அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்வதை தவிர்க்கும் பாராட்டத்தக்க அரசாணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 31, 2021

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்வதை தவிர்க்கும் பாராட்டத்தக்க அரசாணை

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.. ஸ்டாலின் அவர்களின் மனிதநேயம் மிக்க அறிவிப்பு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்வதைத் தவிர்க்கும், தமிழ்நாடு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மு.. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அரசாணை மனிதநேயம் மிக்க அறிவிப்பாகும் என திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி  அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

நமது முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மு..ஸ்டாலின் அவர்களின் பொற்கால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் நாளும் வளர்ந்தோங்கி வரலாறு படைக்கின்றன.

முன்பு, சட்டமன்றத்தில் 110ஆவது விதியின்கீழ் அவர் அறிவித்தபடி "அரசுப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளில் ஒன்றான - அரசு ஊழியர் பணி நிறைவடைந்து ஓய்வு பெறும் நாளில், அவர்மீது ஏதாவது ஒரு காரணம் - குற்றச்சாற்று கூறி, கடைசி நேரத்தில் பணியிடை நீக்கம் செய்து, அவரது ஓய்வூதியம் போன்ற ஓய்வு காலப் பலன்களைக் கிட்டாமல் செய்யும் மனிதாபிமானமற்ற, கருணையற்ற செயல்முறை இனி இருக்காது" என்று தற்போது அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது மிக மிகப் பாராட்டி வரவேற்கப்பட வேண்டிய சிறந்த ஓர் அறிவிப்பு ஆகும்!

அரசு இயந்திரத்தின் அச்சாணி

அரசுப் பணியாளர்கள்தான் அரசு இயந்திரத்தின் அச்சாணி - அந்த உருள் பெருந்தேருக்கான அச்சாணி பல ஆண்டுகள் உழைத்து இறுதியில் பதவியிலிருந்து ஓய்வு பெறும் நாளில் இப்படி ஓர் அதிர்ச்சி அறிவிப்புதான் அவருக்குப் பரிசு - என்றால் அவரும், அவர் குடும்பமும் என்ன பாடுபடும் என்பதை மிக ஈக உணர்வோடு உணர்ந்து, பிறிதின் நோய்ப் போக்கும் ஆட்சியாக தமது ஆட்சியை நடத்தி  இன்றைய முதலமைச்சர் நாளும் உயருகிறார்!

மவுனப் புரட்சியை செய்துள்ளது

திராவிட மாடல் ஆட்சி முன்பு கலைஞர் தலைமையில் நடந்தபோது 1972- வாக்கில்  Personal File - என்ற ரகசியக் குறிப்பேட்டு முறையை ஒழித்து வரலாறு படைத்தது போன்று  முதலமைச்சர் மு.. ஸ்டாலின் அவர்களது தலைமையில் நடைபெறும் இன்றைய மனிதநேயம் மிக்க ஆட்சி - இந்த மவுனப் புரட்சியை செய்துள்ளது.

இதனால் சுமார் 5 லட்சம் அரசுப் பணியாளர்களும், அவர்தம் குடும்ப உறுப்பினர்களும் மிகுதியும் பயன டைவர், நிம்மதிப் பெருமூச்சு விடுவர் என்பது உறுதி.

இதனால் தவறு செய்பவர்கள், லஞ்ச ஊழலில் திளைப்பவர்கள் - 'வாங்கிப் பழகிய கையர்கள்' காப்பாற்றப்படுவார்கள்; அல்லது காப்பாற்றப்பட வேண்டும் என்பதல்ல பொருள்.

எந்த சமரசமும் தேவையில்லை

குற்றங்களை அவப்போது காலந் தாழ்த்தாது கண்டறிந்து, நிரூபணம் ஆனால், உரிய நீதி வழங்கு வதில் எந்த சமரசமும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய தேவையில்லை; கடைசி நேரத்தில் பணியிடை நீக்கம் செய்து அதிர்ச்சியைத் தருவது தவிர்க்கப்பட வேண்டும் என்பதே இதன் முக்கிய உட்கருத்தாகும்.

இன்னமும் ஆட்சி இயந்திரத்தில் நிலவும் பழைய பாணி நடைமுறை - கைநீட்டலும், காரியங்களைச் செய்து முடித்திட கையூட்டு எதிர்பார்ப்பதும் தவிர்க்கப்படுவதோடு, முந்தைய திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகள்படி கால தாமதம் இன்றி கோப்புகள் பைசல் செய்யப்படுவதும், காலதா மதம் ஏற்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்டத்துறை அதி காரிகள் தக்க பதில் அளிப்பதோடு, உரிய திருப்திகரமான விளக்கம் தரவில்லை என்றால், உரிய தண்டனை - தரும் வகையில் சட்ட திட்டங்களும் திருத்தி அமைக்கப்பட்டால், அதன் மூலம் பலதுறைகளிலும் நல்ல முன்னேற்றமும், வளர்ச்சியும் ஏற்படும்; சிவப்பு நாடா முறை தானே மறைந்து விடவும் முடியும்.

 கிவீரமணி

தலைவர் 

திராவிடர் கழகம்

சென்னை       

31.10.2021          

No comments:

Post a Comment