கந்தபுராணமும் ராமாயணமும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 3, 2021

கந்தபுராணமும் ராமாயணமும்

13.11.1948 - குடிஅரசிலிருந்து...

கந்தபுராணமும் ராமாயணமும் எப்படி ஒரே அடிப்படைக் கதையை வைத்துக் கொண்டு எழுதப்பட்டவை என்று விளக்கிக் காட்டுகிறேன் பாருங்கள். கந்த புராணத்தில் சுப்பிரமணியன் கடவுளாகவும், ராமாயணத்தில் ராமன் கடவுளின் அம்சமாகவும் குறிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் பெண்டாட்டிமார் இருவருமே காட்டில் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர்கள். பெற்றோர்கள் யாரென்று தெரிவிக்கப்படாதவர்கள். அனுபவத்திற்கு ஒட்டிப் பார்த்தால் யாரோ திருட்டுத்தனமாகப் பெற்றுப் போட்டுவிட்டுப் போன குழந்தைகள் என்றே கொள்ளத்தக்கவைகள். ராமனும், கந்தனும் இருவருமே தேவர்களின் முறையீட்டால் அவர்களை அசுரர் ராட்சதர்களிடமிருந்து காப்பாற்றுவதற்குத் தோற்றுவிக்கப்பட்டவர்கள். இருவருக்கும் விரோதிகள் சூரனும், ராவணனும் ஆகிய அசுரர்கள்தான். (அசுரர்கள் என்றால் மது அருந்தாதவர்கள், ராவணன் என்றால் கருத்தவன்) இருவருடைய தங்கைமார் இருவருமே மேலே கூறப்பட்டவர்களின் தம்பிமாரால் மூக்கும், முலையும் அறுபடுகிறார்கள். ராமனுக்கு அனுமார் கிடைத்தது போல், கந்தனுக்கும் ஒரு வீரபாகு என்கிறவன் கிடைக்கிறான். இலங்கை எரிக்கப்பட்டது போல், சூரனுடைய நகரமும் எரிக்கப்பட்டிருக்கிறது. சூரன் தேவேந்திரன் மனைவியைச் சிறைபிடிக்க ஆசைப்பட்டு அவன் மகனைச் சிறையில் வைத்தான்.

ராவணன் ராமன் மனைவியைச் சிறை பிடித்தான். இன்னும் பல நடப்புகள் ஒன்று போலவே பேர்தான் மாறியிருக்கின்றனவே ஒழிய, கதைப்போக்கில் எவ்வித முக்கிய மாறுதலும் காணப்படவில்லை. கந்தபுராணத்தில் கந்தனை தெய்வமயமாகவே காட்டப்பட்டிருக்கிறது. ராமாயணத்தில் கொஞ்சம் அது குறைவாக்கப்பட்டு, அதாவது ராமன் கடவுள் அவதாரமாக மட்டுமே காட்டப்படுகிறான். சில இழி தன்மையையும் சுமத்தப்படுகிறான்.

No comments:

Post a Comment