3 வேளாண் சட்டங்கள் ரத்து: மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 30, 2021

3 வேளாண் சட்டங்கள் ரத்து: மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

புதுடில்லி,நவ.30- நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று (29.11.2021) தொடங்கியது. மக்களவை கூடியதும் புதிய உறுப்பினர்கள் பதவியேற்றனர். அதன்பின், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது கேள்வி நேரத்தை ரத்து செய்துவிட்டு, குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். கடும் அமளியால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

 இந்நிலையில் நேற்று (29.11.2021) மக்களவை மீண்டும் கூடியதும் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வகை செய்யும்வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா 2021’-அய் வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார். அவர் பேசும்போது, ‘‘அரசியல் ஆதாயத்துக்காக வேளாண் சட்டங்களை எதிர்க்கட்சிகள் எதிர்த்தன. இந்த சட்டங்களின் நன்மைகளை சில விவசாயிகளுக்கு எங்களால் புரியவைக்க முடியவில்லை. எனவே, வருத்தத்துடன் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்கிறோம்’’ என்றார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறும்போது, ‘‘போராட்டத்தின்போது 700 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். லக்கிம்பூர் கலவரத்தில் விவசாயி கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த விவ காரங்கள் தொடர்பாக அவையில் விவாதிக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.

மசோதா குறித்து அவையில் விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒருமித்த குரலில் கோரிக்கை விடுத்தனர். இதை அவைத் தலைவர் ஏற்கவில்லை. மதியம் 12.06 மணிக்கு தாக்கல் செய்யப்பட்ட வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா, 4 நிமிடங்களில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதன் பிறகு எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவை

மாநிலங்களவை காலையில் கூடியதும் வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன்காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலில் அவை கூடியதும் மதியம் 2 மணி அளவில் வேளாண் சட்டங்கள் ரத்து மசோதாவை வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார்.

அதன்மீது விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை அவைத் தலைவரான வெங்கய்ய நாயுடு ஏற்கவில்லை. மதியம் 2.15 மணிக்கு குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதா நிறைவேறிய பிறகும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப் பட்டது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டவேளாண் சட்டங்கள் ரத்து மசோதா 2021’, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் விரைவில் ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு அரசாணை வெளியிடப்படும். இதன்மூலம் வேளாண் சட்டங்கள் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்படும்.

சோனியா காந்தி தலைமையில் காங்கிரசு உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்

கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பு நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி தலைமையில் அக்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர். மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment