தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் ஜோதிமணி எம்.பி., உரை
சென்னை, அக்.2- மனத்தடைகளை உடைக்க தந்தை பெரியாரே நமக்கு வழிகாட்டி என்றார் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அவர்கள்.
தந்தை பெரியார் 143 ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர் வெளியீடு
கடந்த 17.9.2021 அன்று காலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 143 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில், தந்தை பெரியார் 143 ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலரை வெளியிட்டு, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா - சமூகநீதி நாள் - இவ்விழாவிற்குத் தலைமையேற்று நடத்திக் கொண்டிருக்கின்ற அன்பிற்கும், மரியாதைக்கும் உரிய அய்யா ஆசிரியர் அவர்களே,
‘கற்போம் பெரியாரியம்' என்ற நூலை வெளியிட்ட, என் அன்பிற்கும், மரியாதைக்கும் உரிய அருமைச் சகோதரர் சுப.வீரபாண்டியன் அவர்களே, முனைவர் ந.சுலோச்சனா அவர்களே, வரவேற்புரை நிகழ்த்தியுள்ள பொறியாளர் ச.இன்பக்கனி அவர்களே,
நோக்கவுரை நிகழ்த்தியுள்ள திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,
இங்கு எனக்கு முன்பு உரையாற்றிச் சென்றுள்ள தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் மாண்புமிகு பி.கே.சேகர்பாபு அவர்களே,
ஜப்பான் தூதரகக் கலாச்சார மற்றும் தகவல் பிரிவு ஆராய்ச்சியாளர் செல்வி மியூசிகி இனோஉவே சான் அவர்களே,
காணொலி வாயிலாக ஜப்பானிலிருந்து பங்கேற்ற தோழர்கள் கோரோ ஒசிதா அவர்களே, ஜுன்இச்சி ஹுக்காவோ அவர்களே, கமலக்கண்ணன் அவர்களே, செந்தில்குமார் அவர்களே, நன்றியுரையாற்றவிருக்கின்ற பார்த்தசாரதி அவர்களே, இங்கே குழுமியுள்ள தோழர் களே, உங்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றி!
பெரியாரின் பிறந்த நாளை, சமூகநீதி நாளாக அறிவித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்க ளுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிகத் தாமதமான இன்னொரு நன்றியையும் இங்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். அய்யா ஆசிரியர் அவர்கள், நாடாளுமன்றத் தேர்தலில், எனக்காக கடுமையாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள். அதற்குப் பிறகு நான் அவரை இன்றுதான் பார்க்கிறேன்.
நான் வாங்கிய, நான்கு லட்சத்து 20 ஆயிரம் வாக்குகளுக்கு ஆசிரியருக்கும் மாபெரும் பங்கு உண்டு. அதற்காக எனது பணிவான நன்றியை இப்பொழுது தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்ணன் சுப.வீ. அவர்கள் சொல்வார்கள், எப் பொழுதெல்லாம் ஒரு கடினமான காலகட்டம் இருக் கிறதோ, அப்பொழுதெல்லாம் நிச்சயமாக அவரிட மிருந்து அலைபேசி அழைப்பு வரும்.
‘‘வேண்டாம்மா, இந்தத் தேர்தல் அரசியல் நமக்கு'' என்று சொல்வார்கள்.
பொது வாழ்க்கைக்குப் பெண்கள் வரவேண்டும் என்பதுதான் பெரியாரின் கனவு!
பொதுவாகவே, அவர் சொல்கின்ற பேச்சைக் கேட் கின்ற பழக்கம் எனக்கு உண்டு. இந்த ஒரு விஷயத்தில் மட்டும் நான் கேட்பதில்லை. ஏனென்றால், பெண்கள் பொதுவாழ்க்கைக்கு, தேர்தல் அரசியலாக இருக்கலாம், பொது வாழ்க்கையில் எந்த அங்கமாகவும் இருக்கலாம். பெண்கள் வரவேண்டும் என்பது பெரியாரின் கனவு.
ஆசிரியர் அவர்கள் சொன்னார்கள், எந்த ஆதரவும் இல்லாமல் என்னைப் போன்ற பெண்கள் போராடி களத்திற்கு வரவேண்டி இருக்கிறது என்று.
பெரியார், காந்தி என்கிற இரண்டு பெரிய ஆதரவோடுதான்...
அப்படியில்லை. பெரியார், காந்தி என்கிற இரண்டு பெரிய ஆதரவோடுதான் நான் எப்பொழுதுமே களத்தில் நிற்பதாக உணர்வேன்.
செந்தில்குமார் அவர்கள் உரையாற்றும்பொழுது சொன்னார்கள், காந்தியும் - பெரியாரும் ஒரு நாணயத் தின் இரு பக்கங்கள் போன்றவர்கள் என்று.
அதெல்லாம் நமக்குத் தெரிந்தது. அதில் ஒரே ஒரு விஷயத்தை நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
கலகக்காரர்களுக்கும் - கலவரக்காரர்களுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு.
கலகக்காரர்கள் எவ்வளவு பெரிய புரட்சியாளர்களாக இருந்தாலும், அடிப்படையில் அவர்கள் அன்பை விதைப்பார்கள். அதனால்தான், வெறுப்பை விதைக் கின்ற கலவரக்காரர்களுக்கு பெரியார் என்ற பெயரைக் கேட்டாலே நடுங்குகிறது. அதனால்தான், பெரியார் பிறந்த நாளை, சமூகநீதி நாள் என்று அறிவித்தவுடன், அவர்கள் பதட்டப்படுகிறார்கள்.
காந்தி ஒட்டுமொத்த சுதந்திரப் போராட்டக் காலத் திலும், ஆங்கில அரசுக்கு எதிராக எப்படி போராடினார்? ஆங்கிலேயரை அவர் எந்த இடத்திலும் வெறுக்க வில்லை. ஆங்கிலேயர்களுக்கு இந்தியாவின் போராட் டத்தின் நியாயங்களைப் புரிய வைப்பதற்காகத்தான் அவர் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருந்தார்.
பிராமணியத்தின்மீதுதானே தவிர, தனிப்பட்ட பிராமணர்கள்மீது கிடையாது!
அதேபோன்று தந்தை பெரியார் அவர்கள், ஜாதியத் தின் ஆணிவேராக இருக்கின்ற பிராமணியத்தின்மீது கடுமையான தாக்குதல்களைத் தொடுத்தாலும், தனிப் பட்ட ‘பிராமணர்கள்'மீது அவர் அன்பு கொண்டவ ராகத்தான் இருந்தார்.
ஒரு நேர்காணல் நிகழ்விற்காக, நாங்கள் கோபிக்குச் சென்று லட்சுமண அய்யரைச் சந்தித்தோம். அவர் ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகி. கோபி நகராட்சியின் தலைவராக இருந்தபொழுது முதன்முதலாக மேனுவல்ஸ் ஸ்கேவன்ஜிங்கை ஒழித்தவர் அவர்தான்.
அவரிடம் உரையாடிக் கொண்டிருந்தபொழுது ஒரு தகவலை சொன்னார்.
அவருடைய தந்தையார் கிருஷ்ணசாமி அய்யர், அவருடைய வீட்டில், தலித் குழந்தைகளுக்காக ஒரு விடுதியை தொடங்கியிருக்கிறார். ஒரு மிகப்பெரிய பொருளாதாரப் பின்னணி உள்ள ஒரு குடும்பத்திலிருந்து அவர்கள் வருகிறார்கள். அந்த விடுதியை ஆரம்பித்த காரணத்தினால், அவருடைய ஜாதியிலிருந்து ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள்.
அந்த நெருக்கடியான காலகட்டத்தில், லட்சுமண அய்யர், இளைஞராக இருந்திருக்கிறார். உணர்ச்சிபூர்வ மான, மன ரீதியான அழுத்தங்களுக்கு அந்தக் குடும்பம் உள்ளாகியது என்பதை எங்களிடம் அவர் சொன்னார்.
லட்சுமண அய்யர்
அவ்வளவு பெரிய நிலச்சுவான்தாரராக இருந்த, பொருளாதாரப் பின்னணி உள்ள வங்கி நடத்திய ஒரு குடும்பம், சமூகநீதிக்காக நின்ற ஒரு காரணத்திற்காக, கிட்டத்தட்ட அவர்கள் தெருவுக்கே வந்துவிடுகிறார்கள். வீடு மட்டும்தான் அவர்களுக்கு மிச்சமாக இருக்கிறது. வங்கியில் போட்டிருந்த முதலீடுகளை எல்லாம் ஜாதி ஆதிக்கம் நிறைந்தவர்கள் ஒரே நாளில் திரும்பப் பெற்றதினால், வங்கி நிலைகுலைந்து மிகப்பெரிய கடனாளியாக அந்தக் குடும்பம் ஆளாகிவிடுகிறது.
அந்த நேரத்தில், யாராவது ஒருவர் அந்தக் குடும் பத்தின் பக்கம் நின்றார்கள் என்றால், அது தந்தை பெரியார் அவர்கள்தான்.
‘‘ஒரு நாள் விட்டு ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு வரு வார் தந்தை பெரியார். என் தந்தையாரிடம் உரையாடி விட்டுச் செல்வார். அன்றைக்கு இளைஞராக இருந்த எனக்கு, என்னுடைய தந்தை செய்த பணியை தொடர்ந்து செய்யவேண்டும் என்கிற ஒரு உந்துதல் ஏற்பட்டது.
அதற்குப் பிறகு, காந்தி அவர்களை நான் ஆசிர மத்தில் சந்தித்தபொழுது, தீண்டத்தகாத மக்களுக்காக நீங்கள் பணியாற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதனால், அவர்கள் இரண்டு பேரையும் நான் இந்த நேரத்தில் நினைவு கூர்கிறேன்'' என்று லட்சுமண அய்யர் அந்தப் பேட்டியில் கூறினார்.
அந்த அளவிற்கு, அடிப்படையில் அன்பை விதைத் தவர். அதைத்தான் இன்றைக்கு ஆசிரியர் அவர்களிடம் நான் பார்க்கிறேன்.
இங்கே வந்து அண்ணன் சேகர் பாபு அவர்களுடைய பெயரைப் பார்த்தவுடன், அந்த வரலாற்றை நாம் எப்படி தொடர்ந்து எடுத்துக்கொண்டு போகிறோம் என்று என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
தலைவர் ராகுல் காந்தி அவர்கள் சொல்வார்கள், பெரியாரை அதிகம் படித்தவர் அவர். தந்தை பெரியார் பற்றி ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட அத்தனை யையும் அவர்கள் படித்திருப்பார்.
கூட்டங்களில் நாம், பெண்ணிய சிந்தனைகளைப்பற்றி சொல்லும்பொழுது, அதற்கு எதிரான மனநிலை உள்ள வர்கள் பேசினார்கள் என்றால்,
‘பெண் ஏன் அடிமையானாள்?’
உடனே ராகுல் காந்தி அவர்கள், ‘‘ஜோதி, இன்னும் நீ ‘பெண் ஏன் அடிமையானாள்?' என்ற புத்தகத்தைக் கொடுக்கவில்லையா?'' என்று கேட்பார்.
அந்த நூலைப் படியுங்கள் என்று மற்றவர்களிடம் சொல்வார். அந்த அளவிற்குத் தீவிரமான பெரியாரியச் சிந்தனைகளைக் கொண்டிருப்பது என்பது, காங்கிரஸ் கட்சிக்குள்ளே, குறிப்பாக பெண்களுக்குப் பல்வேறு விதமான வாய்ப்புகளையும், சம வாய்ப்புகளையும் உரு வாக்கிக் கொடுப்பதற்கான சூழலை, அவர் மனதில் பெரியார் விதைத்திருக்கிறார் என்பதைப் பெருமை யோடு நான் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
முக்கியமாக, பெரியார் எந்த அளவிற்கு சிந்தித்து இருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்த்தால், வியப்பாக இருக்கும். நூறாண்டுகளுக்கு முன்பு, பெரியார் சொன்ன பல விஷயங்களை, நூறாண்டுகளுக்குப் பிறகும் நம்மால் சொல்ல முடியவில்லை. ஏனென்றால், பெண்களுக்கு மட்டுமல்ல, இந்த சமூகம் தலைமுறை தலைமுறையாக நூற்றாண்டு காலமாக நம்முடைய மண்டைக்குள் நிறைய விஷயங்களைத் திணித்திருக் கிறார்கள். அது வழி வழியாக டி.என்.ஏ. மூலமாக நமக்கு வருகிறது.
பெண்கள் என்றால், இப்படித்தான் இருக்கவேண்டும்.
சமூகம் என்றால், இதுமாதிரியான ஜாதியப் படி நிலையோடுதான் இருக்கவேண்டும். யார் என்ன சொன்னாலும், அவர்களுடைய அந்தஸ்தைப் பொறுத்து, அவர்கள் வகிக்கும் பொறுப்பைப் பொறுத்து, நாம் கேள்வி கேட்காமல், ஒத்துக் கொள்ள வேண்டும்.
இதுபோன்று பல்வேறு விஷ விதைகள் நம்முடைய மூளையில் ஊன்றப்பட்டு இருக்கின்றன. அதையெல்லாம் களைந்து பார்த்து சிந்திப்பது என்பது மிகக் கஷ்டமாகும். அதிலும் நூறாண்டுகளுக்கு முன்பு நாம் சிந்தித்திருந் தாலும், அதை வெளியில் சொல்ல முடியாது.
பெரியார் இல்லை என்றால், இதுபோன்ற நிலை வந்திருக்காது
ஆனால், அதை வெளியில் சொல்லுகின்ற தைரியம், பகுத்தறிவு, கலகக்குரல் பெரியாருக்கு இருந்தது. அதனால்தான், என்னைப் போன்று, சகோதரி சுலோச்சனா போன்று பலர் இங்கே வந்து நின்று பேச முடிகிறது. பெரியார் இல்லை என்றால், இதுபோன்ற நிலை வந்திருக்காது.
பெண்களோ, ஆண்களோ நம்முடைய மனத் தடைகளை முதலில் உடைக்கவேண்டும். இடைவெளி வெளியிலும் இருக்கிறது, மனதிற்குள்ளும் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் ஒரு அடியை நாம் முன்னால் வைக்கிறபொழுது, வழிவழியாக நம்முள் இருக்கின்ற மரபணுக்குள் இது தவறு என்றுதான் சொல்லும். அந்த மரபணுக்களை உடைப்பதற்கு ஏதாவது ஒரு விஷயம் நமக்குத் தேவைப்படுகிறது. அதுதான், சகோதரர் செந் தில்குமார் குறிப்பிட்டதுபோல, பெரியாரின் கைத்தடி.
என்னுடைய அப்பா ஒரு நாத்திகர், பெரியாரிஸ்ட். என்னுடைய அம்மா, ஒரு காந்தியவாதியினுடைய பெண். கல்லைக் கண்டால்கூட அதைக் கும்பிட வேண்டும் என்று சொல்வார். இதுபோன்ற ஒரு குடும்பப் பின்னணியில் இருந்துதான் நான் வளர்ந்தேன்.
ஒருபோதும் என் தாயின் கடவுள் நம்பிக்கையில் என் அப்பாவோ அல்லது என் அப்பாவின் நாத்திக நம்பிக்கையில் என் அம்மாவோ குறுக்கிட்டது இல்லை.
மனத்தடைகளை உடைப்பதற்குத் தந்தை பெரியாரே எனக்கு ஒரு வழிகாட்டி!
ஆகவே, இரண்டும் கலந்த சூழல் எங்கள் குடும் பத்தில் இருந்தது. பெண் என்றால், மட்டம்; ஆண்களைச் சார்ந்துதான் இருக்கவேண்டும் என்கிற சூழல் எங்களுடைய வீட்டில் எப்பொழுதும் இருந்ததில்லை.
அப்படிப்பட்ட குடும்பப் பின்னணியில் இருந்து வந்தால்கூட, நமக்கு நிறைய மனத்தடைகள் இருக் கின்றன. பெண்களுக்கு திட்டமிட்ட வரைமுறையை வைத்திருக்கிறார்கள். இப்படித்தான் உட்காரவேண்டும்; இப்படித்தான் உடை அணியவேண்டும்; இப்படித்தான் சிந்திக்கவேண்டும், இப்படித்தான் பேசவேண்டும் என்கிற மனத்தடைகள் நமக்குள் இருக்கின்றன. அந்த மனத்தடைகளை உடைத்தால் மட்டும்தான், நாம் வீட்டை விட்டு முதலில் வெளியில் வர முடியும். பிறகுதான், நாம் சமூகத்தை எதிர்கொள்ள முடியும்.
அந்த மனத்தடைகளை உடைப்பதற்குத் தந்தை பெரியாரே இன்றைக்கு வரைக்கும் எனக்கு ஒரு வழி காட்டியாக இருக்கிறார். பெரியார் இல்லை என்றால், அந்த மனத்தடைகளை என்னைப் போன்ற பல பெண் கள் தலைமுறை தலைமுறையாக உடைத்திருக்கவே முடியாது. இன்னும் பல தலைமுறையைச் சேர்ந்த பெண்களுக்குப் பெரியாரின் கைத்தடிதான் ஊன்று கோலாகவும், வழிகாட்டியாகவும் இருக்கப் போகிறது என்பதை நான் இங்கே துணிச்சலோடு பதிவு செய்கிறேன்.
பெரியாரை ஏன் தலைமுறைகளைத் தாண்டியும் நாம் எடுத்துப் போகவேண்டும் என்பதைப் பார்க்கவேண்டும்.
வேறு எப்போதையும் விட, பெரியாரும் - காந்தியும் இன்றைய சூழலில், மிகத் தேவையாக இருக்கிறார்கள்.
பெரியார் தமிழ் மண்ணில் விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்
ஏன் பெரியார் என்ற பெயர், பல பேரை பதைபதைக்க வைக்கிறது என்பதைப் பார்க்கவேண்டும்.
வெறுப்பை விதைப்பவர்களின் மத்தியில், அவர் அன்பை விதைக்கிறார்.
கேள்வி கேட்காமல், எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று சொல்லுகின்ற ஒரு சித்தாந் தத்தின் முன்பு, எல்லாவற்றிற்கும் கேள்வி கேட்க வேண்டும்; நான் சொன்னாலும், கேள்வி கேட்கவேண்டும் என்று சொல்லுகின்ற ஒரு சித்தாந்தத்தைப் பெரியார் தமிழ் மண்ணில் விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்.
பாசிச சக்திகளுக்கு மிகப்பெரிய வயிற்றெரிச்சல்
பெரியாரின் பிறந்த நாள் - சமூகநீதி நாளாக அறிவிக்கப்பட்டு இருப்பதை, இன்றைக்குத் தமிழகமே கொண்டாடுகிறது. அதுதான் இன்றைக்குத் தமிழகத்தில் வேரூன்ற வேண்டும் என்று நினைக்கின்ற பாசிச சக்திகளுக்கு மிகப்பெரிய வயிற்றெரிச்சலை ஏற்படுத்து கிறது என்று நான் நினைக்கின்றேன்.
இன்றைக்கு மட்டுமல்ல, என்றைக்குமே இந்தியாவில் இருக்கின்ற மக்கள், தமிழ்நாட்டில் உள்ள மக்கள் மிகத் தீவிரமான சிந்தனை உள்ள மக்களாகத்தான் இருந் திருக்கிறார்கள்.
எப்படி பெரியார் என்கிற ஓர் ஊரறிந்த நாத்திகர் இன்றுவரை கொண்டாடப்படுகிறாரோ - அதேபோல, தெருவெங்கும் தெய்வங்கள் இருக்கின்ற ஒரு தேசத்தில், வெளிப்படையான நாத்திகரான நேரு, 17 ஆண்டுகள் பிரதமராக இருந்திருக்கிறார். தமிழ்நாட்டில் கலைஞர் அவர்கள் அய்ந்து முறை முதலமைச்சராக இருந்திருக் கிறார்.
பொதுவாகவே மக்கள் பெரியாரிய சிந்தனைகளை ஏற்றுக்கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள். அவர் கள் கடவுள் மறுப்பாளராக இருக்கிறார்களா, இல்லையா என்று தெரியாது. ஆனால், பெரியாருடைய ஒட்டுமொத்த சிந்தனைகளையும் நிராகரிக்கின்ற ஒரு சமூகம், இந்தி யாவில் இல்லை என்பதுதான் என்னுடைய ஆழமான நம்பிக்கை.
அந்த நம்பிக்கைதான் இன்றைக்கு நம் முன்பு இருக்கின்ற ஒரு கடைசி ஆயுதம் என்று நான் நினைக் கின்றேன்.
எங்களைப் போன்றவர்களுக்கு மகிழ்ச்சி!
இன்றைக்கு சமூகநீதிக்கு ஆபத்து, ஒரு நுணுக்கமான முறையில் வருகிறது. பெரியாருடைய பிறந்த நாளை - சமூகநீதி நாளாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தபொழுது, எங்களைப் போன்றவர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
என்னைப் போன்றவர்கள் நாடாளுமன்றத்தில் சென்றபொழுது, நாடாளுமன்றம் கற்றிடங்களுக்கெல் லாம் அப்பாற்பட்ட ஒரு நாடாளுமன்றமாக இருக்கிறது என்பது தெரிய வந்தது.
சில நேரங்களில், சுப.வீ. அண்ணன் சொன்னதை கேட்டிருக்கலாமோ என்று நினைக்கக்கூடிய நாடாளு மன்றமாகத்தான் அது இருக்கிறது.
நாம் படித்த, நாம் கேட்ட அந்த மாதிரியான ஒரு அய்டிலிஸ்ட்டிக்கான நாடாளுமன்றமாக இன்றைக்குக் கிடையாது.
இன்றைக்கு இருக்கின்ற நாடாளுமன்றத்தில், எந்தக் குரலுக்கும் மதிப்பு கிடையாது. எந்த சமூகத்திற்கும், எந்தப் பாலினத்தைச் சேர்ந்தவர்களுக்கும் மதிப்பு கிடையாது.
இரண்டே இரண்டு பேர்தான் இதை ஆள்கிறார்கள் என்று நாம் நம்புகிறோம். அது மிகமிகத் தவறு. அரசி னுடைய சித்தாந்தங்கள்தான் அந்த இரண்டு பேரை இயக்குகின்றன. அவர்கள் மிக நுணுக்கமான வடிவங் களில் வருகிறார்கள்.
பெண்களை அதிகாரப்படுத்துவதில், அய்ந்து விஷயங்கள் இந்தியாவில் முன்னணியில்...
எதெல்லாம் நம்மை அதிகாரப்படுத்துகின்றது என்பது நமக்குத் தெரிந்ததுதான். குறிப்பாக பிற்படுத்தப் பட்ட சமூகங்களை, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங் களை, பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டு இருக்கின்ற சிறுபான்மையினர் போன்ற சமூகங்களை, பெண்களை அதிகாரப்படுத்துவதில், அய்ந்து விஷயங்கள் இந்தியா வில் முன்னணியில் இருந்திருக்கின்றன.
ஒன்று, கல்வி
இரண்டாவது, இட ஒதுக்கீடு
மூன்றாவது, வேலைவாய்ப்பு
நான்காவது, அந்த வேலைவாய்ப்புகளை உருவாக் குகிற விவசாயம்,
அய்ந்தாவது, சிறுகுறு நடுத்தரத் தொழில்கள்.
மேற்சொன்ன அய்ந்து விஷயங்களையும் குறி வைத்து இன்றைக்கு நடைபெறுகின்ற ஒன்றிய அரசு அழித்துக்கொண்டிருக்கிறது.
நாம் நினைக்கின்றோம், நரேந்திர மோடிக்கு ஆளத் தெரியவில்லை. ப.சிதம்பரம் அவர்கள் சொன்னதுபோல, அவருடைய பொருளாதார அறிவை ஒரு ஸ்டாம்புக்குப் பின்னால் எழுதிவிடலாம் என்று.
இது மிக ஆபத்தான சிந்தனை. ஏன் ஒருவரால் ஆள முடியாது?
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், பிரதமர் போன்றவர், மன்மோகன்சிங் போன்ற ஒருவரைக் கொண்டுவந்தார். பிறகு, மன்மோகன்சிங்கே பிரதமராக்கப்பட்டார்.
வலதுசாரி சிந்தனையுள்ள அரவிந்த் சுப்பிரமணியம்கூட அவர்களோடு நிலைக்கவில்லை!
அதுபோன்று, ரகுராம் ராஜன் போன்ற பல பேர் இங்கே இருக்கிறார்கள். அவர்களை அழைத்து வந்த வலதுசாரி சிந்தனையுள்ள அரவிந்த் சுப்பிரமணியம்கூட அவர்களோடு நிலைத்து வேலை செய்ய முடியவில்லை.
ஏனென்றால், ஆர்.எஸ்.எஸ். தெளிவாக, அய்ந்து விஷயங்களைக் குறி வைத்து அழிப்பதற்காகத்தான் இரண்டு பேரையும் முகமாக நிறுத்தி இருக்கிறார்கள்.
அவர்களால், ஆள முடியாமல் இல்லை. அவர்கள் ஆள விரும்பாமல் இருக்கிறார்கள்.
70 ஆண்டுகாலமாக இந்திய மக்களுடைய கடும் உழைப்பினால், பல்வேறு மாநில அரசுகள், அன்றைக்குத் தொடர்ந்து அய்ந்தாண்டுத் திட்டங்களையெல்லாம் கொண்டு வந்து, மிகத் தீவிரமான கட்டமைப்புகளை உருவாக்கிய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி, அதற்குப் பின்பு வந்த தொடர்ச்சியான பல ஆட்சிகளை உருவாக்கி வைத்திருந்ததோ, அந்த அனைத்து அஸ் திரங்களையும், அனைத்து அடிப்படைக் கட்டமைப்பு அமைப்புகளையும் அவர்கள் இன்றைக்கு அழிக் கிறார்கள்.
அந்த அய்ந்தை மட்டுமல்லாமல், அடுத்ததாக மொழி, இனம், கலாச்சாரம், வரலாறு போன்ற இடத்திற்கு வருகிறார்கள். ஆக, இந்த இரண்டில்தான் அவர்கள் அரசாங்கத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.
தமிழ் மொழி ஹரப்பா நாகரிகத்திற்கு இணையானது என்று...
கீழடியில் நமக்குக் கடந்த ஆட்சியில் ஏற்பட்ட பின்னடைவும், தமிழ் மொழி, நாகரிகம் - ஹரப்பா நாகரிகத்திற்கு இணையானது என்று அமர்நாத் சொன்ன ஒரு வார்த்தையை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
ஏனென்றால், மொழி இருக்கின்ற வரைக்கும், மொழி சார்ந்த உணர்வுகள் இருக்கின்ற வரைக்கும், இனம், அதன் அடையாளம், அதன் வரலாறு இருக்கின்ற வரைக்கும், இந்த சித்தாந்தம் எவ்வளவு வேகமாக விதைக்கப்பட்டாலும், அவ்வளவு வேகமாக அழிக்கப் படும் என்று அவர்களுக்குத் தெரியும். அதனால்தான், பெரியாரை அவர்கள் எதிர்க்கிறார்கள்.
வேறு எப்போதையும்விட, இப்போது பெரியாரை
வீடு வீடாகக் கொண்டு செல்லவேண்டிய கட்டாயம்
ஆகவேதான், வேறு எப்போதையும்விட, இப்போது வீடு வீடாக பெரியாரை கொண்டு செல்லவேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது.
அவர்கள் சொல்கிறார்கள், ‘‘பாரதீய ஜனதாவின் சிந்தனைகளை வீடு வீடாக எடுத்துச் செல்லுவோம்'' என்று.
அவர்கள் வீடுவீடாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று சொல்லுவது பாரதீய ஜனதாவினுடைய சிந்த னையல்ல. கிட்டத்தட்ட நூறாண்டு காலமாக ஆர்.எஸ்.எஸ். கனவு கண்ட ஒரு சித்தாந்தத்தைத்தான் அவர்கள் வீடு வீடாக எடுத்துச் செல்கிறார்கள்.
அதற்கு எதிராக, நாம் பெரியாரைத்தான் தமிழ்நாட்டு மண்ணில் வீடு வீடாக எடுத்துச் செல்லவேண்டும். அப்பொழுதுதான் இந்த மண்ணை நம்மால் காப்பாற்ற முடியும். இந்த மண்ணிலிருந்து வேரூன்றி எழுந்தி ருக்கின்ற சமூகநீதியைக் காப்பாற்ற முடியும் என்று நான் நம்புகிறேன்.
அந்த அளவிற்கு, இன்றைக்கு அவர்கள் மிக நுணுக்கமான வடிவங்களில் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம், தமிழகத்தில் வேர் பிடிக்கவேண்டும் என்று அவர்கள் மிகத் தீவிரமாக வேலை செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது.
வட மாநிலங்களில் பெரியார்,நாராயண குரு போன்றவர்கள் இல்லையே: ராகுல் காந்தி!
வட மாநிலங்களில் பல்வேறு பொறுப்புகளில் பயணம் செய்திருக்கிறேன், காங்கிரஸ் கட்சியின் சார்பாக.
அப்பொழுது ராகுல் காந்தி சொல்வார், தமிழ்நாட் டிற்கும் - மற்ற மாநிலங்களுக்கும் என்ன வித்தியாசம்? கேரளாவிற்கும் - மற்ற மாநிலங்களுக்கும் என்ன வித்தியாசம்? என்று!
தமிழ்நாட்டில் ஒரு பெரியார் இருந்தார்; கேரளாவில் ஒரு நாராயண குரு இருந்தார். அந்த மாதிரியான சீர் திருத்தவாதிகள் யாரும் வடமாநிலங்களில் இல்லாததும் நமக்கு ஏற்பட்டு இருக்கின்ற ஒரு பின்னடைவு என்று சொல்வார்.
பெரியாருடைய சமூகநீதி அரசியல்- சமூக சீர்திருத்த அரசியல்
என்றைக்குமே தேர்தல் அரசியல், வாக்கு வங்கி அரசியல், அதிகார அரசியல் ஆகியவற்றிற்கு எல்லாம் ஓர் எல்லை உண்டு. ஆனால், அந்த எல்லையைத் தகர்த்தெறியக் கூடிய ஓர் அரசியல் என்பது பெரியாரு டைய சமூகநீதி அரசியல்- சமூக சீர்திருத்த அரசியல்.
அதனால்தான், கட்சிகள் மாறலாம் - காட்சிகள் மாறலாம் - ஆனால், பெரியாருடைய சமூகநீதியும் - பெரியாருடைய பெண்களுக்கான குரலும் - அவருடைய பகுத்தறிவுச் சிந்தனைகளும் - சுயமரியாதைச் சிந்தனை களும்தான் தமிழ்நாட்டை இன்றைக்குக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது என்று நான் நம்புகிறேன்.
கண்ணுக்குத் தெரியாத வாளுக்கு எதிராக, பெரியார் என்கிற ஒரு கேடயம் - ஒரு கைத்தடி!
ஆர்.எஸ்.எஸ். என்கிற சித்தாந்தத்தை, அவர்கள் வீசுகின்ற கண்ணுக்குத் தெரியாத வாளுக்கு எதிராக, பெரியார் என்கிற ஒரு கேடயம் - ஒரு கைத்தடி இன் றைக்கு மிகப்பெரிய அளவிற்கு எழுந்து நிற்கிறது.
அதனால்தான், பெரியாரை அவர்கள் கடுமையாகத் தாக்குகிறார்கள். அவர்கள் தாக்குவது என்பது பெரியார் என்கிற ஒரு தனி நபரை அல்ல. அது அவர்களுக்கும் தெரியும்.
பெரியார் என்கின்ற ஒரு சித்தாந்தம் - தமிழ் மண்ணில் விதைக்கப்பட்டு இருக்கிற ஒரு விதையை, அதன் வளர்ச்சியை, அந்த வளர்ச்சி இருக்கும் வரைக்கும், ஆசிரியர் அய்யா போன்றவர்கள், இங்கே இருக்கின்ற கருஞ்சட்டைப் படையினர் எல்லாம் அந்த விதைக்கு நீரூற்றிக்கொண்டு வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் அவர்களைத் தொந்தரவு செய்கின்றது. அவர்களை மாற்றுவதற்கு இன்னும் அதிகமாக பணிகளைச் செய்யவேண்டும்.
அதற்காக என் போன்றவர்கள் முன்னெடுக்கவேண் டும். உங்களைப் போன்றவர்கள் ஆதரிக்கவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
பெரியாரின் பணியை அவர் விதைத்த சமூகநீதியின் விதையை முன்னெடுப்போம்!
அதுமட்டுமல்ல, தந்தை பெரியார், காங்கிரஸ் கட்சி யின் தலைவராக இருந்து, வெளியேறியவர். அவர் விட்டுச் சென்ற பணியை, பெருந்தலைவர் காமராஜர் தொடர்ந்தார். எங்களைப் போன்ற இளைய தலை முறையைச் சேர்ந்தவர்களும், காங்கிரஸ் கட்சிக்கு உள்ளும், வெளியிலும், பெரியாரின் பணியை அவர் விதைத்த சமூகநீதியின் விதையை முன்னெடுப்போம் என்று சொல்லி, வாய்ப்புக்கு நன்றி கூறி, விடைபெறு கிறேன்.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதி மணி அவர்கள் உரையாற்றினார்.
No comments:
Post a Comment