Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
பெரியார் இல்லை என்றால் நாம் இல்லை - இப்பொழுது நடப்பது பெரியார் ஆட்சியே!
February 26, 2022 • Viduthalai

95 வயதிலும் தமிழர்களுக்காக அரும்பாடுபட்டவர் தந்தை பெரியார்

நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெருமிதம்!

சென்னை,பிப்.26- 95 வயதிலும் தமிழர்களுக்காக அரும்பாடு பட்டவர் தந்தை பெரியார். அவர் இல்லை என்றால் நாம் இல்லை. இந்த இயக்கம் இல்லை. இந்த ஆட்சி இல்லை  என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நேற்று (25.2.2022) நடைபெற்ற ப.திருமாவேலன் அவர்கள் எழுதிய “இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?” நூல் வெளியீட்டு அறிமுக விழாவில் தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நூலை வெளியிட்டு விழாப் பேருரை ஆற்றினார்.

விழாவில் தி.மு.க.தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது,

பொதுவாக பத்திரிகையாளர்கள்தான் மற்றவர்களைப் பார்த்துக் கேள்வி கேட்பார்கள், பதிலை வாங்குவதற்கு முயற்சிகள் செய்வார்கள். ஆனால் அருமைச் சகோதரர் திருமாவேலன் அவர்கள், ‘இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?’ என்ற கேள்வியை எழுப்பி - அதற்கு ஏறக்குறைய 1600 பக்கங்களில் அவரே பதிலையும் எழுதி இருக்கிறார்.

இது போன்ற நூலை எழுதுவது சாதாரணமானதல்ல!‘

‘இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?’ என்பது சாதாரணக் கேள்வி அல்ல! கொள்கை உரமும், திறனும் கொண்டவர்களால்தான் இத்தகைய கேள்வியைக் கேட்க முடியும். இதற்கு 1600 பக்கங்களில் பதில் எழுதுவது என்பது சாதாரணமானது அல்ல. ஆழமான படிப்பும், அதற்காகத் தன்னை முழுமையாக ஒப்படைக்கக்கூடிய எண்ணமும் இருப்பவர்களால்தான் அது முடியும்!

இத்தகைய திறமைகளைப் பெற்றவராக அவர் இருப்பதால்தான் இத்தகைய நூலை எழுத முடிந்திருக்கிறது. பல்கலைக்கழகங்களில் பாடப்புத்தகமாக வைக்கும் அளவுக்கு மிகப்பெரிய ஆய்வேடாக இது அமைந்திருக்கிறது என்பதை நான் பெருமையோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். என்னைப் பொறுத்தவரையில் - பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டிய பணியை தனிமனிதராக இருந்து நம்முடைய திருமாவேலன் அவர்கள் இதைச் செய்து முடித்திருக்கிறார்.

இந்தப் பெருந்தொகுப்பின் மூலமாக திருமாவேலன் அவர்கள், தந்தை பெரியாரின் குரலாக ஒலித்திருக்கிறார். திராவிட இயக்கத்தின் குரலாக ஒலிக்கிறார். தமிழினத்தின் குரலாக ஒலிக்கிறார்.

உண்மையான தமிழறிஞர்கள் சொல்ல வேண்டியதை திருமாவேலன் சொல்லியிருக்கிறார்!

தன்னை விமர்சிப்பவர்களைப் பார்த்து தந்தை பெரியார் என்ன பதில் சொல்லி இருப்பாரோ -பேரறிஞர் அண்ணா என்ன பதில் சொல்லி இருப்பாரோ-முத்தமிழறிஞர் நம்மு டைய தலைவர் கலைஞர் அவர்கள் என்ன பதில் சொல்லி இருப்பாரோ - அதனைத் திருமாவேலன் அவர்கள் சொல்லி இருக்கிறார். திராவிட இயக்க எல்லைகளைத் தாண்டி உண் மையான தமிழறிஞர்கள் என்ன சொல்லி இருப்பார்களோ, அதை இந்த நூலில் அவர் சொல்லி இருக்கிறார்.

அதற்குக் காரணம் திருமாவேலனுக்கு இருக்கின்ற தமிழ்ப் பாரம்பரியம் ஆகும். அய்ந்நூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய முதுமுனைவர் நம்முடைய இளங்குமரனாரின் குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர்.

இளங்குமரனார் அவர்கள் அண்மையில் மறைந்தபோது, தமிழ்நாடு அரசின் சார்பில் அவருக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அவர் எழுதிய நூல்கள் அனைத்தையும் நாட்டுடைமை ஆக்கியிருக்கிறது. அத்தகைய தமிழ்க் குடும்பம் இவருடையது. திருமாவேலனின் தந்தையார், பெரும்புலவர் படிக்கராமு அவர்களும், குறள் நெறியைப் பரப்ப தன்னை ஒப்படைத்துக் கொண்டவர். இராசபாளையம் திருவள்ளுவர் மன்றம் - கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றம் உருவாகக் காரணமாக இருந்தவர்.

தமிழை வாழ்விக்க வந்த குடும்பம் திருமாவேலன் குடும்பம்!

குறள் நெறி குறித்த நூல்களை அவர் எழுதி இருக்கிறார். சங்கரன்கோவிலில் 133 வாரங்கள் திருக்குறள் தொடர் சொற்பொழிவு நடத்தியவர். இவர்கள் பிறந்த ஊர் வாழ வந்தாள்புரம் என்பதாகும். தமிழை வாழ்விக்க வந்தவர்களாக அவர்கள் குடும்பம் இருந்த காரணத்தினால்தான் இப்படிப் பட்ட ஒரு நூலை அவரால் எழுத முடிந்திருக்கிறது. இத்தகைய தமிழ் வழியில் வந்தவராக இருப்பதால் திருமாவேலனும் தமிழ்ப் பற்றும், இனமான உணர்வும், திராவிட இயக்கத்தின் கொள்கை மீது அழுத்தமான பிடிப்பும் கொண்ட பத்திரி கையாளராகச் செயல்பட்டு வந்தார். அவர் எழுதிய புத்தக வெளியீட்டு விழா என்பதற்காக இதனை நான் சொல்ல வில்லை. அவருடைய எழுத்தாற்றலை 2015-ஆம் ஆண்டு நான் பங்கேற்ற பல பொதுக்கூட்டங்களில் வெளிப்படையாக நான் தெரிவித்திருக்கிறேன். அப்போது ஆட்சி செய்தவர் களின் அவலட்சணத்தைத் திருமாவேலன் எப்படி விரிவாக எழுதியிருக்கிறார் என்பதைப் பல்லாயிரக்கணக்கான உடன் பிறப்புகளின் முன்னால் பொது மேடையிலே படித்துக் காட்டியிருக்கிறேன்.

உள்ளாட்சித் துறையில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்கும்  முதல் பொது நிகழ்ச்சி இந்நூல் வெளியீட்டு விழா.    உள்ளாட்சியிலும் நல்லாட்சி - நம் ஆட்சிதான் என்பதை மிகத் தெளிவாக உருவாக்கிவிட்டு,  பெரியார் நூலினை வெளியீட்டு விழாவிற்கு வருகை புரிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தாய்க் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர்

கி.வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து, இயக்கத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்தார் (சென்னை, அண்ணா அறிவாலயம், 25.2.2022).

அவருடைய எழுத்துகள், நேர்மையானவை. பிரச்சினை களை முழுமையாக அலசி ஆராய்ந்து எழுதக் கூடியவர். பாராட்ட வேண்டிய நேரத்தில் பாராட்டியும் - விமர்சிக்க வேண்டிய நேரத்தில் விமர்சித்தும் எழுதி இருக்கிறார்.

 எழுத்தாளர் - பத்திரிகையாளரின் கருத்துரிமையை எப்போதும் மதிக்கின்ற இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். அதிலும், திராவிட இயக்கத்திற்கு எதிரானவர்களே பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் கோலோச்சுகிற நிலை யில், திராவிட இயக்கத்தின் வலிமையையும் பயன்களையும் உணர்ந்து, ஆரோக்கியமான விமர்சனங்களை முன்வைத்த பத்திரிகையாளர்களை - திராவிடச் சிந்தனை கொண்ட பத்திரிகையாளர்களை ஆதரித்து வளர்த்த இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்.

அத்தகைய பத்திரிகையாளர், இன்று கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் செய்திப்பிரிவின் தலைவராக இருந்து சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். செய்தியைத் தாண்டி இந்த இயக்கத்தின் முகத்தை நாட்டுக்கு எடுத்துக் காட்டுவதாக அதனை வடிவமைத்து நடத்தி வருகிறார். நம்முடைய இயக்கத்தின், திமுகவின் போர் முரசமாக இருக்கக்கூடிய ‘முரசொலி’ நாளிதழுக்கும் தினந்தோறும் தனது பங்களிப்பைச் அவர் செய்து கொண்டிருக்கிறார்.

 இத்தகைய பல்வேறு பணிகளுக்கு இடையில் அவர் இந்தப் புத்தகத்தை எழுதி இருப்பது உண்மையிலேயே எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவர் என்னிடம் இந்தப் புத்தகத்தைக் கொடுத்தபோது நான் அவரிடம் இதைக் கேட்டேன். “பத்து, பன்னிரண்டு ஆண்டுகளாக திரட்டி - புத்தகமாக எழுதி வந்தேன், இப்போதுதான் அதை முடித்திருக்கிறேன்” என்று சொன்னார்.

 நூறு ஆண்டுகால தமிழ்நாடு அரசியலை - நூற்றுக்கும் மேற்பட்ட தமிழறிஞர்களின் வரலாற்றை - 95 ஆண்டுகள் வாழ்ந்த ‘பகுத்தறிவுப் பகலவன்’தந்தை பெரியாரின் வாழ்க் கையை - 100 ஆண்டு கால வரலாறு கொண்ட திராவிடப் பேரியக்கத்தை - முழுமையாக உள்வாங்கி 1600 பக்கங் களுக்குள் சுருக்கி வழங்கியதை ஒரு மிகப்பெரிய சாதனை என்பதைத்தான் நான் சொல்ல விரும்புகிறேன்.

 ஒரு சிறு மூலிகையில் எத்தனையோ அரிய மருத்துவக் குணங்கள் இருப்பதைப்போல, இந்தப் புத்தகத்துக்குள் அவ்வளவு அரிய தகவல்கள் இருக்கின்றன.

ஒளிவு மறைவில்லாமல் தன்னுடைய கருத்துகளை எடுத்துரைத்ததற்காகக் கடுமையான விமர்சனங்களை எதிர் கொண்டவர் தந்தை பெரியார். அவர் தன் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசும்போது எதிரிகள் கல் வீசினார்கள். செருப்பு வீசினார்கள். பாம்பைக் கொண்டு வந்து வீசினார்கள். சாணி அடித்தார்கள். ஏன், மனித மலத்தைக் கூட வீசினார்கள். அத்தனையையும் எதிர்கொண்டு, அஞ்சாமல் தன்னுடைய கருத்துகளை எடுத்துரைத்தவர் தான் நம்முடைய தந்தை பெரியார் அவர்கள்.

 இன்றைக்கு மாநகராட்சியாக உள்ள கடலூரில் அன்றைக்கு அவர் மீது தாக்குதல் நடந்தது. எந்த இடத்தில் தந்தை பெரியார் மீது செருப்பையும் பாம்பையும் வீசினார்களோ, அதே இடத்தில், அவருடைய முன்னிலையிலேயே அவருடைய முழு திருவுருவச் சிலையைத் திறந்து வைத்தார், யார் தெரியுமா? நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்.

பெரியார் தமிழரா? எனக் கேள்வி கேட்டவருக்குத்தான் இந்த நூல் பதில்!

'செருப்பொன்று வீசினால் சிலை ஒன்று முளைக்கும்‘ என்று கவிஞர் கருணானந்தம் அன்றைக்கு ஒரு கவிதையிலேயே சுட்டிக்காட்டியிருக்கிறார்.

பெரியார் தமிழரா? என்று, ஒருவர், ஒரு கேள்வியைக் கேட்டார்.

அதற்குப் பதிலாகத்தான் இந்த மாபெரும் நூல் நமக்கெல்லாம் கிடைத்துள்ளது.

அவதூறு ஒன்றை வீசினால் ஆணித்தரமான ஒரு ஆவணம் கிடைக்கும் - அதுதான் திராவிட இயக்கம் என் பதை மெய்ப்பிக்கும் விழாவாக இந்த விழா நடந்து கொண்டிருக்கிறது.

தந்தை பெரியார் மீதான அவதூறுகள் அனைத்தையும் மறுக்கின்ற மிகப்பெரிய கலைக்களஞ்சியமாக இந்த நூல் அமைந்திருக்கிறது.

· பெரியார் தமிழைப் பழித்தார்.

· தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார்.

· தமிழ்ப் புலவர்களை விமர்சித்தார்.

· தமிழ் இலக்கியங்களை திட்டினார்.

· ஆங்கிலம் படிக்கச் சொன்னார்.

· தமிழன் என்று சொல்லாமல் திராவிடன் என்று சொல்லச் சொன்னார்.

- இப்படி பெரியார் மீது எத்தனையோ அவதூறுகளை வைத்தார்கள்.

பெரியாரின் சொல்லை வைத்தே பதில் சொல்கிறது இந்த நூல்!

 அவை அனைத்தையும் ஆணித்தரமாகப் பெரியாரின் சொல்லை வைத்தே - செயல்பாடுகளை வைத்தே மறுக்கிறது இந்த நூல்.

தமிழில் இருந்து மதத்தைப் பிரிக்கச் சொன்னார் பெரியார். தமிழின் போர்வைக்குள் ஒளிந்து கொண்டு மதம் பரவுகிறது என்று கண்டித்தார் பெரியார்.

தமிழோடு சேர்ந்து ஆங்கிலத்தையும் படித்து உலகப் போட்டியில் தமிழ்நாட்டு இளைஞர்கள் மோதத் தயாராக வேண்டும் என்று சொன்னார்.

ஆரியப் பண்பாட்டுக்கு எதிரானவர்களை திராவிடர்கள் என்று சொல்லிக் கொச்சைப்படுத்தினார்கள்.

கொச்சைப்படுத்தப் பயன்படுத்திய சொல்லையே அரசி யல் கருத்தியல் சொல்லாகத் தந்தை பெரியார் அவர்கள் மாற்றினார்கள்.

இதுதான் இந்தப் புத்தகத்தில் விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.

 தலைவர் கலைஞர் அவர்கள் ‘திராவிடம்‘ என்பது குறித்து மிகச் சுருக்கமாக ஒரு விளக்கத்தைச் சொன்னார்கள்.

“திராவிடம் ஒரு மொழிக்குரிய பெயர்!

திராவிடம் ஒரு நிலப்பகுதிக்கு உரிய பெயர்!

திராவிடம் ஒரு மொழிக்கூட்டத்துக்குரிய பெயர்!

திராவிடம் ஓர் இயலுக்குரிய பெயர்!

திராவிடம் ஒரு கருத்தியலுக்குரிய பெயர்!

திராவிடம் ஒரு வாழ்க்கை நெறிக்குரிய பெயர்!

திராவிடம் ஒரு நாகரிகத்துக்குரிய பெயர்!

திராவிடம் என்பது வந்தேறிகளுக்கு ஓர் எதிர்மறைப் பெயர்!

திராவிடம் ஓர் இயற்கைச் சித்தாந்தத்தின் பெயர்!

திராவிடம் ஒரு பண்பாட்டின் பெயர்!

திராவிடம் தமிழுக்கு மாற்றுப் பெயராகி அது மரபினமாகவும் பொருள் கொண்டு நிற்கிறது!

இதை அழிப்பேன் என்று பேசுகிறவன் நிலைத்து இருக்க மாட்டான்!

திராவிடம் இருக்கும். ஏனென்றால் அது ஒரு மானுடவியல்!

 ஆகவேதான் அது அரசியலாகிக் கோலோச்சுகிறது” - என்று தலைவர் கலைஞர் அவர்கள் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.

இந்த இலக்கணத்துக்கு விரிவான இலக்கியம்தான் இந்தப் புத்தகம்!

திராவிடம் வெற்றி பெறாமல் போயிருந்தால் -

ஆட்சி அமைக்காமல் போயிருந்தால் -

இந்தத் திராவிடத்தை யாரும் விமர்சித்திருக்க மாட்டார்கள்.

 எத்தகைய விமர்சனத்தையும் தனது அயராத உழைப்பால் - பரப்புரையால் - கொள்கை உறுதிப்பாட்டால் - சிந்தனை வளத்தால் தவிடுபொடியாக்கிய தந்தை பெரியாரின் வழியில் பயணிக்கிற இயக்கம்தான் பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்டு, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கட்டிக்காக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம்.

“இந்த ஆட்சி தந்தை பெரியாருக்குக் காணிக்கை” என்று திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியைக் குறிப்பிட்டவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிட வேண்டும் என்று அரும்பாடுபட்டவர் தலைவர் கலைஞர் அவர்கள். அந்த முள்ளை அகற்றுகின்ற வாய்ப்பு தமிழ்நாட்டு மக்களின் பேராதரவுடன் நடைபெறக்கூடிய என் தலைமையிலான ஆட்சியில் அமைந்ததைப் பெரும் பேறாக நான் கருதுகிறேன்.

‘திராவிட மரபினத்தைச் சேர்ந்தவன்’ என்று நான் சொல் வதைப் பார்த்தவர்களுக்கு எல்லாம் கோபம் வருகிறது. ஏனென்றால், வெற்றி பெற்றவன் சொல்கிறானே என்பதால் தான்.

 ஒரு காலத்தில் தோற்று ஓடியவர்களைத் திராவிடர்கள் என்றோமே - இன்று வெற்றி பெற்று நிற்கிறார்களே என்பது தான் அவர்களது கோபத்துக்கு முக்கியமான காரணம்.

 கல்வி மறுக்கப்பட்ட இனத்துக்கு கல்வி கொடுத்ததும் - பொருளாதார உரிமை பறிக்கப்பட்ட இனம் அனைத்துத் துறைகளிலும் மேன்மை அடைவதும் - சமூகரீதியாக ஒடுக்கப்பட்ட மனிதர்கள் உயர்ந்து நிற்பதும்தான் - தமிழ்ச் சமுதாயத்துக்கு கடந்த 100 ஆண்டுகளில் திராவிட இயக்கம் வழங்கியிருக்கக்கூடிய மாபெரும் கொடையாகும்.

 திராவிட இயக்கத்தின் சமூகநீதிக் கொள்கையை - திராவிட இயக்கத்தின் மாநில சுயாட்சி உரிமையை - இன்று அகில இந்தியாவும் எதிரொலிக்கத் தொடங்கி இருக்கும் காலத்தில், தமிழ்நாட்டில் சிலர் திராவிட இயக்கத்தை வீழ்த்துவோம் என்று பிதற்றுவதைப் புறந்தள்ளத்தான் வேண்டும்.

இது பெரியார் மண்!’ என்பதை எதிரிகளுக்குத் நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டும்!

‘இது பெரியார் மண்!’ என்பதை நம்முடைய இனத்தை அழிக்கக்கூடிய அரசியல் எதிரிகளுக்குத் திரும்பத் திரும்ப நினைவூட்டும் வகையில் நாம் செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

திராவிட இயக்கத்திற்கு நேரடி எதிரிகள் உண்டு, அவர் களை அடையாளம் கண்டுவிடலாம். மறைமுக எதிரிகள் உண்டு, அவர்களைக் கண்டுபிடித்துவிடலாம். எதிரிகளிடம் கைக்கூலிகளாக இருப்பவர்களும் உண்டு, அவர்களிடம் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

 திராவிட இயக்கத்தை வீழ்த்த முடியாது என்பதாலும், தந்தை பெரியாரின் பெரும்பணியை மறைக்க முடியாது என்பதாலும், நம் மீது அவதூறுச் சேற்றை வாரி இறைப்பதே எதிரிகளுக்கும் அவர்களின் கைக்கூலிகளுக்கும் முழுநேர வேலையாக இருக்கிறது.

அவதூறுச் சேற்றை ஆதாரங்கள் என்னும் தண்ணீர்ப் பாய்ச்சி மொத்தமாகத் துடைத்தெறிந்திருக்கின்ற நூல்தான் நம்முடைய திருமாவேலன் அயராது உழைத்து உருவாக்கி யுள்ள இந்த நூல் என்பதை மீண்டும் மீண்டும் நான் வலியுறுத்துகிறேன்.

இந்தப் புத்தகத்தில் தந்தை பெரியார் மட்டுமல்ல, தமிழ்நாட்டு அரசியலே முழுமையாக இருக்கிறது. தமிழுக்காக இதுவரை நடந்த போராட்டங்கள் இருக்கிறது. 1938-ஆம் ஆண்டு தமிழைக் காக்கவும் - இந்தி மொழிக்கு எதிராகவும் பெரும் போராட்டம் தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது.

அதனை நடத்தியவர் தந்தை பெரியார்.

1948 மொழிப்போராட்டத்தை நடத்தியவர் தந்தை பெரியார். அதற்குத் துணை நின்றவர் நம்முடைய பேரறிஞர் அண்ணா அவர்கள்.

1963-64 போராட்டத்தை நடத்தியவர்கள் பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும்.

1965 மொழிப்போராட்டத்தைத் தொடங்கியது திராவிட முன்னேற்றக் கழகம். அதனை மாணவர் சமுதாயம் மாபெரும் போராட்டமாக நடத்தியது.

அந்தப் போராட்டத்தைத் தூண்டியதாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும், முரசொலி மாறன் அவர்களும் தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்கள்.

இதை விடப் பெருமை நமக்கு கிடைக்கப் போகிறதா?

 1986 சட்ட எரிப்புப் போராட்டத்தில் கைதாகிப் பல்லாயிரக்கணக்கான கழகத் தோழர்கள் சிறையில் இருந்ததும் - பத்துக்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி பறிக்கப்பட்டதும், தமிழ்நாட்டில் தமிழைக் காக்க நடந்த போராட்ட வரலாறுகள் ஆகும்.

இந்த வரலாற்றின் பெரும்பகுதியை நம்முடைய திருமா வேலன் அவர்கள் இந்த நூலில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

 பெரியார் குறித்த ஆய்வு நூலாக இது இருந்தாலும் 1963, 64, 65 காலக்கட்டத்து திராவிட முன்னேற்றக் கழகத்து மொழிப்போராட்டத்தை, முழுமையான வரலாற்றை அவர் இதிலே கொடுத்திருக்கிறார். அந்தக் காலக்கட்டத்தில் தீக்குளித்த தியாகிகள் அனைவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீரர்கள் என்பதையும் இந்த நூலில் அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

இலங்கைத் தமிழர் உரிமைகளுக்காக பெரியார் - அண்ணா - கலைஞர் கொடுத்த குரல்!

 அதேபோல் இலங்கைத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்காகத் தொடக்க காலத்தில் இருந்து தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் முன்னெடுத்த முயற்சிகளின் தொடக்க காலங்களை எல்லாம் நம்முடைய திருமாவேலன் அவர்கள் இந்த நூலில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

 அகிம்சை வழியில் ‘தமிழ் ஈழம்’ கேட்டுப் போராடிய தந்தை செல்வா அவர்களும் - ஆயுத வழியில் ‘தமிழ் ஈழம்’ கேட்டுப் போராடத் தொடங்கிய சத்தியசீலனும் - தமிழ்நாடு வந்து முதலில் சந்தித்ததே தந்தை பெரியார் அவர்களைத்தான் என்ற வரலாறு இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 1976-ஆம் ஆண்டு ஜனநாயகம் காக்கும் போரில் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியை இழந்தபோது, அதற்குச் சொல்லப்பட்ட காரணங்களில் ஒன்று, இலங்கைத் தமிழர்களது உரிமைக்காக இங்கு இருந்தபடியே ஆதரவு தருகிறோம் என்பதுதான். தமிழ்நாட்டுக்கு வந்து பேட்டி அளித்த அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் அதனைக் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்.

 அதே போல், 1991-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கழக ஆட்சி கலைக்கப்பட்டது. அதற்குச் சொல்லப்பட்ட காரண மும், இலங்கைப் போராளிகளுக்கு ஆதரவாகக் கழகம் இருந்தது என்பது தான்.

எனவே ஈழத்தமிழர்க்காக இரண்டு முறை ஆட்சியை இழந்த இயக்கம்தான் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம்.

இந்த மேடையில் மானமிகு ஆசிரியர் அய்யா அவர்கள் இருக்கிறார்கள்.

பேராசிரியர் சுப.வீ. அவர்கள் இருக்கிறார்கள்.

அண்ணன் வைகோ அவர்களால் வர இயலாத சூழல்.

இந்த மூன்று பேரும் ஈழத்தமிழர் உரிமைக்காகப் போராடிய போராட்ட வாழ்க்கை என்பது கம்பீரமானது. பொடாவையும் தடாவையும் சந்தித்தவர்கள் நாம்.

ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்காக தன்னையே கருப்பு மெழுகுவத்தியாக ஆக்கி கரைந்த திராவிட இயக்கக் குடும்பங்களின் வாழ்க்கை வரலாறு என்பது வரலாற்றின் பக்கங்களில் மீண்டும் எழுதப்பட வேண்டியதாகும்.

 திருமாவேலனைப் போன்றவர்கள் - இந்த வரலாற்றினை தொடர்ச்சியை எழுதியாக வேண்டும். தமிழின எழுச்சிக்கும் மீட்சிக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த எழுபதாண்டு காலத்தில் செய்திருக்கக்கூடிய மகத்தான பணிகளை இன் றைய இளைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு இத்தகைய வரலாற்று ஆசிரியர்களுக்குத் தான் இருக்கிறது.

 ஒரு தேசிய இனத்துக்கு இலக்கணம் என்ன என்பதை சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் அவர்கள் வகுத்துத் தந்தார்கள்.

 வரலாற்று ரீதியாக உருவான மொழி, நாடு, பொருளாதார வாழ்வு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு நிலையான சமூகத்தையும், பண்பாட்டையும் கொண்டிருப்பதுதான் ஒரு தேசமாகும் என்று ஜோசப் ஸ்டாலின் அவர்கள் அன்றைக்கே சொல்லியிருக்கிறார்.

அத்தகைய இனம்தான் தமிழினம்!

தமிழ்க் காப்புப் போராட்டங்கள் நடத்தியது திராவிட இயக்கம் தான்!

இந்த இனத்தின் மொழியைக் காக்க தமிழ்க் காப்புப் போராட்டங்கள் அனைத்தையும் நடத்தியது திராவிட இயக்கம்தான்.

ஈராயிரம் ஆண்டு பழமை கொண்ட மொழிக்குச் செம்மொழித் தகுதியை பெற்றுத் தந்தது திராவிட முன்னேற்றக் கழகம்.

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு.

அய்ந்து முறை ஆட்சியில் இருந்தபோது -

· ‘மெட்ராஸ்’ என்ற பெயரை ‘சென்னை’ என ஆக்கியது!

· தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையை நிறைவேற்றியது!

· ஸ்ரீ, ஸ்ரீமதி என்பதற்குப் பதிலாக திரு, திருமதி சொல்லை சட்டப்பூர்வமாக ஆக்கியது!

· தலைநகரில் வள்ளுவர் கோட்டமும், கடல் நகரில் 133 அடியில் வள்ளுவர் சிலையும் அமைத்தது!

· திரும்பிய பக்கம் எல்லாம் திருக்குறளைத் தீட்டியது!

· தமிழ் வாழ்க என எழுத வைத்தது!

· சிலம்பின் பெருமையைக் காட்டக்கூடிய வகையில் பூம்புகார் கோட்டம் அமைத்தது!

· தமிழில் வழிபாடு செய்யும் உரிமையை வழங்கியது!

· ஆட்சிமொழியாகத் தமிழை முழுமைப்படுத்தியது!

- இப்படி எத்தனையோ சாதனைகளை நாம் செய்து கொண்டிருக்கிறோம்.

கடந்த ஒன்பது மாத காலத்தில்

· தமிழ்நாட்டு அரசுத் துறைப் பணியிடங்களில் நுழையக்கூடியவர்களுக்கு தமிழ் மொழி அறிவு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

· ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் உள்ளிட்ட மாநிலத்தில் உள்ள அனைத்து தெரிவு முகமைகளைப் பொறுத்தவரையில் கட்டாயத் தமிழ்மொழித் தகுதித் தேர்வு நடத்தப்படும்.

· ஆலயங்களில் அன்னைத் தமிழ் ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது.

· சங்க இலக்கிய நூல்களைக் குறைந்த விலையில் அச்சிட்டு வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்.

· மனோன்மணீயம் சுந்தரனார் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மாநிலப் பாடலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

· மதுரையில் கலைஞர் நினைவு நூலகம்

· தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடமை

· எழுத்தாளர்கள் பிறந்தநாளில் கூட்டங்கள்

· குறைந்த விலையில் சங்க இலக்கிய நூல்கள் வெளியீடு

· திராவிடக் களஞ்சியம் உருவாக்கம்

· இதழியலாளர்க்குக் கலைஞரின் எழுதுகோல் விருது

· உலகப் பல்கலைக்கழகங்களில் செம்மொழித் தமிழ் இருக்கைகள்

· நூலகங்களுக்குச் சிற்றிதழ்கள்

· இலக்கியமாமணி விருதுகள்

· உயரிய விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம்

· திசை தோறும் திராவிடம்

· முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம் - இப்படி தமிழாட்சி நடந்து வருகிறது.

இதுதான் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் விரும்பிய ஆட்சி!

இதுதான் -

தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகள் -

தமிழ்த் தென்றல் திரு.வி.க.

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம்

நாவலர் சோமசுந்தர பாரதியார்

திராவிட மொழிநூல் ஞாயிறு பாவாணர்

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

ஆகியோருடைய எண்ணங்களில், உள்ளங்களில் விரும்பிய ஆட்சி!

இதுதான் திராவிட மாடல் ஆட்சியாகும்!

அனைத்து சமூகத்திற்கும் நன்மை செய்வது -

அனைத்து மக்களது தேவைகளையும் நிறைவு செய்வது-

அனைத்து மாவட்டங்களையும் வளர்த்தெடுப்பது -

அனைத்துத் தொழில்களுக்கும் முக்கியத்துவம் தருவது - இதுதான் திராவிட மாடல் ஆட்சி.

எல்லார்க்கும் எல்லாம் என்பதுதான் இதன் முழுமையான உள்ளடக்கம் ஆகும்.

 எல்லார்க்கும் எல்லாம் என்பது கிடைத்துவிடக் கூடாது என்று சிலர் நினைக்கிறார்கள். அவர்கள்தான் நம்மை எதிர்க்கிறார்கள்.

அவர்களுக்குச் சிலர் கைக்கூலிகளாக இருக்கிறார்கள்.

 தமிழின் ஆட்சியாக - தமிழ் இனத்தின் ஆட்சியாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி இருப்பதை பார்த்து பலருக்கும் வயிற்றெரிச்சலாக இருக்கிறது.

 அதனால்தான் எதையாவது சொல்லி நம்மை திசை திருப்புவார்கள். அர்த்தம் இல்லாத அவதூறுகளை அள்ளி வீசுவார்கள். அவை அனைத்தையும் தடுக்கின்ற கேடயத் தைத் தான் திருமாவேலன் அவர்கள் தயாரித்திருக்கிறார்கள். அதற்கான போர்வாளைத்தான் அவர் உருவாக்கியிருக்கிறார்.

அவர் தயாரித்துக் கொடுத்துள்ள இந்த அறிவாயுதத்தை அறிமுகம் செய்வதில் நான் அளவுகடந்த மகிழ்ச்சி அடைகிறேன், பெருமைப்படுகிறேன்.

இதுபோன்ற திராவிட இயக்கப் படைக்கலன்கள் நிறையத் தேவை.

நமக்குத் தமிழும் திராவிடமும் ஒன்றுதான்.

தமிழ் நமது உணர்வு.

திராவிடம் நமது அரசியல் சமூகவியல் உரிமை.

திராவிடம் என்றால் தமிழ் உணர்வு.

திராவிடம் என்றால் பகுத்தறிவு,

திராவிடம் என்றால் சுயமரியாதை,

திராவிடம் என்றால் சமூகநீதி,

திராவிடம் என்றால் மனிதநேயம்.

 திராவிடம் என்றால் அனைவருக்கும் அனைத்தும் என்பதை நோக்கிய இலட்சியப் பயணம். அத்தகைய இலட்சியப் பயணத்துக்கு இதுபோன்ற ஏராளமான நூல்கள் நமக்குத் தேவை.

 இத்தகைய உணர்வை விதைப்பதற்காகத்தான் 95 வயதிலும் தமிழர்களுக்காக அரும்பாடுபட்டார் தந்தை பெரியார். அவர் இல்லை என்றால் நாம் இல்லை. இந்த இயக்கம் இல்லை. இந்த ஆட்சி இல்லை.

திராவிட இயக்கம் தான் தமிழர்களின் மகத்தான இயக்கம்!

தந்தை பெரியார், தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர் என்று நூலாசிரியர் திருமாவேலன் எழுப்பியுள்ள அந்தக் கேள்வியை நானும் கேட்கிறேன், நான் அல்ல, நீங்களும் கேட்க வேண்டும்.

 திராவிட இயக்கம்தான் தமிழர்களின் மகத்தான இயக்கம். இது தமிழர் இயக்கம் இல்லை என்றால் வேறு எது தமிழர் இயக்கம் என்று நான் கேட்க விரும்புகிறேன்.

 தியாக வரலாறான நம்முடைய கடந்த காலத்தை எடுத்துச் சொல்ல - இன்றைய திரிபுவாதிகளுக்குப் பதில் சொல்ல - வாளும் கேடயமுமான ஒரு நூலை தீட்டியிருக்கக்கூடிய திருமாவேலன் அவர்களை மனதாரப் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன், போற்றுகிறேன். அவரது அறிவியக்கப் பயணம் தொடரட்டும் என்று அனைவரின் சார்பில், ஏன் திராவிட இயக்கத்தின் சார்பில் அவரை வாழ்த்துகிறேன்.

 நன்றி வணக்கம்!

இவ்வாறு முதலமைச்சர் மு.கஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
தமிழ்நாடு அரசு குறிப்பாக உயர்கல்வித் துறை தலையிட்டு உடனே தடுக்கட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை
February 06, 2023 • Viduthalai
Image
ஆழந்தெரியாமல் காலை விட்டு அவதிப்படாதீர்! ‘இந்து' ஏட்டின் ஆசிரியர் மாலினிக்கு எச்சரிக்கை!
February 02, 2023 • Viduthalai
Image
இனமலரின் ஈன புத்தி
February 05, 2023 • Viduthalai
Image
திராவிடர் கழகத் தலைவர்மீது வன்முறையை தொடர்ந்து தூண்டும் 'தினமலர்!'
February 05, 2023 • Viduthalai
ஈரோடு முதல் கடலூர் வரை சுற்றுப்பயணம்
February 02, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn