ஒற்றைப் பத்தி - குடும்பத் தலைவிகளின் தற்கொலைகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 7, 2022

ஒற்றைப் பத்தி - குடும்பத் தலைவிகளின் தற்கொலைகள்!

பாரத மாதா' என்று இந்தியாவைப் பயப் பக்தியோடு சொல்லுவதுண்டு. பெருமையாக ஒன்றை உயர்த்தி விட்டால், அதற்குப் பிறகு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் அல்லவா! இந்த உளவியலை சரியாக உணர்ந்து பெண்களைத் தாழ்மைப்படுத்துவதில் ஆண்கள் கைதேர்ந்தவர்கள்.

இதோ ஒரு புள்ளி விவரம்:

2020 ஆம் ஆண்டில்பாரத மாதா' என்னும் இத்திருநாட்டில் குடும்பத் தலைவி களின் தற்கொலைகள் 14.5 விழுக்காடு.

2021 ஆம் ஆண்டில் மட்டும் குடும்பத் தலைவிகளின் தற்கொலைகள் 22,372. சற்றுப் புரியும்படிச் சொல்ல வேண்டுமானால், நிமிடம் ஒன்றுக்கு 2.5 விழுக்காடு குடும்பத்தலைவிகள் தற்கொலை!

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தற்கொலைகளைப் பற்றிப் புள்ளி விவரம் எடுத்த 1997 ஆம் ஆண்டுமுதலே ஒவ்வொரு ஆண்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத் தலைவிகள் தற்கொலை செய்துகொள்வதாக அறிய முடிகிறது.

இதற்கெல்லாம் என்ன காரணம்? தலையெழுத்துப் படிதான் எல்லாம் நடக்கும் - அதைப்போல்தான் இதுவும் என்று கூறப் போகிறார்களா?

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாகக் கூறுகிறார்களே - ஆனால், குடும்பத் தலைவிகள் ஆண்டுதோறும் தற்கொலை செய்துகொண்டுநரகத்திற்குப்' போகப் போகிறார்களா?

ஜாதகம் பார்த்து, லக்கனம் பார்த்து, சுபயோக சுபதினத்தில் அய்யர் மந்திரங்கள் ஓத, அக்னி வலம் வந்து, முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியம் அளிக்க, உதயாதி மங்கள நேரத்தில், பாணிக் கிரகமோ, சுபமுகூர்த்தமோ நடந்தும், குடும்பத் தலைவிகள் இப்படி ஆயிரக்கணக்கில் தற்கொலை செய்துகொள்வது ஏன்? ஏன்?

வாழ்க்கையில் தன் துணைவனைத் தானே தேடிக் கொள்ளும் உரிமை பெண்ணுக்கு வந்து சேரும்வரை இதனைத் தடுக்க முடியாது - தடுக்கவே முடியாது!

 - மயிலாடன்

No comments:

Post a Comment