மதுரை, அக்.3 அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்று பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாட்டை முதல் மாநிலமாக்குவோம் அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
காந்தியார் பிறந்தநாள் தமிழ்நாடு முழுவதும் நேற்று (2.10.2021) கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றன.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா பாப்பாபட்டி கிராமத்தில் நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
இன்றைக்கு கிராமசபை கூட்டம் தமிழ்நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. நான் முதலமைச்சராகி நிறைய அரசு நிகழ்ச்சிகளுக்கு செல்கிறேன், கட்சி நிகழ்ச்சிகளுக்கு செல்கிறேன், பொது நிகழ்ச்சிகளுக்கு சென்றிருக்கிறேன், எல்லா நிகழ்ச்சிகளையும் விட மறக்க முடியாத நிகழ்ச்சி எதுவென்று கேட்டால், இந்த பாப்பாபட்டி பகுதியில் நடக்கிற இந்த நிகழ்ச்சியாகத்தான் இருக்கும்.
ஜனநாயகத்தை வலுப்படுத்த
கடந்த 2006ஆம் ஆண்டு வரை மதுரை மாவட்டத்தில் சில கிராமப்பகுதிகளில் தேர்தல் நடத்த முடியாத ஒரு சமூகச்சூழல் இருந்தது. அதில் குறிப்பாக பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், விருதுநகர் மாவட்டத்தில் கொட்டக்கச்சியேந்தல் ஆகிய நான்கு கிராமங்களில் தேர்தலே நடத்த முடியாத ஒரு நிலை ஏற்பட்டது. ஆனால் ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டுமென்றால், தேர்தல் நடத்தியாக வேண்டும் என்று அன்றைய முதலமைச்சர் கலைஞர் கூறினார். அப்போது நான் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தேன். என்னுடைய உள்ளாட்சி துறையின் செயலாளராக இருந்த அசோக் வரதன் ஷெட்டி மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த உதயச்சந்திரன் ஆகியோர் இதில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு தேர்தலை நடத்திக்கொடுத்தார்கள்.
பாப்பாபட்டியை தேடி நான்...
எனவே மேற்கண்ட ஊராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி தலைவர்களை எல்லாம் சென்னைக்கு அழைத்து கலைவாணர் அரங்கில் சமத்துவ பெருவிழா என்ற விழாவினை நடத்தினோம். அதில் கலைஞர் கலந்து கொண்டு அவர்களுக்கு எல்லாம் பொன்னாடை போர்த்தி பாராட்டினார். அந்த விழாவுக்கு நான்தான் முன்னிலை வகித்தேன். அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பேசிய போது, கலைஞரை பாராட்டி பேசிவிட்டு, இந்த தேர்தலை நடத்தியதற்காக நன்றி கூறிவிட்டு, சமத்துவ பெரியார் கலைஞர் என்ற பட்டத்தை கொடுத்தார். அதற்கு பிறகு இந்த ஊராட்சிகளின் வளர்ச்சிக்காக ரூ.80 லட்சத்தை தி.மு.க. அரசு வழங்கியது. அது மட்டுமல்ல தி.மு.க. சார்பில் ரூ.20 லட்சத்தை வழங்கினோம்.
அப்படிப்பட்ட பாப்பாபட்டிக்குத்தான் நான் இப்போது வந்திருக்கிறேன். தமிழ்நாட்டில் எத்தனையோ ஊராட்சிகள் இருந்தாலும் பாப்பாபட்டியைத் தேடி நான் வந்திருப்பதற்கு இதுதான் முக்கியகாரணம்.
குடவோலை முறை
ஒற்றுமை இல்லாத சமூகத்தில் வளர்ச்சி இருக்காது. அத்தகைய ஒற்றுமை உணர்வோடு இந்த கிராம சபை கூட்டம் இப்போது நடந்து கொண்டு இருக்கிறது. கிராமங்களில் இருந்துதான் ஜனநாயகம் மலர்ந்தது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தேர்தலில் போட்டியிடும் ஆட்களின் பெயரை குடத்தில் எழுதிப் போடுவார்கள், அதற்கு பிறகு, அதைக் குலுக்கி, குடத்தில் போட்டிருக்கும் சுவடியை எடுப்பார்கள். யார் பெயர் வருகிறதோ அவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள். அதற்கு குடவோலை முறை என்று பெயர்.
அந்த குடவோலை முறை தான் இன்று வாக்களிக்கும் இயந்திரமாக மாறி இருக்கிறது.
கிராம மறுமலர்ச்சிக்கு திட்டங்களை ஏராளமாக உருவாக்கித்தந்தது தி.மு.க. ஆட்சிதான். இப்போதும், நாம் தேர்தலுக்கு முன்னர், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்து இருந்தோம். அதில் 505 வாக்குறுதிகளில் 4 மாதங்களுக்குள் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி கொடுத்து இருக்கிறோம். மீதமுள்ள வாக்குறுதிகளை மட்டுமல்ல, இன்னும் என்னென்ன தேவைப்படுகிறதோ, அத்தனை வாக்குறுதிகளையும் நிச்சயமாக, உறுதியாக நிறைவேற்ற வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. அதை நிறைவேற்றியே தீருவோம். அதில் எந்த மாற்றமும் கிடையாது.
மக்களை தேடி மருத்துவம் திட்டம், நமக்கு நாமே திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம், சமத்துவபுரங்கள், கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்ததக்கூடிய திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இது சாமானிய மக்களுக்காக நடத்தப்படுகிற ஆட்சி. சாமானியர்களின் ஆட்சி.
எனது அரசு அல்ல, நமது அரசு
விவசாயிகளின் கருத்தை கேட்டு தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே தி.மு.க. ஆட்சியில்தான் வேளாண் துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை அளிக்கப்பட்டது. எனவே, மீண்டும் சொல்கிறேன். இது எனது அரசு அல்ல, நமது அரசு. உங்களுடைய விருப்பங்களோடு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றும் அரசு. ஏழை - பணக்காரர், கிராமம் - நகரம், பெரிய தொழில் - சிறிய தொழில், வட மாவட்டம் -தென்மாவட்டம் என்ற எந்த வேற்றுமையும் நாங்கள் பார்க்கப்போவதில்லை. ஒட்டுமொத்தமாக ஒளிமயமான தமிழ்நாட்டை அமைப்பதற்கு நாங்கள் பாடுபடப்போகிறோம். அதற்கு நீங்கள் அத்தனை பேரும் ஒத்துழைப்பு தரவேண்டும். கடந்த சில நாட்களாக, பல்வேறு மாநிலங்களின் முதல்-அமைச்சர்களை எல்லாம் ஒப்பிட்டு, நம்பர்-1 முதல்-அமைச்சர் என்று எனக்கு பெயர் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அதில் உள்ளபடியே எனக்கு பெருமை இல்லை. எல்லா மாநிலங்களையும் ஒப்பிட்டுப்பார்த்து தமிழ்நாடு தான் முதல் மாநிலம் என்று சொல்லக்கூடிய நிலை வரவேண்டும், வரப்போகிறது, நிச்சயம் அதை ஏற்படுத்துவோம். அதற்கு நீங்கள் எல்லாம் துணை நிற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment