கழகத் தலைவர் உரையும் - கற்கண்டாய் இனித்த கருத்து விருந்தும்
கவிஞர் கலி. பூங்குன்றன்
கோவை வெள்ளலூரில் தந்தை பெரியார் பகுத்தறிவுப் படிப்பகம் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி நூலகம் திறப்பு விழா காணொலி மூலம் நேற்று (10.10.2021) முற்பகல் 11 மணி அளவில் வெகு நேர்த்தியாக அமைந்திருந்தது.
தந்தை பெரியார் படிப்பகத்தையும், இப்படிப்பகம் சிறப்பாக உருவாக ஒத்துழைப்பு நல்கிய மறைந்த கழகத் தோழர் தி.க. மணி அவர்களின் படத்தினையும் திறந்து வைத்து கழகத் தலைவர் உரையாற்றினார்.
படிப்பகங்கள் திராவிடர் கழகத்தில், மக்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து பல்வேறு ஆதாரங்களுடன், எடுத்துக் கூறினார்.
முகவை மாவட்டம் தென்மாபட்டு வைக்கம் வீரர் பெரியார் படிப்பகத்தின் தொன்மையையும் அது உருவாகக் காரணமாகவிருந்த வாத்தியார் முருகையா அவர்களின் தொண்டினையும் நினைவு கூர்ந்தார். அதுபோலவே நாகர்கோயில் ஒழுகினசேரி சுயமரியாதைப் படிப்பகம் பற்றியும் எடுத்துக் கூறினார். மறைந்த நாஞ்சில் கி. மனோகரன் போன்றவர்கள் உருவாகக் காரணமாக இருந்த பாசறை அது என்றும் தெரிவித்தார்.
ஒரு கால கட்டமிருந்தது - கழகத் தோழர்கள் திண்ணைகள் எல்லாம் திராவிட இயக்கப் படிப்பகங்களாக விளங்கின. திராவிட இயக்க ஏடுகள் ஏராளமாக வெளி வந்தன.
('ராணி' இதழின் ஆசிரியராக இருந்த மறைந்த ஆதித்தனாரின் மாணவராகிய அ.மா.சாமி அவர்களால் எழுதப்பட்ட "திராவிட இயக்க இதழ்கள்" என்ற நூலில் திராவிட இயக்கத்தின் சார்பில் வெளிவந்த நூல்களின் எண்ணிக்கை 1250 என்று குறிப்பிட்டுள்ளனர். அந்நூலுக்கு திமுக தலைவர் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் சிறப்பானதோர் அணிந்துரையையும் அளித்துள்ளார்).
தந்தை பெரியாரால் நடத்தப்பட்ட ஏடுகளின் பெயர்களே கூடத் தனித் தன்மையும் தனித் தமிழும் வாய்ந்தமையே! 'குடிஅரசு', 'பகுத்தறிவு', 'புரட்சி', 'விடுதலை', 'உண்மை' ஏடுகள் தந்தை பெரியாரால் நடத்தப்பட்டன. 'தி ஜஸ்டிஸ்' 'ரிவோல்ட்', 'தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்' ஆகிய ஆங்கில இதழ்களையும் தந்தை பெரியார் நடத்தினார்.
தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் (SILF) என்ற பார்ப்பனர் அல்லாத திராவிடர் இயக்கம் நடத்திய ஆங்கில ஏடுதான் 'ஜஸ்டீஸ்' என்பதாகும். அந்த ஏட்டின் பெயராலேயே அந்தக் கட்சி 'ஜஸ்டீஸ் கட்சி' என்றும்; அதன் தமிழாக்கமாக 'நீதிக்கட்சி' என்றும் அழைக்கப்பட்டது.
தமிழில் 'திராவிடன்' என்ற இதழையும் தெலுங்கில் 'ஆந்திர பிரகாசிகா' என்ற நூலையும் நீதிக்கட்சி நடத்தியது. திராவிடன் இதழ் பிற்காலத்தில் தந்தை பெரியார் பொறுப்புக்கு வந்தது.
அண்ணா அவர்கள் 'திராவிட நாடு', 'காஞ்சி' இதழ்களை நடத்தினார். ஆங்கிலத்தில் 'ஹோம்லேண்ட்' என்ற இதழையும் நடத்தியதுண்டு.
கலைஞர் அவர்களால் 'முரசொலி'யும், நாவலர் நெடுஞ்செழியன் அவர்களால் 'மன்றமும்', திமுக நாளேடாக 'நம் நாடு' என்று பட்டியல் விரிந்து கொண்டே போகும்.
இடைக் காலத்தில் ஏடுகளின் எண்ணிக்கைகள் குறைந்தன, என்றாலும் 'விடுதலை' பல இடர்ப்பாடுகளைக் கடந்து தொடர்ந்து 87 ஆண்டுகளாக வீறு நடை போட்டுக் கொண்டு இருக்கிறது.
அதே போல படிப்பகங்களின் எண்ணிக்கையும் குறைந்தன, என்றாலும் திராவிடர் கழகத்தைப் பொறுத்த வரையில் குறிப்பிடத்தக்க வகையில் படிப்பகங்களை நடத்திக் கொண்டு வருகிறது.
கோவை வெள்ளலூரில் தொடங்கப்பட்ட இந்த படிப்பகமும், நூலகமும் மக்களுக்குப் பயன்படும் வகையில் செயல்பட வேண்டும்; கண்காணிப்பாளர் ஒருவர் நியமனம் செய்யப்பட வேண்டும், இரவு நேரங்களில் மாணவர்களுக்கு இலவசமாக வகுப்புகள் (Tuition) நடத்தலாம் என்ற கருத்தினையும் எடுத்து வைத்தார்.
திராவிட இயக்கத்தில் படிப்பகம் என்பது மக்களுக்கு பகுத்தறிவு உணர்ச்சியை வளர்க்கக் கூடியவை, இன உணர்வு, மொழி உணர்வு, மண்ணின் உரிமைகளை இளைஞர்களுக்கு ஊட்டக் கூடியவையாகும்.
பிரச்சாரம், போராட்டம் என்ற இரு அணுகுமுறைகள்தான் திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை.
தந்தை பெரியார் பற்றி அறிஞர் அண்ணா கூறுவார். தமிழ்நாட்டின் முதல் பேராசிரியர் தந்தை பெரியார். அந்தப் பேராசிரியரின் வகுப்புகள், மாலை நேரங்களில் மக்கள் மத்தியில், மைதானங்களில் நடக்கும் என்பார். (அதிகபட்சமாக 8.9.1956 அன்று மயிலாடுதுறையில் தந்தை பெரியார் 4லு மணி நேரம் சொற்பொழிவாற்றியுள்ளார். வாழ்குடை (செய்யாறு) என்ற ஊரில் ஒரு திருமணத்தில் 5 மணி நேரம் பேசினார். பெரியார் உட்கார்ந்து பேசியது செம்பனார் கோயிலில் (21.10.1950).
திராவிடர் கழகத்தின் துண்டு வெளியீடுகள் கூட பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதுண்டு. ஏற்படுத்தியும் வருகிறது. அத்தகு பிரச்சாரத்தால்தான் தந்தை பெரியாரின் முற்போக்குச் சிந்தனைகள், பகுத்தறிவுக் கருத்துகள் கடைகோடி மக்களுக்கும், ஏன் படிக்காத பாமரர்களுக்கும் சென்றடைந்துள்ளன.
அரசியலில்கூட தமிழ் மண்ணில் மதவாதத்துக்கு இடமில்லை என்ற நிலை உறுதிப்பட்டு நிற்பதற்கு இத்தகு திட்டமிட்ட பிரச்சாரம்தான் முதல் முக்கிய காரணமாகும். புத்தகங்களைப் படிப்பது என்கிற போது - எத்தகைய புத்தகங்களைப் படிப்பது என்பது குறித்து தந்தை பெரியார் கூறுகிறார்.
"நீங்கள் எந்தப் புத்தகத்தைப் படித்தால்தான் என்ன பயன்? படிப்பது என்பது அறிவு உண்டாவதற்கு, ஆனால் நீங்கள் படிக்கும் புத்தகம். எல்லாம் மடமை வளர்ச்சிக்கும், மூடநம்பிக்கை ஏற்படவும் பயன்படுகிறது. அதனால்தான் இன்றும் நம் மக்கள் பகுத்தறிவற்றிருக்கிறார்கள்.
நீங்கள் 'குடிஅரசு' 'பகுத்தறிவு'ப் பதிப்பகப் புத்தகம் வாங்கிப் படித்தால் கட்டாயம் பகுத்தறிவுவாதியாவீர்கள். இந்தப் புத்தகங்கள் மதம், ஜாதி, நம் அரசியல் முதலிய துறைகளில் அவற்றில் உள்ள புரட்டுகளை விளக்கி உங்களைப் பகுத்தறிவு வாதிகளாக்கும், விலை மிக மிக மலிவுக்கு, பொது நலத்தை முன்னிட்டே நட்டத்திற்குப் பதிப்பிக்கப்படுகிறது" - ஈ.வெ.ரா. (1962).
ஒரு பொதுக் கூட்டத்தை கணிப்பது - தந்தை பெரியார் பார்வையில் தனித் தன்மையானதாகும். சிறிய எண்ணிக்கையில் மக்கள் கூடி, இயக்க நூல்கள் அதிகம் விற்கப்பட்டு இருந்தால் அது பயனுள்ள கூட்டம்; பெரிய எண்ணிக்கையில் மக்கள் கூடியிருந்தாலும், இயக்க நூல்கள் விற்பனை மந்தமாக இருந்தால், அது பயனற்ற கூட்டம் என்பது தந்தை பெரியாரின் கணிப்பாகும்.
வியாபாரக் கண்ணோட்டத்தில் தந்தை பெரியார் இப்படிக் கூறியதாக யாரும் அவசரப்பட்டு முடிவுக்கு வந்து விடக் கூடாது.
இயக்க நூல்கள் அதிகம் விற்பனையானால் கருத்துப் பிரச்சாரத்துக்கு அது வழிவகுக்கும் என்ற உண்மையின் அடிப்படையில்தான் தந்தை பெரியார் அவ்வாறு மதிப்பிடுகிறார் என்பது நினைவில் இருக்கட்டும்.படிப்பகங்களில் அந்த வகையில் பெரிதும் பயன்படக் கூடியவையே கோவை வெள்ளலூரில் கழகத் தலைவரால் திறக்கப்பட்ட படிப்பகம் 'நல்ல கட்டுமான அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. அது குறித்து கழகத் தலைவர் கூறிய கருத்துக்களாவன.
இந்தப் படிப்பகத்தை தோழர்கள் உருவாக்கியுள்ளனர் என்றால், அவர்களின் உழைப்பு, விடா முயற்சி, பொருள் இவற்றால் உருவாக்கி இருக்கிறார்கள். பொது மக்களுக்குப் பயன்படுகிறது. பகுத்தறிவு வளர்ச்சிக்குப் பயன்படுகிறது என்ற பொது நோக்கம் தானே இதற்குக் காரணம்.
திராவிட கழகத் தோழர்கள், மகளிர் அர்ப்பணிப்புடன் பாடுபடுவது இந்தக் கழகத்தில்தான். போராட்டம் என்றாலும் சிறைக்குச் செல்லத் தயாராக இருக்கும் பெண்கள் கோவையில், குறிப்பாக சுந்தராபுரத்தில் உண்டு என்றும் குறிப்பிட்டார் ஆசிரியர்.
இந்த நேர்மைதான் இயக்கத்தின் பலம். (மன்னார்குடியில் கழகத் தோழர்கள் மத்தியில் ஒரு முறை பேசும்போது தந்தை பெரியார் குறிப்பிட்டார்).
"நாம் எதிர்பார்த்த இலட்சியத்தில் எதிலும் தோற்றுவிடவும் இல்லை. பெரிதும் வெற்றி பெற்றுக் கொண்டு, மற்றவர்களும் ஏற்கும்படிதான் வளர்ந்து வருகிறோம்.
இந்த நிலைமை மாறாமல் இருக்க வேண்டும். இப்படியே இருந்துவரும் நிலையில்தான் நான் சாக வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்". நமது தோழர்களும், நாணயமாகவும், கட்டுப்பாடாகவுமே இருக்கிறார்கள்.
நமது கொள்கையில் ஓட்டை விழுந்தால்கூட பரவாயில்லை. ஆனால் நாணயத்தில், ஒழுக்கத்தில் தவறு இருக்கக் கூடாது. அதுதான் ஒரு கழகத்திற்கு மிக முக்கியமான பலம்" (விடுதலை 11.10.1964 பக்கம் 3)
தந்தை பெரியார் இவ்வாறு கூறுகிறார். ஆனால் ஜெகத் குரு என்று பார்ப்பனர்கள் பக்திப் பரவசத்தோடு தூக்கிப் பிடிக்கும் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ன கூறுகிறார்?
"நல்ல ஒழுக்கம் இருந்தால் போதுமென்றும், கடவுள் அவசியம் இல்லையென்றும் சிலர் கூறுகிறார்கள். இது தவறான கருத்து. கடவுள் அருள் இல்லையானால் தனி நபருக்கோ நாட்டுக்கோ விமோசனம் ஏற்பட முடியாது" என்கிறார். (கல்கி - 8.4.1958)
(பக்திக்கும், பகுத்தறிவுக்கும் இடையே உள்ள பாகுபாட்டை உணர்வீர்).
ஒழுக்கம்பற்றி தந்தை பெரியார் கூறிய கருத்தையும் கழகத் தலைவர் எடுத்துக் கூறினார்.
"மற்றவர்களிடமிருந்து நாம் எதை எதிர்பார்க்கிறோமோ, மற்றவர் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று கருதுகிறோமோ, மற்றவர் எப்படி நம்மிடம் நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோமோ, அப்படியே நாம் மற்றவர்களிடத்தில் நடந்து கொள்ள வேண்டும்; அதுதான் ஒழுக்கம்" ('விடுதலை' 7.2.1961) என்று தந்தை பெரியார் கூறியதை குறிப்பிட்டுக் காட்டினார் தமிழர் தலைவர்.
புரட்சிகரமான கொள்கைகளை எடுத்துக் கூறியதோடு ஒழுக்கத்தையும் வலியுறுத்திய இயக்கமே திராவிடர் கழகம் என்று வலியுறுத்தினார் திராவிடர் கழகத் தலைவர்.
தந்தை பெரியார் பற்றியும், கழகத்தைப் பற்றியும் தரக் குறைவாகப் பேசும் ஒரு கூட்டம் கிளம்பி இருக்கிறது என்று கழகத் தோழர்கள் கூறியது குறித்து கழகத் தலைவர் சொன்ன கருத்துகள் முக்கியமானவை.
விபீடணர்கள் இன்று, நேற்று ஏற்பட்டவர்கள் அல்லர். காலம் காலமாக இருந்து வருபவர்கள்தான். விபூதி வீர முத்துசாமிகளும், அணுகுண்டு அய்யாவுகளும் பேசாத பேச்சா? கடைசியில் என்ன ஆனார்கள்?
(அதே விபூதி வீரமுத்து தஞ்சையில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்ட மேடைக்கு வந்து கழகத் தலைவருக்கு மாலை அணிவித்து, கடந்த காலத்தில் நடந்தவைகளுக்கு மன்னிப்புக் கோரியதுண்டு!
ம.பொ.சி. மட்டும் என்னவாம்? காலம் பூராவும் திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடுகளையும் பிரச்சாரத்தையும் செய்து வந்த ம.பொ.சி. கடைசி காலத்தில் திராவிட இயக்கத்தோடு பின்னிப் பிணைந்து நிற்கவில்லையா? திராவிட இயக்கத்தால் பதவிகளையும் பெறவில்லையா?
ஒன்றை நம் தோழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கேவலமாகப் பேசுகிறார்களே என்று வருத்தப்பட வேண்டாம். போர்ப்படை வீரர்களுக்கும், கூலிப் படையினருக்கும் அடிப்படையில் வேறுபாடு உண்டு. கூலிப்படையினர் பெற்ற கூலிக்காகக் கொச்சையாகப் பேசத்தான் செய்வார்கள் - அவற்றை இலட்சியம் செய்ய வேண்டாம்; அலட்சியப்படுத்துங்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர்.
ஒரே தலைவர், ஒரே இயக்கம், ஒரே கொடி என்று வாழ்பவர்கள் - கொள்கை வழி நடந்து காட்டுபவர்கள் நாம்.
சில நாட்களுக்கு முன் மறைந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ராசகிரி தங்கராசு அவர்கள் 97 ஆண்டு வரை எப்படி எல்லாம் உழைத்தார் அந்தப் பகுதி மக்களால் கட்சிக்கு அப்பாற்பட்டு எப்படி எல்லாம் மதிக்கப்பட்டார்.
அவர் மறைந்த போது எவ்வளவு மக்கள் திரண்டு வந்து இறுதி மரியாதை செலுத்தினர் - இதுதான் நமக்கு மிகப் பெரிய சொத்தும் மதிப்பும்!
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் (டிரஸ்டின்) தலைவராக இருக்கக் கூடிய அய்யா பொத்தனூர் சண்முகம் அவர்களுக்கு அடுத்த ஆண்டு நூறாண்டு, பெங்களூரில் வாழக் கூடிய பெரியார் பெருந்தொண்டர் வேலு அவர்கள் 102ஆம் வயதில் பயணிக்கிறார்.
இந்த நிகழ்ச்சியிலே காலை முதல் அமர்ந்து கலந்து கொண்டுள்ள அய்யா 'வசந்தம்' இராமச்சந்திரன் அவர்களுக்கு வயது 96. அவருக்கு மிகப் பெரிய அளவில் விழா எடுக்கத் திட்டமிட்டிருந்தோம். 'கரோனா' காரணமாக அது தடைபட்டது என்றாலும் விரைவில் அது நடக்கும்.
இருகூரில் தீவிரம் என்ற முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் நீண்ட காலம் வாழ்ந்து கழகப் பணியாற்றியதையும் நினைவு கூர்கிறோம்.
இந்த நிகழ்ச்சியில் கூட நேரடியாகக் கலந்து கொள்ள வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். கரோனா கட்டுப்பாட்டை விதித்து விட்டது. விரைவில் கோவை, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இரண்டு மூன்று நாட்கள் சுற்றுப் பயணம் செய்து அனைவரையும், நமது இயக்கக் குடும்பத்தினரையும் மறைந்த நமது அருமைத் தோழர் தி.க. மணி குடும்பத்தினரையும் சந்திப்பேன்.
நமது உறவு என்பது கொள்கை உறவு - அது குடும்பத்தைச் சேர்ந்த குருதி உறவை விட மேலானது என்று குறிப்பிட்டார் கழகத் தலைவர்.
இயக்கம் - நடப்பு - இலட்சியம் - கொள்கை உறவு - கொள்கை - தனி ஒழுக்கம், பொது ஒழுக்கம் குறித்த கருத்து விருந்தாக அமைந்திருந்தது கோவை காணொலி நிகழ்ச்சி.
வெள்ளலூரில் உள்ள பெரியார் சிலை கடந்த 27.3.2005ஆம் ஆண்டு தமிழர் தலைவரால் திறந்து வைக்கப்பட்டது. வெள்ளலூர் படிப்பகம் கடந்த 2010ஆம் ஆண்டு துவங்கப்பட்டு 2019ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. வெள்ளலூர் தி.க. மணி அவர்கள் 30.9.2019 அன்று மறைவுற்றார். படிப்பகம் வேலை முடிக்கப்பட்டு கடந்த இரண்டரை ஆண்டுகளாக இருந்து வந்தது. கட்டடத்தின் அளவு 20 ஜ் 20 = 400 சதுரடி. இதற்கு மின் இணைப்பு உள்ளது.
No comments:
Post a Comment