"கற்போம் பெரியாரியம்"-நூல் பாடத்திட்டத்தில் வைக்கப்பட வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 3, 2021

"கற்போம் பெரியாரியம்"-நூல் பாடத்திட்டத்தில் வைக்கப்பட வேண்டும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 143 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் பேராசிரியர் சுலோசனா உரை

சென்னை, அக். 3-- - “கற்போம் பெரியாரியம்நூல் பாடத் திட்டத்தில் வைக்கப்பட வேண்டும் என்றார் பேராசிரியர் சுலோசனா அவர்கள்.

தந்தை பெரியார் 143 ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர் வெளியீடு

 கடந்த 17.9.2021  அன்று காலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 143 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில், பேராசிரியர் சுலோசனா அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

தந்தை பெரியார் அவர்களுடைய பிறந்த நாளை - சமூகநீதி நாளாகக் கொண்டாடுவதற்காக ஆணை பிறப்பித்த தமிழ்நாடு அரசுக்கு முதற்கண் நன்றி தெரி விக்கும் விதமாக என்னுடைய உரையைத் தொடங்கலாம் என்று நினைக்கிறேன்.

எப்படிப் பரவுதல் செய்யலாம் என்பதற்காக எனக்கு முதலில் பேச வாய்ப்பு

நம்முடைய ஆசிரியர் அவர்கள் எப்படித் தந்தை பெரியார் அவர்கள், அவரோடு இருந்தவர்களையெல் லாம் தன்னுடைய கொள்கையை, கருத்தியலை வளர்ப் பதற்காகச் சேர்த்துவிட்டாரோ, அதைப்போலத்தான், ஆசிரியர் அவர்களும் மேடையில் அமர்ந்திருந்து, வளரும் இளம் தலைமுறையினரையெல்லாம் பெரியாரி யல் கருத்தியலை உள்வாங்கிக் கொண்டு எப்படிப் பரவுதல் செய்யலாம் என்பதற்காக எனக்கு முதலில் பேச வாய்ப்பளித்திருக்கிறார்கள் என்று நினைக்கின்றேன்.

ஏனென்றால், மாண்பமை அமைச்சர் அவர்கள் சொன்னதைப்போல, பெரிய பெரிய ஆளுமைகளை யெல்லாம்  நாம் நிறைய இணைய தளத்தின்மூலமாகவும், புத்தகத்தின் வாயிலாகவும் கேட்கவும், பேசவும், படிக்கவும் செய்திருக்கிறோம்.

நம்முடைய ஆசிரியர் அவர்களுக்கு நன்றி- வணக்கம்!

அவர்கள் எல்லாம் இருக்கும் அவையில், நான் பேசுவது என்பது, பெரியாரிய கருத்தியல்களை எப்படி உள்வாங்கிக் கொண்டு அடுத்த தலைமுறையினருக்குக் கடத்தும் விதமாக, ‘கற்போம் பெரியாரியம்' நூலை எழுதிய நம்முடைய ஆசிரியர் அவர்களுக்கு நன்றியை யும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதுபோலவே, மானசீகமாக எழுத்துகளையும், வலையொளி காட்சிகளையும் கேட்டுக்கொண்டிருக்கும் எல்லா தலைமுறையினருக்காக பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களையும் நான் இந்த நேரத்தில் எண்ணிப் பார்க்கிறேன்.

மேடையில் அமர்ந்திருக்கும் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் அவர்களே,

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா மலரை வெளியிட்ட மக்களவை உறுப்பினர் அவர்களே,

அவையில் வீற்றிருக்கும் அனைவருக்கும் பெரியாரி யல் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெண்களுக்கான-சமூகநீதிக்கான நாளாக இன்றைய நாளை நான் பார்க்கிறேன்

சமூகநீதி நாள் என்றால், நம்முடைய வீட்டிலேயே பெண்ணுக்கும் - ஆணுக்கும் உரிமை கிடைக்குமா? என்கிற பட்சத்தில், இந்த அரிய அவையில், பெண்களை யெல்லாம் உரையாற்றச் சொல்லி அழகு பார்க்க வேண்டும்; இந்தப் பெண்கள் அடுத்த சமூகத்தையும், சமுதாயத்தையும் உருவாக்கக் கூடியவர்கள் என்கிற அடிப்படையில், பெண்களுக்கான சமூகநீதிக்கான நாளாக இன்றைய நாளை நான் எண்ணிப் பார்க்கிறேன்.

ஏனென்றால், எல்லா மேடைகளிலும், ஆண்கள் பேசித்தான் எல்லோரும் கேட்டிருப்போம். ஆனால், இந்த இடத்தில் பெண்களுக்கான வாய்ப்பாக நான் பார்க்கிறேன்.

ஏனென்றால், பாரதிதாசன் சொன்னதைப்போல,

ஆயிரம் ஆண்டெனும் மூதாட்டி அவள்

அணிந்திராத அணியாவார் அறிந்திராத அறிவாவார்

கணந்தோறும் இப்பெரிய தமிழ்நாடு

எதிர்பார்க்கும் தலைவராவார்

கழறவோ அவர் பெயர் தான் இராமசாமி

என்பார்.

இப்படித்தான்கற்போம் பெரியாரியம்நூலில் நான் பார்த்திருக்கிறேன்.

நம்முடைய மாண்புமிகு அமைச்சர் அவர்கள் சொன்னதைப்போல, பெரியாருக்குப் பின் ஒரு பெரிய கருஞ்சட்டைப் படை இருக்கிறது; அந்தக் கருஞ்சட்டைத் தோழர்களையெல்லாம் ஒன்றிணைக்கும் இடமாக இருக்கும் பட்சத்தில் - அடுத்த கட்ட தலைமுறைக்குச் செல்லக்கூடிய பாடமாக இந்தப் புத்தகம் இருப்பதைப் நான் பார்க்கிறேன்.

சென்னை பல்கலைக் கழகத்தில் சமூகநீதியை இளங்கலைப் பாடத் திட்டத்தில் சேர்க்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். அதேபோன்று, திறந்தவெளிப் பல்கலைக் கழகத்தில் அண்ணா இருக்கையின் வழியாக, அண்ணா தமிழியம் என்று ஒரு குறும் பாடத் திட்டமாக சேர்க்க இருக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

சமூகத் தலைவர்கள் என்ற அளவில் பள்ளிப் பாடத் திட்டங்களில் படித்திருப்போம் தந்தை பெரியாரைப் பற்றி. அவருடைய வாழ்க்கை வரலாற்றை அடுத்த தலைமுறைக்கும் கொண்டுபோய்ச் சேர்த்தால், எல்லா தலைமுறையினருக்கும் ஒரு புரிதலை ஏற்படுத்தும் என்றுதான் சொல்லவேண்டும்.

ஏனென்றால், தந்தை பெரியார் அவர்கள், இந்த சமூகத்தில், சமூகநீதி கிடைக்கவேண்டும் என்பதற்காக என்ன பாடுகளையெல்லாம் பட்டிருக்கிறார் என்று நினைத்தப் பார்க்கவேண்டும்.

தந்தை பெரியார் அவர்கள் பயந்து ஒருபோதும் நான் பார்த்ததில்லை

பேரறிஞர் அண்ணா அவர்கள், சட்ட எரிப்புப் போராட்டம் நடத்தினால் மூன்றாண்டு கடுங்காவல் தண்டனை என்றபொழுது, ‘‘மூன்றாண்டுகள் என்ன, முப்பது ஆண்டுகள் தண்டனை என்று சொன்னால்கூட, தந்தை பெரியார் அவர்கள் சிரிப்பது என்பது, குழந்தையினுடைய மழலைச் சிரிப்பைப் போன்று இருக்கும். கோபம் என்றால், சிங்கம் கர்ஜிப்பதைப்போல, இருக்கும். அழுவது  என்பதுகூட, குழந்தைத் தேம்பித் தேம்பி எப்படி அழுவுமோ, அதுபோன்றுதான் அவருடைய சிரிப்பும், கோபமும், அழுகையும் இருக்கும். அவருடன் நான் இருந்து பார்த்திருக்கிறேன், தந்தை பெரியார் அவர்கள் பயந்து ஒருபோதும் நான் பார்த்ததில்லைஎன்று குறிப்பிட்டார்.

பேரறிஞர் அண்ணா அவர்கள், தந்தை பெரியாரோடு இருந்து, பார்த்த, பழகிய நாட்களையும், அதற்கடுத்து, தந்தை பெரியார் அவர்கள் எப்படி ஒரு பன்முகப் பார்வையோடு திகழ்ந்தார் என்பதையும்கற்போம் பெரியாரியம்புத்தகத்தில் பரிமளித்திருப்பதை அடுத்தத் தலைமுறையினருக்குக் கொண்டுபோய்ச் சேர்த்திருக் கிறார் மானமிகு ஆசிரியர் அவர்கள்.

கற்போம் பெரியாரியம்“ புத்தகத்தில் 14 தலைப்புகள்!

இந்தப் புத்தகத்தில் 14 தலைப்புகள் இருக்கின்றன. தந்தை பெரியார் அவர்களுக்கு வாழும்பொழுதே கிடைத்த வெற்றி. ஏனென்றால், பலருக்கு வாழும்பொழுது வெற்றி கிடைப்பதில்லை.  தந்தை பெரியார் அவர்கள் வாழ்ந்து, மறைந்து பல ஆண்டுகள் ஓடினாலும்கூட, இது தந்தை பெரியாரின் மண் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கும் சமூகமாக இந்தத் தமிழ்ச் சமூகம் இருப்பதை நாம் பார்க்கிறோம்.

கற்போம் பெரியாரியம்புத்தகத்தை  ஒரு பாடத் திட்டமாக வைத்தால்....

திருச்சியில் பெரியார் உலகம் ஏற்படுத்தப் போகி றோம் என்கிறபொழுது, உலகமெல்லாம் பெரியாரு டைய கருத்துகளைக் கொண்டு செல்லவேண்டும் என்றால், ‘கற்போம் பெரியாரியம்' புத்தகத்தை  ஒரு பாடத் திட்டமாக வைத்தால், கண்டிப்பாக அடுத்த தலைமுறையினருக்கு வசதியாக இருக்கும்.

எல்லோரும் பெரியாருடைய கருத்துகளைப் படிப்ப தற்கு ஆர்வமாக இருக்கின்ற இந்தச் சூழலில், இந்தப் புத்தகம் அவர்களுக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்.

தந்தை பெரியாரின் கருத்துகளை, எழுத்துகளின் வாயிலாக, இதழ்களின் வாயிலாக தமிழ்ச் சமூகத்திற்குப் பல்வேறு கருத்துகளையெல்லாம் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டும். தந்தை பெரியார் அவர்கள் நடத்திய இதழ்களைப் பார்த்தால் நன்றாகப் புரியும்.

இப்பொழுதுள்ள கணினி யுகத்தில், நாம் எளிமை யாகத் தமிழ் மொழியில் தட்டச்சு செய்வதற்குப் பயன் பட்டுக் கொண்டிருக்கின்ற தமிழ் எழுத்துச் சீர்திருத்தத் தைக் கொண்டு வந்தவர் தந்தை பெரியார் அவர்கள்.

புராணத்தையும், சிலப்பதிகாரத்தையும் தந்தை பெரியார் அவர்கள் குறை சொல்லியிருந்தாலும், அவர் தூக்கிப் பிடித்த ஒரே இலக்கியம் திருக்குறள் என்பதை நாம் எல்லோரும் அறிந்திருக்கிறோம்.

திருக்குறளுக்காக அவர் மாநாடுகளை நடத்தியதும், திருக்குறளுக்காகப் பல்வேறு செயல்களை செய்ததை யெல்லாம் நாம் படித்திருக்கிறோம்.

பெரியார் தமிழுக்கு என்ன செய்தார் என்கிற கேள்விக்கு முற்றுப்புள்ளி

தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார் என்று உண்மையை அறியாத சிலர் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம், இந்தப் புத்தகத்தைப் படித்தால், பெரியார் தமிழுக்கு என்ன செய்தார் என்கிற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமையும்.

தந்தை பெரியார் அவர்கள் நடத்திய பல போராட் டங்களைப்பற்றி நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். அண்ணா அவர்களுடைய ஆட்சியிலும், கலைஞர் அவர்களுடைய ஆட்சியிலும், இன்றைய ஆட்சியிலும், பெரியார் வகுத்த கொள்கைத் திட்டங்கள் சட்ட வடிவமாக்கப்பட்டதையும் நாம் இன்று கண்கூடாகக் கண்டுகொண்டு இருக்கிறோம்.

அந்த வகையில், தந்தை பெரியாருடைய கருத்தியல் களையெல்லாம்கற்போம் பெரியாரியம்' என்ற நூல் தாங்கி நிற்கிறது.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டம்

பெரியாருடைய சமூகநீதியாக இருந்தாலும் சரி, தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்ற முடியவில்லையே என்று இறுதிவரை நெஞ்சுருகிச் சொன்ன கலைஞர் அவர்களின் வார்த்தைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டம் நிறைவேற்றப்பட்டு, அவர்கள் பணி யில் அமர்த்தப்பட்டதையும் நாம் பார்க்கிறோம்.

அனைவருக்கும் அனைத்தும் என்கிற பொதுவு டைமைச் சித்தாந்தம் கொண்ட தலைவராக தந்தை பெரியாரை நாம் பார்க்கிறோம்.

சமூகநீதி என்று, ஒரு சாரார் மட்டும் ஏற்றுக்கொள்ளும் ஒரு சமூகநீதியாக இல்லாமல், அனைத்துக் கொள்கை உடையவர்களையெல்லாம் ஒன்றிணைக்கும் சமூக நீதியாக அவருடைய இன்றைய உறுதிமொழியையும் நாம் பார்க்கிறோம்.

இப்படிப்பட்ட தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கைகளைப் போராட்டங்களைப்பற்றி அறியாத வர்கள் இருக்க முடியாது. இட ஒதுக்கீடு என்ற ஒன்றை நமக்குப் பெற்றுத்  தராவிட்டால், நாம் இவ்வளவு தூரம் உயர்ந்திருப்போமா என்பது கேள்விக்குறிதான்.

வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்காக தந்தை பெரியார் அவர்கள் போராடியதினுடைய விளைவாகத்தான், நாம் அந்தப் பயனை அனுபவிக்கின்றோம்.

அறிஞர் அண்ணா அவர்கள் தந்தை பெரியார் அவர்களைப்பற்றி சொல்லும்பொழுது, சமூகத்தில் கொசுக்களை அழிப்பதற்கு, கொசு வர்த்தியும், ஆல் அவுட்டும் வைத்தால் அது தீர்வாகாது; கொசு உற்பத்தியாகும் சாக்கடைகளை ஒழிக்கவேண்டும் என்று சொல்வார்.

தீண்டாமை ஒழிப்பைவிட, ஜாதி ஒழிப்பை முன்னெடுக்கவேண்டும்

அதேபோன்று, இந்த சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் மூடப் பழக்கவழக்கங்களை ஒழிப்பதற் காகப் பாடுபட்டவர் தந்தை பெரியார் அவர்கள்.

தீண்டாமை ஒழிப்பைவிட, ஜாதி ஒழிப்பை முன்னெ டுக்கவேண்டும் என்று சொன்னவர் தந்தை பெரியார்.

தன் மேல் விழுந்த அவமானங்களையெல்லாம் தாங் கிக் கொண்டு தந்தை பெரியார் அவர்கள் இருந்ததினால் தான், தமிழ்ச் சமூகம் ஒரு பலனை அடைந்திருக்கிறது என்றால், அதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு விடயமாக இருக்கும்.

தமிழரா? திராவிடரா?

பண்பாட்டுப் புரட்சி என்று பார்க்கின்றபொழுது, பொங்கல் திருநாளை எப்படி தமிழர் திருநாளாகக் கொண்டாடுகிறோம். இதழ்களிலும், வலையொலிகளிலும் நாம் நிறைய கேட்கிறோம், படிக்கிறோம். எப்படி என்றால், தமிழரா? திராவிடரா? என்கிற சித்தாந்தத்திற்கு, திராவிடரே என்பதற்கு ஒரு பெரிய கருத்தியலை இந்தக் கற்போம் பெரியாரியல் புத்தகத்தில் பார்க்கலாம்.

ஏன் இதை நான் சொல்கிறேன் என்றால், இந்தத் தகவல்களையெல்லாம் அடுத்த தலைமுறையினர் படிக் கின்றபொழுது, தமிழரா? திராவிடரா? பார்ப்பனரல்லாத சமூகமா என்பதற்கு ஒரு விடயமாக விளக்கமாக இந்தப் புத்தகத்தில் பல செய்திகளைப் படிக்க நேரிடுகிறது.

இந்தப் புத்தகத்தில் இருக்கின்ற தலைப்புகள் ஒவ் வொன்றையும் நாம் பார்க்கின்றபொழுது, பெரியார் அவர்கள் தொலைநோக்கு சிந்தனையாளராக, தீர்க்கதரிசியாக  இருந்தார் என்பதற்கு ஒரு தகவலைச் சொல்கி றேன், இது எல்லோருக்கும் தெரிந்த தகவல்தான்.

இனிவரும் உலகம்!

சோதனைக் குழாய் என்பது மகளிருக்கு வரப் பிரசாதமாக இருந்ததை 1933 இல்இனிவரும் உலகம்' என்ற நூலில் தந்தை பெரியார் எழுதியதைப் பார்க்கி றோம்.

கரோனா காலகட்டத்தில், வீட்டிற்குள் முடங்கிக் கிடப்பவர்களுக்கெல்லாம் கைப்பேசி என்பது ஒரு பெரும் வாய்ப்பாக அமைந்தது. உலகமே உள்ளங்கையில் அடங்கும் என்பதை இன்றைக்குக்கூட இந்த மேடையில் நாம் பார்த்தோம்.  ஜப்பானிலிருந்து பேசிய நிகழ்ச்சிகளை.

எப்படி ஒரு சமூக விஞ்ஞானியாக தந்தை பெரியார் திகழ்ந்திருக்கிறார் என்பதற்கான பல்வேறு செய்திகள் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது.

இறை மறுப்பாளர் என்று ஒரு குறுகிய வட்டத்தில் அவரை அடக்கிவிடாமல், பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதைப்போல, நூறாண்டு மருந்தை ஒரு சிறு குளிகைக்குள் அடக்கியதைப்போல,  தந்தை பெரியார் அவர்களுடைய கருத்தியல்களையெல்லாம் இந்த ஒரு நூலுக்குள் அடக்கியிருக்கிறார் நம்முடைய ஆசிரியர் அவர்கள். 14 தலைப்புகள் மட்டுமின்றி, பின்னி ணைப்பாக திராவிட இயக்கக் கொள்கை அறிக்கையும், பார்ப்பனர், பார்ப்பனியம் குறித்த பெரியாருடைய கருத்தியல்களை அவர் எப்படி உள்வாங்கிக்கொண்டு சமூகத்திற்குக் கொடுத்தார் என்கிற ஒரு செய்தியையும் பார்க்க முடிகிறது.

நான் ஒரு கருத்தாளன் என்றார் தந்தை பெரியார்!

நாம் இந்த மேடையில் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றால்,  அந்தப் பேச்சைக்கூட எப்படி ஒரு பேச்சாளராக சொல்கிறார்? நான் படித்திருக்கிறேன் என்பதற்காக, நான் சாதாரணமாகவெறும் பேச்சாளியல்ல - எல்லாம் அறிந்த ஒரு படிப்பாளி அல்ல. நான் சொல்வது எல்லாம் யாருக்காவது நன்மை கிடைக்கும் - அதனால் இந்த உலகமும் நன்மை அடையும் என்பதற்காக நான் ஒரு கருத்தாளன்என்பதைப் பதிவு செய்கிறார்.

நான் பேச்சாளியும் அல்ல, படிப்பாளியும் அல்ல - நான் ஒரு கருத்தாளன்.

வெறும் சிந்தனையற்ற பேச்சு என்பது கவைக்காது என்பதைப்போல, ஓரிடத்தில் பேசுகிறோம் என்றால், கேட்கக்கூடியவர்களை சிந்திக்கச் செய்யக்கூடிய ஒரு பேச்சாக இருக்கவேண்டும் என்பதைப் பதிவு செய்கிறார்.

இப்படி அவர் சிந்தனையற்ற பேச்சு, வெறும் அழகழகாக அடுக்கி அடுக்கிப் பேசினால், ஒரு சிந்தனையைத் தூண்டுமா? என்றால், கிடையாது.

ஆகவே, சிந்தித்துப் பேசவேண்டும்;  கேட்பவர்களின் சிந்தனையைத் தூண்டவேண்டும் என்று பதிவு செய்கிறார்.

இவையெல்லாம் அடுத்த தலைமுறையினருக்கு, மேடை பேச்சாளராக ஆகக்கூடியவர்களுக்கெல்லாம் ஒரு பயனுள்ள செய்தியாக இந்தப் புத்தகத்தில் நாம் பார்க்கிறோம்.

யாரிடம் எப்படி அணுகவேண்டும் என்பது ஒரு மனிதநேயப்  பற்றாகும்.

மானிடப்பற்றும், அறிவுப்பற்றும்தான்!

தந்தை பெரியார் அவர்கள், மொழிப் பற்று, இனப்பற்று,  மதப் பற்று, நாட்டுப்பற்று இவையெல்லாம் கடந்து - மானிடப்பற்றும், அறிவுப்பற்றும்தான் என்னு டைய பற்றாக இருக்கிறது என்றார்.

கடைசிவரை நாம் பார்க்கின்றபொழுது, தந்தை பெரியாருடைய மனிதநேயம், அணுகுமுறை எப்படிப் பட்டதாக இருந்தது என்பதற்குச் சான்றாக இந்த நூலில் நாம் பார்க்கிறோம்.

ஏனென்றால், மனிதநேயம், அணுகுமுறை என்பது, யாரிடம் எப்படி பழகவேண்டும்? கருத்து முரண்பாடு டைய, எதிர்கருத்துடையவர்களிடம் எப்படி அணுக வேண்டும் என்பதற்கு இது ஒரு சிறந்த புத்தகம்.

இன்றைய இளைய தலைமுறையினர், நான் மருத்துவராக வேண்டும்; பொறியாளராக வேண்டும்; பேராசிரியராக வேண்டும்; தொழில்நுட்பக் கலைஞனாக வேண்டும் என்பதைவிட, நான் ஒரு சிறந்த மனிதனாக ஆகவேண்டும் என்றால், கண்டிப்பாக இந்த நூலைப் படிக்கவேண்டும்.

கற்போம் பெரியாரியம்“  நூல் ஒரு கருத்துப் பெட்டகம்

ஏனென்றால், இந்த நூலில் உள்ள அத்தனைக் கருத்துகளும், மிகச் சிறப்பாக, எளிய நடையில், தந்தை பெரியார் அவர்கள் கையாண்ட நடையை எளிதாக்கி - ஏனென்றால், பாமரர்களும் படிக்கவேண்டும்; படித்த வர்களும், படித்து உணரவேண்டும் என்கிற வகையில், இந்தப் புத்தகம் மிக எளிய நடையில், படிக்கக்கூடிய வர்களின் ஆர்வத்தைத் தூண்டக் கூடிய வகையில், கருத்துப் பெட்டகமாக  இந்த நூல் இருப்பதை நாம் பார்க்கிறோம்.

இந்தப் புத்தகத்தில் என்னவெல்லாம் இருக்கிறது என்பதற்கு - கண்டிப்பாக தந்தை பெரியாருடைய வாழ்க்கை வரலாறுபற்றி நிறைய தகவல்கள் இருந்தாலும், நான் ஏற்கெனவே சொன்னதைப்போல, எதிர்காலத் தலைமுறையினருக்குப் பயன்படும் வகையில், கல்வி நிலையங்களிலும், நிறுவனங்களிலும் பாடத் திட்டமாக வைத்தால், ஒரு சிறந்த வழிகாட்டி நூலாக அமையும்.

ஒரு சிறு துணுக்காக இல்லாமல், முழுவதுமாக இந்தப் புத்தகத்தைப் பார்வை நூலாக, பாட நூலாக வைத்தால், அனைவருக்குமாகக் கொண்டு சேரும் ஒரு கருத்தியலாக இருக்கும் என்ற அடிப்படையில்,

எனக்கு இந்த அரங்கில், ஏனென்றால், தந்தை பெரியார் அவர்கள் சொன்னதைப்போல, இது கருத்து முரண்பட்டவர்களுக்கும், ஒரு பொது மண்டபமாக நான் அமைத்திருக்கிறேன் என்று சொன்ன இடத்தில், நான் இங்கே வந்து பேசுவதற்கு எனக்கு வாய்ப்பளித்த ஆசிரியர் அய்யா அவர்களுக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறேன்.

கண்டிப்பாக எதிர்கால தலைமுறையினரிடம் பெரியாரைப்பற்றி கொண்டு செல்வதற்கு, ‘‘கற்போம் பெரியாரியத்தையும், “கற்பிப்போம் பெரியாரியம்என்று சொல்லி, வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்!

- இவ்வாறு பேராசிரியர் சுலேசனா அவர்கள் உரையாற்றினார்.

No comments:

Post a Comment