சென்னை, ஜன.25 தமிழ்நாடு முழுவதும் இதுவரை 9.06 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. தடுப்பூசி போடும் பணியை மேலும் தீவிரப்படுத்த தமிழ்நாடு அரசு செப்டம்பர் மாதத்தில் இருந்து, மெகா தடுப்பூசி முகாமை நடத்தி வருகிறது. அதன்மூலம் நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதுவரை 18 மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் இதுவரை 9.06 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 4.74 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
45-60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 2.63 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 1.19 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
15-18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 25.75 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
முன்களப்பணியாளர்களுக்கு 13.01 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மருத்துவப் பணியாளர்களுக்கு 9.70 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அதிகரித்து வந்த கரோனா பாதிப்பு
சற்று குறைந்தது- உயிரிழப்பு அதிகம்
சென்னை, ஜன.25 தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 30 ஆயிரத்து 215 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த கரோனா பாதிப்பு நேற்று (24.1.2022) சற்று குறைந்துள்ளது. நேற்றைய ஒருநாள் கரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1 லட்சத்து 51 ஆயிரத்து 217 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 30 ஆயிரத்து 215 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 31 லட்சத்து 64 ஆயிரத்து 205 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனாவுக்கு தமிழ்நாட்டில் நேற்று 46 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 37 ஆயிரத்து 264 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.
தமிழ்நாட்டில் நேற்றைய நிலவரப்படி 2 லட்சத்து 6 ஆயிரத்து 484 பேர் மருத்துவமனைகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா பாதிப்பில் இருந்து நேற்று 24 ஆயிரத்து 639 பேர் டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளனர். இதுவரையில் 29 லட்சத்து 20 ஆயிரத்து 457 பேர் குணம் அடைந்து உள்ளனர்.
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு பணிமாறுதல்
கலந்தாய்வில் முன்னுரிமை
சென்னை, ஜன.25 ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்று மாறுதல் பெற்று சென்றுள்ள ஆசிரியர்களுக்கு கலந்தாய்வில் முன்னுரிமை தர வேண்டும் என்றும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டங்கள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு, பணி மாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கி, நாளைக்குள் அவர்களுக்கான கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று தொடக்கக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
போராட்டகாலம், பனிக்காலமாக முறைப் படுத்தப்பட்டுள்ளதால் முன்னுரிமை வழங்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment