உ.பி. வன்முறை: உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு பிரியங்கா, ராகுல் காந்தி ஆறுதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 7, 2021

உ.பி. வன்முறை: உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு பிரியங்கா, ராகுல் காந்தி ஆறுதல்

அனைத்து உதவிகளையும் காங்கிரஸ் வழங்கும் என உறுதி

லக்னோ,அக்.7- உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம் பூருக்குச் சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகி யோர் வன்முறை சம்பவத்தில் உயிரிழந்த விவ சாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அப்போது, அவர்களுக்குத் தேவை யான அனைத்து உதவிகளையும் காங்கிரஸ் வழங்கும் என்று அவர்கள் உறுதி அளித்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடத்திய போது, ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா சென்ற கார் திடீரென விவ சாயிகள் கூட்டத்துக்குள் புகுந்தது. இதில் 4 விவ சாயிகள் உயிரிழந்தனர். அதன்பின் நடைபெற்ற வன்முறையில் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பத்திரிகையாளர் ஒருவரும் உயிரிழந்தார்.

இந்நிலையில், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறுவதற்காக அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி லக்கிம்பூர் சென்றார். அவரை சீதாபூர் அருகே தடுத்து நிறுத்தி கைது செய்த காவல் துறையினர், பின்னர் அங்கிருந்த அரசு விருந்தினர் மாளிகையில் தடுப்புக் காவலில் சிறை வைத்தனர்.

இந்நிலையில், பிரியங்காவை பார்ப் பதற்காக அவரது சகோதரரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி நேற்று (6.10.2021) லக்னோ வந்தார். அங்கிருந்து லக்கிம்பூர் வழியாக சீதாபூர் செல்ல முயன்றார். ஆனால், அவரை லக்கிம்பூர் வழியாக செல்ல உத்தரப்பிரதேச காவல்துறையினர் அனுமதிக்கவில்லை.

இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து விமான நிலையத்திலேயே அவர் முற்றுகையில் ஈடுபட் டார். அவருடன் வந்திருந்த சத்தீஸ்கர் முதல மைச்சர் பூபேஷ் பாகேல், பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி ஆகியோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறிது நேரத்துக்குப் பிறகு ராகுல் காந்தி உள்ளிட்டோரை சீதாபூர் செல்ல காவல்துறையினர் அனுமதி அளித்தனர். ஆனால், தாங்கள் ஏற்பாடு செய்யும் காரில்தான் செல்ல வேண்டும் என்று அவர்கள் நிபந்தனை விதித்தனர்.

இதை ஏற்க மறுத்த ராகுல், ‘‘என்னுடைய பயணத்தை தயார் செய்வதற்கு நீங்கள் யார், நான் எனது காரில்தான் செல்வேன்’’ என்று வாக்குவாதம் செய்தார். இதைத் தொடர்ந்து அவரது வாகனத் திலேயே சீதாபூர் செல்ல காவல்துறையினர் அனுமதி தந்தனர். இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே, விருந்தினர் இல்லத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த பிரியங்கா காந்தி நேற்று மாலை விடுவிக்கப்பட்டார். ஆனாலும், சீதாபூருக்கு ராகுல் காந்தி வருவதாக தெரிந்ததும், அவரை சந்திப்பதற்காக பிரியங்கா அங்கேயே காத்திருந்தார். ராகுலுடன், வதேரா உள்ளிட்ட காங் கிரஸ் தலைவர்களும் அங்கு வந்தனர். அவர்களு டன் பிரியங்கா சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் பிரியங்கா, ராகுல், பூபேஷ் பாகேல், சரண்ஜித் சிங் சன்னி ஆகியோர் லக்கிம்பூருக்கு புறப்பட்டனர். நேற்று இரவு லக்கிம்பூர் வந்தடைந்த அவர்கள், அங்கு வன்முறையில் உயிரிழந்த விவ சாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க காங்கிரஸ் தயாராக உள் ளது என்றும் அப்போது அவர்கள் உறுதி அளித் தனர்.

உயிரிழந்த விவசாயிகள், பத்திரிகையாளரின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் வழங்கப்படும் என்று சத்தீஸ்கர் முதலமைச்சர் பாகேல், பஞ்சாப் முதலமைச்சர் சன்னி ஆகியோர் அறிவித்தனர்

இதனிடையே, கார் மோதியதில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு உத்தரப்பிரதேச அரசு அறிவித்த தலா ரூ. 45 லட்சம் இழப்பீட்டுத் தொகையை மாவட்ட நிர்வாகம் நேற்று வழங்கியது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் லக்கிம்பூர் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் குமார் சவுராசியா கூறும்போது, ‘‘இறந்தவர்கள் 2 பேர் குடும்பங் களுக்கு அரசு சார்பில் இழப்பீடு நிதிக்கான காசோலை வழங்கப்பட்டது. மற்ற 2 விவசாயிகளின் குடும்பத்தினர் பைராச் மாவட்டத்தில் உள்ளதால் அவர்களுக்கு அந்த மாவட்ட ஆட்சியர் சார்பில் நிவாரண உதவி வழங்கப்படும்’’ என்றார்.

உச்சநீதிமன்றம் விசாரணை

லக்கிம்பூர் வன்முறை சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரிக்க உள்ளது.

உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த், ஹீமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு இன்று (7.10.2021) விசாரணைக்கு வருகிறது.

No comments:

Post a Comment