95 வயதுவரை ஓய்வின்றி உழைத்தவர் தந்தை பெரியார் அவரது தொண்டனாகிய எனக்கும் ஓய்வு இல்லை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 3, 2021

95 வயதுவரை ஓய்வின்றி உழைத்தவர் தந்தை பெரியார் அவரது தொண்டனாகிய எனக்கும் ஓய்வு இல்லை

ஜாதி ஒழிக்கப்படும்வரை நமக்கு ஓய்வே கிடையாது

தமது பிறந்த நாள்  விழாவில் தமிழர் தலைவர் சூளுரை!

நமது சிறப்புச் செய்தியாளர்

 சென்னை, டிச.3 95 வயது வரை ஓய்வின்றி உழைத்த தந்தை பெரியார் வழிவந்த எனக்கு ஓய்வு என்பது கிடையாது. ஜாதி - சட்டப்படி ஒழிக்கப்படும்வரை, கடைசி மூச்சு இருக்கும்வரை எம் பணி தொடரும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 89 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா (2.12.2021) ஏற்புரையில் அவர் கூறியதாவது:

பிறந்த நாள் விழா வேண்டாம் என்று கூறுவதுதான் என் வழக்கம். ஆனால், இவ்வாண்டு கொண்டாட வேண்டும் என்று நானே சொன்னேன். என்ன காரணம்? கழகத் தோழர்களை, குடும்பங்களைச் சந்தித்து நீண்ட காலம் ஆயிற்று.

கொள்கை உறவுகள் என்று சொல்லும்போது எல்லாக் கட்சிகளிலுமே இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் சந்திக்க இது ஒரு வாய்ப்பு.

கரோனா என்னையும், என் வாழ்விணையரையும் பாதித்தது. நாங்கள் குணம் பெறக்கூடாது என்று பிள்ளை யாரை சிலர் வேண்டிக்கொண்டு இருக்கிறார்கள். எந்தப் பிள்ளையாரை? நம்மால் வீதிகளில் உடைக்கப்பட்ட பிள்ளையாரை.

தந்தை பெரியார் மறைந்து 48 ஆண்டுகள் ஓடி விட்டன. அன்னையார் மறைந்த 43 ஆண்டுகள் ஓடி விட்டன. ஆனாலும், அவர்கள் வகுத்த கொள்கை வழி பயணித்துக்கொண்டு இருக்கிறோம்.

தந்தை பெரியார் 1973 டிசம்பர் 24 இல் மறைந்தார் என்றால், 1974 ஜனவரி 6 ஆம் தேதி திருச்சியிலே கழகப் பொதுக்குழு கூடி முடிவு எடுத்தோம். சூளுரை மேற்கொண்டோம்.

''தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை அவர் போட்டுத் தந்த பாதையில் எந்தவித சபலங்களுக்கும் ஆளாகாமல் வென்று முடிப்போம்!'' என்பதுதான் அந்த உறுதிமொழியாகும்.

தந்தை பெரியார் தேதி கொடுத்து, கலந்துகொள்ள முடியாமல் போன அந்தத் திருவண்ணாமலையிலிருந்தே உறுதிமொழி பொதுக்கூட்டங்களில் அம்மா அவர்களும், நாங்களும் பயணித்தோம்.

நம்முடைய போர் 5000 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டு விட்டது. ஏகலைவன் கட்டை விரல் வெட்டப்பட்டதும், சம்பூகன் தலை வெட்டப்பட்டதும் முதலே இனப் போராட்டம், வருணாசிரம எதிர்ப்புப் போராட்டம் தொடங்கப்பட்டு விட்டது.

இப்பொழுது ஒரு முக்கிய காலகட்டம் - திராவிட மாடல் ஆட்சி - இந்தியாவிலேயே சிறந்த முதல் மாநிலம் - சிறந்த முதலமைச்சர் - நமக்குக் கிடைத்திருக்கிறார். வெற்றிடம் என்றனர். கழகம் இல்லா ஆட்சி என்றனர். நடிகரைத் தேடினர். எல்லாம் பகற்கனவாயிற்று. ஒவ் வொரு நாளும் நாமெல்லாம் தலைநிமிர்ந்து நிற்கும் அளவுக்கு சாதனை குவிக்கும் ஆட்சி தமிழ்நாட்டில்.

இந்த ஆட்சியின் திராவிட தத்துவம் இந்தியா முழு வதும் பரவிட வேண்டும். அதற்காக நாம் உழைக்க வேண்டும்.

இங்கே நமது கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன் அவர்கள் உரிமை எடுத்துக்கொண்டு சொன்னார். 89 வயதிலும் அதிக சுற்றுப்பயணம் தேவையா? குறைத்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

தயவுசெய்து என்னைக் கிழவனாக்கி விடாதீர்கள். நான், நாம் ஏற்றுக்கொண்ட தலைவர் தந்தை பெரியார் 95 வயதுவரை - கடைசி மூச்சு அடங்கும்வரை உழைத்தார்.

அய்யா சொல்லுவார்; மற்றவர்களுக்கெல்லாம் இரண்டு கால்கள் - எனக்கோ ஆறு கால்கள். எனது இருபக்கமும் தலா ஒரு தோழர் - அவர்கள் இருவரின் நான்கு கால்கள், எனது இரு கால்கள், ஆக மொத்தம் ஆறு கால்கள் என்பார் அய்யா.

இயற்கையான வழியில் சிறுநீர் கழிக்க முடியாத நிலையில், அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அந்தப் பகுதியில் ஓட்டை போடப்பட்டு, ஒரு குழாய் வழியாக சிறுநீர் வாளியில் உள்ள ஒரு பாட்டிலில் போய் வடியும். அதனையும் ஒரு பக்கத்தில் சுமந்துகொண்டு, பயணத்தைக் குறைக்காமல், மக்களை சந்தித்து தன் பிரச்சாரத்தை செய்துகொண்டுதானே இருந்தார்.

அப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போது, அந்தக் குழாய் கொஞ்சம் விலகினாலும் வலி தாங்க முடியாமல் துடிதுடித்துப் போவார். புரண்டு புரண்டு உடலை அசைத்து வலியைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்டு, 'ஆகவே தோழர்களே!' என்று ஆரம்பித்துவிடுவாரே!

அய்யா கடைசியாக மரண சாசனமாக சென்னை தியாகராயர் நகரில் ஆற்றிய உரையின்போதுகூட அந்த நிலை ஏற்பட்டதுண்டே!

அந்தத் தலைவரைத் தலைவராக ஏற்றுக்கொண்ட தொண்டன் நான். இந்நிலையில், என் சுற்றுப்பயணத்தைக் குறைத்துக்கொள்ளச் சொல்லுவது நியாயமா?

நீங்கள் சொன்ன கருத்தை நான் குறைகூறவில்லை. எதற்கும் மேல்முறையீடு உண்டு அல்லவா? உங்கள் கோரிக்கையை மறுபரிசீலனை செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்த இயந்திரம் இயங்கிக் கொண்டே இருக்கவேண்டியதுதான்  - இயந்திரம் இயங்காவிட்டால் பழுதாகிவிடுமே! இங்கே மின்சாரமும் இருக்கிறது.

இன்னும் இந்த நாட்டில் ஜாதி இருக்கிறதே- வருணாசிரமம் இருக்கிறதே - இது தேசிய அவமானம் அல்லவா!

1924 ஆம் ஆண்டில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்தபோதே கேரளா வரை சென்று தீண்டாமையை எதிர்த்து வைக்கத்தில் போராடவில்லையா?

அந்தத் தீண்டாமை ஒழிப்பின் தொடர்ச்சிதான், ஒரு கட்டம்தான், சமூகநீதிக்கான சரித்திர நாயகர் நமது மாண்புமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களால் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகருக்கான ஆணை செயல்படுத்தப்பட்டு இருப்பது (பலத்த கரவொலி).

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17 ஆம் பிரிவு தீண்டாமை ஒழிக்கப்படுவதாக Untouchability is Abolished  என்று சொல்லுகிறது. இதே இடத்தில் 1973 டிசம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்ன?

தீண்டாமை Untouchability ஒழிக்கப்படுகிறது என்பதற்குப் பதிலாக ஜாதி சிணீstமீ ஒழிக்கப்படுகிறது என்று இந்திய அரசமைப்புச் சட்டம் திருத்தப்படவேண்டும் என்று தீர்மானிக்கப்படவில்லையா? ஜாதியிலிருந்து தோன்றுவதுதானே தீண்டாமை.

அந்தத் தீர்மானம் செயல்படும்வரை நமக்கு ஓய்வு இல்லை. எனவே, உங்கள் தீர்ப்பை மறு ஆய்வு செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

உங்களையெல்லாம் பார்க்கும்பொழுது எனது பேட்டரி சார்ஜ் ஏறுகிறது. என்னை நீங்கள் பார்க்கிறபொழுது உங்களுக்கு சார்ஜ் ஏறுகிறது என்றார் கழகத் தலைவர் (முழு உரை விரைவில்).

 

No comments:

Post a Comment