கலைஞர் அரங்கில் நடந்த நூல் வெளியீட்டு விழா துக்கடா செய்தியா? 'தினத்தந்தி' எந்தத் திசையில் செல்லுகிறது? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 27, 2022

கலைஞர் அரங்கில் நடந்த நூல் வெளியீட்டு விழா துக்கடா செய்தியா? 'தினத்தந்தி' எந்தத் திசையில் செல்லுகிறது?

 கவிஞர் கலி. பூங்குன்றன்

துணைத் தலைவர், திராவிடர் கழகம்

தமிழன் ஆதித்தனார் அவர்களால் அரும்பாடுபட்டு அங்குலம் அங்குலமாக வளர்க்கப்பட்ட 'தினத்தந்தி' எந்தத் திசையில் இப்போது பயணிக்கிறது?

கடந்த 25ஆம் தேதி மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில், கலைஞர் அரங்கில், தமிழ் நாடறிந்த மூத்த பத்திரிகையாளர், 'கலைஞர் தொலைக்காட்சி' தலைமை ஆசிரியர் தோழர் . திருமாவேலன் அவர்களால் எழுதப்பட்ட 'இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?' என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

அந்தச் செய்தியைத் 'தினத்தந்தி' எப்படி வெளியிட்டுள்ளது? மூன்றாம் பக்கத்தில், மூன்று பத்தியில் ஏதோ 'கடனுக்காக' வெளியிட்டுள்ளது.

முதல் அமைச்சர் தலைமை தாங்கி நூலை வெளியிட்டுப் பேசுகிறார். தமிழ்நாட்டின் இன்றைய மூத்த தலைவராக இருக்கக் கூடிய திராவிடர் கழகத் தலைவர் - 87 ஆண்டு கால 'விடுதலை'யில் 60 ஆண்டு கால ஆசிரியர் என்ற சாதனைக்குரிய மானமிகு கி. வீரமணி அவர்களும், திராவிட இயக்கப் பாரம்பரியக் குடும்பத்தில் வழிவழியாக வந்த- நாடறிந்த தமிழகப் பேச்சாளர் - தமிழ்நாடு அரசின் சமூகநீதிக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் - திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் மானமிகு சுப. வீரபாண்டியன் ஆகியோர் நூல்களைப் பெற்றுக் கொண்டு உரையாற்றியுள்ளனர். இயக்குநர் அமிர்தம், நூலாசிரியரின் தந்தையாரும், பெரும்புலவருமான மு. படிக்கராமு ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.

25ஆம் தேதியன்று இதைவிட மிகப் பெரிய நிகழ்ச்சி அப்படி ஒன்றும் தமிழ்நாட்டில் நடந்திடவும் இல்லை.

மண்டபம் முழுமையும் மக்கள் நிரம்பி வழிந்தனர். அமைச்சர்ப் பெரு மக்களும், பல்துறை அறிஞர்களும் நிரம்பி இருந்தனர். கலைஞர் தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பு மூலம் இலட்சக்கணக்கான மக்கள் உலகெங்கும் பார்த்து மகிழ்ந்தனர். 

இவை எல்லாம் 'தினத்தந்திக்கு' 'உப்புக்குச் சப்பாணி' சமாச்சாரங்களாகப் போய் விட்டனவா?

நிகழ்ச்சியில் பங்கு கொண்டு நூலைப் பற்றிய அறிமுகவுரையை நிகழ்த்தினார் பேராசிரியர் சுப.வீ. அவர் பெயரைக்கூடக் குறிப்பிட 'தினத்தந்தி'க்கு ஏனோ மனம் வரவில்லை.

முதல் அமைச்சர் வெளியிட நூலைப் பெற்றுக் கொண்ட திராவிடர் கழகத் தலைவர் தமிழ்நாட்டின் மூத்த தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் பெயரை எப்படி வெளியிட்டுள்ளது தெரியுமா?

'இந்த விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.'

- இதுதான் 'தினத்தந்தி' வெளியிட்டுள்ள 'பத்திரிகை தர்ம செய்தி முறை!'

அண்ணா ஒரு முறை சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது. அப்பொழுதெல்லாம் 'இந்து' ஏடு 'Annadurai Also Spoke'  என்று வெளியிடுமாம். அதற்கு அண்ணா அவர்கள் அவருக்கே உரித்தான முறையில் பதில் சொல்லியிருக்கிறார்.. 'அண்ணாதுரை பாடினார் என்று வந்து விடக் கூடாதல்லவா' என்று அண்ணா சொன்னதுண்டு.

அதே பாணியில்தான் 'வீரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்' என்று செய்தி போடுகிறது 'தினத்தந்தி'.

இவ்வளவுப் பெரிய விழா நடந்திருக்கிறது. ஒரு படம் கூடப் போடவில்லை. பார்ப்பன தமிழ் ஏடான 'இந்து தமிழ் திசை'கூட வண்ணப் படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் பெயர்களை எல்லாம் தவறாமல் முறையாக வெளியிட்டுள்ளது.

தமிழன் ஏடு என்று நாமெல்லாம் பெருமைப்படும் 'தினத்தந்தி'யோ திசை மாறி யாருக்கோ 'சேவகம்' செய்ய முந்துறுகிறதே - இது நியாயம்தானா?

தமிழன் ஏடு 'தினத்தந்தி'யை வாங்குவீர் என்று தீர்மானம் போட்ட இயக்கம் திராவிடர் கழகம்.

தந்தை பெரியாரோடு மிகவும் நெருக்கமாக - அன்புக்குப் பாத்திரமாக இருந்தவர் - இணைந்து போராட்டங்களை நடத்தியவர் சி.பா. ஆதித்தனார் அவர்கள் - அந்தத் தந்தை பெரியார் பற்றிய சிறப்பான நூல் வெளியீட்டு விழாவை தமிழன் ஏடு எப்படி வெளியிட்டு இருக்க வேண்டும்? என்ன செய்வது தமிழனின் நன்றி உணர்ச்சி அம்மட்டே!

சி.பா. ஆதித்தனாரைக் கேலி செய்து 'தினமலர்' பார்ப்பன ஏடு செய்தி வெளியிட்டபோது 'தினத்தந்தி' ஏட்டின் பக்கம் நின்று முழக்கமிட்டது திராவிடர் கழகமும், 'விடுதலை'யும்.

'தினத்தந்தி'க்கு நெருக்கடிவரும் போதெல்லாம் 'தினத்தந்தி'யின்  முக்கிய தலைமையினர் உள்பட தேடி வருவது பெரியார் திடலைத்தான்!

என்ன செய்வது! தமிழனின் 'குணமே' இந்த நிலையில்தான் இருக்கிறது! அண்மைக் காலமாக 'தினமலருக்குப்' போட்டியாக 'தினத்தந்தி' கிளம்பியிருப்பதாக ஒரு பொதுவான கருத்து தமிழர்களிடம் நிலவி வருகிறது. சங்கிகளுக்கு ஆதரவாக சரிகைக் கொடியைத் தூக்கி நிற்கிறது; பா...வின் பக்கம் நின்று 'பராக்' பாடுவதில் - பக்க வாத்தியம் வாசிப்பதில் பரக்கப் பரக்க நிற்கிறது.

இலக்கியம், தமிழ் உணர்வு, தமிழர் பண்பாடு, தமிழர் வீரம், திருக்குறளின் மாண்பு பற்றி எல்லாம் வாரம் ஒருமுறை 'தினத்தந்தி'யில் ஒருமுழு பக்கம் வந்ததுண்டு (மூத்த பத்திரிகையாளர் தோழர் நாராயணன் பொறுப்பாக - சிறப்பாக அப்பணியைச் செய்துவந்தார்).

இப்பொழுது அது திடீரென்று நிறுத்தப்பட்டது ஏன்? அதன் பின்னணி என்ன? தமிழ் உணர்வு, திராவிடப் பண்பாட்டுச் செய்திகள் பரவினால் அது "யாருக்கோ" சங்கடம் என்ற உண்மையைப் புரிந்து கொண்டு, சங்பரிவார் மேலிடத்து, ஆட்சி அதிகார அழுத்தத்தால் அதற்கு மூடு விழா நடத்தப்பட்டு விட்டது.

இவை எல்லாம் யாருக்கும் புரியாது என்று மனப்பால் குடிக்க வேண்டாம். நுண்மாண் நுழைபுலத்தோடு எதையும் புரிந்து கொள்ளும் இயக்கம் திராவிடர் கழகமாயிற்றே!

தமிழர் ஆதரவால், பொருளால் நடத்தப்படும், உண்மையான "நாம் தமிழர்" ஆதித்தனாரால் பார்ப்பன ஆதிக்கப் பத்திரிகை உலகத்தை எதிர்த்து அரும்பாடுபட்டு வளர்த்தெடுக்கப்பட்ட 'தினத்தந்தி' திசை மாற வேண்டாம் - தமக்குத் தாமே தீங்கினை வலிந்து வரவழைத்துக் கொள்ளவும் வேண்டாம்! இன உணர்வோடு தான் இதனை எழுதுகிறோம். திருந்தினால் நல்லது  - இந்த அளவுக்கு இது போதும் என்று எண்ணுகிறோம்! மாற்றம் ஏற்பட்டால் மகிழ்ச்சியே!

 

No comments:

Post a Comment