ்கிருதத்தை அனைவர் மீதும் திணிக்கிறாரே - இவர் மக்களைப் பற்றி என்ன நினைக்கிறார்?

- .மணிமேகலை, வீராபுரம்

பதில்: ‘இரட்டை நாக்குபேச்சுக்கள் - மக்கள் தங்களைப் பற்றி நினைப்பார்களே என்பதைப் பற்றியே கவலைப்படமாட்டார்கள், கெட்ட பின்பு ஞானம்வருமோ என்னவோ, 3 வேளாண் சட்டங்களுக்கு மன்னிப்புக் கேட்டார். உளமாரவா என்பது அந்த விவசாயிகளுக்கே சந்தேகமாக உள்ளது இப்போது!

கேள்வி:  மயிலாப்பூர் கிளப் ரூ.4 கோடி வாடகை பாக்கியால் சீல் வைக்கப்பட்டுள்ளதே - “ஆண்டவன் சொத்து ஆண்டவனுக்கேஎன்று கூச்சல் போடும் பார்ப்பனர்களை இனியாவது மக்கள் புரிந்து கொள்வார்களா?

-தமிழ் மைந்தன். சைதாப்பேட்டை

பதில்: நியாயமான மில்லியன் டாலர் கேள்வி - எல்லாம் வசதியான மேட்டுக் குடிமக்கள் உறுப்பினர்களாக உள்ள அக் கிளப் எப்படி வாடகை பாக்கி வைத்தது என்பது வியப்பாக உள்ளது.

கேள்வி:  நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் வாக்களித்தவர்கள் சராசரியாக 61 சதவீதம். அதில் குறிப்பாக சென்னை மாநகரில் 43 சதவீதம் மட்டுமே என்பது படித்த பண்பாளர்களுக்கு அழகா? வாக்களிக்காதவர்களுக்கு அரசு சலுகைகளை ரத்து செய்ய ஒன்றிய - மாநில அரசுகள் முன்வருமா?

         - இல. சீதாபதி, மேற்கு தாம்பரம்.

பதில்: சென்னை மாநகரத்தின் பெருமைக்கே இது இழுக்குத்தான். வாக்களிப்பது முதல் கடமை என்று கருதாதவர்கள் மற்ற உரிமைகளை இழந்தவர்களே யாவர்!

கேள்வி:  தமிழ்நாட்டில் அஞ்சல் உதவியாளர் பணிக்குத் தேர்வான 946 பேரில் 46 பேர் மட்டுமே தமிழர்கள் என்பது தமிழர்களை திட்டமிட்டு வஞ்சிக்கும் செயல் அல்லவா? இதற்கான தீர்வை தமிழ்நாடு அரசு  மேற்கொள்ளுமா?

            - . காஞ்சனா, கருங்குழி.

பதில்: தமிழ் நாட்டு இளைஞர்கள் - படித்தவர்கள் 75 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புத்தேடி பதிவகத்தின் மூலம் காத்துக்கிடக்கின்றனர் ஒருபுறம்;

மறுபுறம் 946 பதவிகளில் வெறும் 46 தான் தமிழ்நாட்டவருக்கு இந்த மண்ணில். இதைவிட ரத்தம் கொதிக்கும் செயல் உண்டா?  இவற்றை, ஒன்றிய அரசின் ஓரவஞ்சனையை அம்பலப்படுத்தி நமது திராவிடர் கழக இளைஞரணி கண்டன ஆர்ப்பாட்டங்கள் ஆங்காங்கு நடத்த வேண்டும்.

கேள்வி:  பாலியல் உள்ளிட்ட பல்வேறு புகார்களால் ஆசிரியர்களின் நடத்தையை பள்ளிக்கு உள்ளேயும், வெளியேயும் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிடும் உயர் நீதிமன்றம், ஆசிரமங்களில் நடக்கும் பித்தலாட்டங்கள் குறித்து வாய்த் திறப்பதில்லையே?

              - வெ. ஜமுனா, ஆரணி.

பதில்: அது பற்றி உயர்நீதிமன்றங்களில் வழக்குப் போட்டால், விரிவான விளக்கத் தீர்ப்புரைகளையும் பெறலாம். தானே எழுத முடியாதல்லவா?

கேள்வி:   ஜாதி - மத அடிப்படையில் மனித இனத்தைப் பிரிக்க முடியாது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறி இருப்பதில் உண்மை உள்ளதா?

           - மு. அலமேலு, மேட்டுக்குப்பம்.

பதில்: பொது உபதேசம் தானே அது - அதுவும் எழுதிக் கொடுத்த வரை வாசிப்பது தானே!

கேள்வி:    ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ. 42 லட்சத்தில் முஸ்லீம் வர்த்தகர் ஒருவர் கிருஷ்ணருக்கு கோயில் கட்டியிருப்பதை எப்படி எடுத்துக் கொள்வது?

          - . ஷெரிப், கூடுவாஞ்சேரி.

பதில்: வித்தைக்காரர்களும், சந்தர்ப்பவாதம் மூலம் விளம்பரம் பெறுபவர்களும் எல்லா இடங்களிலும் உண்டே!

கேள்வி:  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பார்ப்பனர்களும் மார்வாடிகளும் அடர்த்தியாக உள்ள இடங்களில் பிஜேபி அதிமுகவை விட அதிக வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் வந்துள்ளதே? அதிமுக இனியாவது புரிந்துகொள்ளுமா?

- சங்கர் அப்பாசாமி, திருமுடிவாக்கம்

பதில்: நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் - அதிமுக தொண்டர்கள் பலர் புரிந்திருக்கிறர்கள். ஆனால்தலைவர்கள்புரிந்தும் புரியாத மாதிரி - சொந்தகனம்காரணமாக புரியாதது போல் நடிக்கிறார்கள்! அவ்வளவுதான்.

No comments:

Post a Comment