நேற்றைய (2.10.2021) 2ஆம் பக்கத் தொடர்ச்சி...வைகோ வாழ்த்துகிறார்
திராவிடர் இயக்கத்தின் போர் வாள் வைகோ, ஈரோடும் காஞ்சியும் எதனால் பெருமை பெற்றன என்ற வினாவிற்கு விடை தருகிறார், இன்பத் தமிழ் நாட்டின் இருவிழிகளாம் பெரியாரும், அண்ணாவும் பிறந்ததால் ஈரோடும் காஞ்சியும் உலகப் புகழ்பெற்றன' என்கிறார்.
திராவிடர் கழகத்தின் சுவரெழுத்துப் பணிகளையும், விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, Modern Rationalist, முதலான ஏடுகள் கரோனா அச்சுறுத்தலுக்கும் ஈடுகொடுத்து பல வண்ணங்களில் இணைய வழியில் உலகம் முழுவதும் முழுவீச்சில் பரவிக் கொண்டிருந்த தையும் 'மயக்க பிஸ்கெட்டுகள்’ எனும் சிறு நூல் முதல் ‘குடிஅரசு' தொகுப்பு முதலான பெரு நூல் வரையிலான கொள்கை விளக்க வெளியீடுகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருப்பதையும் புரட்சிப்புயல் வைகோ பதிவு செய்து பாராட்டுகிறார்.
‘இவ்வளவு விரிவான பணிகளுக்கும் தமிழர் தலைவர் ஆருயிர் அண்ணன் கி.வீரமணி அவர்களின் ஓய்வறி யாப் பணிகளும் வழிகாட்டுதலும் காரணம் என்பதை அறிந்து அவரது தொண்டறப் பணிக்கு நாம் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்' என அய்யாவின் பிறந்த நாள் மலருக்கு வாழ்த்துக்களைத் தொவித்துக் கட்டுரை வரைந்துள்ளார் வைகோ.
செங்கொடித் தலைவர்களின் வாழ்த்துரை
இந்திய கம்யூனிட் கட்சியின் மாநிலச் செயலாளர் அய்யா இரா.முத்தரசன் அவர்கள் பெரியாரின் கொள்கை விஞ்ஞானம் சார்ந்தது என்று பாராட்டுகிறார்,
நம் வாழ்நாளில் சிறுவயது தொடங்கி இன்றுவரை விஞ்ஞானத்தின் வியக்கத்தக்க வளர்ச்சியைப் பார்த்து வருவது மட்டுமல்ல பயனடைந்தும் வருகிறோம், தந்தை பெரியாரின் கொள்கை விஞ்ஞானம் சார்ந்தது. விஞ்ஞானம் வளர்வது போன்று பெரியாரின் கொள்கைகளும் கால வளர்ச்சிக்குத் தக்கபடி வளர்ந்து தன்னைத் தகவமைத்துக் கொண்டு மேலும் முன்னேற்றம் கண்டு வருகிறது... தந்தை பெரியாரின் கொள்கை மனித குலம் முழுமைக்குமான கொள்கையாகும், காலங்காலமாக அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட மக்களுக்கு மனுதருமம் என்கின்ற பெயரால் மறுக்கப்பட்ட கல்வியை வேலைவாய்ப்பை மீட்டுத்தந்த பெருமைக்குரியவர் தந்தை பெரியார்’ என்று திரு. முத்தரசன் வாழ்த்துகிறார்,
பேராசிரியர் அருணன் எழுதியுள்ள ‘ஒரு மார்க்சிஸ்டு பார்வையில் திராவிடர் கழகம்‘ என்ற புத்தகத்திலிருந்து தெ.புதுப்பட்டி பழனிச்சாமி அவர்கள் சில கருத்துக்களைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார், சுயமரியாதை இயக்கத் தின் தொடக்கத்திலேயே பெரியார் வகுப்புரிமைக்காக வாள் சுழற்றியது, தீண்டாமை, ஒழிப்புக்கு முன்னுரிமை கொடுத்துப் பணியாற்றியது, பார்ப்பனியத்தின் அடி வேராக இருந்த கடவுள், மதம், சாஸ்திரங்கள் ஆகிய வற்றை விமர்சித்தது முதலான பணிகளை முனைப்புடன் செய்து வந்தார் என்றும்,
ஈ.ரோட்டில் நடந்த சுயமரியாதை மாநாட்டில் ஆயிரக் கணக்கான மக்கள் ஒரே பந்தியில் சமமாக உட்கார்ந்து சாப்பிட்டதை இயக்க எதிரிகளும் கூட இருந்து பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள், எவ்வித ஒளிவு மறைவும் இல்லாமல் பார்ப்பனரல்லாத - சைவர்களல்லாத நாடார் கள் சமையல் செய்தார்கள். ஈரோட்டில் பறையர்கள் முதல் எல்லா ஜாதியினரும் எல்லா மதக்காரரும் பரி மாறினார்கள், எந்த அரசியல் மாநாட்டிலும் பார்ப்பன ரல்லாதார் சமையல் செய்ததோ தீண்டாத ஜாதியார் பரி மாறியதோ, பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் எல்லோரும் ஒரு பந்தியில் இருந்து சாப்பிட ஏற்பாடு செய்ததோ இதுவரையில் நாம் அறிய நடந்ததே இல்லை’ என்றும் பேரா.அருணன் குறிப்பிடுகிறார். 1929 - செங்கற்பட்டு மாநாட்டிலும் இதே நிகழ்வு நடந்தது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
விடுதலை - பெரியார் பிறந்த நாள் மலர் வரலாறு
1956-ஆம் ஆண்டு குத்தூசி குருசாமி ஆசிரியராக இருந்த போது ‘விடுதலை’ பெரியார் பிறந்தநாள் மலர் முதன் முதலில் வெளிவந்தது. அதன் பின்னர் 1962 முதல் தமிழர் தலைவர் ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண் டதிலிருந்து விடுதலை பெரியார் பிறந்த நாள் மலர் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றது. தொடக்கத் தில் தாம் அனுபவித்த துன்பங்களை ஆசிரியர் எழுதி யிருப்பதைப் படிக்கும் போது நாம் வருந்துகிறோம். எத்தகைய இடையூறுகளையெல்லாம் ஆசிரியர் எதிர் கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார். இதுவரை வெளி வந்துள்ள 60 மலர்களையும் ஒன்றாக வைத்துப் பார்த்தால் மலரின் வண்ணமும் அச்சு அமைப்பும் அதன் கலை நுணுக்கங்களும் எவ்வாறு வளர்ச்சியடைந்துள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம், இளம் ஆய்வாளர் களுக்கு இது நல்லதோர் ஆய்வுக் களமாகும்
1962 - முதல் பெரியார் பிறந்த நாள் மலர் சிறப்புடன் வெளிவருவதற்கு உதவி செய்த தோழர்கள் திருவாரூர் தங்கராசு. ‘பாலு பிரதர்ஸ் - பாலு, சீனு, புலவர் இமயவரம் பன், நெருக்கடி நிலைக் காலத்தில் அம்மாவின் நிழலாக இருந்து துணிந்து தொண்டாற்றிய கவிஞர் கலி.பூங்குன் றன், இயக்க ஓவியர் சி.டி.அரசு என்று விடுதலை பெரியார் பிறந்த நாள் மலருக்கு உதவிய பெருமக்களை ஆசிரியர் நன்றிப் பெருக்கோடு நினைவு கூர்ந்து எழுதுகிறார். இப்போது. மலர் வெளியிடும் பணியைத் தன்னிடமிருந்து கைப்பற்றிக் கொண்ட கவிஞர் கலி.பூங்குன்றன் அவர் களின் பணியை ஆசிரியர் மனந்திறந்து பாராட்டுகிறார்.
திராவிடம் வெல்லும்
திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள், திராவிடம்‘ மலர்ந்த வரலாற்றை - அதன் சாதனைகளை நிரல்பட எடுத்துக் காட்டுகிறார். 1927-இல் திராவிடர் பணிகளில் நிரம்பிய நிலை வந்தது, படிப்பு மறுக்கப்பட்ட திராவிடர் பெருமளவில் படித்தனர். கல்விச் சாலைகளில் நுழையவே கூடாது எனத் தாழ்த்தி வைக்கப்பட்டோர் படிப்பதற்கென்றே பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தனிப் பள்ளிகள் ஏற்படுத்தினர். வசிக்கும் வீடற்ற நிலையில் இருந்தோர்க்கு வாழ்வளிக்க 4 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் நிலங்களை அவர்களுக்கு உரிமையாக் கினர். தலைவர் பெரியார் அவர்களால் தமிழ் காப்பாற்றப் பட்டது. இந்திக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை என்ற நிலை உருவானதே ‘திராவிடர் உணர்வால்தான். காற் றாலை மின் உற்பத்தியில் தமிழ்நாடு உலக நாடுகள் ஒன் பதில் ஒன்று! இவ்வாறு திராவிடம் நிகழ்த்திய சாதனை களைச் செயலவைத் தலைவர் தரவுகளோடு நிறுவியுள் ளார், ஆய்வாளார்களுக்கு மிகுந்த பயன் தரும் கட்டுரை.
உலகிற் சிறந்த மெய்யியல் அறிஞர்
நாந்திக வரலாற்றிலும் பொருள் முதலியல் வரலாற்றி லும் தந்தை பெரியாரைப் போன்று தொடர்ந்து 75 ஆண்டுகள் மக்களைச் சந்தித்த அறிஞர் வேறு எவரும் இல்லை என்பதைப் பேராசிரியர் மு.நாகநாதன் வரலாற் றுக் கண்ணோட்டத்துடன் விளக்கியிருக்கும் பாங்கு மிக அருமைப்பாடுடையதாகும். தமது மெய்யியலுக்கு வலிமை சேர்க்க உலகத்தில் உள்ள பல்வேறு சிந்தனை யாளர்களின் படைப்புகளையும் மொழிபெயர்த்து வெளியிட்டார் பெரியார்.
1001-ஆம் ஆண்டைச் சேர்ந்த அல்பருணி, இந்தியச் சமூகப் பண்பாடுகளைப் பற்றி ஆராய்ந்து பார்ப்பனச் சமூகம் அறிவுசார்ந்த ஒழுக்கமிக்க சமூகமாக இல்லை என்பதை எடுத்துக் காட்டியிருப்பதையும், இராமாயண மும், ராமனும் ஆரியர்களால் உருவாக்கப்பட்ட அடக்கு முறையின் ணீசின்னம்‘ என்று மகாத்மா பூலே குறிப் பிட்டிருப்பதையும்,
‘பகவத் கீதை மீது நீங்கள் வைத்திருக்கும் கருத்து தவறானது, வன்முறையற்ற சமூகச் சிந்தனையில் நீங்கள் அக்கறை உள்ளவர். ஆனால் பகவத் கீதை வன்முறை யைத் தூண்டும் நூல்’ என்று காந்தியிடம் நேருக்கு நேர் உரைத்த தர்மானந்த கோசாம்பி கூறியதையும், அண்ணல் அம்பேத்கர், மாக்சு முல்லர், வள்ளலார், இரட்டை வேடம் பூண்ட விவேகானந்தர், முதலியோரின் கருத்துக்களையும் எடுத்துக் காட்டித் தந்தை பெரியாரின் பொருள் முதலியல் சிந்தனையின் சிறப்பை விளக்குகிறார், பேராசிரியர் மு.நாகநாதன் பல்வேறு கருத்துக்களை இக்கட்டுரையில் தெளிவாக விளக்கியிருப்பது பொருள் முதலியல் சிந்தனை வரலாற்றைப் புரிந்து கொள்ள உதவுகின்றது.
பெரியாரின் பிறந்த நாள் செய்திகள்
தந்தை பெரியார் பிறந்த நாள் செய்திகளைப் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் விரிவான முறையில் ஆராய்ந்திருக்கிறார். பெரியாரின் பிறந்த நாள் செய்தியை வரலாற்று ஆவணம் (The Great Chart) என்று பேராசிரியர் குறிப்படுவது மிக அருமை!
பெரியார் விடுத்த பிறந்த நாள் செய்திகள் அனைத் தையும் ஒருங்கு வைத்து ஆராய்வது - முனைவர் பட் டத்திற்கு உரிய சீரிய பணியாகும் என்பதைப் பேராசிரியர் மங்கள முருகேசன் கட்டுரை புலப்படுத்துகிறது.
95-ஆம் ஆண்டு பிறந்த நாள் செய்தியில் பெரியார் தெரிவித்துள்ள கருத்துக்கள் தமிழர் இதயங்களில் இடி யாய் விழுந்தன என்கிறார் பேராசிரியர்.
‘இக் கட்டுரை என்னால் ஆண்டு மலர்களுக்கு எழுதப்படும் கட்டுரைகளில் இதுவே கடைசியான கட்டு ரையாக இருந்தாலும் இருக்கலாம்.... அடுத்த ஆண்டு நான் இருப்பேனோ இல்லையோ. நாம் உடனடியாக விடுதலை, அதாவது இந்தியக் கூட்டாட்சியிலிருந்து விலகிச் சுதந்திரத் தமிழ்நாட்டை உருவாக்க வேண்டிய வர்களாக இருக்கிறோம். தந்தை பெரியாரின் உள்ளக் கிடக்கை என்ன என்பதை பேரா.மங்களமுருகேசன் தெளிவாக வரைந்துள்ளார்.
பெரியார் சிந்தனை மரபின் தனிச்சிறப்பு
இந்திய வரலாறு எத்தனைப் பழைமையானதோ அத்த னைப் பழைமையிலும் பெரியாரைப் போன்ற ஒரு மனிதர் தோன்றியதில்லை, அவரைப்போல் சிந்தித்தவர்கள் இருக்கலாம். ஆனால் அனைத்துத் தரப்பினராலும் மதிக் கப்படுபவராகப் பெரியார் மட்டுமே விளங்கினார் என்பதைப் பேரா. ராஜன் குறை விளக்குகிறார்.
‘பெரியார் தமிழ்நாட்டு அரசியலின் முன்னத்தி ஏர்! காங்கிரசுக் கட்சியையும் அவரே வேர் மட்டத்தில் வலுப்படுத்தியவர், காங்கிரஸ் எதிர்ப்புக்கும் திராவிட இயக்கத்திற்கும் மக்கள் ஆதரவைத் திரட்டியவரும் அவரே. எந்தச் சிந்தனை மரபையும் சாராமல் தனக்குள் சிந்தித்து ஓர் ஆழ்ந்த தத்துவப் பார்வையை அவர் உருவாக்கிக் கொண்டார் என்கிறார் பேரா.ராஜன் குறை,
திராவிட மாடல்
சமூக நீதித் தத்துவம் பிறந்து தவழ்ந்து வளர்ந்து, இன்று மாற்றிட முடியாத வழிமுறையாகத் தமிழ்நாட்டில் நிலைத்து விட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சமூக நீதி வலியுறுத்தப்படுவதற்கு முன்பே அதனைப் போற்றிப் பாதுகாத்துப் பேணி வளர்த்தது தமிழ்நாடு என்பதைப் பொருளாளர் வீ.குமரேசன் அவர்கள் தெளிவுபட எடுத்துக் காட்டுகிறார், இன்று இந்தியா முழுவதும் இடஒதுக்கீடு உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. அதற்குக் காரணம் தந்தை பெரியார் அவர்களே.
மக்களின் நலவாழ்வு, பரவலாக்கப்பட்ட கல்விமுறை, நண்பகல் உணவுத் திட்டம், உயர் கல்வி நிறுவனங்கள், பொது விநியோகச் சேவைகள், தொழில்துறை வளர்ச்சி எனப் பல துறைகளிலும், திராவிட ஆட்சி செய்து வரும் சாதனைகள் திராவிட மாடலாக உலகுக்கே வழிகாட்டு வனவாகத் திகழ்கின்றன என்பதைப் பொருளாளரின் கட்டுரை விளக்குகிறது,
திராவிட இயக்கம் தமிழுக்கு அளித்த ‘தமிழ்க் கொடைகளைப் பேரா.ப,காளிமுத்துவின் கட்டுரை விரிவாக எடுத்துக் காட்டுகிறது.
தந்தை பெரியார், ஊரோடு ஒத்துப் போகாமல் தம் வாழ்நாள் முழுவதும் எதிர் நீச்சல்காரராகவே விளங் கினார், அவர் எதிர் நீச்சல் போட்டு வென்ற துறைகளைப் பட்டியலிட்டு விளக்குகிறார் பேராசிரியர் நம்,சீனிவாசன்,
உலகில் தோன்றிய பல்வேறுபட்ட சிந்தனைகளுக் கெல்லாம் முன்னோடியாகத் தந்தை பெரியார் விளங்கு கிறார் என்பதைப் பெரியார் பன்னாட்டமைப்பின் இயக் குநர் டாக்டர் சோம.இளங்கோவன் “பெண் ஏன் அடிமை யானாள்?” எனும் பெரியார் நூலினை எடுத்துக் காட்டித் தெளிவுபடுத்துகிறார், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்‘ என்றாலும் உலகெங்கும் பிறப்பால் பெரும்பான்மை மக்கள் இழிவுபடுத்தப்படுகின்றமையைச் சுட்டிக் காட்டி உலக மனித நேய அமைப்புகளின் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது என்கிறார் டாக்டர் சோம.இளங்கோவன்.
தாடியில்லாத பெரியார்
காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சராக இருந்தாலும் திராவிட இயக்கங்களின் கொள்கைகளைச் செயல்படுத்து வதில் தீவிரம் காட்டியவர் ஓமந்தூரார் என்பதை நல்லினி ஒளிவண்ணன் கட்டுரை விளக்குகிறது.
1936-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சித் தலைவர் பத விக்கான தேர்தலில் சத்தியமூர்த்தி அய்யரைத் தோற் கடித்தவர் ஓமந்தூரார், ஆதி திராவிடர் ஆலய நுழைவுச் சட்டத்தைக் கொண்டுவந்து கோயில்களுக்குள் எல்லாத் தரப்பினரும் செல்வதற்கு வழிவகுத்தவர் ஓமந்தூரார், திருப்பதி கோயில் அறங்காவலராகத் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் குலசேகர தாஸ் அவர்களை நியமித்தவரும் ஓமந்தூரார் தான்!
தேவதாசி ஒழிப்பு முறைக்குச் சட்டவடிவம் கொடுத்து அதை ஒழித்தவரும் அவர்தான்! நேர்மையின் உறை விடமாகத் திகழ்ந்தவர் ஓமந்தூரார் என்று அரிய செய்திகள் பலவற்றை நல்லினி ஒளிவண்ணன் பதிவு செய்திருக்கிறார்,
இனிவரும் உலகம்
தன் அறிவின் ஆற்றலைச் சுய நலத்திற்கோ பெரு மைக்கோ புகழுக்கோ பெரியார் ஒருபோதும் பயன்படுத்த வில்லை, அவரது பார்வை மனித குலத்தின் விடுதலைக் கானது என்பதை பிரின்சு என்னாரெசு பெரியார் விளக்கு கிறார். 80 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் கணித்தவை யெல்லாம் இன்று பயன்பாட்டில் இருப்பதைப் பார்க்கி றோம்.
போரில்லாத, கொள்ளை, கொலை இல்லாத உலகமாக, உணவுக்காக வேலை செய்ய வேண்டிய, வேலையில்லாத் திண்டாட்டம் இல்லாத உலகமாக இது மாறும், மாற வேண்டும் என்று பெரியாரின் இனிவரும் உலகம் பற்றிய விரிந்த பார்வையை பிரின்சு விளக்குகிறார், பல முறை படிக்கத் தூண்டும் கட்டுரை இது.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதற்கான உரிமைப் போராட்டத்தின் வரலாற்றை ஒரு நேர்மையான வரலாற்றுப் பேராசிரியர் எழுதுவதைப் போல் அனைத்து தேர்வுகளையும் ஒன்று திரட்டி ஓர் ஆய்வுக் கட்டுரை யாகப் படைத்திருக்கிறார் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள், எத்தனை எத்தனை இடர்ப்பாடுகளைத் தாண்டி நாம் வந்திருக்கிறோம்!
கவிஞரின் இந்தக் கட்டுரை தனி நூலாக வெளிவர வேண்டும், அது ஆராய்ச்சி மாணவர்களுக்கு அரிய தரவுகளைத் தரும் கேடயமாகப் பயன்படும்.
பெரியார் என்றும் நிகழ்காலம்
தந்தை பெரியார் வாழ்ந்த காலத்திலும் அவரது இறப்பிற்குப் பின்னும் அவர்தான் தன்னைச் சுற்றி இருக்கும் சமூகத்தை இயக்குபவராக இருக்கிறார் என்பதைத் திராவிடர் கழகத்தின் பரப்புரைச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி அவர்கள் - அரிய கருத்துக்களை எடுத்துக் காட்டி அரசியலும் சமூகமும் இன்று வரையில் பெரியாரைச் சுற்றியே சுழன்று வருவதைத் தெளிவு படுத்துகிறார். அறிஞர் அண்ணா ஆட்சியைத் தொடங்கியது முதல் இன்று வரை தமிழ் நாட்டின் அடையாளமாகத் தந்தை பெரியாரின் கொள் கைதான் பேசுபொருளாக உள்ளது என்னும் வரலாற்றுண் மையை வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்கள் அருமையான முறையில் பதிவு செய்திருக்கிறார்,
‘இன்றைய இளைஞர்களும் குழந்தைகளும் அவர் களுக்குரிய உண்மையான இயல்புடன் தந்தை பெரியா ரைப் படிக்கிறார்கள், அவருடன் விவாதம் செய்கிறார்கள். இந்தக் கிழவர் என் நண்பர் என்று உரிமை கொண்டாடு கிறார்கள்’ என்னும் அருள்மொழியின் வாசகங்கள் நடை முறை உண்மையை வெளிப்படுத்திக் காட்டுகின்றன. தலைமுறைகள் பல கடந்தும் பெரியார் என்றும் வழி காட்டியாகவே இருப்பார்.
புரட்சிக் கவிஞர்
புரட்சிக் கவிஞரின் கவிதை பெரியார் பிறந்த நாள் மலருக்கு அழகு சேர்க்கிறது. ‘இனக்குறையை நீக்கப் பெரியார் இயக்கம் நாட்டில் இருக்கும்போது இன்னோர் இயக்கம் எதற்கு? என்று வினவுகிறார் புரட்சிக் கவிஞர், மேலும் ‘தமிழ்நாடு’ என்று தமிழ்நாட்டிற்குப் பெயர் சூட்டுமாறு பெரியார் முழங்கியபோது தமிழ்நாடு வரலாற்றில் இல்லை என்று சொன்னார்கள், புரட்சிக் கவிஞர் பாடுகிறார்,
‘தமிழ் நாடென்று பேர் வை என்றார்
வரலாறு இல்லை என்றான்
நமை இகழ்ந்தான் நாக்கறுக்க
நம் பெரியார் இயக்கம் இருக்க
உனக்குமா ஓர் இயக்கம்!'
என்கிறார் புரட்சி கவிஞர். மேலும் மாவட்டம் தோறும் ஆயிரம் கொடிகள், ஆயிரம் விடுதலை, ஆயிரம் உறுப்பினர் என்று சேர்க்கப் பெறுதல் வேண்டும் என்று மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர்களை வேண்டிக் கொள்கிறார் புரட்சிக் கவிஞர்.
மதுக்கடை மறியலை நிறுத்துவது ஈரோட்டிலுள்ள இரண்டு பெண்களின் கைகளில்தான் இருக்கிறது என்று காந்தியார் கூறியது, ஞானியார் அடிகளும் மறைமலை அடிகளும் பெரியாரைப் பற்றிக் குறிப்பிட்டது; 1800களில் கேரளப் பகுதிகளில் தாழ்த்தப்பட்ட பெண்கள் மார்பக வரி செலுத்த வேண்டும் என்ற சட்டம், நீதிக் கட்சியின் சாதனைகள், பெரியாரைக் கொலை செய்ய நடந்த ஆலோசனை முதலான எண்ணற்ற பெட்டிச் செய்திகள் - வரலாற்று நிகழ்வுகள் மலரில் பதிவாகி உள்ளன. இவை மலரை ஒரு தகவல் களஞ்சியமாக்கியுள்ளன.
தந்தை பெரியார் பிறந்த நாள் மலர் ஒரு வரலாற்றுப் பெட்டகமாக விளங்குகிறது. வண்ணப்படங்களில் வரலாறு வரையப்பட்டிருக்கிறது, எழில்மிக்க ஒளிப்படங் களை நிரல்படத் தொகுத்தளித்த ஒளிப்படக் கலைஞர்கள் அனைவரையும் நாம் மனந்திறந்து பாராட்டவேண்டும். பா,சிவக்குமார், பிரின்சு என்னாரெசு பெரியார், பெரியார் வலைக்காட்சி, உடுமலை வடிவேல், அட்டைப் படத்தை அழகு படுத்திய பாரதிராஜா, ஓவியர்கள் டிராட்ஸ்கி மருது, கி,சொக்கலிங்கம், அரசு ஆர்ட்ஸ், ராஜராஜன், சக்தி கிரிஷ், மணிவர்மா, திராவிடன், இலக்கியன், வடிவமைப் பில் வல்ல இரா.வி.நாராயணன், சி.கே.பிருதிவிராஜ், ஜெ.சந்தியா ஆகியோர்க்கு நம் நெஞ்சம் நிறைந்த நன்றி யையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம், கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலைமையில் மலர் சிறப்புற அமைய உழைத்த அனைத்து நல் உள்ளங் களுக்கும் நம் நன்றியும் வணக்கமும், இப்பெருமக்களின் கைவண்ணம் காலத்தை வென்று நிலைத்து நிற்கும் என்பது உறுதி.
கடந்த ஆண்டில் கழக டைரி
திராவிடர் கழகத்தின் நாட்குறிப்பு ஏடாக - ‘கடந்த ஆண்டில் கழக டைரி’ விளங்குகிறது. திராவிடர் கழக வரலாற்றில் மிக இன்றியமையாத ஆவணக் களஞ்சியமாக இது திகழ்கிறது. 2020 - செப்டம்பர் முதல் 2021 - ஆகஸ்ட் வரையிலான கழக நிகழ்வுகளின் தொகுப்பு மலரில் இடம் பெற்றுள்ளது. ஊரடங்கியிருந்த காலத்திலும் பாதுகாப்போடு இயக்கத் தோழர்கள் ஏறக்குறைய 90 - நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்கள்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் சுற்றுப் பயண நிகழ்வுகள் நிரல்படக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. கடைசி மூச்சுவரை ஓயாது உழைத்த தலைவர் தந்தை பெரியாரின் தலைமாணாக்கர் ஆசிரியர் அவர்கள்.
தம் உடல் நலத்தைக் கூடப் பொருட்படுத்தாது ஓயாது சுற்றிச் சுழன்று வருகிறார். 17.09.2020 முதல் 31.08.2021 - வரை ஏறக்குறைய 90 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஆசிரியர் கருத்துரை வழங்கியிருக்கிறார். இவை தவிர 80 காணொலி நிகழ்ச்சிகளில் ஆசிரியர் பங்கேற்று உரையாற்றியிருக்கிறார்.
ஆசிரியர் அறிக்கைகள்
கடந்த பெரியாராண்டில் இன்றியமையாத நிகழ்வுகள் குறித்து ஆசிரியர் வெளியிட்ட அறிக்கைகள் ஏறக்குறைய 2800 ஆகும். இவை நிகழ்கால வரலாற்றை நமக்கு எடுத்துரைப்பவையாக அமைந்துள்ளன, ‘ஆசிரியர் இது பற்றி என்ன அறிக்கை கொடுத்திருக்கிறார்’ என்பதை அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரும் எதிர்பார்த்துக் காத்திருந்து ஆசிரியர் அறிக்கையைப் படித்த பின்பே தங்கள் கருத்தைத் தெரிவிக்கின்றார்கள்’ என்பதை அறியாதார் யார்? அந்த அளவு ஆசிரியரின் அறிக்கைகள் தமிழ்நாட்டின் அறிவுச் சுரங்கமாக விளங்குகின்றன, ஆசிரியர் அறிக்கைகள் கால முறைப்படி நிரல் படத் தொகுத்துக் கொடுக்கப்பட்டிருப்பது ஆய்வாளர்களுக்குப் பேருதவியாக அமைந்துள்ளது. மேலும் ஆசிரியர் விடுத்துள்ள இரங்கல் அறிக்கைகள் 150.
ஊருலகமெல்லாம் அடங்கி முடங்கி மூச்சுவிட முடியாமல் திணறிக் கொண்டிருந்த நேரத்தில் திராவிடர் கழகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதன் தன்னிகரற்ற தலைவர் ஆசிரியர் நாள்தோறும் மக்களுடன் உரையாடிக் கொண்டிருக்கிறார். ‘விடுதலை ’தொடர்ந்து பீடு நடை போட்டுக் கொண்டிருக்கிறது. தந்தை பெரியார் பிறந்த நாள் மலர் காலங்களைக் கடந்து நிற்கும், கருத்துக் கருவூலமாய் ஒளிவீசும்! இத்தகு சிறப்புமிக்க மலரை உருவாக்கிய கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கும் அவருக்குத் துணை நின்ற தோழர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றியும் தலை தாழ்ந்த வணக்கமும்!
No comments:
Post a Comment