தென்மாபட்டில் சுயமரியாதை இயக்கமும், வைதீகர்களின் நடுக்கமும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 26, 2022

தென்மாபட்டில் சுயமரியாதை இயக்கமும், வைதீகர்களின் நடுக்கமும்

(1925-இல் வைக்கம் வீரர் தந்தை பெரியாரால் சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டு அதன் தாக்கம் நாடு பூராவிலும் பரவியது. ஆங் காங்கு வாசக சாலை தோன்றி சுயமரியாதைப் பிரச்சாரங்களும், புரோகித மறுப்புத் திருமணங்களும் பெருமளவில் நடந்து வந்தன. பல இடங்களில் பார்ப்பன தாசர்களாகிய சில வைதீகப் பிடுங் கல்கள் சுயமரியாதைப் பிரச்சாரத்தை எதிர்த்தன. அப்படிப்பட்ட ஒரு எதிர்ப்பு, தென்மாபட்டு என்ற ஊரில் வைதீகர்கள் சேர்ந்து கூட்டம் கூட்டி செய்த தீர்மானங்களைப் படித்தால் தற்போது நமக்கு மிஞ்சுவது நகைப்பே. அவ்வூரில் நடைபெற்ற வைதீகர்களின் கூட்டத்தைப் பற்றியும், அவர்கள் செய்த தீர்மானங்களைப் பற்றியும் கீழ்வரும் பகுதி நமக்குத் தெரிவிக்கின்றது.)

இவ்வூரில் சமீப காலமாய் மக்களுக்கிடையே பெரியதோர் பரபரப்பேற்பட்டிருக்கிறது. காரணம், இங்கு வைக்கம் வீரர் வாசகசாலை தோன்றி அதனால் இடைவிடாது செய்துவரும் சுயமரியா தைப் பிரச்சாரங்களும், திருமணங்களுமேயாகும். இதனால், தங்கள் பிழைப்புக்கு ஆபத்து வந்து விட்டதை உணர்ந்து பார்ப்பனர்கள் தங்கள் தாசர் களாகிய சில வைதீகப் பிடுங்கல்களைத் தூண்டி விட அதைக் கேட்ட அவ்வைதீகர்கள் பயந்து நடுங்கி சுயமரியாதையை இவ்வூரில் பரவவிடாது செய்துவிட வேண்டுமென்று கருதிக் கூட்டங்கள் கூட்டுவதும் தீர்மானங்கள் செய்வதும் ஆகிய வேலைகளில் தலைப்பட்டிருக்கின்றனர். இவர் கள் கூட்டம் போடுவதைப்பற்றியும் தீர்மானங்கள் செய்வதைப்பற்றியும் யாருக்கும் கவலை இல்லை. ஆனால், பொது அறிவுடைய மக்கள் எள்ளி நகையாடும்படி தீர்மானம் செய்துகொண்டு இப் பொழுது தலையைத் தொங்கவிட்டுக் கொண்டி ருக்கிறார்களென்பது தான் நமக்குப் பரிதாபமாக இருக்கிறது. அதாவது, உண்மையில் ஒரு -கூட்டம் கூடி கீழ்க்கண்ட தீர்மானத்தை நிறைவேற்றியிருக் கிறார்கள்.

முதலாவது - சுயமரியாதை இயக்கத்தை நாம் ஏற்றுக் கொள்ளக்கூடாது. மீறி ஏற்றுக் கொண்டவர்கள் காராம் பசுவைக் கொன்ற பாபத்திற்கு ஆளாவார்களாக (வெட்கம் வெட்கம்). இரண்டா வது - சுயமரியாதை முறையில் நடைபெறும் சுபாசுப காரியங்களில் தலையிடுவோர்களைத் தங்கள் ஜாதியினின்றும் விலக்கி வைப்பது.

மூன்றாவது - இவ்வூர் வாசகசாலை களுக்குப் போய்ப் படிப்பவர்களுக்கு அபராதம் விதிப்பது.

அந்தோ! இத்தகைய மூடமதி பெற்ற மக்கள் நம் கண்முன் படும்பாடு உள்ளம் வாடுகிறது. இந்தஇருபதாம் நூற்றாண்டிலும் இத்தகைய உரு வங்கள் நமது பூமியில் நடமாடுவது தமிழ்த்தா யின் துர்ப்பாக்கியமேயாகும். வாசக சாலைக்குச் சென்று படிப்பவர்களுக்கு அபராதம் விதிப்பதென்றால் இதைவிடக் கொடுமையானதும் மக்களை மடை யரென்று நினைப்பதுமான தீர்மானம் வேறுண்டோ? கல்வியைப் பரப்புவதற்காக நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரையிலும் காருண்ய கவர்ன்மெண்டாராலும், பச்சையப்ப முதலியாரவர்களாலும், ராஜா சர் அண்ணாமலை செட்டியாரவர் களாலும், இன்னும் அநேக தர்ம சிந்தனையுடையதனவந்தர்களாலும் கல்வியின் பயனைக் கருதி கோடிக் கணக்கான பொருள்களைச் செலவு செய்து கணக்கற்ற கலாசாலைகளையும் பல்கலைக்கழகங்களையும் நிறுவி மக்களை மக்களாகச் செய்துவரும் இந் நாளில் இந்தக் குடுக்கைகள் செய்த தீர்மானத் திற்குப் பொருளுண்டா? என்பதை அறிஞர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டுகின்றோம்.

நிற்க; சுயமரியாதையின் உண்மை யான நோக் கங்களை உணர்ந்து அதில் ஈடுபடும் மக்களைத் தடுக்க இவ்வைதீகச் சபையார்க்கு என்ன உரிமை யுண்டு? பண்டைய வழக்கம் பண்டைய வழக்கம் என்று குருட்டுத்தனமாக உளறிக் கொண்டு முன் னேறும் மக்களைப் பின் னுக்கிழுப்பது அறிவுட மையாகுமா வென்று கடாவுகிறோம்.

தன் மதிப்பைக்காக்க வகையறி யாமல் கிழிந்த பஞ்சாங்கத்தையும் காய்ந்த தருப்பையையும் கையிற்றாங்கி பாமரர்களை வஞ்சித்துப் பொருள் பறித்துண்ணும் புரோகிதக் கூட்டத்திற்கு வக்காலத்து வாங்கிப்பேசும் ஒரு சில வைதீக மூட் டைகளின் பிற்போக்கான புத் தியையும் தீர்மானத்தையும் நினைக்க நினைக்க விடா நகைப்பையும், வருத்தத்தையும் உண்டாக்கு கிறது. சுயமரியாதை யின் உணர்ச்சியும் எழுச்சியும் ததும்பும் இக்கால வீர இளைஞர்களிடம் இந்த வைதீகப் பித்த லாட்டங்கள் பலிக்காதென்பதை சுயநலப் புலிகள் உணர்வார்களாக.

- குடிஅரசு - 01.12.1929

 பக்கம் - 9

No comments:

Post a Comment