இன எதிரிகள் எத்தனை சூலாயுதங்களைத் தூக்கினாலும் - அவர்களால் ஒன்றும் செய்ய முடியாத அளவிற்கு பேராயுதங்கள் இருக்கின்றன - அது பெரியார் என்ற அறிவாயுதம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 26, 2022

இன எதிரிகள் எத்தனை சூலாயுதங்களைத் தூக்கினாலும் - அவர்களால் ஒன்றும் செய்ய முடியாத அளவிற்கு பேராயுதங்கள் இருக்கின்றன - அது பெரியார் என்ற அறிவாயுதம்!

‘‘இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?''

புத்தக வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

சென்னை, பிப்.26   இன எதிரிகள் எத்தனை சூலாயு தங்களைத் தூக்கினாலும்கூட, ஒன்றும் செய்ய முடியாத அளவிற்கு - பேராயுதங்கள்  இருக்கின்றன காரணம், இது பெரியார் என்ற அறிவாயுதம்! அறி வாலயத்தில் நின்றுகொண்டு சொல்கிறேன், அறி வாயுதம் கொண்ட ஒரு தத்துவ நூலை முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டு இருப்பதற்காக, கோடானு கோடி நன்றி! என்றார்   திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

''இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?'' புத்தக வெளியீட்டு விழா

நேற்று (25.2.2022) மாலை 6 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில்,  .திருமாவேலன் எழுதிய ''இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?'' என்ற புத்தகத்தினை முதல மைச்சர் மு..ஸ்டாலின் வெளியிட, புத்தகத்தைப் பெற்றுக்கொண்ட திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

 எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி! என்ற வெற்றித் திருமகன்

எல்லையற்ற மகிழ்ச்சியோடு ஒரு பெரிய சகாப்தம் உருவாகியிருக்கிறது. அந்த சரித்திர சகாப்தம் எப்பொழுதும் வெற்றி! எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி! என்ற வெற்றித் திருமகனாக உருவாகியிருக்கின்ற எங்கள் ஒப்பற்ற முதல மைச்சர் - உலகம் பாராட்டக் கூடிய முதலமைச் சராக - மனிதநேயத்தினுடைய மறு பதிப்பாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்ற எங்கள் ஒப்பற்ற முதலமைச்சர்.

வெற்றிடம் என்று சிலர் உளறினார்கள் - இல் லையப்பா, இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகத்திற்கே இதுதான் கற்றிடம் என்று ஆக்கியிருக்கின்ற எங்கள் முதலமைச்சர்.

பெரியார் திடலினுடைய விளைச்சல்திராவிடக் களஞ்சியம் -சகோதரர் திருமாவேலன்

இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்? என்று இரண்டு தொகுதிகளை அருமைச் சகோதரர் 'முரசொலி' நாளிதழின் தலையங்க ஆசிரியர் - கலைஞர் தொலைக்காட்சியின் முக்கிய பொறுப்பாள ராக இருக்கக்கூடிய அருமைச் சகோதரர் - பெரியார் திடலினுடைய விளைச்சல் - அருமைச் சகோதரர் 'திராவிடக் களஞ்சியம்' என்று இன்றுமுதல் அழைக்க லாம் அந்த நூலைப் பார்த்தவுடனே - என்ற பெரு மைக்குரிய திருமாவேலன் அவர்கள் எழுதிய இந்த நூலை,

யார் வெளியிட வேண்டுமோ?

எந்த நேரத்தில் வெளியிடவேண்டுமோ?

அந்த நேரத்தில், முதலமைச்சர் அவர்கள் வெற்றிக் கரங்களோடு இங்கே வெளியிட்டு இருக்கிறார்கள். அதனை நாங்கள் பெற்றிருக்கின்றோம் என்ற பெரு மகிழ்ச்சிக்குரிய அளவிலே, அதைப்பற்றி  மிகச் சிறப் பாக உரையாற்ற இருக்கின்ற எங்கள் முதல மைச்சர் அவர்கள், உழைப்பிற்குத் தேனீ என்றாலும்கூட, இன்றைக்கு வெற்றிக்கும் அவர்தான் மிகப்பெரிய நாயகர் - அந்த வெற்றியோடு பல பேராலே போட்டி போட முடியவில்லை என்று மிகத் தெளிவாக ஆக்கியிருக்கின்றது இந்தக் காலகட்டம்.

உள்ளாட்சியிலும் நல்லாட்சி -

நம் ஆட்சியை உருவாக்கிவிட்டு பெரியார் நூலை வெளியிடுகிறீர்கள்!

நான் பொன்னாடையை போர்த்திய நேரத் தில், கேட்டார்,

திருமாவேலன் புத்தக வெளியீட்டிற்காகவா? என்று

இல்லை - உங்களுக்காக!

இந்தப் பொன்னாடை எதற்கு என்று சொன்னால்,

உள்ளாட்சித் துறையில் இவ்வளவு  பெரிய வெற்றியைப் பெற்று - இப்பொழுதுதான் முதல் பொது நிகழ்ச்சியில் நீங்கள் கலந்துகொள்கிறீர்கள்.

அந்த வெற்றி சாதாரணமானதல்ல!

உள்ளாட்சியிலும் நல்லாட்சி - நம் ஆட்சிதான் என்பதை மிகத் தெளிவாக உருவாக்கிவிட்டுத் தான், பெரியார் நூலினை வெளியிடுகிறீர்கள்.

பெரியார் என்ற பேராயுதம், போராயுதம்!

காரணம், அவர்களுக்குச் சொல்கிறீர்கள், ''அட பைத்தியக்காரர்களா, எங்களை அசைக்க முடியாது; எங்கள் கருவி எது தெரியுமா? இதோ பெரியார் என்ற பேராயுதம், போராயுதம் என்பதைத்தான் இந்த நூல் மூலமாக நீங்கள் வெளியிட்டு இருக்கிறீர்கள் என்று காட்டக்கூடிய அளவிற்கு, பெருமைமிகுந்த இந்த நிகழ்ச்சிக்கு, அருமையான விளக்கவுரையை  வழங் கிய என்னுடைய அருமைச் சகோதரர் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப.வீ. அவர்களே,

இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய நம்முடைய இயக்குநர் அன்பிற்கும், பாராட்டுதலுக்கும் உரிய அமிர்தம் அவர்களே,

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயல்

என்ற திருக்குறள்போல் இங்கு அரங்கேறியிருக் கின்ற நூலாக ஆக்கியிருக்கின்ற அவருடைய அரு மைத் தந்தையார், பெரும்புலவர் இங்கே முழங்கினார் - பேசவில்லை அவர் முழங்கினார் - அப்படிப்பட்ட அய்யா பெருமதிப்பிற்குரிய திரு.படிக்கராமு அவர் களே, இந்நிகழ்ச்சியில் அனைவரையும் வரவேற்று உரையாற்றிய நம்முடைய பதிப்பக அருமைத் தோழர் யுகன் அவர்களே,

பதிப்பகத்தினுடைய உரிமையாளராக, அழைப் பாளராக இருக்கின்ற கிருஷ்ணன் அவர்களே,

ரேணுகா திருமாவேலன் அவர்களே,

இங்கே வருகை புரிந்துள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் மாண்புமிகு மானமிகு அருமைச் சகோதரர் நம்முடைய துரைமுருகன் அவர்களே,

நாடாளுமன்றத்தில் நம்முடைய குரல் எப்பொ ழுதும் ஒலித்துக் கொண்டிருப்பதற்குக் காரணமாக இருக்கக்கூடிய அருமைச் சகோதரர் டி.ஆர்.பாலு எம்.பி., அவர்களே,

அவரோடு வந்திருக்கின்ற அமைச்சர் பெரு மக்களே, சட்டப்பேரவை உறுப்பினர்களே, நாடா ளுமன்ற உறுப்பினர்களே, பொறுப்பேற்கவிருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று வந்தி ருக்கக் கூடிய உள்ளாட்சி வெற்றி நாயகர்களே,

அருமைத் தோழர்களே, சான்றோர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத் தினைத் தெரிவித்துக் கொள்கிறன்.

தந்தை பெரியார் அவர்களைப் பொறுத்தவரையில், எவருடைய விமர்சனத்தைப்பற்றியும் கவலைப்படாத வர்.

இங்கே சுப.வீ. அவர்கள் சொன்னதைப்போல, மற்ற தலைமுறைக்கு விளக்கம் தர வேண்டும் என்பதற்காக இந்த நூல்.

இந்த நூலை சாதாரணமாக எழுதவில்லை நண் பர்களே - ஏறத்தாழ 20 ஆண்டுகள் திருமாவேலன் அவர்கள் அதற்குரிய முயற்சி எடுத்திருக்கிறார்.

ஓர் அற்புதமான ஒரு களஞ்சியம் ''இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?''- புத்தகம்

நூல்கள் எழுதிய தமிழ்நாட்டு வரலாற்றில் - அருமைத் தோழர் திருமாவேலனை இனிமேல் திராவிடக் களஞ்சியம் என அழைக்கவேண்டும் என்று ஏன் சொன்னோம் என்றால்,

20 ஆண்டுகள் - பெரியார் திடலில் இருக்கக்கூடிய எங்களைப் போன்றவர்களுக்கே கூட, பல ரெப் பரென்ஸ் என்று சொல்லக்கூடிய - சுலபமாகப் பார்த்து எடுக்கக்கூடிய ஓர் அற்புதமான ஒரு களஞ்சியமாக இந்த நூலை அவர்கள் தந்திருக்கிறார்கள்.

இது யாருக்கோ பதில் என்பதில் சங்கடம் அவர் களுக்கு இருக்கலாம். பெரியார் எதிர்ப்பைப்பற்றிக் கவலைப்படமாட்டார்.

எதிர்ப்பைப்பற்றிக் கவலைப்படாமல் எதிர்நீச்சலிலே வளர்ந்தவர் பெரியார்!

டில்லியிலே நடைபெற்ற குடியரசு நாள் விழாவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊர்திகள் - பெரியாருடைய படம், ..சி. போன்ற தலைவர்களின் படம் இருந்த ஊர்திகளுக்கு அனுமதி இல்லை என்றார்கள்.

அங்கே இடம்பெறாவிட்டால் என்ன? கோடானு கோடி மக்கள் பார்க்கக்கூடிய அளவிற்குச் செய்து காட்டிய பெருமை நம்முடைய முதலமைச்சருக்கு உண்டு.

அந்த ஊர்தியில், பெரியார் கைத்தடியோடு கம்பீரமாக நிற்கிறார் பாருங்கள் - அதைப் பார்த்துப் பார்த்து எல்லோரும் வியக்கிறார்கள்.

காரணம் என்ன?

அவர் எதிர்ப்பைப்பற்றியும் கவலைப்படாமல் எதிர்நீச்சலிலே வளர்ந்தவர். அந்த எதிர்நீச்சல்தான், இன்றைக்கு நம்முடைய முதலமைச்சருக்கு மிக முக்கியமாகப் பயன்படக்கூடிய அருமையான பாடம். அதை அவர்கள் முழுமையாகக் கற்றிருக்கிறார்கள்.

இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக  ஒப்பற்ற முதலமைச்சராகத் திகழ்கிறார்!

அதன் காரணமாகத்தான், இன்றைக்கு  எதிரிகள் என்ன பேசினாலும், அதைப்பற்றிக் கவலைப்படாமல், தன்னுடைய பணியை உறுதியாக, தெளிவாக, துணிவாக செய்து சரித் திர நாயகராக, சமூகநீதி நாயகராக தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக - ஒப்பற்றவராக இருக்கிறார்.

இது ஒரு பாரம்பரியம்.

அறிஞர் அண்ணா, 1967 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று வருகிறார், இதே சென்னையில். இங்கே கூட ஏராளமான மூத்த செய்தியாளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சிலர்கூட அன்றைக்கு அங்கே இருந்திருக்கலாம்.

அறிஞர் அண்ணாவைப் பார்த்து கேட்கிறார் கள், ''என்ன நீங்கள், தேர்தலில் நிற்கவேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் முடிவு செய்து, பத்தாண்டுகள்தானே ஆகியிருக்கின் றன. இந்தப் பத்தாண்டு காலத்தில் நீங்கள் ஆட்சியைப் பிடித்தது எவ்வளவு பெரிய உலக அதிசயம் - எவ்வளவு பெருமை - இதைப்பற்றி நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?'' என்று கேட்டார்கள்.

அண்ணா அவர்கள் யாரிடம் பயின்றவர்? ஈரோட்டுக் குருகுலத்தில் பயின்று, கலைஞரைப் போலவே, அண்ணா அவர்கள் பெரியாரின் தலைமகனாக இருந்தவர்.

நீதிக்கட்சியினுடைய பேரன் என்றார் அண்ணா!

அண்ணா அவர்கள் சொன்னார், நீங்கள் சொல் லியதில் ஒரு சிறிய திருத்தம். நீங்கள் சொல்லி யதைப்போல 10 ஆண்டுகாலத்தில் நாங்கள் ஆட்சி யைப் பிடிக்கவில்லை. நான் நீதிக்கட்சியினுடைய பேரன் - நீதிக்கட்சி ஆரம்பித்து 50 ஆண்டுகளுக்குமேல் ஆகியிருக்கின்றன - அதனுடைய தொடர்ச்சிதான் எங்களுடைய வெற்றி!

எனவே, நீதிக்கட்சியினுடைய தொடர்ச்சிதான் என்று அன்றைக்கு அறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்.

திராவிட இயக்கத்தினுடைய தொடர்ச்சிதான் என்றார் முதலமைச்சர் மு..ஸ்டாலின்!

இங்கே வீற்றிருக்கின்ற நம்முடைய வெற்றி நாயகராக இருக்கின்ற முதலமைச்சர் அவர் களும், திராவிடப் பாரம்பரியத்தைச் சார்ந்த நாங்கள் - திராவிட இயக்கத்தினுடைய தொடர்ச்சிதான் என்று சொன்னார்கள், சொல்ல வேண்டிய இடத்தில்.

இதுதான் மிக முக்கியமானது. இதுதான் பெரியார் அவர்களுடைய பாரம்பரியமான, தெளிவான, துணிவான நிலை.

சுருக்கமாகச் சொல்கிறேன், முதலமைச்சர் அவர்களின் உரையைக் கேட்கத்தான் உங் களைப் போலவே எனக்கும் விருப்பம்.

பாராட்டினால் நான் மகிழ்ச்சியடைவேனா? இகழ்ந்தால் வருத்தம் அடைவேனா?

இல்லவே இல்லை என்றார் தந்தை பெரியார்!

நம்மவர்களில் பலர் பிறக்காத காலம், 1925 இல் பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி, நான்காண்டுகள் ஆகியிருக்கின்றன. நாகப்பட்டினத் திற்குச் செல்கிறார் தந்தை பெரியார். பலத்த எதிர்ப்பு இருக்கக்கூடிய அந்த இடத்திற்குச் செல்லுகிறபொழுது, அங்கே சுவரில் எழுதி வைத்திருக்கிறார்கள் - அவ ருக்கு வரவேற்பு - என்ன எழுதியிருந்தார்கள் என்றால்,

''இராமசாமி கழுதை இந்த ஊருக்கு வருகிறது'' என்று.

இதைக் கேட்கும்பொழுதே நமக்கெல்லாம் ஆத்திரம் பொங்கி வரலாம் இன்றைக்கு.

ஆனால், தந்தை பெரியார் அவர்கள் அதைப் பார்த்துவிட்டு, தோழர்களைப் பார்த்து ஆத்திரப்படா தீர்கள்; அதை அழிக்காதீர்கள் என்று சொல்லிவிட்டு,

''என்னைப் பாராட்டினால் நான் மகிழ்ச்சியடை வேனா? அல்லது திட்டினால் வருத்தப்படுவேனா?

ஆகவே, என்னை நீங்கள் கழுதை என்று சொன் னாலும், வேறு எந்தப் பெயரை வைத்துச் சொன் னாலும், அதைப்பற்றி நான் கவலைப்படமாட்டேன்.  இந்த ஊரில் மூன்று மணிநேரம் உரையாற்றிவிட் டுத்தான் செல்வேனே தவிர, கழுதையாக இருக்கின்ற உங்களையெல்லாம் மாற்றிவிடுகிறேன் - சகோதரர் களாக மாற்றிவிட்டுத்தான் போவேன்'' என்று சொன்னார்.

அந்த சுவரெழுத்தைப்பற்றி தந்தை பெரியார் அவர்கள் கவலைப்படவேயில்லை.

திராவிட இயக்கத்திற்கு

உலகப் பார்வை -

மானுடப் பார்வைதான்!

அப்படிப்பட்டவருக்கு, ''இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?'' என்பதற்கு ஏராளமான ஆய்வுகளை எடுத்துக்காட்டி யிருக்கிறார் திருமாவேலன் அவர்கள்.

திராவிட இயக்கமே உலகப் பார்வை உள்ளது - மானுடப் பார்வை உள்ளது.

இங்கே உரையாற்றிய சுப.வீ. அவர்கள் சொன்னார்கள்,

முதலமைச்சர் அவர்கள், தந்தை பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாள் என்று சொன்னது மட்டுமல்ல - அனைவரையும் உறுதியேற்கச் சொன்னார் என்று.

''அனைவருக்கும் அனைத்தும்''

என்பதுதான் சமூகநீதி!

உங்களில் பலருக்கு நினைவிருக்கிறதா? என்று தெரியாது. மிக முக்கியமான சுயமரியாதை இயக் கத்திலே, அதனுடைய தத்துவமாக பெரியார் சொன்ன இரண்டு சொற்கள் மிக முக்கியமாக இடம்பெற்றன.

அந்த இரண்டு சொற்கள் என்ன தெரியுமா?

''அனைவருக்கும் அனைத்தும்'' என்பதுதான். இதுதான் சமூகநீதி.

''அனைவருக்கும் அனைத்தும்'' என்று சொன்னால், இன எதிரிகளாக இருக்கக்கூடியவர், இன்றைக்கு நம்மை வீழ்த்திடலாம் என்று நினைக்கிறார்கள் அல்லவா - மூன்று சதவிகிதம் இருக்கிறார்களே, அவர்களுக்கும் சேர்த்துத்தான் இடம் உண்டு என்பதற்கு அடையாளம் அது.

எல்லோரையும் இணைப்பதுதான் பெரியாருடைய தத்துவம்

ஆகவேதான், தெளிவாக நம்முடைய முதலமைச் சர் அவர்கள், சமூகநீதி நாள் என்று சொல்லும்பொழுது,

யாரையும் தள்ளி வைப்பதல்ல -

யாரையும் ஒதுக்குவதல்ல - எல்லோரையும் இணைப்பதுதான் பெரியாருடைய தத்துவம்.

இந்த நூலின் ஒரு பகுதியில், அய்யா என்ன செய்தார் என்பதை இரண்டு பத்திகளிலேயே அழகாக எடுத்துத் திருமாவேலன் அவர்கள் சொல்கிறார்.

''பெரியாரின் நூற்றாண்டுகால உழைப்பிற்கு, இணையான உழைப்புக் கொண்டோர் யார்?

ஜாதி ஏற்றத் தாழ்வை சமப்படுத்திய கால்கள் அவருடையதுதானே!

ஆரிய ஜாதியை மட்டுமல்ல - ஆண்ட ஜாதிப் பெருமையையும் அவர்கள் கூட்டத்துக்குள் புகுந்து, ''தேன் கூட்டைக் கலைப்பதுபோல கலைத்து, தேனீ யைப் போல கொட்டிய நாக்கு அவருடைய நாக்கு'' அல்லவா!

பெரியாரைவிட தியாகம் செய்தவர் யார்?

எத்தனை ஆண்டுகள் இந்த ஊருக்குள் அலைந்து திரிந்தார் - என்றாவது சலித்துக் கொண்டாரா? முடங்கிக் கிடந்தாரா? அவரைவிட தியாகம் செய்தவர் யார்?

மறுநாள் நிம்மதிக்காக என்றாவது நினைத் திருப்பாரா?

சிறைக்கு அஞ்சினாரா?

சட்டத்திற்கு அஞ்சினாரா?

புனிதங்களைக் கொளுத்தினால், வாழ்வு இருண்டுவிடும் என்பதுபற்றியெல்லாம் கவலைப் படாது கொளுத்திய துணிச்சலுக்குச் சொந்தக்காரர் அவர் மட்டும்தானே!

இந்தத் துணிச்சல் உலகத்தில் வேறு எந்தத் தலைவருக்கு உண்டு?

அவர் மட்டும்தானே!

இங்கே உரையாற்றும்பொழுது தமிழைப்பற்றி சொன்னார் சகோதரர் சுப.வீ. அவர்கள்.

தமிழில் அர்ச்சனை கூடாது - தமிழ் மொழி நீஷ பாஷை என்று சொல்லி, இன்றைக்கும் வழக்குப் போடுகிறார்கள், என்றார்.

தமிழ் தெரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை?

தமிழ்நாட்டில், தமிழ் மொழியில் அர்ச்சனை கூடாது என்பவர்களுக்குப் பெரியார் பளிச்சென்று சொன்னார், தமிழ் தெரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை என்று கேட்டார்.

நம்முடைய முதலமைச்சர் கடவுளை வெளியே அனுப்பவில்லை - தமிழ் மொழியைத்தான்  உள்ளே அனுப்பினார். அதற்காக நாம் நன்றி செலுத்தவேண்டும் அவருக்கு.

இந்த இயக்கம் இல்லாவிட்டால், தமிழ் மொழி எப்படி உள்ளே நுழைந்திருக்க முடியும்?

தமிழ்நாட்டில் தமிழன் அர்ச்சகன் -

தமிழ்நாட்டில் தமிழ் அர்ச்சனை மொழி.

பூசை என்பதேகூட, பூ செய் என்ற தமிழ் வார்த்தை தான் பூஜை என்று ஆகியது என்று, வங்காளத்தில் சுனித்குமார் சாட்டர்ஜி சொன்னதை, ஆய்வாளர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

திராவிட இயக்கம் இல்லையென்றால்,

இந்த 'வணக்கம்' வந்திருக்குமா?

இன்றைக்கு ஒருவரை ஒருவர்  பார்த்துக் கொள் ளும்போது 'வணக்கம்' என்று சொல்லுகிறோமே, இந்தத் திராவிட இயக்கம் இல்லையென்றால், இந்த 'வணக்கம்' வந்திருக்குமா? அதற்குமுன் 'நமஸ்காரம்' என்றுதானே இருந்தது.

இன்றைக்குக்கூட ஒன்றிய அரசில் பணியாற்று பவர்கள் சொல்வது 'நமஸ்காரம்.'

மாநில அரசில் பணியாற்றுகிறாரா? இல்லையா? என்று கண்டுபிடிப்பதற்கு 'வணக்கம்'தான்.

இதுதான் திராவிடம் - ஆரியம்!

ஆரியம் எங்கே? திராவிடம் எங்கே? என்று நீங்கள் தடுமாறவேண்டிய அவசியம் கிடையாது.

படையெடுப்புகளிலேயே மிக ஆபத்தானது பண்பாட்டுப் படையெடுப்பு!

அண்ணா அவர்கள் முதலமைச்சராக வந்தவுடன் இனிமேல் 'ஸ்ரீ' கிடையாது - 'திரு'தான் என்று அரசாணை கொண்டு வந்தார். அதை செய்தது திராவிட இயக்கம்.

காரணம், படையெடுப்புகளிலேயே மிக ஆபத் தானது பண்பாட்டுப் படையெடுப்பு.

தமிழ் மொழியை வளர்ப்பதற்கு உதவியாக இருந்தது யார்?

தமிழைக் கெடுப்பாரை, உடைத்த கடப்பாரை வேறு யார்? யாரிடமாவது நன்றியை எதிர்பார்த்தாரா?

நான் சாதித்துவிட்டேன் என்று சொல்லிக் கொண்டாரா?

''உங்களைச் சூத்திரனாகத் தான் விட்டுவிட்டுப் போகிறேன் என்றால், அப்புறம் என்ன தொண்டு செய்துவிட்டேன்'' என்று கடைசிக் கூட்டத்தில் இவரைப் போல எவர் கேட்டுள்ளார்?

யாரைத்தான் இவர் எதிர்க்கவில்லை?

தனது நண்பர்கள் அனைவரையும் தனது கொள் கைக்காகப் பகைத்துக் கொண்டவர் அல்லவா?

எல்லாம் கொளுத்தினாரே? எல்லாவற்றையும் உடைத்தாரே? அனைத்தையும் உடைத்தாரே? எல்லாம் எதற்காக? தனது சுயநலத்துக்கா?

'நான் பல குட்டிக்கர்ணம் போட்டாலும் அது என் சுயநலத்துக்காக அல்ல' என்று சொல்லும் துணிச்சல் எவருக்கு இருந்தது?'

ஒன்றை மிக அழகாகச் சொல்லியிருக்கிறார் நண் பர்களே - இங்கே வெளியிடப்பட்ட புத்தகங்களை முழுமையாகப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே!

உனது எதிரி யார்என்பதை அடையாளம் காட்டி சொல்கிறார்.

நமக்கு நண்பர் யார்? எதிரி யார்? என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்!

இதுதான் இன்றைக்கு நமக்குப் பிரச்சினையே! அரசியலாக இருந்தாலும், பொருளாதாரமாக இருந் தாலும், பண்பாட்டுக் களமாக இருந்தாலும், நமக்கு நண்பர் யார்? எதிரி யார்? என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

எப்பொழுது சிக்கல் ஏற்படும் என்றால், எதிரியை, நண்பனாகவும், நண்பனை எதிரியாகவும் கருதுகிற பொழுதுதான். அதைப் பிரித்துக் காட்டக்கூடிய ஆற்றல், திராவிட இயக்கத்தினுடைய தனித்தன்மை. அதைத்தான் திராவிடர் இயக்கம் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறது.

ஆகவேதான், அவர்கள் ஆத்திரப்படுகிறார்கள் - இன்னமும் பேசுகிறார்கள்.

ஆனால், அதையும் தாண்டி, மிகப்பெரிய அளவிற்கு வந்திருக்கிறார்கள்.

இன்றைக்கு எவ்வளவு பெரிய வாய்ப்பு என்பதை மனிதநேயத்தோடு நினைத்துப் பாருங்கள்.

மின்னல் வேகத்தில்  செயல்பட்டு நடவடிக்கை எடுத்த நம்முடைய முதலமைச்சர்!

உக்ரைனில் போர் நடக்கிறது - நம்முடைய இந்தி யர்கள் 30 ஆயிரம் பேர் என்றாலும், தமிழ் நாட்டைச் சேர்ந்த 5 ஆயிரம் மாணவர்கள் அங்கே சிக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று செய்தி வருகின்ற பொழுது, அவர்களுடைய பெற்றோர்கள் பதறுகின்ற நேரத்தில்,

மற்றவர்கள் நினைப்பதற்கு முன்பாக, மின்னல் வேகத்தில்  செயல்பட்டு நடவடிக்கை எடுத்த முதல மைச்சர் அவர்கள் இங்கே இருக்கிறார்கள்.

திராவிடம் என்றால் இதுதான்.

திராவிட சமுதாயத்தைத் திருத்தி, மானமும், அறி வும் உள்ளவர்களாக ஆக்கவேண்டும் என்பதுதான்.

நாங்கள் வருவதற்கு விமானம் கிடைக்கவில்லை. அப்படி கிடைத்தாலும், ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கட்டணமாகக் கேட்கிறார்கள் என்றனர் அங்கே உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

கஜானாவைக் காலியாக வைத்துவிட்டுப் போன 'தனவான்கள்' - இன்னமும் உயிரோடு இருக்கிறார்கள். அதை நிரப்புவது என்பதில் மிகப்பெரிய சிக்கல். அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், நான் சிறப்பாக அரசை நடத்திக் காட்டுவேன், பொருளாதார அறிஞர்களின் துணையோடு என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

முதல் குறிக்கோள் மனிதாபிமானம்.

அரசினுடைய நிதிநிலைக்கும் - தனியார் பொருளாதாரத்திற்கும் உள்ள வேறுபாடு!

ஓர் அரசினுடைய நிதிநிலைக்கும் - தனியார் பொருளாதாரத்திற்கும் ஒரு வேறுபாடு உண்டு.

பொருளாதார மாணவன் என்ற முறையில் சொல்கிறேன்.

வரவு - அதற்கேற்ப செலவு என்பது தனியார் பொருளாதாரம்.

செலவு - அதற்கேற்ப வரவு - அரசு பொருளாதாரம்.

பெற்றோர்களின் நெஞ்சில் பால்வார்த்திருக்கிறார்!

இதைத் தெளிவாகப் புரிந்துகொண்டிருந்தும், அதைப்பற்றி கவலையில்லை என்று சொல்லி, இன் றைக்கு அறிவித்தார் - உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை மீட்க ஆகும் செலவுகளை அரசே ஏற்கும் என்று சொல்லி, அவர்களுடைய நெஞ்சில் பால்வார்த்திருக்கிறார்.

அதற்குப் பிறகு ஓர் அறிவிப்பு வருகிறது - அது உறுதியானதா என்று எனக்குத் தெரியவில்லை.

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் அனைவரையும் மீட்க ஆகும் செலவை ஒன்றிய அரசே ஏற்கும் என்ற அறிவிப்புதான் அது.

ஒன்றிய அரசுக்கும் வழிகாட்டியிருக்கிறார் 

எங்கள் முதலமைச்சர்!

எனவே, ஒன்றிய அரசுக்கும் வழிகாட்டிய எங்கள் முதலமைச்சரே, நீங்கள் பல்லாண்டு காலம் வாழவேண்டும்.

உங்களுடைய ஒவ்வொரு அறிவிப்பும் மிக அற்புதமான அறிவிப்பாகும்.

சிக்கித் தவிப்பவர்களுக்குக் கலங்கரை விளக் கமாக இருக்கிறார் நம்முடைய முதலமைச்சர். திராவிட இயக்கப் பள்ளியிலே படித்து, பக் குவப்பட்டு இருக்கிறார் - அவர் செதுக்கப்பட்டு இருக்கிறார்.

ஒரு பெரிய செய்தியை - அவர் மிக சாதாரணமாக செய்கிறார்.

90 ஆண்டுகளில் செய்ய முடியாததை9 மாதங்களில் செய்திருக்கிறார்!

ஆட்சிப் பொறுப்பேற்று 9 மாதங்களுக்குள்ளாக, பல பேர், 90 ஆண்டுகள் இருந்தபொழுதுகூட செய்ய முடியாத செயல்களை செய்துகாட்டியிருக்கிறார்.

சில பெற்றோர், மற்றோர் எங்களிடம் வந்து, நாங்கள் ஒருமுறை முதலமைச்சரைப் பார்க்க வேண்டும்; சில செய்திகளை சொல்லவேண்டும். எங்கள் பிள்ளைகளை, ரஷ்யா போன்ற நாடுகளுக்கு, நீட் தேர்வு போன்ற தொல்லைகள் இங்கே வருவதற்கு முன்பாக அனுப்பினோம். படித்துவிட்டு வந்து விட் டார்கள் - பிறகு இங்கே மருத்துவராகப் பணி யாற்றும் வாய்ப்புகள் வரவேண்டும் என்று சொன்னால், அந்த மருத்துவப் பணியில் சேருவதற்கு ஏறத்தாழ மூன்றரை லட்சம் ரூபாய்க்குமேல் கட்டணம் கட்டவேண்டி இருக்கிறது. அதை எங்களால் கட்ட முடியவில்லை. பிள்ளைகள் படிப்பதற்கே நாங்கள் கடன் வாங்கித்தான் அனுப்பினோம்; அதைப்பற்றி முதலமைச்சரிடம் சொல்லவேண்டும் என்றார்கள்.

சரி, அரசின் நிதிநிலை சரியாகட்டும்; அதற்குப் பிறகு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து முடித்த வுடன், முதலமைச்சரைப் போய் பார்க்கலாம் என்று அவர்களிடம் சொன்னேன் நான்.

இன்றைக்கு வெளிவந்த செய்தியைப் பார்த்தால், மூன்று லட்சம் ரூபாய் அந்த மாணவர்கள் கட்ட வேண்டிய அவசியமில்லை. வெறும் 29 ஆயிரம் ரூபாய் கட்டினால் போதும் மருத்துவக் கல்லூரிகளில் என்று உத்தரவுப் போட்டிருக்கிறார் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.

ஒலியினுடைய வேகத்தைவிடஒளியினுடைய வேகம் மிக அதிகம்!

இன்றைக்கு 'விடுதலை'யில் வெளிவந்துள்ள அறிக்கையைப் படித்துவிட்டு, டி.ஆர்.பாலு எம்.பி., அவர்கள், என்னங்க, மின்னல் வேகம் என்று எழுதியிருக்கிறீர்களே? என்று.

ஒளியினுடைய வேகம்தான் மிக அதிகமாக இருக்கும் - ஒலியின் வேகத்தைவிட என்பதுதான் தத்துவம்.

தி.மு.. ஆட்சி பதவியேற்பதற்கு முன்பு, அரசு பொறியியல் கல்லூரிகளில் நமது பிள்ளைகள் சேர்கின்ற வாய்ப்புகள் குறைந்துகொண்டே வருகின்ற நிலை இருந்தது. நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பதவியேற்ற 9 மாதங்களுக்குள் - கல்விக் கண் என்பது மிக முக்கியம் அல்லவா - ஆகவே, நம்முடைய முதல மைச்சர் அவர்கள், அரசு பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள், கல்விக் கட்டணம் செலுத்த வேண்டிய தேவையில்லை என்று  அறிவித்தார். அந்த அறிவிப்பினால், 10 ஆயிரம் மாணவர்கள் இந்த ஆண்டு பயன்பெற்றிருக்கிறார்கள்.

இவ்வளவுக்கும், கடந்த ஆட்சியினர் கஜானாவை காலியாக வைத்துவிட்டுப் போன நிலை - இன்னும் தாராளமாக நிதி இருந்தால், இன்னும் என்னென்ன செய்வார் என்று நமக்குத் தெரியாது.

10 ஆயிரம் மாணவர்கள் எந்த ஒரு செலவும் இல்லாமல், பொறியியல் படிப்பைப் படிக்கிறார்கள்.

இதுதான் திராவிடம்!

இவர்களை உள்ளே விடாமல் செய்ததுதான் ஆரியம்!

ஆரியம் - திராவிடம் என்றால், வேறொன்றும் இல்லை.

நாங்கள் ரத்தப் பரிசோதனை செய்துவிட்டு, ஆட்களை அனுமதிக்கவில்லை.

27 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பெற்றுக் கொடுத்தவர் தமிழ்நாடு முதலமைச்சர்!

இன்னொரு செய்தியை உங்களுக்குச் சொல் கிறேன் -

27 சதவிகித ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முடியாது என்று சொன்ன ஒன்றிய அரசை நடை முறைப்படுத்த வைத்து - நீதிமன்ற அவமதிப்பு வரையில் சென்று - திராவிட முன்னேற்றக் கழகம் வழக்குத் தொடுத்து - நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் குரலெழுப்பி, உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பையும் வாங்கிய பிறகு, இப்பொழுது நடைபெற்று இருக்கின்ற மருத்துவக் கலந்தாய்வின்மூலம் சேர்ந்தோர் எண்ணிக்கையில், உயர் பட்டப் படிப்பில் மட்டும் இந்தியா முழுவதும் .பி.சி. பிள்ளைகள் 2544 பேர் சேர்ந்திருக்கிறார்கள்.

அதற்கு முன்புவரை பூஜ்ஜியம்தான்.

தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டுமல்ல -

'திராவிட மாடல்' என்றால் என்ன அர்த்தம் தெரி யுமா? நண்பர்களே, 'இன்க்ளூசிவ் குரோத்' என்பது தான்.

பெரியார் பாடுபட்டார், அதன் காரணமாக அரசமைப்புச் சட்ட முதல் திருத்தம் வந்தது. இந்தியா முழுமைக்கும் கம்யூனல் ஜி..

அந்தப் பாரம்பரியத்தில் வந்த காரணத்தினால், திராவிடப் பாரம்பரியத்தில்  வந்த காரணத்தினால்தான் இந்தியா முழுவதும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் 2544 பேர் மருத்துவ உயர் பட்டப் படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள். இன்னும் அண்டர் கிராஜூவட் பட்டியல் வரவில்லை.

இந்தியா முழுவதற்குமான முதலமைச்சராக இருக்கிறார்!

நாம் மட்டும் பாராட்டவில்லை, நம்முடைய முதல மைச்சரை - இந்தியா முழுவதற்கும் அவர் முதலமைச் சராக இருந்து செய்யவேண்டிய செயல்களை செய்திருக்கிறார்.

எனவேதான், இங்கே பெரியார் நூல்களை வெளியிட்டு இருக்கிறார் என்று சொன்னால், அதற்கு அடிப்படைத் தத்துவம் அதுதான்.

இந்த ஆட்சியை அசைக்க முடியாது - காரணம் என்னவென்றால், இது வெறும் மணல் வீடல்ல - இது கற்பாறை. அந்தக் கற்பாறை எதைப் பொறுத்தது என்றால், திராவிடம் என்ற அந்த லட்சியங்களை அடிப்படையாகக் கொண்டது.

இறுதியாக ஒன்றைச் சொல்லுகிறேன்.

நாம் மட்டும் பாராட்டவில்லை. பத்திரிகையாளர் நண்பர்கள் இங்கே வந்திருக்கிறார்கள்.

ஆங்கில நாளிதழின் தலையங்கம்!

இன்று வந்திருக்கக்கூடிய ஆங்கில நாளேடான 'டெக்கான் கிரானிக்கல்.'

இந்த நாளிதழில் தலையங்கம் எழுதியிருக்கிறார்கள்-

Stalin Era is here to Stay

ஸ்டாலின் சகாப்தம் நீடிக்கவேண்டும்- நிலைத்து!

இதுவரையில் பெரியார் சகாப்தம் கேட்டோம்; அண்ணா சகாப்தம் கேட்டோம்; கலைஞர் சகாப்தம் கேட்டோம். ஒன்பதே மாதங்களில் ஸ்டாலின் சகாப்தம் வந்திருக்கிறது. இதை சொல்வது வீரமணியல்ல - சுப.வீரபாண்டியன் அல்ல - திருமாவேலன் அல்ல நண்பர்களே -

ஆங்கில நாளேட்டினுடைய தலையங்கம்.

இப்படி நாங்கள் எழுதினால், அவருக்காக எழுதினோம் என்று சொல்வார்கள்.

ஆனால், ஆங்கில நாளிதழின் தலையங்கம் - இதற்கெல்லாம் அஸ்திவாரம் எங்கே இருந்து வருகிறது?

இதற்கெல்லாம் செயல்திறன் எங்கே இருந்து வருகிறது?

பெரியார்! பெரியார்!! பெரியார்!!!

பெரியாருக்கு இந்தப் பெருமை இருப்பதற்குக் காரணம் என்ன?

அதை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

இதைக் கண்டு ஆத்திரப்படுபவர்கள் யார்?

நரியார்! நரியார்!! நரியார்!!!

எனவே, நரியாருக்கும் - பெரியாருக்கும் போட்டியே கிடையாது.

Stalin Era is here to Stay

அது நிலைக்கவேண்டும். நிலைத்துவிட்டது - இனிமேல் அதை அசைக்க முடியாது.

பெரியார் என்ற பேராயுதத்தின் கூர்முனையை மழுங்கடிக்கப்பட முடியாது

ஆகவே, இளைஞர்களே, இதற்கெல்லாம் அஸ்திவாரம் என்ன தெரியுமா?

பெரியார் என்ற பேராயுதம் -

பெரியார் என்ற மிகப்பெரிய போராயுதம் -

அந்த ஆயுதத்தின் கூர்முனையை மழுங்கடிக்கப்பட முடியாது.

அது வாளாக இருக்கவேண்டிய நேரத்தில் வாளாக இருக்கும்-

கேடயமாகப் பயன்படவேண்டிய நேரத்தில் கேடயமாகப் பயன்படும் -

வேலாகக் குத்தவேண்டிய நேரத்தில், வேலாகக் குத்தும்.

முதலமைச்சரின் கையிலே திரிசூலம் இருக்கிறது -

பேராயுதம் - அறிவாயுதம்!

பெரியார் - அண்ணா - கலைஞர் என்கிற திரிசூலம் சுற்றிக் கொண்டிருக்கின்றன.

ஆகவேதான், இன எதிரிகள் எத்தனை சூலாயுதங்களைத் தூக்கினாலும்கூட, ஒன்றும் செய்ய முடியாத அளவிற்கு - பேராயுதங்கள்  இருக்கின்றன. காரணம், இது பெரியார் என்ற அறிவாயுதம்!

அறிவாலயத்தில் நின்றுகொண்டு சொல்கிறேன், அறிவாயுதம் கொண்ட ஒரு தத்துவ நூலை வெளியிட்டு இருப்பதற்காக, கோடான கோடி நன்றி!

இந்த நூலை நீங்கள் வாங்கினால் மட்டும் போதாது - படிப்பதற்கு அவ்வளவு கடினமாக இருக்கும் உங்களுக்கு. ஏனென்றால், 1580 பக்கங்கள் கொண்ட நூல் என்பதால். மூன்று முறை இந்த நூல்களைப் படித்துவிட்டேன். ஏனென்றால், இந்த நிகழ்ச்சி ஏற்கெனவே நடைபெற இருந்தது - தள்ளி வைக்கப்பட்டது.

எனவேதான், ஒவ்வொரு இளைஞரும் இந்த நூலைப் படிக்கவேண்டும்.

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

பண்புடை யாளர் தொடர்பு

என்பதை மிகத் தெளிவாக எச்சரிக்கிறார்கள்.

புத்தக வெளியீட்டு விழா அல்ல புத்தக அரங்கேற்ற விழா!

எனவே, இது நூல் வெளியீட்டு விழா அல்ல நண்பர்களே - நூல் அரங்கேற்ற விழா - ஒரு புத்தக அரங்கேற்ற விழா!

ஆகவே, அந்த அரங்கேற்றத்தை, யார்? எப்படி? செய்யவேண்டுமோ அப்படி செய்த எங்கள் முதலமைச்சருக்கு, வந்திருக்கின்ற உங்களுக்கு, வாங்கிப் படிக்கப் போகின்ற வாசகர்களுக்கு - எல்லோருக்கும் நன்றி! நன்றி!! என்று கூறி,

வாழ்க பெரியார்!

வளர்க  பகுத்தறிவு!

வெல்க திராவிடம்!

திராவிடல் வெல்லும் - நாளைய வரலாறு இதைத்தான் சொல்லும், சொல்லும் என்று கூறி என்னுரையை முடிக்கின்றேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்

No comments:

Post a Comment