ஒத்தக் கருத்துள்ளோரை ஒருங்கிணைத்து நாடு தழுவிய இயக்கம் நடத்துவோம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 6, 2022

ஒத்தக் கருத்துள்ளோரை ஒருங்கிணைத்து நாடு தழுவிய இயக்கம் நடத்துவோம்!

 *              நீட்: தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க உள்துறை அமைச்சர் மறுப்பது ஜனநாயக அணுகுமுறைதானா?

* தமிழ்நாடு ஆளுநர் நீட் பற்றிய தமிழ்நாடு சட்டமன்றத்தின் மசோதாவை காலவரையறையின்றி நிறுத்தி வைப்பதா?

நீட் தொடர்பாக தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க மறுக்கும் உள்துறை அமைச்சர் ஒரு பக்கம்; தமிழ்நாடு சட்டப்பேரவை யில் நிறைவேற்றப்பட்ட 'நீட்'டுக்கு விலக்குக் கோரும் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் தமிழ்நாடு ஆளுநர் காலவரையறையின்றி நிறுத்தி வைப்பது இன்னொரு பக்கம்; ஜனநாயக மாண்புக்கும், அரசமைப்புச் சட்டத்துக் கும் விரோதமான நடவடிக்கைகளைக் கண் டித்தும், எதிர்த்தும் ஒத்த கருத்துள்ளவர்களை ஒருங்கிணைத்து நாடு தழுவிய அளவில் இயக்கம் நடத்துவோம் என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

மருத்துவப் படிப்புக்கான தேர்வினை ஒன்றிய அரசே கையிலெடுத்துக்கொண்டதும், குளறுபடிகளுக்கு - ஆண்டுதோறும் பஞ்சமில்லாததாகவும் கடந்த 3 ஆண்டுகளுக்குமேல் நடைபெற்று வருவதனை தமிழ் நாடு அரசு ஏற்கவில்லை; இதன் காரணமாக, இதுவரை 18-க்கும் மேற்பட்ட மாணவச் செல்வங்கள் தற்கொலை செய்துகொண்ட அவலமும், வேதனையும் ஏற்பட்டிருக் கின்றன.

சமூகநீதி மண்ணான

இந்த பெரியார் பூமி எதிர்த்தே வருகிறது

ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்கள் லட்ச லட்சமாகக் கொட்டிக் கொடுத்து, 'கோச்சிங்' கிளாஸ் சேர்ந்து படித்து, இந்த நீட் தேர்வினை எதிர்கொள்வது அரசமைப்புச் சட்ட விரோதம் மட்டுமல்ல; நியாய விரோதமும்கூட! இதனை தொடக்கம் முதலே சமூகநீதி மண்ணான இந்த பெரியார் பூமி எதிர்த்தே வருகிறது.

மாநில அரசின் கருத்துக்கும், கொள்கைக்கும் முரணாக ஒன்றிய அரசு திணிப்பதை எதிர்த்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரண்டுமுறை தனிச் சட்டங்கள் ஒருமனதாக நிறைவேற்றியதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற காத்திருக்க வேண்டியுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில்  நிறைவேறிய சட்டங் களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பவேண்டிய சட்டக் கட்டாயம் உள்ள தமிழ்நாடு ஆளுநர், அனுப் பாமலே பல மாதங்கள் கிடப்பில் போட்டு வைத்துள்ளார்.

முதலமைச்சரும், அமைச்சர்களும், அதிகாரிகளும் ஆளுநரை இதற்காகவே சந்தித்தும் இன்றுவரை பலன் ஏதுமின்றியே இருக்கிறது!

பல கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும், தலைவர் களும் இதுபற்றி வற்புறுத்தியும் பதிலே இல்லை.

இதற்காக தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல கட்சிகளைச் சார்ந்தவர்கள், தி.மு.., .தி.மு.., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத் தைகள் கட்சித் தலைவர்கள் ஆகியோர் குடியரசுத் தலைவரைச் சந்திக்க விழைந்தபோது, அவர், அவர்களைச் சந்திக் காமல், அவரது செயலாளர்மூலமே அந்த மனுவைப் பெற்றுள்ளார்!

ஜனநாயக அரசின் மாண்பிற்கும்,

மதிப்பிற்கும் உகந்ததா?

உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்க நாடா ளுமன்றத்தில் முக்கிய எதிர்க்கட்சியாகவும், தமிழ்நாடு மாநிலத்தில் ஆளுங்கட்சி - எதிர்க்கட்சியாகவும் உள்ள அத்தனை கட்சித் தலைவர்களும் நேரம் கேட்டபொழுது, அவர்களுக்கு நேரம் தராமல் இழுத்தடித்ததோடு, இறுதி யில் சந்திக்க மறுத்துள்ள செய்தி - ஜனநாயக அரசின் மாண்பிற்கும், மதிப்பிற்கும் உகந்ததா? தி.மு.. நாடாளு மன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் சென்ற அக்குழுவினரை சந்திக்க மறுத்தது வன்மையான கண்டனத்திற்குரியது அல்லவா?

பொதுவாக தமிழ்நாட்டு மக்களைப் பாதிக்கும் ஒரு முக்கியப் பிரச்சினையில் அவர்களைச் சந்தித்து, அவர்களது கருத்துகளை  சிறிது நேரம் காது கொடுத்து கேட்கக்கூட மறுப்பது ஒரு ஜனநாயக அரசில் நியா யந்தானா?  ஏற்க முடியுமா?

நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பவர்கள் பல லட்சம் மக்களின் பிரதிநிதிகள் என்ற உண்மையைக்கூட உள்துறை அமைச்சருக்குப் பிறர் சொல்லிக் கொடுத் தால்தான் அவருக்குத் தெரியுமா?

அதிகார ஆணவம் கொண்ட பல முந்தைய ஆட்சிகளில் இதுபோல் நடந்துகொண்டவர்கள் பலர் வரலாற்றில் பெற்ற இடம் குப்பைத் தொட்டியில்தான் என்பது ஏனோ வசதியாக மறந்துவிடுகிறது!

மக்கள் மன்றம் பதில் கூறும்!

மக்களாட்சியில் மக்கள் பிரதிநிதிகளைச் சந்திக் கக்கூட மனமில்லாத மமதைக்கு மக்கள் மன்றம் பதில் கூறும் காலம் விரைந்து வந்து கொண்டிருக்கிறது!

தமிழ்நாடு ஆளுநர் நீட்டுக்கு எதிரான சட்டமன்ற மசோதாவினைத் தேவையின்றி அதிகமான அளவு காலதாமதம் செய்கிறார்!

இது சம்பந்தமாக ஒத்தக் கருத்துள்ள அனைத்துக் கட்சியினரையும் ஒருங்கிணைத்து வன்மையான கண்டனங்களைத் தெரிவிப்போம்!

நாடு தழுவிய பிரச்சாரத்தின்மூலம் புரிய வைப்போம்!

கரோனா கொடுந்தொற்றின் மூன்றாவது அலை வீச்சு காரணமாகவே நமது வேக நடவடிக்கைகள் சற்று மெல்ல - ஆனால், உறுதியானதாக இருக்கவேண்டி யுள்ளது!

இப்படி குறுக்குசால் ஓட்டிக்கொண்டே நீட் தேர்வுக்கு விலக்குப் பெற முடிந்ததா என்று கேட்பது, எவ்வளவு இரட்டை நிலைப்பாடு - பொருந்தாக் கூற்று என்பதை நாடு தழுவிய பிரச்சாரத்தின்மூலம் புரிய வைப்போம்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை       

6.1.2022              

No comments:

Post a Comment