சிவசங்கரன்
கலைஞர் அவர்கள் திராவிடர் கழகத்தில் பணி யாற்றிய போது அவர்தம் நெருங்கிய தோழர்களாக விளங்கியவர்கள் திருவாரூரின் உறுதிமிக்கப் பெரியார் தொண்டர்கள் சிவசங்கரன், முத்துக்கிருட்டிணன் ஆவர். இவ்விருவரின் வாழ்விணையர்கள் வெவ் வேறு காலங்களில் நோய்வாய்ப்பட்டபோது, பரோலில் வெளியே வருவது கோழைத்தனம் என்று பரோல் கேட்க மறுத்தனர். சிறையில் இவர்கள் இருக்கும் பொழுது இருவரின் வாழ்விணையர்களும் மர ணத்தைத் தழுவ, அப்போதும் கூட இறுதிச் சடங்கில் பங்கேற்கச் செல்லவில்லை. 'உயிரோடு இருக்கும் போதே பார்க்கவில்லை, பிணத்தைப் போய்ப் பார்த்து என்னவாகப் போகிறது" என்று சிறையில் கண்ணீர் விட்டவாறே அன்றைய சிறைப்பணிகளைப் பார்க்கப் போய்விட்டனர்.
திருநாகேசுவரம் மொட்டையன்
எத்தகைய மன உறுதி படைத்த தியாக மறவர் - திருநாகேசுவரம் மொட்டையன்! தன் குழந்தை இறந்துவிட்ட செய்தி வந்தபோது, "நான் வந்து என்ன செய்யப் போகிறேன்? பெயில் எல்லாம் வேண்டாம். நீங்கள் எல்லோருமாக இருந்து கொளுத்தி விடுங்கள்" என்ற மன உறுதிச் சிம்மம், மறுபடியும் மறுபடியும் 69 விழுக்காட்டிற்கு வந்த ஆபத்தை எதிர்த்துச் சிறைவந்த போது, அவருடைய வாழ்விணையர் இறந்த செய்தி அவருக்கு தெரிவிக்கப்பட்ட போதும், அதே போல் பிணையில் செல்ல மறுத்தவர் அந்தத் தியாக மறவர்!
திருவாரூர் முத்துக்கிருஷ்ணன்
திருவாரூர் முத்துக்கிருஷ்ணன் சிறைப்பட, அவ ருடைய மனைவி தான் கடைகளையும் குழந்தைகளை யும் கவனித்துக் கொண்டார். அவரும் காலராவில் இறந்துபோக சிறுவர், சிறுமிகளாக இருந்த குழந்தை களை கவனித்து வந்த மாமியாரும் காலராவிற்கு பலியாகிவிட, ஆதரவற்று இருந்த அச்சிறார்களை அரவணைத்துக் காத்தனர் கடமை உணர்வுமிக்க கழகத் தோழர்கள். தோழர் முத்துக் கிருஷ்ணன் விடுதலை பெற்று வெளியே வந்தபோது திருவாரூர் வீதிகளில் ஊர்வலமாக அழைத்துவரப் பெற்றபோது அந்தத் தியாக உருவினைக் கண்ட மக்கள் கண்ணீர் வடித்தது உண்மை!
திருச்சி தோழர் மாணிக்கம்
திருச்சி தோழர் மாணிக்கம் ஓராண்டு சிறை தண்டனை பெற்றவர். திருமணமான ஒரே வாரத்தில் போராட்டத்திற்கு வந்தார். சிறைக்கு வந்த மனைவி, கணவனைக் கண்டு கதறியபோது, இனிமேல் காண வரவேண்டாம் என்று கட்டளையிட்டு விட்டார். இளம் மனைவி மனமுடைந்து மனநோய்க்கு ஆளானார். ஓராண்டுக்குப் பின் விடுதலையான மாணிக்கம் முழுமையான மன நோயாளி மனைவியுடன் ஒருவார மணவாழ்க்கை நினைவுகளுடனே வாழ்ந்து மனை விக்கு முன் மரணமடைந்தார்!
வடக்குமாங்குடி விசுவநாதன்
வடக்குமாங்குடி விசுவநாதன் என்ற தோழர் சிறைப் பட்டிருந்தபோது, கருவுற்றிருந்த அவருடைய வாழ் விணையர் மகப்பேற்றில் மகவை ஈன்றெடுத்தார். தம் செல்வக் குழந்தையைக் கணவனிடம் காட்ட வந்த போது குழந்தையைப் பார்த்தால் பாசம் ஏற்பட்டு மனம் மாறிவிடும். எனவே, பார்க்கவிரும்பவில்லை என்று திருப்பியனுப்பினார் அத் தியாகசீலர்.
1957இல் சிறை என்பது கொடுமை மிகுந்தது. சிறைச் சீர்திருத்தங்கள், கைதிகளின் உரிமை எனும் சிந்தனை களே உருவாகிடாத காலம். கருஞ்சட்டைத் தோழர்கள் அரசியல் கைதிகள் போல் நடத்தப் பெறாமல், மோச மான குற்றங்கள் செய்த கிரிமினல் குற்றவாளிகள் போலவே நடத்தப்பெற்ற கொடுமையான காலம் அது. அரைக்கால், அரைக்கைச் சட்டை, சட்டையில் வில்லை. குல்லா என அவமதிப்பு. தோட்ட வேலை, சமையல் கூடத்தில் பாத்திரம் கழுவும் வேலை, அதிகாரிகளுக்குப் பணிவிடை என மனிதநேயமற்ற முறையில் மனிதநேயமே இல்லாமல் நடத்திய கொடுமை, பெரும் கொடுமை.
No comments:
Post a Comment