இந்து அறநிலையத் துறை அதிகாரிகள், துறை அமைச்சரின் பணி பூஜை புனஷ்காரங்கள் செய்வதல்ல! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 27, 2022

இந்து அறநிலையத் துறை அதிகாரிகள், துறை அமைச்சரின் பணி பூஜை புனஷ்காரங்கள் செய்வதல்ல!


இந்து அறநிலையத் துறை அதி காரிகள், அமைச்சர் உள்ளிட்டோரின் வேலை கோவில் பூஜை புனஷ்காரங்களில் ஈடுபடுவதல்ல. கோவில் சொத்துகள், வரவு - செலவுகள் உள்ளிட்ட நிர்வாகப் பணிதான் அவர்களின் வேலை  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத் துள்ளார்.

அறிக்கை வருமாறு:

தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத் துறை அமைச்சர் மாண்புமிகு பி.கே.சேகர்பாபு அவர்கள் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

‘‘இந்து அறநிலையத் துறை வரலாற்றில் முதல் முறையாக மகா சிவராத்திரியன்று 100-க்கு மேற்பட்ட ஆன்மிகக் கலைஞர்கள் இணைந்து மார்ச் 1 ஆம் தேதி மாலை 6 மணிமுதல் காலை 6 மணிவரை பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் சிவராத்திரி விழாவில் 40 ஆயிரம் பேர் பங்கேற்பர். எந்த ஆண்டும் இல்லாத வகையில், இந்த ஆண்டு சிவாலயங்கள் அனைத்தும் மகாசிவராத்திரியன்று வண்ண விளக்குகளால் ஜொலிக்கும்'' என்று விரிவாக செய்தியாளர்களிடம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் விளக்கி யிருக்கிறார்.

இந்து அறநிலையத் துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர் என்பது செய்தி.

இந்து அறநிலையத் துறை, அதன் அதிகாரிகள், அமைச்சர் போன்றவர்களின் பணி என்பது பூஜை புனஷ்காரங்களில் ஈடுபடுவதோ, செயல்படுவதோ அல்ல.

கோவில் சொத்து, வரவு - செலவுகளைக் கண் காணிப்பதும், சரி பார்ப்பதும், நிர்வகிப்பதும் மட்டும் தான்.

நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்கள், அண்ணா முதலமைச்சராக இருந்தபோது, இந்து அறநிலையத் துறையும் அவர் பொறுப்பில் இருந்தது. சிதம்பரம் நடராஜன் கோவிலுக்கு நாவலர் சென்ற போது,  தீட்சதர்கள் அவருக்கு அளித்த பிரசாதத்தை இந்தக் கையில் வாங்கி, அந்தக் கைவழியாக விலக்கிவிட்டார். அப்பொழுது ஆன்மிகவாதிகள் பெரிய அளவில் பிரச்சினையாக்கியபொழுது, ‘‘இந்து அறநிலையத் துறை அமைச்சர் பணி என்பது - ஆறு மரக்கால் அரிசி என்றால், அதைச் சரியாக அளந்து போடுகிறார்களா என்று கண்காணிப்பதே தவிர, பூஜை புனஷ்காரங்களில் ஈடுபடுவது இல்லை'' என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் - அமைச்சர் நாவலர்.

தந்தை பெரியார் ‘‘பலே, பலே நெடுஞ்செழியன்'' என்று பாராட்டி அறிக்கை வெளியிட்டார் என்பதை நினைவுபடுத்துகிறோம். (‘விடுதலை', 16.4.1967).

இந்து அறநிலையத் துறை அதற்குரிய பணிகளை மட்டும் செய்யட்டும் என்பதே நமது வேண்டுகோள்!

பார்ப்பனர்களைத் திருப்தி செய்வது என்பதற்காக விதிகளை மீறி பகுத்தறிவாளர்கள், மதச் சார்பற்ற வர்களது மனதில் புண்ணை ஏற்படுத்தலாமா?

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் பிரச்சினையில் சிறப்பாக செயல்பட்ட அமைச்சர், இதில் முரணாக ஈடுபடலாமா?

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம் 

சென்னை      

27.2.2022            

No comments:

Post a Comment