தந்தை பெரியார் 143ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா! வீடு முதல் நாடு வரை எங்கெங்கும் நடக்கட்டும், நடக்கட்டும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 22, 2021

தந்தை பெரியார் 143ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா! வீடு முதல் நாடு வரை எங்கெங்கும் நடக்கட்டும், நடக்கட்டும்!

பட ஊர்வலம், பெரியார் பேச்சு, பாடல்கள் ஒலிக்கட்டும்!

குறைந்தபட்சம் மாவட்டம் தோறும் 143 இடங்களில் கொடி ஏற்றிடுவீர்!

தந்தை பெரியார் 143ஆம் ஆண்டு பிறந்த நாளை சிறப்பாக எழுச்சியுடன் கொண்டாட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் அறிக்கை விடுத்ததுடன், அதற்கான செயல் திட்டத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். 

அறிக்கை வருமாறு:

நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் பிறந்த நாள் பெரு விழாவுக்கு இன்னும் முப்பது நாள்கள் இடைவெளிகூட இல்லை. மூன்று வாரங்களே உள்ள நிலையில், இந்த 143ஆம் ஆண்டு பிறந்த நாள் பெரு விழா நாடு தழுவிய அளவில் திருவிழாவாக இதற்கு முன் எப்போதும் இல்லாத விழாக் கோலத்துடன், கொள்கைப் பிரச்சார அடைமழை பெய்வதாக அமைய வேண்டும்!

எங்கெங்கும் சுவர் எழுத்துகள்

தென்காசி, தஞ்சை, திருச்சி, சென்னை, ஆத்தூர், தாராபுரம், மேட்டுப்பாளையம், மன்னார்குடி, மதுரை, தருமபுரி, கிருட்டினகிரி, திண்டுக்கல், கோவை, கோபி, லால்குடி, ஈரோடு, தென் சென்னை, தாம்பரம், கும்மிடிப் பூண்டி போன்ற பல கழக மாவட்டங்களில் சுவரெழுத்துப் பணிகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருவதை அறிய மகிழ்ச்சி. மேலும் பல மாவட்டங்களிலும் எழுதிக் கொண்டும் இருக்கின்றனர்.

பகுத்தறிவுப் பகலவன் நம் விழி திறந்த வித்தகர் தந்தை பெரியார் தனது 94ஆம் ஆண்டில் - ஜாதி, தீண்டாமை ஒழிப்பைக் குறி வைத்த அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் நியமனம் கோயில்களில் என்ற கொள்கைப் போராட்டத்தினை நடத்தியதற்கு விடியலும் வெற்றியும் கிடைத்துள்ளது.

பெரியார் நெஞ்சில் தைத்த முள்!

'பெரியார் நெஞ்சில் தைத்த முள்' இன்றைய முதலமைச்சர் ஆற்றல்மிகு மு.க.ஸ்டாலின் அவர்களது ஆட்சிக் காலத்தில் அகற்றப்பட்ட பெரு வெற்றியினை நம் இயக்கம் பெற்று பெருமிதப்படுகிறது!

ஆரியம் அலறுகிறது; ஓங்கார ஒப்பாரி வைத்து நீதிமன்ற படையெடுப்பை நடத்திப் பார்க்கிறது! புராண காலத்து நந்தன்கள் தீக்குளித்து, தெருவில் நின்றுதான் கடவுளை வணங்கினார்களாம்!

விடியல் ஆட்சி தந்த விவேக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில், நவீன நந்தன்கள் கருவறைக்குள் தக்க பயிற்சி பெற்று நுழைந்து பூஜை செய்ய உரிமை பெற்றுள்ளனர். பெரியார் வென்றார் என்பது வரலாறாகி விட்டது!

ஊரடங்கு காலத்திலும் பிரச்சாரம்

கரோனா காலத்தில் ஊரடங்கு இருந்த நிலையிலும் நமது கொள்கைப் பிரச்சாரம் இணைய வழி - மெய்நிகர் - காணொலியாக துவங்கி கழகப் பொறுப்பாளர்கள் கடமை உணர்ந்து, நல்கிய ஓய்வறியா உழைப்பின் மூலமும், சுழன்றடிக்கும் சுனாமியாகி ஆக்கங்களைத் தந்துள்ளது!

கழகப் பொறுப்பாளர்களின் கடமை உணர்வினால் ஆயிரத்திற்கு மேற்பட்ட புதிய திராவிட நாற்றுக்கள் பெரியார் பண்ணைகளிலிருந்து பக்குவமான பயிர்களாக - பயிற்சி மூலம் முகிழ்த்துக் கிளம்பி - புத்தொளி பாய்ச்சியுள்ளனர்!

அனைத்து அணியினரும் பலே, பலே!

நம் மகளிர் அணி, திராவிட மகளிர் பாசறை ஆண்களுக்கு சளைத்ததா என்ன -என்று கேட்காமல் கேட்டு, மிக அருமையான பயிற்சி வகுப்புகளை நடத்தி அவர்களும் பாராட்டத்தக்க வரலாறு படைத்தார்கள்!

பகுத்தறிவாளர்கள் சும்மா இருப்பார்களா? 20.8.2021 முதல் அவர்களும் பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, ப.க. எழுத்தாளர் மன்றம் உட்பட அனைத்தையும் ஒன்று சேர்த்து, பகுத்தறிவு பயிற்சி அளிக்கும் பாய்ச்சலில் இருக்கிறார்கள்!

அடுத்து 'பெரியார் பிஞ்சுகளும்'கூட 'பிரச்சார விளையாட்டை நாங்கள் நடத்த அனுமதி தாருங்கள் தாத்தா' என்று கேட்டாலும் அதிசயமில்லை!

சமூக நீதி களத்தில் இதற்குமுன் அசையாத பா.ஜ.க. ஆளும் ஒன்றிய அரசு வேறு வழியின்றி - தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, அதன் கையிலும் சமூகநீதிக் கொடி பிடித்தே, அரசியல் களத்தில் அடுத்த வெற்றிபற்றி வியூகம் வகுத்து வித்தைகளில் இறங்கி விட்டது! 

பெரியார் உலகமயம்

ஈரோட்டுப் பாதை எல்லா பாதைகளும் இணைகின்ற பாதையாக விரிவாகி வருகிறது!

உலகம் பெரியார் மயமாகி வருகிறது!

பெரியார் உலகமயமாகி வருகிறார்! பூரிக்கிறது நம் நெஞ்சம்!

என்றாலும் கடமையில் கருஞ்சட்டை வீரர்களும், வீராங்கனைகளும் எப்போதும் தயாராகவிருக்கும் தீயணைப்புத் துறை போன்றவர்கள் என்ற உணர்வுடன் புதுப்புதுக் களம் காண அடுத்து அறிவிக்கவிருக்கும் ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, பெண்ணுரிமை, சமூகநீதியில் - பெறாதவைகளை நோக்கிய இலக்கு, பகுத்தறிவுப் பிரச்சாரம் - தொய்வின்றி- என்பதுபோன்ற பல வேலைத் திட்டங்கள் அடுக்கடுக்காக உள்ளன!

போர்ப் படையினருக்குரிய கடமை களங்களை எதிர்நோக்கி இருப்பதுதானே!

பெரியார் பிறந்த நாளில் ஊர்வலங்கள்

இம்முறை ஒவ்வொரு கழக மாவட்டத் திலும் பெரியார்பட ஊர்வலம் - தனி நபர் இடைவெளி,  முகக் கவசத்துடன் பட்டித் தொட்டியெல்லாம் நடக்கட்டும் செப்.17 அன்று!

கழகத் தோழர்கள், பகுத்தறிவாளர்கள், பெரியாரிஸ்ட்கள் வீடுகளின் முகப்பில் நமது இலட்சியக் கொடிகள் ஏற்றப்பட்டு பறக்க வேண்டும்.

குறைந்தபட்சம் 143 வீடுகளில் - ஒவ்வொரு மாவட்டத்திலும் (கூடுதலாக இருந்தால் கூடுதல் மகிழ்ச்சி) ஏற்றப்படல் வேண்டும். பொதுவிடங்களில் பெரியார் படங்களை வைத்து, காவல்துறை அனுமதியோடு பெரியார் உரைகளை ஒலி பரப்புங்கள்.

எங்கும் விழாக்கோலம் பளிச்சிட வேண்டும்!ஆனால் கரோனா கட்டுப்பாடுகளை கவனத்தில் கொண்டே செய்ய வேண்டும்!

நாளும் நமது அரசு தளர்வுகளை அறிவித்து வருவது வரவேற்கத்தக்கது. என்றாலும் நாம் அலட்சியம் காட்டாமல் பொது விதிகளைக் கடைப்பிடிக்கத் தவறாமல், நமது பிரச்சாரம் அமைய வேண்டும்.

'விடுதலை' - அர்ச்சகர் பற்றிய பெட்டிச் செய்தி வாசகங்களைத் தவறாமல் ஊர்தோறும் (பார்ப்பனர்களைப் புரிந்து கொள்ளுங்கள் என்பதை) உடனடியாக சுவரெழுத்துக்களாக்கிடத் தவறாதீர்!

வாசகங்கள் மாற்றம் இருக்காமல் கவனமாக எழுதுங்கள்!

காணொலிப் பிரச்சாரம் வழமை போல் தொடரும்.

மீண்டும் தொடர் பிரச்சாரம்

மக்கள் சந்திப்பும், எனது 'நீட்' தேர்வு, சமூகநீதி,   ஜாதி ஒழிப்பு தொடர் பிரச்சாரத் திட்டமும் தயாராகிறது. நிலைமை சரியானதும் எனது பயணங்கள் மூலம் மக்களை சந்திக்கும் பணி வேகமெடுக்கக் கூடும்!

பெரியார் பணி முடிப்போம்!

அதற்கென கட்டுப்பாட்டுடன் அணி வகுப்போம், 

திராவிடம் வெல்லும்.

வரலாறு (என்றும்) இதைச் சொல்லும்!


கி.வீரமணி,

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

22.8.2021


1 comment:

  1. இது பெரியார் மண் என்பதை நிரூபிக்கும் காலம் ...
    நன்றி அய்யா...

    ReplyDelete