மண்டல் ஆணையமா? ராமர் கோவிலா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 22, 2022

மண்டல் ஆணையமா? ராமர் கோவிலா?

(மண்டல் Vs மந்திர்)

குஜராத்தில் உள்ள சோம்நாத் கோவிலில் இருந்து 1990 செப்டம்பர் 25  அன்று லால் கிருஷ்ண அத்வானி ரத யாத்திரையைத் தொடங்கினார். அதற்கு ஒரு மாதத்திற்கு முன், ஆகஸ்டில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் ஆணைய பரிந்துரைகளை அமல்படுத்துவதாக அப்போதைய பிரதமர் வி.பி.சிங் அறிவித்தார்.

 வி.பி.சிங்கின் இந்த அறிவிப்பு பாஜகவை உலுக்கியது.  பாஜகஇந்துக்கள் ஒற்றுமைஎன்ற முழக்கத்தை அந்த நேரத்தில் கையிலெடுத்து ராமர் கோயில் இயக்கத்தைத் தீவிரப்படுத்தியது.

இப்போது 2022இல் உத்தரப்பிரதேசத்தின் தலைநகரான லக்னோவில் இருந்து கடந்த 7.1.2022 அன்று வெளிவந்த படங்கள் 1990இன் நிகழ்வுகளை நினைவுபடுத்துபவையாக உள்ளன. கடந்த சில நாட்களாக பா... வை விட்டு வெளியேறும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். அவர்களில் பலர் சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளனர்.

சரித்திரம் திரும்புகிறது

உத்தரப்பிரதேச மாநில தேர்தலுக்குச் சில வாரங்களே உள்ள நிலையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் தலைவர்கள் அனைவரும் பாஜகவில் இருந்து விலகி ஓரிடம் சேர்வது குறித்து வல்லுநர்கள் பல கருத்துகளை வெளியிட்டு வந்தாலும், 1990 முதல் இன்று வரை அரசியல் நிகழ்வுகளைக் கூர்ந்து கவனித்து வருபவர்கள், சரித்திரம் மீண்டும் திரும்புவதாகவே கருதுகின்றனர்.

அமர் உஜாலாஇந்தி ஏட்டின் ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான நீர்ஜா சவுத்ரி, “இந்த முறை உத்தரப்பிரதேசத்தில் நடக்கும் போரைமண்டல்வெர்சஸ்மந்திர்அதாவது கோயிலுக்கும் மண்டல் ஆணையத்துக்குமான போட்டியாகத் தான் பார்க்கிறேன். 30 ஆண்டுகளுக்கு முன்பு நான் பார்த்தது இன்று மீண்டும் நடக்கிறது. இந்த முப்பது ஆண்டுகளில் கோயிலும் இட ஒதுக்கீடும் எங்கும் சென்று விடவில்லை. அதே நிலை தான் நிலவுகிறது. இப்போது மிகவும் பிற்படுத்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோர், மகாதலித்துகள் என அனைவரும் தங்களின் பங்கைக் கேட்கின்றனர்.

 பிற்படுத்தப்பட்டோர் மத்தியில் இருந்தஆதிக்க ஜாதியினர்தன் பங்கை மட்டும் கேட்கவில்லை. இன்னும் பிற்படுத்தப்பட்ட ஜாதிகள் என்று இதுவரை அழைக்கப்படாத, ஜாட் உள்பட்ட சமூகங்கள் தங்களைப் பிற்படுத்தப்பட்ட ஜாதியாக அறிவிக்கக் கோருகின்றன. இந்தச் சிக்கல் இன்னும் தீரவில்லை,” என்று கூறுகிறார்.

மேலும் அவர் கூறும்போது, “அகிலேஷ் இப்போது அவரது தந்தையும் மேனாள் உத்தரப்பிரதேச முதலமைச்சருமான முலாயம் எடுத்த அதே துருப்புச்சீட்டைத் தான் எடுத்துள்ளார். இஸ்லாமியர்களும் பிற்படுத்தப்பட்டவர்களும் சேர்ந்தால் தன்னை யாராலும் வெல்ல முடியாது என்று முலாயம் சிங் கூறுவார்.

முன்பு வெறும் யாதவ் என்ற பிரிவினரின் கட்சி என்று கூறப்பட்ட சமாஜ்வாடி தற்போது அனைத்து பிற்படுத்தப்பட்டவர்களுக்கானது என்று ஆகிவிட்டது. வேலையில்லாத் திண்டாட்டம், கோவிட் மற்றும் பணவீக்கம், மோசமான நிர்வாகம் போன்ற பிரச்சினைகளை சமாஜ்வாதி கட்சி எழுப்பினாலும், மக்களோ ஜாதி அடிப்படையில் தான் அதை முன்னெடுக்கிறார்கள்.” என்று விளக்கினார்.

அகிலேஷ் யாதவின் இந்த உத்தியை உடைக்கவேண்டி, பா... தொடர் கூட்டங்களை நடத்தியது. இருப்பினும், அந்தக் கூட்டங்களில் வேட்பாளர் தேர்வு குறித்த விவாதம் நடந்ததாகவே கூறப்படுகிறது.

கோயில் பிரச்சினை

அந்தக் கூட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் நீர்ஜா சவுத்ரி, “இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, இந்தச் சவாலை எப்படிச் சமாளிப்பது என்று பாஜக ஒரு தீர்வு காணும் என்று எதிர்பார்க்கப்பட்டதுஎன்று கூறுகிறார்.

 நீர்ஜா அயோத்தியை இந்துத்துவாவுடன் இணைத்துப் பார்க்கவில்லை. அவர் அதைக் கோயில் பிரச்சினை என்று தான் கருதுகிறார். தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு முன், பிரதமர் மோடி காசி வழித்தடத்தை திறந்து வைத்தார். உத்தரப்பிரதேச, துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா, மதுரா கோவில் பிரச்சினையை எழுப்பினார். அதனால்தான் இந்த முறை கோயிலா, (மண்டல்) ஆணையமா என்ற அடிப்படையில்  தேர்தல் இருக்கும் என்று அவர் கருதுகிறார்.

லக்னோவின் மூத்த பத்திரிக்கையாளர் நாகேந்திர பிரதாப், இந்த முறைஉயர் ஜாதினருக்கும்  பிற்படுத்தப்பட்டவருக்குமானபோட்டியாகத் தான் இருக்கும் என்று  கணிக்கிறார். “பாஜக நிச்சயமாக இந்துத்துவா என்ற லகானைப் பிடித்துக்கொண்டு புறப்படுகிறது, அவர்களுக்கு வேறு வழியும் இல்லை.  உயர் ஜாதியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் என்ற அடிப்படையில் இந்தத் தேர்தல் இருந்தால், அது பாஜகவுக்கு ஒரு புதிய சவாலாக இருக்கும். 2014, 2019 மக்களவைத் தேர்தலாகட்டும் 2017 சட்ட சபைத் தேர்தலாகட்டும் பிற்படுத்தப்பட்டோர் ஓரணியில் கூடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது,” என்று தெரிவிக்கிறார்.

 2014இல் குஜராத் மாடல் என்னும் பரப்புரைக்கு மத்தியில் தேர்தல் நடத்தப்பட்டது. 2017 மற்றும் 2019 இல், பிற்படுத்தப்பட்டவர்கள், ஜாதவ் மற்றும் யாதவர்கள் அனைவரும் தங்களை ஹிந்துக்களாகவே கருதினர். ஆனால் இந்த முறை நிலைமை வேறு. பிற்படுத்தப்பட்டவர், தாழ்த்தப்பட்டவர்கள் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என அனைவரும், பாஜக மீண்டும் மீண்டும் ஹிந்துத்துவாவையே வலியுறுத்துவதாக உணர்கிறார்கள்.  இதன் காரணமாக, 2019 இல் இருந்ததைப் போலவும் மீண்டும் பாஜக விரும்பும் விதத்திலும் இந்த முறை ஹிந்துத்துவா வாதம் செயல்படப் போவதில்லை. முன்பு பா...வுக்குச் சென்றிணைந்த ஒரு பெரிய கூட்டமும் இப்போது ஏமாற்றத்தில் இருக்கிறது. அனைத்துப் பழைய சங்க - பாஜக ஆதரவாளர்களும் சாமியார் ஆதிக்கத்தை - மோடியின் கடுமையான ஹிந்துத்துவாவால் சோர்வடைந்துள்ளனர்.

 சமாஜ்வாதி கட்சியில் இணைந்த சுவாமி பிரசாத் மவுரியா, “தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களால் ஆட்சி அமைக்கப்படும். ஆனால் பயனடைவது அந்த 5 % உயர் ஜாதியினர். 80-க்கும் 20க்குமான மோதல் என்று நீங்கள் கூறுகிறீர்கள். 80-20 அல்ல, நான் கூறுகிறேன், 15-85. 85 நாங்கள். 15இலும் பிரிவினை உள்ளதுஎன்று கூறியிருந்தார். சுவாமி பிரசாத் மவுரியாவின் வார்த்தைகளால் நாகேந்திர பிரதாப்பின் கருத்து வலுப்பெறுகிறது.

நாகேந்திர பிரதாப் மேலும் எச்சரிக்கிறார், “உத்தரப்பிரதேசத்தில் உயர்ஜாதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மோதல் என்று நான் கூறும்போது, எந்தக் கட்சியும் வேண்டுமென்றே இதைச் செய்யப் போவதில்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறேன். இது தானாக நடக்கும். அரசியல் கட்சிகள் இதைத் தூண்டினால், அது அவர்களுக்கே ஆபத்தாக முடியும். இதை எந்தக் கட்சி கடைப்பிடித்தாலும் நிர்வாகத்தை நடத்த முடியாது. பாஜக உயர் ஜாதியினரின் கட்சி என்று தொடக்கத்திலிருந்தே அறியப்பட்டாலும், கடந்த தேர்தலில் பெற்ற யாதவ் அல்லாத இதரப் பிற்படுத்தப்பட்டோரின் வாக்குகளையும் அவர்கள் மீண்டும் பெற விரும்புகிறார்கள், இருப்பினும், மூத்த பத்திரிகையாளர் அனில் யாதவ் உத்தரப்பிரதேச அரசியலை கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து கவனித்து வருகிறார். அவர், “மண்டல் ஆணையம், ராமர் கோயில், ஹிந்துத்துவா  - இவற்றுக்கிடையே பார்ப்பனர்களின் மனக்கசப்பு பாஜகவின் கவலையை அதிகரித்துள்ளது.

பா...வில் ஏற்பட்ட அமளியில் பார்ப்பனர்களின் பங்கும் குறைந்ததில்லை. பார்ப்பனர்களும் பாஜக மீது கடும் கோபத்தில் உள்ளனர்என்று அனில் யாதவ் கூறுகிறார். அவர்களின் அதிருப்தியைத் தனக்குச் சாதகமாக்கிக்கொள்ள சமாஜ்வாதி முனைந்துள்ளதாக இவர் கருதுகிறார்.

பாஜக நிஷாத் கட்சியை தங்களுக்கு ஆதரவாகப் பெற்றுள்ள நிலையில், நிஷாத் வாக்கு வங்கி தங்கள் முகாமிற்கு வரவில்லை என்றால், பூர்வாஞ்சலில் பார்ப்பனர்களை தங்கள் பக்கம் ஈர்க்க சமாஜ்வாதி கட்சி நினைக்கிறது,” என்கிறார்.   அது வரும் நாட்களில் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் தேர்வில் தெளிவாக வெளிப்படும் என்பது இவரது கணிப்பு. மேலும் அவர் கூறுகையில், “பாஜகவுக்கு எதிராக அய்ந்தாண்டுகளாக ஆட்சிக்கு எதிரான அலை உள்ளது.  பாஜகவை விட்டு வெளியேறும் தலைவர்கள் இந்தப் பதவி எதிர்ப்பு அலையைத் தூண்டி விடுகின்றனர். அவத் மற்றும் பூர்வாஞ்சலில் ஆசிரியர் நியமனத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு கிடைக்காதது, அவர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

செவிசாய்க்காத அரசு

 நீண்ட நாட்களாக நிலவி வரும் இந்தக் கோபம் கொஞ்சம் கொஞ்சமாக ஓர் எதிர்ப்பாக உருவெடுத்து வருகிறது. இவ்வாறான சூழ்நிலையில் சுவாமி பிரசாத் மவுரியா போன்ற தலைவர்கள் பாஜகவை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை. சாமியார் அரசு அவர்களது குறைகளை நீக்கி விடுவதாக உறுதி அளித்திருந்தது. ஆனால், அதற்குள் பிற்படுத்தப்பட்டோரின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காத அரசு என்ற பெயரை அந்த அரசு பெற்றுவிட்டது,” என்று தெரிவித்தார்.   இப்போது பாஜகவிடம் உள்ள ஒரே வாய்ப்பு பணத்தை அள்ளிவீசி வாக்காளர்களைக் கவருவது மட்டும் தான், கரோனா காலம் ஆதலால் மோடி மிகவும் விரும்பும் பெருங்கூட்டப் பரப்புரைகள் இம்முறை இருக்காது. காணொலி பரப்புரைகள் பீகாரில் பாஜகவிற்கு பெரும் பின்னடைவைத் தந்தன.  எனினும் நிதீஷ் குமாரின் தயவில் தற்போது பீகாரில் கூட்டணி ஆட்சி நடக்கிறது.  உத்தரப்பிரதேசத்தில் அந்த வாய்ப்பும் இல்லை. அகிலேஷ்க்கு  லவலேசமும் பா...வுடன் கைகோர்க்கும் எண்ணமோ, அடி பணியும் தேவையோ இல்லை என்கிறார்கள். .பி. சூழலைக் கூர்ந்து நோக்குவோர்.

உத்தரப் பிரதேச தேர்தல் சமூகநீதிக்கும் ஹிந்துத்துவத்திற்கும் இடையே உள்ள போராட்டத்தின் பரிசோதனைக்களம்  இந்தப்பரிசோதனை 2024 ஆம் ஆண்டு பாஜகவிற்கு பலத்த அடியைக் கொடுக்கும் என்பது உறுதி.

No comments:

Post a Comment