சென்னை,ஜன.31- மருத்துவப் படிப்புக் கான நீட் நுழைவுத் தேர்வில் தமிழ் நாட்டுக்கு விலக்கு அளிக்கக் கோரி தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறை வேற்றப்பட்ட மசோதாவை உடனடி யாக குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்ப வேண்டும். அந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் காலதாமதம் செய்யாமல் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று (30.1.2022) பட்டினிப் போராட் டம் நடந்தது. இப்போராட்டத்துக்கு அமைப்பின் பொதுச்செயலாளர் பி.பி.பிரின்ஸ்கஜேந்திரபாபு தலைமை வகித்தார். அமைப்பின் தலைவர் பி.ரத்தின சபாபதி அறிமுகவுரை ஆற்றினார்.யுஜிசி மேனாள் தலைவர் சுகதேவ் தோரட், பேராசிரியர் அனில் சட்கோபால், மேனாள் துணைவேந்தர் வி.வசந்தி தேவி ஆகியோர் காணொலி வாயிலாக உரையாற்றினர். இதில் பங்கேற்றோர் பேசியதாவது:
இரா.முத்தரசன் (இந்திய கம்யூ னிஸ்ட்): சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாதது இந்திய அரசமைப்பு சட்டத்தை கேலிக்குரியதாக ஆக்கு கிறது. எனவே, நீட் தேர்வுதொடர்பான மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் உடனடியாக அனுப்ப வேண்டும்.
கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): சட்டப்பேரவை நிறை வேற்றுகிற மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டியதுதான் ஆளுநரின் கடமை. அந்த மசோதா மீது ஆளுநர் முடிவு எடுக்க முடியாது. ஆளுநர் வரம்பை மீறியுள்ளார்.
தொல். திருமாவளவன் (விசிக): நீட்மசோதா விஷயத்தில் தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடு மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசை அவமதிக்கும் வகையில் உள்ளது. கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்பதுதான் நமது முதன்மை கோரிக்கையாக இருக்கவேண்டும். உயர் கல்வி மாணவர் சேர்க்கை மேற்கொள் ளும் அதிகாரமும், உரிமையும் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
டி.கே.எஸ்.இளங்கோவன் (திமுக): மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் இருக்கும் தமிழ்நாடு ஆளுநரின் நடவடிக்கை ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களை அவமதிப்பதுபோல் ஆகும். மசோதாவில் குறைபாடு இருந்தால் அதை ஆளுநர் திருப்பி அனுப்ப வேண்டும். இல்லாவிட்டால் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): எந்தெந்த மாநிலங்கள் நீட் தேர்வை விரும்புகிறதோ அந்த மாநிலங்கள் மட்டும் நீட் தேர்வை பின்பற்றலாம் என்பதுதான் காங்கிரசின் நிலைப்பாடு. நீட் தேர்வைகுஜராத்தில் நுழையவிட மாட்டேன்என்று அம்மாநில முதல மைச்சராக இருந்தபோது சொன்னவர் தான் இன்றைய பிரதமர் மோடி. இப் போது இரட்டை வேடம் போடு கிறார்.
மேனாள் நீதிபதி டி.அரிபரந்தாமன், திமுக சட்டமன்ற உறுப்பினர் சி.வி. எம்.பி.எழிலரசன், எழிலன் உள்ளிட் டோரும் பேசினர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலர் கே. சாமு வேல்ராஜ் போராட்டத்தை முடித்து வைத்தார்.
நீட் மசோதாவுக்கு குடியரசுத் தலை வர் ஒப்புதல் கிடைப்பது தொடர்பாக மாலைக்குள் அறிவிப்பு வரவில்லை என்றால் தனிநபர் பட்டினிப் போராட் டம் இருப்பதாக பிரின்ஸ் கஜேந்திரபாபு அறிவித்திருந்தார். உள்ளாட்சித் தேர் தல் நடக்க இருப்பதால், தேர்தலுக்குப் பிறகு போராட்டம் நடத்துவோம் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதனால், பட்டினிப் போராட்ட முடிவை பிரின்ஸ் கஜேந்திர பாபு கைவிட்டார்.
No comments:
Post a Comment